2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொரோனா தின்னும் பத்திரிகைகள்

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 15 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயகுமார் ஷாண்

(மொனராகலை)  

jayakumarshan4@gmail.com  

 

ஒரு பத்திரிகை வெளிவராவிட்டால், சுயமாகச் சிந்திப்பவர்களுக்கும் மக்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கும், வாய்ப்பற்று போகின்றது என்றுதான் யதார்த்தம்.   

மக்களின் உணர்வை அறிந்து, அதை வெளிப்படுத்துவது பத்திரிகைகளின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். மற்றொன்று, மக்களிடம் உணர்வுபூர்வமான நல்லெண்ணங்களை உருவாக்க வேண்டும், அதுமட்டுமன்றி முக்கியமாக, பொதுமக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைத் துணிச்சலாக வௌிப்படுத்தி நிற்க வேண்டும்.   

கொவிட்-19 பெருந்தொற்றை அடுத்து, நாட்டில் பல்வேறு விடயங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் அன்றாட நடவடிக்கை, வியாபாரம், வர்த்தகம், கல்வி, பொருளாதாரம், சூழல் போன்ற முக்கிய விடயங்களில், திருப்பங்கள், மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன அவ்வாறு ஏற்பட்ட திருப்பங்கள், மாற்றங்களில் சில நன்மையை ஏற்படுத்திய அதேநேரம், அநேகமானவை தீமைகளையும் பாதிப்புகளையும் மட்டுமே ஏற்படுத்தியுள்ளன.  

பத்திரிகை என்பது, ஒரு நாட்டுக்கு உயிர்போன்றது.ஒரு நாடு, உயிர்ப்புடன் இருக்க வேண்டுமென்றால், அந்த நாட்டில் பத்திரிகைதுறை, உயிர்ப்புடன் இருக்கு வேண்டும். காரணம், நாளாந்த செயற்பாடுகளை, செய்திகளை தெரிவித்து, பதிவுக்கு உட்படுத்தி, நாட்டை உயிருள்ள ஜீவனாக வைத்திருப்பது பத்திரிகைகளாகும்.   

 கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையைத் தொடர்ந்து, ஒரு மாதகாலம் நாட்டு மக்கள் அனைவரும், வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோடு, பல சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக, நாளாந்தம் வெளிவரும் பத்திரிகைகளும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளன.   

தொடர்ச்சியாகப் பத்திரிகைகள் அச்சிடாமல் இருப்பதால், அதற்கான கேள்வி, பொது மக்கள் மத்தியிலும் வாசகர் மத்தியிலும், குறைந்து விடுகின்றது. எனவேதான், தற்பொழுது அனைத்து அச்ச ஊடகங்களும் மின்னிதழ் வடிவத்துக்கு மாறியுள்ளன.   

தகவல் தொடர்பில், இதழியல் ஓர் அடிப்படைத்தளம். பொதுச் செய்திகளையும் கருத்துகளையும் பொழுது போக்குகளையும் முறையாகவும் நம்பகரமான வகையிலும், இதழியல் பணிகள் இணையத்தில் வழியே செவ்வனே வெளியிடப்படுகின்றன.  

கடந்த தினங்களில், ஒருசில பத்திரிகைகளை அச்சு வடிவத்தில் வெளியிட முடிந்துள்ளது. இதுவரையிலும், வழமையான அம்சங்களை உள்ளடக்கிய வகையில், பத்திரிகைகள் அச்சிடப்பட்டு வெளியாக வில்லை. இது வாசகர்கள் மத்திலே பெரும் தாக்கத்ததை ஏற்படுத்தியுள்ளது. மின்னிதழ் என்பது, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வலைத்தளம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட கோப்பு வடிவிலோ அல்லது வலைப்பக்க வடிவிலோ இருக்கும் பத்திரிகையாகும்.  

அவ்வாறு வெளிவந்த சில பத்திரிகைகளும், மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பத்திரிகை பக்கங்களின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டன. காரணம், நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில், முக்கிய விடயங்களை மாத்திரமே, பத்திரிகைகள் உள்வாங்கி இருந்தன. இது, கருத்தாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு பாரிய பிரச்சினையாகவே உள்ளது.  

உலக வரலாற்றில், இணையத்தின் ஊடாக, முதலாவதாக மின்னிதழ் பத்திரிகை, 1974ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இருப்பினும், 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஐக்கிய இராச்சியம் குறிப்பிட்ட பல பத்திரிகைகளை, மின்னிதழ் பத்திரிகைகளை வெளியிட்டிருந்த போதும், அவை அச்சு வடிவில் பிரசுரமாகிய பத்திரிகைகளைப் போல், பிரபல்யம் அடைந்திருக்கவில்லை.   

 2015ஆம் ஆண்டளவில், மின்னிதழ் பத்திரிகையை வாசிப்பதற்கு, 65 சதவீதமானோர் விருப்பார்வம் தெரிவித்திருந்தார்கள். இந்த விருப்பார்வம், 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், மிகவும் குறைந்தளவே காணப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட ஒரு பத்திரிகையில், வர்த்தக அறிவித்தல் விளம்பரத்துக்காக கணிசமான இலாபம் கிடைக்கப் பெறுகின்ற பொழுது, மின்னிதழ் பத்திரிகை விளம்பரத்துக்கு மிகக் குறைந்த சதவீத அளவே, கிடைக்கப் பெறுகின்றது.   

உலக நடப்பு இவ்வாறு இருக்கும் பட்சத்தில், இந்த மின்னிதழ் வடிவ பத்திரிகையை அறிமுகப்படுத்திய பொழுது அதனை வாசகர்கள் பெற்றுக்கொள்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது. அது வாசகர்கள் மத்தியில் பெரிதான வரவேற்பை பெற்றிருக்கவும் வில்லை.   

ஆனால், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காராணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், பத்திரிகைகள் தற்பொழுது புதிய பரிணாமத்துடன் வாசகர் மனதைக் கவரும் மின்னிதழ் வடிவமாக பவனி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கொவிட்-19 காரணமாக, உலகம் முழுவதும் முக்கிய துறைகள் முடக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் தொழிலுக்குச் செல்லவும் முடியாத வண்ணம் திண்டாடுகின்றனர்; வறுமையும் ஒருபக்கம் வாட்டுகிறது. அச்சிடப்பட்ட பத்திரிகை விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், பத்திரிகைகள் மின்னிதழ் வடிவமாக மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.   

இது, இணைய வசதி உள்ள குறிப்பிட் ஒருசிலரே பயன்பெற்றுக் கொள்ள முடியுமாக உள்ளது. எமது நாட்டின் இணைய பாவனையாளர்கள் 35 சதவீதமானவர்களே உள்ளனர். ஆகவே, இது எந்தளவு மக்களைச் சென்றடைகின்றது என்பது கேள்விக் குறியே?   

பொதுவாக, தேசிய, சர்வதேச மட்டங்களில் 40 வயதுக்கு குறைவானவர்கள் மின்னிதழ், பத்திரிகைகளை வாசிப்பது இல்லை என்ற கருத்து நிலவுகின்றது. ஆகவே, அவர்கள் தகவல்களையும் செய்திகளையும் முகப்புத்தகம் போன்ற சமூகவலைத் தளங்களின் ஊடாகவே பெற்றுக்கொள்கின்றார்கள் என்பது, ஆய்வுகளில் வெளிவந்ததுள்ள முடிவாகும்.  

மேலும், எமது நாட்டில் இணையப் பாவணையை மேற்கொள்கின்றவர்களில் 85 சதவீதமானோர் தங்களது அலைபேசி, திறன்பேசி போன்றவற்றிலேயே இயக்குகின்றனர். இவற்றின் திரையமைப்பு மிகவும் சிறியவை. ஆகவே, இந்த மின்னிதழ் பத்திரிகைகளை வாசிப்பதிலும் அதை ஆவண வடிவத்தில் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அத்தோடு, நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் பயணத்தடைச் சட்டத்தால், பத்திரிகையை சந்தைப்படுத்துவதற்கு முடியாதுள்ளமையும் கவனத்தில் எடுத்துக்​கொள்ளப்பட வேண்டியதாகும்.   

இணையப் பாவனை, நாடளாவிய ரீதியில் நகர மட்டத்தில் அதிகரித்துள்ளதே தவிர, கிராமிய மட்டத்தில் இதன் அபிவிருத்தி மந்தகதியில் தான் இருக்கின்றது. அதேபோல, பத்திரிகையை வாசிப்பதில் நகரத்தை அண்டியவர்களை விட, கிராமத்தை அண்டியவர்களே அதிகம் ஆர்வம் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழலில் அவர்களைப் பத்திரிகைகள் சென்றடையவில்லை என்பதால், பாதிக்கப்பட்டவர்களாகவே அவர்கள் கருததப்படுகின்றார்கள். ஆனால்,  தொழிற்றுறைகளைச் சார்ந்திருப்பவர்கள், தங்களது திறன்பேசிகள் ஊடாக, மின்னிதழ் பத்திரிகையை வாசிக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .