2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கேளாமலேயே கிடைத்த சுதந்திரம்

Editorial   / 2023 செப்டெம்பர் 29 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுப்பு ஜூலையின் 40 ஆண்டுகளின் பின்னர் -19: கேளாமலேயே கிடைத்த சுதந்திரம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

பெப்ரவரி 4, 1948 இல் பிரித்தானி யாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. இது எதிர்பாராதது. குறிப்பாக, பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியாளர்களிடம் ‘டொமினீயன்’  அந்தஸ்தையே டி.எஸ் சேனாநாயக்க உள்ளிட்ட சிங்களத் தலைவர்கள் கோரி நின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக பிரித்தானியக் கொலனியாதிக்கம், இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கியது.


 இலங்கையில் வளர்ச்சியடைந்து வந்த இடதுசாரிய கொலனிய எதிர்ப்பும் அதன் வழிப்பட்டதாக நாட்டையே உலுக்கிய 1947ஆம் ஆண்டு வேலை நிறுத்தமும் பல கேள்விகளை எழுப்பின. வேலை நிறுத்தம் கொடுங்கரங்களின் உதவியால் முறியடிக்கப்பட்டாலும் அதிகாரத்தின் மீதான மிகப்பாரிய தாக்குதலாக அது இருந்தது. நாடு தழுவிய இன்னொரு போராட்டம் ஆட்சியதிகாரத்தை வலுக்கட்டாயமாகப் பறித்துவிடுமோ என்ற அச்சவுணர்வும் இருந்தது. முதலுக்கு மோசமில்லாமல் ஆட்சியைக் கைமாற்ற நடவடிக்கைகள் தொடங்கின. 

இவ்வாறு கிடைத்த சுதந்திரமானது, கொலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து ஆங்கிலமயமாக்கப்பட்ட மேல்தட்டு உயரடுக்கிற்கு ஆட்சியை அமைதியான முறையில் மாற்றிய நிகழ்வு என்றே நோக்க வேண்டியுள்ளது.

நாட்டின் அரசியல் தலைமைத்துவமானது ஒரு சில முக்கிய சிங்கள உயரடுக்கினரிடமே வழங்கப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.  டி.பி ஜயதிலகவைத் தொடர்ந்து சட்ட சபையின் தலைவராக பதவியேற்ற டி.எஸ் சேனநாயக்க, சிறுபான்மை ஆதரவாளர்களை ஐக்கிய தேசிய கட்சியில் சேர்த்துக்கொள்ள முயற்சித்தார். இது உண்மையான அக்கறையால் அல்ல. பரந்துபட்ட வாக்குப்பலத்தை ஐ.தே.க பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனாலும் அவரின் இனவாதம் அதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது.  

1937இல் இலங்கைக்கான ஆளுநராக நியமிக்கப்பட்ட அன்ரூ கல்டிக்கொட், சிறுபான்மையினர் உரிமைகள் மீது அக்கறை கொண்ட ஒருவராக இருந்தார். இலங்கையில் பல முக்கியமான மாற்றங்கள் அவரது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை பல்கலைக்கழகம், இலங்கை வங்கி என்பன அவரது காலத்திலேயே வந்தன. மலையகத் தமிழர் மீதான எதிர்ப்பு தொடர்ச்சியாக சட்டசபையில் வெளிப்படுவதை ஆளுநர் கண்டார். நவம்பர் 1940 இல், டி.எஸ் சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா, ஜி.சி.எஸ் கொரேயா ஆகியோரை இலங்கையில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்து விவாதிக்க, புதுடெல்லிக்கு குழுவாக ஆளுநர் அனுப்பினார்.

இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, மலையகத் தமிழ்ப் பிரதிநிதிகள் யாரும் அக்குழுவில் இருக்கவில்லை. எனவே, அவர்களின் நலன்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது, மலையகத் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த சேனநாயக்கவும் பண்டாரநாயக்கவுமே இக்குழுவில் அங்கத்துவம் வகித்தனர் என்பது நியாயமான குற்றச்சாட்டாக இருந்தது. இனப்பிரச்சினையில் தீவிர நிலைப்பாடுகளை கொண்டிருந்த சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள ஆதரவுக்காகப் போட்டியிட்ட முதல் தடவையிலேயே ஒன்றாக மலையக மக்களை வெளியேற்றுவது பற்றிப் பேசியிருந்தார்கள்.

மலையக மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்காக, இலங்கை இந்திய காங்கிரஸும் பெரி சுந்தரம் தலைமையில் புது டெல்லிக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியது, ஆனால், அதற்கு உத்தியோகபூர்வ அங்கிகாரம் இருக்கவில்லை. பண்டாரநாயக்கா, சேனநாயக்கா ஆகிய இருவரும் சட்டசபையில் இந்திய எதிர்ப்பு பேச்சுகள் மூலம் சிறுபான்மையினர் குறித்துத் தொடர்ச்சியாக சிங்கள மக்களிடம் முறையிட்டனர். இது  சுதந்திரத்துக்கு முன்னமே சிங்களப் பெருந்தேசியவாதம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை எடுத்துக் காட்டும் இன்னொரு நிகழ்வாகும். 

1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜே.ஆர் ஜெயவர்தன, சிங்களத்தை அரச கரும மொழியாக்க தீர்மானம் கொண்டு வந்தார். பள்ளிகள் தங்கள் தாய்மொழியில் குழந்தைகளுக்கு கற்பிக்க அனுமதிக்கும் திருத்தங்களை அவர் ஆதரித்தார். அதே காலப்பகுதியில், தமிழ் பேசும் பகுதிகளில் தமிழை அதிகாரப்பூர்வ மொழியாக சேர்க்க வேண்டும் என்பதும் பரிந்துரைக்கப்பட்டது.  ஜே.ஆர் ஜெயவர்தனவும் டி.எஸ் சேனநாயக்காவின் மகன் டட்லி சேனநாயக்காவும், தமிழுக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்குவதை எதிர்த்தவர்களின் அச்சங்களுக்காகக் குரல் கொடுத்தனர். தமிழ்நாடு அருகாமையில் இருப்பது ஆபத்து என்றும், அது மொழிரீதியாக இலங்கை தமிழர்களை தமிழ்நாட்டுடன் இணையச் செய்யும் என்றும் எனவே,, தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என்றும் வாதிட்டனர்.

ஏற்கெனவே புரையோடிப் போயிருந்த மலையகத் தமிழர் மீதான வெறுப்பு இதற்கு வலுச் சேர்த்தது. தமிழ்நாட்டில் இருந்து வரும் திரைப்படங்கள், இலக்கியங்கள், வானொலி ஒலிபரப்புகள் தமிழ் மொழிக்கு வலுச்சேர்க்கும் என்றும் இது இலங்கையில் சிங்களத்தை இறந்த மொழியாக மாற்றிவிடும் என்ற அச்சத்தை இருவரும் மக்கள் மத்தியில் விதைத்தனர்.

இலங்கையின் சுதந்திரத்திற்கான பாதை, ஏமாற்றும் வகையில் எளிதானதாக இருந்தது. ஏனைய பிரிட்டிஷ் கொலனிகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒன்றாக இருந்தது. இலங்கை தொடர்ந்தும் பிரித்தானியாவுக்கு விசுவாசமாக இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் ஆங்கிலேயர்களுக்கு இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ஏனைய கொலனிகளை விட இலங்கைக்கு சுதந்திரம் கொடுப்பது பயனுள்ளது என்று தோன்றியது.

இலங்கையின் பொருளாதார வளம் இதற்கான முக்கிய காரணியாக இருந்தது.  முதலாவது இலங்கை இரண்டாம் உலகப் போரால் சேதமடையாமல் இருந்தது. இதனால் பொருளாதார ரீதியாக மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கவில்லை. இரண்டாவது, போர் முடிவுக்கு வந்த பின்னர், இலாபகரமான பெருந்தோட்டப் பொருளாதாரம் செழித்தது. எனவே, இவ்விரண்டும் நல்ல பண இருப்புகள் என்பதை கொலனிய நிர்வாகம் விளங்கியிருந்தது.

அதேவேளை, இலங்கையில் ஆட்சிக்கு வரத் தயாராக இருந்த தலைமை, பழைமைவாத மற்றும் ஜனநாயக அரசியலில் மற்றும் பிரிட்டிஷ் பாணி நிர்வாக கட்டமைப்பில் அனுபவம் வாய்ந்ததாக இருந்தது. மக்கள் ஒப்பீட்டளவில் நன்கு படித்தவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தனர். எனவே சுதந்திரம் வழங்குவதே பொருத்தமானது என்ற எண்ணம் இருந்தது. அதேவேளை, இலங்கை தேசிய காங்கிரசுக்கு ஒரே  மாற்றாக இடதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு மட்டுமே இருக்கும் என்ற இலங்கையின் பழைமைவாத உயர் வர்க்கங்களின் அச்சத்தை கொலனித்துவ அலுவலகமும் கொண்டிருந்தது.

இவை பொதுவான முன்முடிவுகளாக இருந்த போது, யதார்த்தம் வேறுபட்டதாக இருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு அகற்றப்பட்டபோது, தோட்டப் பொருளாதாரம் குறைந்த லாபம் ஈட்டியதால், பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. ஏற்றுமதி விலைகள் குறைந்து, அத்தியாவசிய உணவு இறக்குமதி விலை உயர்ந்ததால், வர்த்தக விதிமுறைகள் கொலனிக்கு எதிராக மாறின.

அரசியல் தலைமையானது முதன்மையாக ஒரு சில செல்வந்தர்களான கீழ்நாட்டு ‘கொவிகம’ குடும்பங்களில் இருந்து பெறப்பட்டது. சுகாதாரம், சமூகநலன், கல்வி ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வதற்கான அவர்களின் மூலோபாயத்தின் முக்கிய அம்சமாகும். புதிய தேசத்தின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்குத் தேவையான அரசாங்க வருவாயை இது உள்வாங்கியது.

சேனநாயக்கா தனது தலைமையிலான சிங்கள அரசாங்கத்தில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் என்று கொலனித்துவ அலுவலகத்தை நம்பவைத்தார், ஆனால், அதிகார மாற்றம் சமூகத்தை பிளவுபடுத்தும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. சிங்கள பௌத்தர்களின் வாக்குகள், தீவை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் என்று பாராளுமன்ற அமைப்பு உத்தரவாதம் அளித்தது. இந்த வாக்காளர்களில் பலர், சுதந்திரமானது, கொலனி ஆதிக்கத்தின் கீழ் பௌத்தர்களின் உண்மையான மற்றும் கற்பனையான குறைகளை நிவர்த்தி செய்யும் ஓர் இழிவான சமூகத்தை மீண்டும் உருவாக்குவதற்கான சக்தியை தங்களுக்கு அளித்ததாக நம்புவதற்கு வழிவகுத்தது.

சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கிகரிப்பதன் அவசியத்தை சிங்களத் தலைவர்கள் விரும்பவில்லை. சிறுபான்மைத் சமூகங்களின் தலைவர்களும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்குவதை விட, தமது இன சமூகத்தையே நம்பியிருந்தனர்.

சேனநாயக்கா, இடதுசாரி எதிர்ப்பிற்கு எதிராக ஆங்கில மயமாக்கப்பட்ட உயரடுக்கின் பரந்த பிரிவை ஒன்றிணைத்து, புதிய தேசத்தை ஒன்றாக வைத்திருக்க முயன்றார்.  அவர் பிற கொலனித்துவ நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு ஆட்சியின் முறிவைத் தவிர்த்தார். எவ்வாறாயினும், அதன் செயலிழந்த கொலனித்துவ மரபு - சிங்களம் மற்றும் தமிழ் தேசத்தில் ஆங்கிலம் பேசும் அரசாங்கம், அதிகப்படியான மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியில் பொருளாதாரச் சார்பு போன்றவற்றை முறியடிப்பதற்கு அவரிடம் பொருத்தமான தீர்வுகள் எதுவும் இல்லை.

அரசியல் அதிகாரத்தை பெரும்பான்மை சமூகத்தின் கைகளில் வைப்பதன் மூலம் அரசியலமைப்பே பிரச்சினைகளை அதிகப்படுத்தியது.

2023.09.22


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X