Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
எஸ்.கருணாகரன் / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் ‘விஐபி’யாக வேண்டுமா? யோசிக்காமல் அரசியலில் ஈடுபடுங்கள். அதிலும் போராட்டம், புரட்சி, காந்தி, காந்தியம், சேகுவேரா, பிடல், பிரபாகரன், புலிகள், தமிழ்த்தேசியம், சுயாட்சி, தனிநாடு, தமிழீழம், மாவீரர்கள், எரித்திரியா, தீபெத், கொசோவா என்று சில பெயர்ச் சொற்களைச் சொல்லத் தெரிந்து விட்டால்போதும்; உங்களுடைய காட்டில் மழைதான்....” என்று சொல்லிச் சிரிக்கிறார் நண்பர் ஒருவர்.
இந்த நண்பர், 28 ஆண்டுகள் போராளியாக இருந்தவர். அதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் 1980 களின் நடுப்பகுதியில் இணைந்து, 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டவர். போராட்டத்தின்போது, ஒரு காலை இழந்திருப்பவர். போரின் பிறகு, தடுப்புக்குச் சென்று, இரண்டு ஆண்டுகள் அங்கே கழித்து விட்டு வந்து, இப்பொழுது கோழி வளர்க்கிறார்.
நண்பரைப்போல, போராளிகளாக இருந்தவர்களில் பலர், இப்போது கோழி அல்லது மாடு வளர்க்கிறார்கள். சிலர் முச்சக்கரவண்டி ஓட்டுகிறார்கள். கொஞ்சப்பேர் தேநீர்க்கடைகளிலும் அச்சகங்களிலும் கராஜ்களிலும் வயல்களிலும் வேலை செய்கிறார்கள். சிலர் படையினரின் பண்ணைகளில் பணியாற்றுகிறார்கள். வேறு சிலர் மேசன் வேலைக்குப் போகிறார்கள். சிலர் தச்சுவேலை பழகுகிறார்கள்.
இந்தத் தொழில்கள் எல்லாம், அவர்களுக்குப் பழக்கமே இல்லை; என்றாலும் வேறு வழியில்லை. ஏனென்றால், இவர்களில் பலர் வேலைகளே இல்லாமல், நாளாந்த வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஏதோ கிடைத்த வேலைகளில் தொற்றிக் கொள்வதும் ஈடுபடுவதும் பெரும்கொடையன்றி வேறென்ன?
இதைவிட, இவர்களில் அநேகமானவர்கள் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு, இயக்கத்தில் சேர்ந்தவர்கள். இதனால், போராட்டப் பணிகளைத் தவிர, இந்த மாதிரியான வேலைகளில் முன்னனுபவம் இல்லாதவர்கள்.
ஆனால், போராட்டம் இந்தப் போராளிகளின் ஆற்றலைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டது. போராட்டத்தின் மூலம், இவர்கள் பல சாதனைகளைப் படைத்திருந்தார்கள்.
இப்போதுள்ள மாகாணசபை கூட, இவர்களைப்போன்றவர்களினால் கிடைத்த ஒன்றே. இதனால், ஒரு காலத்தில் இவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்திகளாக இருந்தனர். ஆனால், இன்று இவர்களுக்கு அரசியலில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
எந்த மாதிரியான பாத்திரமும் கிடையாது. வேண்டுமானால் ஏதோ ஒரு தரப்பை ஆதரிக்கலாம்; அல்லது யாருக்காவது வாக்களிக்கலாம்; அல்லது யாருடையவோ அல்லக்கைகளாக இருக்கலாம். அவ்வளவுதான்!
அதற்கப்பால் சுய அடையாளத்தோடும், விடுதலை அரசியலோடும் மெய்யாகவே முயற்சித்தால், ‘இவர்கள் வேறு யாருடையவோ நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார்கள்’, ‘அந்நிய சக்திகளிடம் விலைபோய் விட்டனர்’ என்ற அடையாள முத்திரை குத்தப்படும்; தேவையற்ற சந்தேகங்கள் கிளப்பி விடப்படும்; அவதூறுகள் பரப்பப்படும். அதன்வழியாக, இவர்களுக்கு எதிரான எதிர்ப்பு வளையம் உருவாக்கப்பட்டு, இவர்கள் சமூகத்திலிருந்தே ஒதுக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருப்பதையும் விடக் கொடுமையான நிலையாக அது ஆகி விடும். ஆகவே, ‘பிச்சை வேண்டாம்; நாயைப் பிடியுங்கள்’ என்ற கதையாக, அரசியல் பக்கமே பார்க்கக் கூடாது என்று பேசாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
இத்தகைய ஒரு தந்திரோபாய நிலையில்தான், கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகாலமும் படித்து, பதவிகளில் இருந்தவர்களும் ஓய்வு பெற்றவர்களும் தனிப்பட்ட ரீதியில் தொழில் அதிபர்களாக இருந்தவர்களும் நெளிவு சுழிவுகளுக்குள்ளால் தங்களுடைய காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இப்போது அரசியலில் கோலோச்சத் தொடங்கியுள்ளனர். களப்பணியும் தியாகமும் என்ற சிரமங்களில்லாமலே தலைமைத்துவத்தைப் பிடித்துக் கொள்வதும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் வாய்ப்பானது என்றாகி விட்டது பலருக்கும்.
ஆகவே, இப்பொழுது இதயத்திலே சுதந்திர தாகத்தையும் கையிலே விடுதலைக் கருவியையும் வைத்திருந்தவர்களின் காலம் முடிந்து விட்டது. இவ்வாறானவர்களின் காலம் முடிவடைந்தவுடன் அல்லது கைமாறியவுடன், அந்த இடத்தில் பழையபடி பழைய பெருச்சாளிகள் வந்து குந்தி விட்டன. அவையே, இன்று அரசியல் செய்கின்றன.
இந்த அரசியலானது ‘பொய்ப்பூ’வையே பூத்துக் கொண்டிருக்கிறது. இவையே மக்களுடைய இன்றைய சலிப்புக்கும் நம்பிக்கையீனத்துக்கும் காரணமாகின்றன. பகட்டு அரசியலுக்கு ஆயுள் நீடிப்பதில்லை. உடனடி மினுக்கம் மறையத் தொடங்க, அதனுடைய உண்மை முகம் பளிச்செனத் தெரிந்து விடும்.
இத்தகைய மாறுபட்ட அரசியல் செயற்பாட்டுக் களத்திலும், சிந்தனை முறையிலும் ஏராளம் குத்துக் கரணங்களும் தகிடு தத்தங்களும் நிகழத் தொடங்கி விட்டன. இதுவே, இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கின்ற குத்து வெட்டுகளும் முரண்களும் குழிபறிப்புகளுமாகும். இதுவே, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை தொடர்பிலும் அரசியல் தீர்வு முயற்சிகளிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற சறுக்கல்களாகும். மாகாணசபைக்குள் நடக்கின்ற அடிதடிகளும் ஒத்துழையாமை இயக்கங்களும் இதன் விளைவுகளே.
இந்தளவுக்கு உள் முரண்பாடுகளில்லை என்றாலும், பகட்டு அரசியலைத் தவிர, அர்ப்பணிப்பு அரசியலையோ, செயற்பாட்டு அரசியலையோ கொண்டிருக்காத நிலையிலேயே, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்றவையும் உள்ளன.
இதேவேளை, ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்ட அரசியலிலும் ஏராளம் தவறுகளும் பலவீனங்களும் இருந்தன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவற்றின் பலவீனமே, இன்றைய நிலைக்குக் காரணமாகும். ஆனால், என்னதான் தவறுகளையும் பலவீனங்களையும் கொண்டிருந்தாலும் விடுதலைப் போராட்ட அரசியலில் ஈடுபட்ட போராளிகளிடம் தம்மை அர்ப்பணிக்கின்ற, மக்களுக்காகப் பாடுபடுகின்ற, தாம் கூறிக்கொண்ட கொள்கைக்காகவும் இலட்சியத்துக்காகவும் தியாகம் செய்கின்ற இயல்பும் உண்மைத் தன்மையும் இருந்தது. அது அவர்களுடைய நேர்மையாகும்.
அது அந்த அரசியலுக்கு மதிப்பையும் பலத்தையும் கொடுத்தது. அதனால்தான் அந்த அரசியலுக்கு இன்னும் பெறுமானம் இருக்கிறது. இன்றைய அரசியல், எத்தகைய தெளிவும் உறுதியுமில்லாமல் தளம்பிக் கொண்டிருப்பதற்குக் காரணம், அகத்திலும் புறத்திலும் எத்தகைய தெளிவும் உறுதிப்பாடும் இல்லை என்பதுவே. இதனால்தான், 2009 க்குப் பின்னர், தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் தொடர்பாக முன்னேற்றங்களைக் காண முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்ப் பிரதேசங்களின் வளர்ச்சியும் சரி, தமிழ் மக்களுடைய வாழ்க்கையும் சரி, எத்தகைய வளர்ச்சியையும் பெற முடியாமல் தேங்கிப்போயுள்ளது. இந்தத் தேக்கத்துக்கான காரணத்தை, வீழ்ச்சியை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டுமாக இருந்தால், இந்த இடத்தில் நாம் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும்.
நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் அரசியல் தலைமைகள், ஒடுக்குமுறை செய்யும் அரசையும் சிங்களப் பேரினவாதத்தையும் எதிர்த்து நிற்கின்ற ஒரு போக்கைப் பின்பற்றி வந்தன. இதனுடைய பிரதான நோக்கம், ஒடுக்கும் தரப்புக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதாகும். இதையே தமது அரசியல் வழிமுறையில், பிரதான உபாயமாகக் கொண்டிருந்தன. இதுவே, தமிழ் அரசியலின் அடையாளமாகவும் பலமாகவும் காணப்பட்டது; கருதப்பட்டது.
ஆனால், இதற்குள்ளிருந்த எல்லைமீறிய எதிர்ப்பும் விட்டுக்கொடாத போக்கும், கிடைத்த வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் தவற விட்டதும் உண்டு. அது அரசியல் தந்திரோபாயங்களைக் கையாளத் தவறிய விளைவுகளாயின. ஆனாலும், தமிழ் அரசியலை முன்கொண்டு சென்றதில் இந்த எதிர்ப்பரசியலுக்கு ஒரு பெரும் பங்குண்டு.
ஆனால், இன்றைய அரசியலின் போக்கோ, இதற்கு முற்றிலும் மாறானதாக மாறி விட்டது. இப்பொழுது தலைமைப் பொறுப்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, அரசையும் சிங்களக் காப்பாற்றுவதற்காகவே பாடுபடுகிறது. இதற்காக, அது தமிழ் மக்களை எதிர்க்கவும் துணிந்து விட்டது என்று கூறுமளவுக்கு தன்னுடைய செயற்பாடுகளை மாற்றியமைத்துள்ளது. இது தனிப்பட்ட ரீதியில், அந்தக் கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டல்ல.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கடந்த தேர்தல்களின்போது, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் செய்த பிரகடனங்களையும் அதன் தலைமைப்பீடம், இன்று சொல்லிக் கொண்டிருக்கும் வார்த்தைகளையும் மதிப்பீடு செய்வதன் மூலம் வெளிப்படும் உண்மை.
இந்த நிலை ஏன் வந்தது? இது ஒன்றும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளைக் கொண்ட ஆழ்ந்த இரகசியமல்ல. மேல்நிலைச் சிந்தனையாளர்களின் கூட்டின் வெளிப்பாடே இது; கொழும்பு மைய அரசியல் சிந்தனையின் விளைவு இது. இது தமிழ் அரசியல் வரலாற்றுக்குப் புதியதும் அல்ல. தமிழரசுக் கட்சியின் தந்தை என வர்ணிக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் காலத்திலேயே இந்தப் போக்குக் காணப்பட்டது.
அன்றைய தமிழ் அரசியல் தலைமைகளும் கொழும்பு மைய அரசியலையே கொண்டிருந்தன. ஆகவே, கொழும்பு மையத்தில் இருந்து செயற்படுவதற்குத் தோதாக அவை சிந்திக்க முற்படுகின்றன. அவ்வளவுதான்!
ஆனால், இவற்றுக்கான அரசியல் அங்கிகாரமும் ஆதரவும் தமிழ் மக்களிடத்திலிருந்து கிடைக்க வேண்டும் என்பதால், இவை வடக்குக் கிழக்கின் அரசியல் உணர்வைப் பேசு பொருளாக்கும். இது தேர்தலுக்கு மட்டுமே. ஆகவே வாக்களித்த மக்களுக்கு விசுவாசமா? வாரி வழங்கும் அரசாங்கத்துக்கு விசுவாசமா? என்ற விவாதங்கள் எல்லாம் பயனற்றவை.
இந்த அரசியல் வரலாற்றை விளங்கிக் கொண்டு செயற்படுவதே எதிர்கால அரசியலுக்கு அவசியமானது. இல்லையென்றால், குண்டுச் சட்டிக்குள்தான் தமிழ் அரசியல் குதிரைகள் ஓடிக் கொண்டிருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago