Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜூலை 17 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை: 65,610 சதுர கிலோ மீற்றர்களை கொண்ட நாட்டில், மூன்றின் இரண்டு பகுதி காடுகளாலும் கடலாலும் சூழ்ந்து காணப்படுகின்றது.அண்மைக் காலமாக இலங்கையிலுள்ள முக்கிய வனப்பகுதிகள், பிராந்திய காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு பாலைவனமாக்கப்பட்டு வருகின்றன.
ஏதோ ஒரு வகையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும்பொருட்டு இக்காடுகள் அழிக்கப்படுகின்றன என்பது புலனாகின்றது. இக் காடழிப்புகள் அரசாங்கத்தின் அனுமதியோடு நடைபெறுகின்றதா அல்லது சட்டவிரோதமான முறையில் நடைபெறுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இனந்தெரியாதோரால் பெறுமதியான காட்டு மரங்கள் அண்மைக்காலத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன.
கந்தளாய் பிரதேசத்தின் வான்எல, சூரியபுர, ஜயந்திபுர போன்ற பகுதிகளிலே இவ்வாறு காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகள் கந்தளாய் பிராந்திய வனப்பாதுகாப்பு பரிபாலன பகுதிக்குட்பட்ட இடங்களாகும்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் மாத்திரம் 13,800 ஹொக்டெயர் நிலப்பரப்பு காட்டு வளமாகக் காணப்படுவதாக புள்ளிவிவரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் காடுகளில் அதிகமாக பாலை, முதிரை, கருங்காலி, வின்னாங்கு போன்ற பெறுமதியான மரங்கள் காணப்படுவதாக கந்தளாய் பிராந்திய வனவள காரியாலயம் தெரிவிக்கின்றது.
அண்மைக் காலமாக, இனந்தெரியாத நபர்களால் பெறுமதியான பாலை, வீரை, வின்னாங்கு போன்ற மரங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்களைக் குடியமர்த்துவதற்காக இவ்வாறு காடுகளை அழிக்கின்றார்கள் என்று பரவலாகப் பேசப்படுகின்றது. பாரிய மரங்களை வெட்டி, காணிகளைத் துப்புரவு செய்து, பின்னர் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் காணிகள் பிரித்துக்கொடுக்கப்படுவதாகவும் அறியமுடிகின்றது.
அண்மையில், கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், கந்தளாய் ஜயந்திபுர பகுதியில் காடுகளை அழித்த குற்றாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசியல்வாதிகள் தாங்களின் அரசியல் சுயஇலாபத்துக்காகக் காடுகளை அழித்து, தீ வைக்கின்ற செயற்பாடுகளையும் காணக்கூடியதாக உள்ளது.
முக்கியமாக, மரக்கடத்தல் காரர்களாலும் மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்து வருவது அல்லது ஏற்றுமதி செய்கின்றமை போன்ற செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. இவ்வாறு மரங்களை வெட்டிய பின்னர், தீ வைத்து விட்டு செல்கின்றமை போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோன்று தான், அப்பகுதிகளில் காணப்படுகின்ற வனப்பாதுகாப்பு எல்லைக் கற்கள், பிடுங்கி வீசப்படுகின்றன. வனப்பகுதிகளைப் பிரிப்பதற்காகவும் எல்லைக்காகவும் நடப்படுகின்ற கற்களே இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் பிடுங்கி வீசப்படுகின்றன.
அதேபோன்று, புதையல்களைக் குறிவைத்தும் இப்பகுதிகளில் காடுகளை அழிக்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. கந்தளாய், வான்எல பகுதிகளின் புராதன கட்டடங்களின் இடிபாடுகளும் காணப்படுகின்றன. இப்பகுதியில் பண்டைய அரசர்கள் ஆட்சி செய்த போது, தமது ஐஸ்வரியங்களைப் நிலத்தில் புதைத்து வைத்தார்கள் என்ற கர்ணபரம்பரைக் கதைகளும் இங்குள்ள மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. இதனால் புதையல்களைப் பெறுவதற்காக, காடுகள் இனந்தெரியாதோரால் அழிக்கப்பட்டு, புதையல் தோண்டும் முயற்சிகளின் சூழ்ச்சிகளாகவும் இருக்கமுடியும் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
இவ்வாறு, இயற்கையான பாரிய விருட்சங்கள் அழித்து வருவதால், காட்டு விலங்கினங்களான மான், மரை போன்றவற்றை இலகுவில் வேட்டையாடப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. அவையும் உணவுச் சங்கிலியில் தமக்கான உணவுகள் இன்றி இறக்கின்றன,
இவ்வாறு, காடுகள் நாளாந்தம் அழிக்கப்படுவதால் பல்வேறு வகையான பிரச்சினைகள் சுற்றாடலுக்கு ஏற்படுகின்றன. தரைகள் தரிசு நிலங்களாக்கப்படுகின்றன; சுற்றாடலில் பெய்கின்ற மழை வீழ்ச்சியின் அளவு குறைகின்றது. எதிர்பாராத அளவு மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இத்தகைய பாரிய பின்விளைவுகளால், எதிர்கால சந்ததி பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக, அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை இறுக்கமாக கையாளுவதோடு, இனங்காணப்பட்ட காட்டுப் பகுதிகளை பாதுகாப்பு மிக்க பகுதிகளாக அரசாங்கம் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
29 minute ago
45 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
58 minute ago
1 hours ago