2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காற்றில் கலையக்கூடாத ஓலங்கள்

Princiya Dixci   / 2021 ஜூன் 19 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘கலியுகத்தின் தாம்பத்தியம், வெறும் செயற்கையானதும் கவர்ச்சிக்காகதாகவும் மட்டுமே இருக்கும்; ஆண்மையும் பெண்மையும் காமச் செயல்களில், எவ்வளவு திறமையாக இருக்கின்றன என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும்’ (ஸ்ரீமத் பாகவதம் 12.2.3)

கலியுகத்தின் இல்லற வாழ்க்கை, வெறும் புலன் இன்பத்துக்காக மட்டுமே இருக்கும் என்பதை, ஸ்ரீமத் பாகவதத்தில் மேற்குறிப்பிட்டபடி முன்மொழியப்பட்டுள்ளது. இன்று நாம் கேள்விப்படும் சில செய்திகள், இக்கூற்றைப் படம்பிடித்துக் காட்டுவது போலவேதான் இருக்கின்றன.

‘கொரோனா’ எனும் வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், ‘குடும்ப வன்முறை’ எனும் அசுர தாண்டவமும் தற்போது சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளது.

முடக்கம், பயணக் கட்டுப்பாடு என அதிகாரத்தில் உள்ளோர், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றுக்குப் பின்னால் ஓடுகின்றனர். எனினும், இவற்றின் எதிர்வினையாக ஏற்படும் குடும்ப வன்முறைகளுக்குள் சிக்கி, பெண்களும் சிறுவர்களும் அல்லற்படுகின்றனர். இதற்குள் சில ஆண்களும் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில், முடக்கம், பயணக் கட்டுப்பாடு ஆகியன அத்தியாவசியமாக உள்ளன. இதனால், அநேகர் வீடுகளுக்குளேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பலர், மன அழுத்தங்களுக்கும் உள்ளாகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில்தான், உலகளாவிய ரீதியில் குடும்ப வன்முறைகள், தற்போது அதிகரித்துச் செல்வதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. பல நாடுகளில் 10 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

இலங்கையில், இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை, 1,200க்கும் மேற்பட்ட பெண்கள், 1938 க்கு அழைத்துள்ளனர். அவர்கள், தாம் வீடுகளில் அனுபவித்த உடல், பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்களில் இருந்து, தம்மை விடுவிக்குமாறு உதவி கோரியுள்ளனர்.

வீடுகளில் கூட்டாக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், நாம் மேற்கொள்ளும்  சில செயல்களும் பேச்சுகளுமே குடும்ப வன்முறைகளுக்கு வழிசமைக்கின்றன.இதன் விளைவாகவே, பொலிஸாருக்கும் பிற உதவி வழங்கும் நிறுவனங்களுக்கும் வரும் முறைப்பாடுகளும் உதவி கோருதல்களும் கணிசமான அளவு அதிகரித்துள்ளன.

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுக் காலப்பகுதியில், வீடுகளுக்குள் இடம்பெறும் குடும்பத் தகராறு காரணமாக, 150க்கும் மேற்பட்டவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். அவர்களில் 112 பேர் குடும்பத் தலைவர்கள் என்றும், 42 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால், குடும்ப வன்முறைகள், துஷ்பிரயோகங்களுக்கு சிறுவர்களும் அதிகளவில் முகங்கொடுத்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள தாயார், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்ற வேளை, 7 வயதுச் சிறுமி வீட்டில் தனித்திருந்த சந்தர்ப்பத்தில், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவமும் திங்கட்கிழமை (14)  நடந்தேறியுள்ளது.

இதில் சந்தேகநபர்களாக 12, 14 வயதுடைய இருசிறுவர்கள், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் இருவரும், வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர். சிறுமி, தனக்கு நேர்ந்த கதியை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் வழங்கிய பொலிஸ் முறைப்பாட்டையடுத்து, மேற்படி இரு சிறுவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.  

அதேபோன்று, தாயிடமிருந்து வாங்கிவரப்பட்ட 15 வயது சிறுமியை, இணையத்தை பயன்படுத்தி பாலியல் நடவடிக்கைகளுக்கு, பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆணொருவரும் பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாட்டு காலத்தின்போது, தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, குடும்ப சுகாதார பணியகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அண்மைய காலங்களில், இதுபோன்ற பின்னணியில் தேவையற்ற கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாக, அந்தப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், தேவையற்ற கர்ப்பத்தை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த ஆலோசனையை, சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது குடும்ப சுகாதார அதிகாரிகளிடம் பெற வேண்டும் என்று அப்பணியகத்தின் இயக்குநர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக, மாவட்ட சிறுவர், மகளிர் நன்னடத்தைப் பிரிவு, அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 2019, 2020ஆம் ஆண்டுகளில், இரத்தினபுரி மாவட்டத்தில் 15 பெண்களினதும் ஐந்து சிறுவர்களினதும் மரணங்கள் பதிவாகி உள்ளன. 

‘நல்ல குடும்பங்களே, சமுதாயத்தின் ஆணிவேர்கள்’ என்பர். இந்தக் குடும்பங்கள் சிதறும்போது, குழப்பங்களும் துன்பங்களும் அதிகரிக்கின்றன. எனவே, கொரோனா ஒழிப்புக்காக வீடுகளில் ஒன்றுகூடியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அநாவசிய பிரச்சினைகளை வளர்க்காமல், பயனுள்ள வழிகளில் தமது நேரத்தைப் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

யோகாசனம், உடற்பயிற்சி, வீட்டுத் தோட்டம், புத்தகங்கள் வாசித்தல், துப்புரவுப் பணிகள், துறைசார்த்த அறிவை வளர்த்தல், ஆரோக்கிய உணவுகளை சமைத்தல், இசையைக் கேட்டல், நன்றாக ஓய்வெடுத்தல் என்பவற்றின் மூலம், மன அழுத்தங்களுக்கு உள்ளாகாமல் தப்பித்துக்கொள்ளலாம். இதனால் பல பிரச்சினைகளை விரட்டிவிடலாம். குறிப்பாக, வீட்டிலிருந்து வேலை செய்யும் தம்பதியினர், தமது குழந்தைகளைச் சிறப்பாகப் பராமரிக்கும் ‘சொர்க்க’ நேரமாக, இவற்றை மாற்றிக்கொள்ளலாம்.

‘1938’ எனும் அவசரத் தொலைபேசி இலக்கமானது, துன்புறுத்தல், துஷ்பிரயோகம், வன்முறை போன்றவற்றுக்கு உட்பட பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த முறைப்பாடுளைப் பெறும் பொருட்டு, மகளிர், சிறுவர் விவகார அமைச்சால் 2013ஆம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இச்சேவை 24 மணி நேரமும் கிடைக்கப்பெறுகின்றது.

மூன்று மொழிகளிலும் செவிமடுக்கப்படும் இந்த அவசரத் தொலைபேசி இலக்க சேவையானது, பெண்கள் வீட்டில், பணியிடத்தில், பஸ், ரயில் உட்பட, வேறு எந்தப் பொது இடத்திலும் துஷ்பிரயோகம், துன்புறுத்தல் போன்றவற்றுக்கு உள்ளானால், முறைப்பாடு வழங்கக் கூடிய வகையிலேயே செயற்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய, கொரோனா தொற்று ஆரம்பித்த 2020 ஜனவரி தொடக்கம் 2021 மே மாதம் வரை, 1938 அவசர அழைப்புக்கு, பெண்கள் மீதான 5,561 வன்முறைகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 1,119 குடும்பத் தகராறுகளும் 16 வன்புணர்வுச் சம்பவங்களும் 13 சிறுவர் துஷ்பிரயோகங்களும் 404 இணையவழிக் குற்றச்செயல்களும் உள்ளடங்குகின்றன.

எவ்வாறாயினும், வன்முறை அல்லது பாதிப்புக்குள்ளான பெண்கள், தற்போதைய கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, உதவி பெறும்போது, கூடுதலான தடைகளைச் சந்திக்க நேரிடுகின்றது. எனவே, நீங்களோ தெரிந்த ஒருவரோ வீட்டு வன்முறையை அனுபவிக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து இங்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும் இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள், அவற்றில், ஏதேனும் ஒன்று, உங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவளித்து உதவக்கூடும். இல்லாவிடின், அல்லற்படுபவர்களில் அபயக் குரல்கள், காற்றில் கலைந்துவிடும் வெறும் ஓலங்களாகவே இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .