2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கொரோனாவை உணர்ந்த ‘யூட்’

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 29 , பி.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ. சக்தி

“நான் மோட்டார் சைக்கிளை எடுத்ததும், உடனே ‘யூட்’ ஓடி வந்து முன் இருக்கையில் ​(பெற்றோல் தாங்கி) ஏறிவிடுவான். வீட்டில் நானும் யூட்டும் மட்டுமே வசித்து வருகின்றோம். எனது வேலைகளில் அரைவாசியை யூட்தான் செய்கின்றான். எனக்கு சோப் எடுத்து வருதல், மரக்கறிகளை எடுத்துவருதல், திருவலை போன்ற பொருட்களையெல்லாம் எடுத்துத்தந்து உதவி செய்வான்.  என்னோடுதான் தினமும் தூங்குவான். அவனுக்கென நான் பிறிம்பாக சோப், மாஸ்க், சிக்னல் பிறஸ், தலையணை அனைத்தும் வைத்திருக்கின்றேன்” என்கிறார் மட்டக்களப்பு மாவட்டம், படுவாங்கரைப் பகுதியின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள பழுகாமத்தைச் சேர்ந்த செல்லையா சிவனேசராசா.

மட்டக்களப்பிலிருந்து பழுகாமம் நோக்கி, கல்முனை பிரதான வீதியினூடாக,   மோட்டார் சைக்கிளில் செல்லையா சிவனேசராசாவும் அவரது செல்வப்பி​ராணி யூட்டும் பயணிக்கும் காட்சியை தினமும் காணலாம்.

ஐந்து வருடங்களாக, செல்லப்பிராணியாக வளர்க்கும் ஆண் நாயை, தான் செல்லும் இடமெல்லாம் கூட்டிச் செல்வதாகவும் தான் சொல்வதைக் கேட்பதுடன் பிறர் கூறுவதையும் புரிந்துகொண்டு நடக்கக் கூடிய நன்றியுள்ள செல்லப்பிராணியாக ‘யூட்’ திகழ்வதாகவும் கொரோனா வைரஸ் கொடிய தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில், தானும் தனது யூட்டும் அல்லும் பகலும் முகக்கவசம் அணிந்து கொள்வதாகவும்  அவர் கூறுகின்றார். 

செல்லையா சிவனேசராசா தனது செல்லப்பிராணி யூட் குறித்து மேலும் பெருமையுடன் கூறியதாவது: “நான் தினமும் பழுகாமத்திலிருந்து மட்டக்களப்புக்கு, மகளின் வீட்டுக்குச் சென்று வருகின்றேன். இது ஏறக்குறைய 60 கிலோ மீற்றர் தூரமாகும். நானும் யூட்டும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, பலர் எம்மைப் புதினம் பார்ப்பார்கள். சிலர், எம்மை நிறுத்தி, விசாரிப்பார்கள். ஏன் தினமும் நாயைக் கொண்டு செல்கின்றீர்கள், எங்கிருந்து போகின்றீர்கள் என கேட்பார்கள். நான், எனது யூட் பற்றிச் சொன்னதும் அப்படியா? என வாயில் கைவைப்பார்கள். 

“எனது யூட் யாருக்கும் ஒன்றும் செய்யமாட்டான். ஆனால், என்னை யாரும் அதட்டினால், அது யூட்டுக்கு விளங்கிவிடும்; கோபம் வந்துவிடும்; உடனே கௌவி விடுவான். இவ்வாறு ஒரு நாள், மட்டக்களப்பு பஸ் நிலையத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, போக்குவரத்து பொலிஸார் நிறுத்தி, ‘இவ்வாறு நாயை கொண்டு செல்லக்கூடாது’ என என்னை அதட்டினார்கள். உடனே, யுட் பாய்ந்து சென்று, அதட்டிய பொலிஸின் கையைக் கௌவி விட்டான்.

இன்னொரு நாள், பொலிஸ் நிறுத்தி, நாய்க்கு ‘மாஸ்க்’ அணிய வேண்டும் எனத் தெரிவித்தார்கள். உடனே பக்கத்து கடையில் ‘மாஸ்க்’ ஒன்று வாங்கி யூட்டுக்கு அணிவித்தேன். ‘வேண்டாம்’ எனத் தலையசைத்தான். ‘பொலிஸ் அடித்துவிடுவார்கள்; போடுடா’ எனச் சொன்னேன். உடனே போட்டுவிட்டான். 

“நான் எதைச் சொன்னாலும், நான் பெற்ற பிள்ளையைப்போல் கேட்டுக் கொண்டு, என்னுடன் சேர்ந்தே வாழ்ந்து வருகின்றான். மட்டக்களப்பிலுள்ள மகளின் வீட்டுக்குச் சென்றால், அங்கு சில வேளைகளில் தங்கி விடுவோம். எனது பேரப்பிள்ளைகளுடன் யூட் பழகிவிட்டான். எனது பேரப்பிள்ளைகள்  ஆங்கிலத்தில் கதைப்பார்கள்.யூட்டுக்கு தமிழுடன் ஆங்கில மொழியும் நன்றாக விளங்கும். உதாரணமாக, தலையணை என்பதை விட ‘பிலோ’ என்றால் நன்றாகப் புரிந்துவிடும்” என்கிறார்.  

செல்லையா சிவனேசராசா, சமூகத்துக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஒருவர் எனலாம். தற்கால கொரோனா அச்சத்தின் மத்தியில் மனிதர்கள் மாத்திரமின்றி மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், தான் வளர்க்கும் செல்லப் பிராணிக்கும் மனிதர்களைப் போன்று, தினமும் குளிக்க வைத்து, பல்துலக்கி, முகக்கவசம் அணிந்து செல்லமாகவும் பாதுகாப்பாகவும் வளர்த்து வருவது எடுத்துக்காட்டாகும். 

சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் கருத்துகளைச் செவிசாய்க்காதவர்கள், இனிமேலாவது செல்லப் பிராணிகளிடத்தில் இருந்தாவது நற்பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

குறிப்பாக, இத்தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தங்களையும் தங்களைச் சூழவுள்ளவர்களையும் பாதுகாப்பதற்கான உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமையே பெருமளவான வைரஸ் பரவலுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்துள்ளன. 

இருந்தும், மனிதர்களிடத்திலும் உயிரினங்களிடத்திலும் இத்தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு, பாதுகாப்பான வகையில் செயற்படக் கூடிய ஒரு சில சமூக சிந்தனை கொண்ட நபர்களும் ஆங்காங்கே உலாவுவதையும் அவதானிக்க முடிகின்றது. 

வீதிகளில் செல்லும் பொதுமக்கள்கூட, முகக் கவசத்தை அணியத் தவறுகின்ற இந்தக் காலத்தில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமளவுக்கு தனது உயிர் எந்தளவுக்கு முக்கியமானதோ, அதேயளவு தனது செல்லப் பிராணியான யூட்டின் பாதுகாப்புக் குறித்தும் அக்கறையுடன் செயற்படுவது குறித்து, மெச்சப்பட வேண்டும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .