2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

குழந்தை இன்மையும் அரசியலும்

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூலை 27 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தை இன்மைக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? அறிவுள்ள, பண்புள்ள, நாகரிகமடைந்த சமூகத்தவருக்கு இந்தக் கேள்வி எழும். ஆனால், இலங்கை அரசியல் என்பது பலவேளைகளில் அறிவு, பண்பு, நாகரிகம் என்பவற்றைக் கடந்து, மிகக் கேவலமான எல்லைகளை எல்லாம் எட்டக்கூடியது.  

‘மேன்மை தங்கிய’ நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே, வெட்கத்துக்குரிய எத்தனை சம்பவங்கள் நடைபெற்றன. 2018இல், ‘52 நாள்கள் ஆட்சிக் கவிழ்ப்பு’ முயற்சியின் போது, அசிங்கத்தின் அதியுச்ச நிலையை, உலகமே கண்ணுற்றது.   

நாடாளுமன்றத்தில் கதைக்கத் தகாத வார்த்தைகளை, பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற மரபில் ‘unparliamentary language’ என்பார்கள். ஆனால், இந்த மரபும் மாண்பும், இலங்கையில் எத்தனைமுறை மீறப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் உரைக்கப்பட்ட தகாத வார்த்தைகளை, சபாநாயகர் எத்தனை முறை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டி வந்துள்ளது?  இலங்கையின் அடிப்படை அரசியல் கலாசாரத்தில் மட்டுமல்ல, சமூகக் கலாசாரத்திலும் மிகப்பெரிய பிரச்சினையொன்று இருப்பதையே இவையெல்லாம் சுட்டிக்காட்டி நிற்கின்றன.  

தேர்தல்கால அரசியல் மேடைகள், பிரசார முயற்சிகள் என்பவை, தமது கொள்கைகள், எதிர்காலத்துக்கான திட்டங்கள் பற்றி, மக்களுக்கு எடுத்துரைத்து, தமக்கான ஆதரவைத் திரட்டும் வாய்ப்புகளாக இருக்க வேண்டியவை. ஆனால், இங்கு வசைபாடலுக்கான மேடையாகவும் அருவருக்கத்தக்க கருத்துகளை உதிர்க்கும் ஸ்தலமாகவும், இனவாதம், இனவெறியைக் கக்குவதற்கான வாய்ப்பாகவுமே, அரசியல் மேடைகளும் பிரசார முயற்சிகளும் கையாளப்படுவது, மிகுந்த கவலையளிக்கும் விடயங்களாக இருக்கின்றன.   

இனவாதமும் இனவெறியும் இலங்கை அரசியலுக்குப் புதுமையானவையல்ல; பல தசாப்தங்களாக நிலவிய இந்த நிலையால், கிட்டத்தட்ட இனவாதமும் இனவெறியும் அரசியல் மேடைகளில் பேசப்படுதல் சர்வசாதாரணமானதொன்றாக மாறிவிட்டன.   

“எங்களுக்கு முஸ்லிம், தமிழ் வாக்குகள் வேண்டாம்; சிங்கள பௌத்த, கத்தோலிக்க வாக்குகள் போதும், என்று வீடு வீடாகச் சென்று சொல்லுமளவுக்கும் இதை ஒளிப்பதிவுசெய்து, சமூக ஊடகங்களில் வௌியிடும் அளவுக்கும் இது, சாதாரணமயப்படுத்தப்பட்டு விட்டது.   

மேற்கில், “கறுப்பர் வாக்கு கறுப்பருக்கே”, “வௌ்ளையர் வாக்கு வௌ்ளையருக்கே” என்று அரசியல் மய்யவோட்டத்திலுள்ள கட்சிகள் ஒருபோதும் சொல்லமாட்டா. அப்படிப் பட்ட பிரசாரங்கள் இனவெறிப் பிரசாரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகவும் கருதப்படும்.   
ஆனால், இலங்கையில் சர்வசாதாரணமாக, அரசியல் மேடைகளிலேயே “தமிழர் வாக்கு தமிழருக்கே”, “முஸ்லிம்கள் வாக்கு முஸ்லிம்களுக்கே”, “சிங்களவர் வாக்கு சிங்களவருக்கே” என்ற சூளுரைகளைக் கேட்கக்கூடியதாக உள்ளது.  

இனவாதமும் இனவெறியும் இனத்துவேசமும் ஒருபுறமென்றால், தனிநபர் தாக்குதல்கள் மற்றொருபுறம். தனது சகபோட்டியாளனை எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு தூரம் கேவலப்படுத்த இந்த அரசியல் மேடைகளும் பிரசாரப் பீரங்கிகளும் தவறுவதில்லை. இது எந்தளவுக்குக் கீழ் நிலையை அடைந்திருக்கிறது என்பதற்கு, அண்மையில் இந்தநாட்டின் பிரதமர், தனது பகிரங்க உரையொன்றில் சொன்ன விடயம் உதாரணமாகிறது. தனது உரையொன்றில், சஜித் பிரேமதாஸவைச் சுட்டி, மருத்துவிச்சியை அழைக்க, ஒரு பொத்தானை அழுத்துதல் பற்றிப் பேசுகிறார். “நிச்சயமாக அவருக்கு, அது தேவைப்படாது” என்ற தொனிப்பட, சிங்களத்தில் பேசியிருந்தார். இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருமுறை இருந்தவர்; தற்போது பிரதமராக இருப்பவர், இத்தகைய கருத்தைச் சொல்வது முறையற்றது.   

இது, இந்நாட்டு அரசியலில் மிக ஆழமாக ஊறிப்போயுள்ள முதிர்ச்சியடையாத குறுகியமனப்பாங்கின் வௌிப்பாடாகும். இது மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிநபர் சொன்ன விடயமாக, குறுகிய பார்வையில் அணுகப்பட வேண்டியதொன்றல்ல; மாறாக, இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தின் குறுக்குவெட்டாக அணுகப்பட வேண்டியது. ஏனென்றால், ஒரு போட்டி அரசியல்வாதியின் குழந்தையின்மை, அரசியல்மேடையில் பேசுபொருளாக மாறியிருப்பது, இது முதன்முறையல்ல.  

ஐந்துமுறை இந்தநாட்டின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்கிரமசிங்க பற்றி, அவரது போட்டி அரசியல்வாதிகள், மிகக் கேவலமான முறையில் அவரது குழந்தையின்மையை விமர்சித்துக் கருத்துரைத்து இருக்கிறார்கள். ஒரு முறை, இரு முறையல்ல, பலமுறை இந்த விமர்சனம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவர் இதை, அமைதியாகக் கடந்து போயிருக்கிறார்.   

இன்று அதே விமர்சன ஆயுதம், சஜித் பிரேமதாஸ மீது பிரயோகிக்கப்படுகிறது. ஆனால், இது ரணில், சஜித் என்ற இரண்டு தனிநபர்கள் சார்ந்த பிரச்சினையல்ல. இந்த விமர்சனங்கள் அவர்களைத்தாண்டி, அவர்களது பாரியார்களையும் உற்றவர்களையும் மனதளவில் மிகவும் காயப்படுத்தக்கூடியது.   

அதுமட்டுமல்ல, இது தனிமனிதத் தெரிவுகளையும் கேவலப்படுத்துவதாக அமைகிறது. ஒரு தம்பதிக்கு, தமக்குக் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுக்கும் உரிமை இல்லையா? குழந்தைப் பேறு என்பது, எந்த வகையில் தனிமனிதனின் ஆற்றலையும் அறிவையும் ஆளுமையையும் தீர்மானிக்கும் கருவியாகிறது?   

தாம் குழந்தைபெற விரும்பியும், மருத்துவக் காரணங்களால் அதைப் பெற முடியாத எத்தனை தம்பதியினர் இருக்கிறார்கள். ஏற்கெனவே கவலையிலும் மனவுளைச்சலிலும் உள்ளவர்களை, குழந்தையின்மையை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி, நகைப்பதுதான் மனிதமா, அதுதான் தலைமைத்துவமா?   

தாம் குழந்தை பெறவேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள், அந்தத் தம்பதியாவர். அது எந்த வகையிலும், பொதுவிவாதத்துக்கு உரியதொரு கருத்தல்ல; நிச்சயமாக, அரசியல் மேடைகளுக்குரிய கருத்தல்ல.  

ஆனால், நாம் படிக்கும் புராணங்களும் இதிகாசங்களும் குழந்தைப் பேறு பற்றிய மிகைப்படுத்தல்களை, எமக்குள் ஊட்டியிருக்கின்றன. குறிப்பாக, அரசர்கள் பல குழந்தைகளைப் பெற விரும்பியதையும் குழந்தைப் பேறில்லாத அரசர்கள் அதற்காக, யாகப் பரிகாரங்கள் செய்ததையும் புராணங்களும் இதிகாசங்களும் எமக்குச் சொல்லி நிற்கின்றன. ஒரு வேளை குழந்தைப் பேறு பற்றி, அதீத பிரக்ஞைக்கு இந்தப் பழங்கதைகள் ஒரு காரணமாக இருக்கலாம். இதனைப் பற்றி சிந்திக்கும் போது, முதலாவதாக அவை காலத்தால் மிகப்பழையவை என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.   

இரண்டாவதாக, இந்தக் கதைகள் அனைத்தும் நவீன ஜனநாயகத்துக்கு முற்பட்ட மன்னராட்சியின் அடிப்படையிலானவை. அதாவது, ஒரு குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்யும் உரிமையைக் கொண்டிருக்கும். ஆகவே, ஆட்சியுரிமையைத் தக்க வைக்க, வாரிசு என்பதே மூலமாக அமைகிறது. வாரிசு இல்லாவிட்டால், ஆட்சியுரிமை கைமாறிவிடும். ஆகவேதான், வாரிசு என்பது மன்னனுக்கு மிக முக்கியத்துவம்மிக்க ஒன்றாகக் காணப்பட்டது.  

சமகாலத்தில், வாரிசு அரசியலே வேண்டாம்; குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், வாரிசு என்பது, ஓர் அரசியல்வாதிக்கு எந்த வகையிலும் ஒரு தகுதியோ, அவசியப்பாடோ அல்ல. ஆனால், புராண வரலாற்றை உண்மையென நம்புபவர்களிடையே இந்தச் சிந்தனை மாற்றம் இலகுவாக ஏற்பட்டுவிடப்போவதில்லை. அதனால்தான், 21ஆம் நூற்றாண்டிலும் கூட, குழந்தைபெறாதவன் ஆண்மை அற்றவனாகவும் குழந்தைபெறாதவள் பெண்மையற்றவளாகவும் விமர்சிக்கப்படும் ஈனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  

இது, ஒரு 74 வயதுக் கிழவனின் கதை; இதற்கு அதிக முக்கியத்துவம் தரத்தேவையில்லை என்றும், இன்றைய சமூகம் இதிலிருந்து மாறிவிட்டது என்றும் சிலர் கருத்துரைக்கலாம்.  ஆனால், இந்த 74 வயதுக் கிழவனின் தாக்கம், இன்றைய இளைய சமூகத்தையும் பாதித்திருக்கிறது என்பதற்கு, அவரது ஏறத்தாழ 30 வயதுள்ள மகன், அண்மையில் இணையத்தில் இடம்பெற்ற வாதமொன்றில் கூறிய பதிலொன்றே சாட்சி. ட்விட்டரில் தன்னை விமர்சித்து வாதம் புரிந்த ஒருவருக்கு, “நீ ஒரு பெண்ணைப் பார்த்து, திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்” என்று, அந்த ஏறத்தாழ 30 வயதுள்ள ‘ரொக்கட் விஞ்ஞானி’ கருத்துரைத்திருந்தார்.   

ஆகவே, இந்தக் கிழவனை ‘ஹீரோ’வாகத் தொழுதேற்கும் பெரும்பான்மை மக்கள் கூட்டத்துக்கு, இந்தக் கிழவனின் கதைகள் வேதவாக்காக மாறிவிடுகின்றன. அதனால்தான் பொறுப்போடு பேச வேண்டிய தார்மிகக் கடமை, இந்தக் கிழவனுக்கு இருக்கிறது. ஆகவேதான் அவர் சொன்ன இந்த விடயத்தை விமர்சிக்க வேண்டியதாகவும் அவர் விட்ட பிழையைத் தௌிவாகச் சுட்டிக்காட்ட வேண்டியதாகவும் இருக்கிறது.  

குழந்தையிருக்கிறதோ இல்லையோ, அதற்கும் சிறந்த அரசியல் தலைவராக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. உதாரணம் கேட்டால், பலம்பொருந்திய நாடுகளை ஆளும் தலைவர்களுக்கும் வாரிசில்லைத்தான். ஜேர்மனியின் சான்செலர் ஒன்ஜேலா மேர்கள், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்தின் பிரதமர் மார்க்ரட் ஆகியோரைக் கூறலாம்.   

வரலாற்றை உள்ளடக்கிச் சிந்தித்துப் பார்த்தால் மிகச்சிறந்த ஆட்சியாளர்களாக இருந்த பலருக்கு வாரிசுகள் இருக்கவில்லை. பல மனைவிகள், பல வாரிசுகள் கொண்டவர்கள்கூட, குழந்தைகள் பற்றி யோசிக்காததை யோசித்தவர்கள், இந்தக் குழந்தை அற்றவர்கள்தான்.  

ஓர் அறிவுள்ள, சிந்திக்கத் தெரிந்த, பண்புள்ள, நாகரிகமடைந்த, மனிதாபிமானமுள்ள மக்கள் கூட்டமாக, இனிமேலும் குழந்தையின்மை பற்றி அரசியல் பொதுமேடைகளில் பேசுவதற்கு இடமளியோம் என உறுதிபூணவேண்டியது அவசியமாகிறது. பேசுவதற்கு வேறு எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X