2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொண்டாடப்பட வேண்டியதா ஷரீபின் வீழ்ச்சி?

Gopikrishna Kanagalingam   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இரசிப்பவர்களுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது, அலாதியான ஒரு விருப்பம் அல்லது கவனம் காணப்படும். மிகவும் குழப்பமான அணியாகத் தென்பட்டாலும் கூட, அவ்வப்போது தனது உச்சக்கட்டப் பலத்தை வெளிப்படுத்தி, மிகப்பெரிய அணிகளைக் கூட வீழ்த்திவிடும் இயல்பு, அவ்வணிக்கு உள்ளது. அண்மையில் கூட, ‘சம்பியன்ஸ்’ கிண்ணத் தொடரை, யாரும் எதிர்பாராத வண்ணம் கைப்பற்றியிருந்தது.  

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்த இயல்பு, அந்நாட்டுக் கிரிக்கெட் அணிக்கு மாத்திரம் உரித்தான இயல்பு என யாராவது எண்ணினால், அது தவறாகும். அது, பாகிஸ்தான் என்ற நாட்டுக்குச் சொந்தமான இயல்பு. உலக நாடுகளைப் பொறுத்தவரை, மிகவும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட நாடுகளுள் ஒன்றாகக் காணப்பட்டாலும் கூட, உலகில் மிகவும் குழப்பகரமான நாடுகளுள் ஒன்றாகவும் காணப்படுகிறது. அடிக்கடி, இராணுவப் புரட்சி நடைபெறும் நாடாகவும், பிரதமர்களும் தலைவர்களும் மாறும் நாடாகவும், பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறும் நாடாகவும், அந்நாடு காணப்படுகிறது. ஆனால், இத்தனைக்கும், உலகில் அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 8 நாடுகளுள், பாகிஸ்தானும் ஒன்றாகும்.  

இவ்வாறான ஒரு நாடு தான், மீண்டும் குழப்பத்தைச் சம்பாதித்துள்ளது. அந்நாட்டின் பிரதமராக இதுவரை பதவி வகித்துவந்த நவாஸ் ஷரீப், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் பதவி விலக்கப்பட்டிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாகவே, அவர் பதவி விலக்கப்பட்டிருக்கிறார்.  

கடந்தாண்டு, உலகம் முழுவதையும் தன்பக்கம் இழுத்த சர்ச்சை, தற்போது பெருமளவுக்குக் கதைக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ‘பனாமா ஆவணங்கள்’ என்று சொல்லப்படுகின்ற தகவல் வெளியீடுதான் அது. உலகிலுள்ள பல நாடுகளின் செல்வந்தர்கள், வரி ஏய்ப்புக்காகவும் கறுப்புப் பணத்தைப் பதுக்குவதற்காகவும் வேறு தேவைகளுக்காகவும், பனாமாவைச் சேர்ந்த நிதி நிறுவனமொன்றினூடாக, தமது சொத்துகளை, வெளிநாடுகளில் முதலிட்டிருந்தனர் என, அந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியிருந்தன.  

இந்த ஆவணங்களில், பிரதமராக இருந்த நவாஸ் ஷரீபின் பெயர் நேரடியாக இடம்பெற்றிருக்காவிட்டாலும், அவரது 6 பிள்ளைகளில் 3 பிள்ளைகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தான், மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளின் விளைவாகத்தான், வெளிநாடுகளில் காணப்பட்ட சொத்துகளை மறைத்தனர் என்ற குற்றச்சாட்டில், நவாஸ் ஷரீபையும் அவரது குடும்பத்தினரையும் குறிப்பிட்டுக் கூறிய உச்சநீதிமன்றம், நவாஸ் ஷரீபின் பதவியைப் பறித்தது. அவர் மீதும் அவரது குடும்பம் மீதும், குற்றவியல் விசாரணைக்கும் அது உத்தரவிட்டது. 

இங்கு முக்கியமானதாக, இதில் முக்கியமான ஒருவராகக் கருதப்படும், நவாஸ் ஷரீபின் மகள் மரியம் ஷரீப் மீதான விசாரணைகள், நவாஸ் ஷரீபுக்கு இன்னொரு முக்கியமான அடியாக அமைந்துள்ளது. மரியம் ஷரீப் தான், நவாஸ் ஷரீபின் அரசியல் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவர். தற்போது, அவரும் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கி, தனது அரசியல் எதிர்காலத்தை, கிட்டத்தட்ட முழுவதுமாக இழந்துள்ளார்.  

நவாஸ் ஷரீபின் பதவி விலக்கலென்பது, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல்வாதி ஒருவர், தனது பதவியை இழக்குமளவுக்கு ஒரு நாட்டில் நீதித்துறை காணப்படுகிறதா என்று, ஒரு தரப்பினர், மிகுந்த ஆர்வத்துடன், இவ்விடயத்தை நோக்கினர்.  

அவர்களைப் பொறுத்தவரை, இந்த விடயம் முக்கியமானது. உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், எவரும் சிக்கிக் கொள்வது என்பது, அதிசயமாகவே அமைகிறது. எனவேதான், குழப்பங்களுக்குப் பெயர் போன ஒரு நாட்டில், இவ்விடயம் இடம்பெற்றமை, வரவேற்கத்தக்கது என்பது, அவர்களது பார்வை. அந்தப் பார்வையில், மேலோட்டமாக நியாயம் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.  

ஆனால், இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, பாகிஸ்தான் என்பது, ஏனைய நாடுகளைப் போன்ற சாதாரண நாடு கிடையாது. குழப்பங்கள் நிறைந்த நாடு. எனவேதான், நவாஸ் ஷரீபின் பதவி விலக்கலைப் பார்ப்பதற்கு முன்னர், அந்நாட்டின் வரலாற்றையும் சிறிது புரட்டிப் பார்த்தல் அவசியமானது.  

1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானின், 13ஆவது பிரதமராக, நவாஸ் ஷரீப் இருந்தார். இதில் சிலர், பல தடவைகள் பிரதமர்களாக இருந்தனர். நவாஸ் ஷரீப் கூட, 3 தடவைகள் பிரதமராக இருந்தார். ஆனால், எந்தப் பிரதமரும், தங்களுடைய ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்த வரலாறு கிடையாது. நவாஸ் ஷரீபின் ஆட்சி, 3 தடவைகளும் இைடநடுவிலேயே நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.  

70 ஆண்டுகளை வரலாறாகக் கொண்ட ஒரு நாட்டில், எந்தவோர் அரசியல்வாதியும், தனது பிரதமர் பதவியின் முழுக்காலத்தையும் அனுபவிக்க முடியவில்லை என்பது, அந்நாட்டில் காணப்படும் ஏதோ ஒரு பிரச்சினையின் அறிகுறி என்பதை மாத்திரம், புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா? 

இந்தப் பின்னணியில், நவாஸ் ஷரீபின் பதவி விலக்கலை அணுக முடியும். நவாஸ் ஷரீப் மீது, நேரடியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை; அவர் குற்றவாளி என, நீதிமன்றத்தால் உத்தரவு வழங்கப்படவில்லை. ஆனால், இவற்றுக்கு மத்தியில், நாட்டின் பிரதமர், பதவி விலக்கப்பட்டிருக்கிறார். எவ்வாறு சாத்தியமாகும் இது?  

இதைப்பற்றித் தெரிந்துகொள்ள, பாகிஸ்தானின் வரலாற்றில், இராணுவத்தின் ஆதிக்கத்தைப் பற்றி அறிந்துகொள்ளுதல் அவசியமானது. பாகிஸ்தானில் இராணுவப் புரட்சி இடம்பெற்று, இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படுதலென்பது, புதிதான ஒன்று கிடையாது. நவாஸ் ஷரீபின் ஆட்சியின்போது கூட, ஒரு தடவை, பர்வேஸ் முஷாரப்பின் இராணுவப் புரட்சியின் விளைவாக, நவாஸ் ஷரீப், தனது ஆட்சியை இழந்திருந்தார்.  

பாகிஸ்தானில், இராணுவத்தின் ஆதிக்கமென்பது அதிகமானது. தற்போது, நவாஸ் ஷரீபுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது கூட, அந்த நீதிமன்றத்தில், இராணுவப் பிரசன்னம் காணப்பட்டது. இந்த வழக்கை, இராணுவம் உன்னிப்பாகக் கவனித்து வந்தது.  
அப்படியானால், நீதிமன்றத்தில், இராணுவத்தின் செல்வாக்குக் காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்களா என்ற கேள்வி எழக்கூடும். ஆதாரமில்லாத நிலையில், அவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பது, பொருத்தமாக இருக்காது. 

ஆனால், பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிகளில், வெற்றிபெற்ற 3 சந்தர்ப்பங்களிலும், அந்த இராணுவப் புரட்சியும் ஆட்சிக் கைப்பற்றலும், நாட்டின் உச்ச நீதிமன்றக் கட்டமைப்பால், சரியெனத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனவே, நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பாகவும் அதன் முடிவெடுக்கும் திறன் தொடர்பாகவும், போதுமான கேள்விகள் காணப்படுகின்றன என்பதை மாத்திரம் குறிப்பிட முடியும்.  

இவை ஒருபுறமிருக்க, நவாஸ் ஷரீபை, எதற்காக இராணுவம் விரும்பாமலிருக்க முடியும் என்ற கேள்வி எழ முடியும். நவாஸ் ஷரீப் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒருபக்கமிருக்க, பாகிஸ்தானின் மிகப்பெரிய எதிரியாகக் கருதப்படும் இந்தியாவுடன், இராஜதந்திர ரீதியாக நடந்து, இரு நாடுகளுக்குமிடையிலான முறுகலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில், அவர் ஈடுபட்டார். வழக்கமான, பாகிஸ்தான் தலைவர்கள் போன்று, போரை முன்னிறுத்தி அவர் செயற்பட்டிருக்கவில்லை. அத்தோடு, சிவில் நடவடிக்கைகளில், இராணுவத்தினரின் ஆதிக்கத்தைக் குறைப்பதில், அவர் ஈடுபட்டிருந்தார். இந்த நடவடிக்கைகள், இராணுவத்தினரைப் பொறுத்தவரை, அவர்களால் விரும்பப்படாத ஒருவராக மாறுவதற்கு வழிவகுத்தன.   

இதற்கு முன்னர், பிரதமராக இருந்த யூசப் ராஸா கிலானியும், இராணுவத்தினருடன் முரண்பாடுகளைக் கொண்ட ஒருவராகக் காணப்பட்டார். குறிப்பாக, அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானுக்குள் வைத்து, ஐக்கிய அமெரிக்க இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, சர்வதேச அளவில், பாகிஸ்தானுக்குத் தலைகுனிவு ஏற்பட்டது. அப்போது, பின் லேடனை, பாகிஸ்தானுக்குள் 6 ஆண்டுகள் தங்க அனுமதித்தமைக்காக, பாகிஸ்தானிய இராணுவத்துக்கு, அவர் பகிரங்கமாகவே தனது எதிர்ப்பை வெளியிட்டார். விளைவு? வேறு ஒரு வழக்கில், உச்சநீதிமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  

இவ்வாறு, ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்படும் அரசியல் தலைவர்கள், ஏதோவொரு காரணத்தைக் காட்டி, பாகிஸ்தானில் பதவி நீக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதனால்தான், நவாஸ் ஷரீப் என்ற மனிதர் மீதான விமர்சனங்களைத் தாண்டி, பெரும்பான்மையான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் என்ற அடிப்படையில், அவரது பதவி நீக்கம், இனிப்பான உணர்வை ஏற்படுத்தவில்லை.  
இடைக்காலப் பிரதமராக, நவாஸ் ஷரீபின் விசுவாசியாகக் கருதப்படும் ஷஹிட் கான் அப்பாஸி நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அடுத்த நிரந்தரப் பிரதமராக, நவாஸ் ஷரீபின் சகோதரர் ஷபாஸ் ஷரீப் நியமிக்கப்படவுள்ளார். அவர், ஒக்டோபர் மாதத்தில் பதவியேற்கவுள்ளார்.  

இதில் குறிப்பான ஒரு விடயமாக, நவாஸ் ஷரீபோடு ஒப்பிடும் போது, இராணுவத்தினருடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டவராக, தற்போதைய பஞ்சாப் மாநில முதலமைச்சரான ஷபாஸ் ஷரீப் கருதப்படுகிறார். ஆகவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நவாஸையும் ஷபாஸையும், பாகிஸ்தான் இராணுவம், வெவ்வேறாகக் கருதவே இடமுண்டு.  

ஆனால், அவராலும் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதே, தற்போதுள்ள கேள்வியாக இருக்கிறது. கடந்தகால வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது, அதற்கான வாய்ப்புகள் பற்றிச் சிந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X