Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 23 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜபக்ஷர்களின் இன்றைய அரசியல் என்பது, மிகத் தௌிவான சிங்கள-பௌத்த இனத் தேசியவாதத்தை, பெருந்திரள்வாத (populism) வாகனத்தில் ஏற்றிக்கொண்டுள்ள பெரும்பான்மையினத் தேசிய பெருந்திரள்வாத அரசியலாகும்.
ஏதோவோர் அடிப்படையில், தம்மை ஒரு மக்களாக அடையாளங்காணும் மனிதக் கூட்டமொன்றைத் தம்மில் வேறுபட்ட ‘மற்றையவர்களுக்கு’ எதிராக நிறுத்தும் சித்தாந்தமே, பெருந்திரள்வாதமாகும். பெருந்திரள்வாதத்தை வரையறுக்க முயலும் அல்பெடட்ஸியும் மக்டொன்னெலும், பெருந்திரள்வாதச் சிந்தாந்தம் என்பது, ஒன்றுபட்ட தன்மைகளையுடைய ஒரு மக்கள் கூட்டத்தை, அந்த இறைமையுள்ள மக்கள் கூட்டத்தின் அதிகாரங்கள், விழுமியங்கள், சௌபாக்கியம், அடையாளம், குரல் ஆகியவற்றை இல்லாது செய்யும்; இல்லாதுசெய்ய முயற்சிக்கும் ஆபத்தான ‘மற்றையவர்களுக்கு’ எதிராகக் குழிபறிக்கச்செய்யும் என்று குறிப்பிடுகிறார்கள்.
இன்று ஏற்பட்டுள்ள “கொவிட்-19” பெருந்தொற்றும் அது தோற்றுவித்திருக்கும் அசாதாரண சூழலும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் முடங்கிப் போன இலங்கையும் உலகமும், தற்போது முகக்கவசத்துடன் மூச்சுவிடத் தொடங்கியிருக்கும் பொழுதில், அடுத்த பெரும் பிரளயமாகப் பொருளாதார நெருக்கடி எட்டிப்பார்க்கும் தருவாயில் சிக்கி நிற்கிறோம்.
2015இல் மூன்று ஜேர்மனிய ஆய்வாளர்கள், நிதி நெருக்கடிக்குப் பின்னரான அரசியல் பற்றிய ஆய்வொன்றை நடத்தியிருந்தனர். தமது ஆய்வில், முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடுகளில், ஏறத்தாழ கடந்த 140 வருடகாலத்தை எடுத்து ஆராய்ந்ததில், நிதி நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் இடம்பெறும் தேர்தல்களில், வாக்காளர்கள் தீவிர-வலதுசாரி பகட்டாரவார அரசியல் மீது, அதிலும் குறிப்பாக சிறுபான்மையினர் மீதும், வௌிநாட்டவர் மீது பழிபோடும் அரசியல் மீது ஈர்ப்புக் கொள்வதாகவும் சராசரியாக இத்தகைய கட்சிகள், நிதி நெருக்கடி காலத்துக்குப் பின்னர், 30% அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.
ஓர் அனர்த்த நிலை ஏற்படும் போது, அது மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்ற போதும், அதன் விளைவுகளுக்காக “அந்நியராக” கருதும் தரப்பின் மீது பழிபோடும் பாங்கே இது. இதற்குப் பின் உள்ள உளவியல் பற்றிக் கருத்துரைக்கும் ஸ்டீஃபன் லெவண்டொவ்ஸ்கி, அரசியல் அதிகாரமின்மை, உலகம் நியாயமற்றது, தமக்குத் தகுதியானதைப் தாம் பெறவில்லை என்ற நம்பிக்கை, கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியாதுள்ள அளவுக்கு உலகம் மிக விரைவாக மாறுகிறது என்ற உணர்வுகளில் ஊன்றியே, பெருந்திரள்வாதம் வளர்கிறது என்பதற்கு இப்போது நியாயமானதும் நிலையானதுமான சான்றுகள் உள்ளன எனக் கருத்துரைக்கிறார்.
மக்களின் எண்ணங்களுக்கும் உண்மைக்குமான தொடர்பு என்பதைவிட, மக்களின் எண்ணங்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்குமான தொடர்பே இங்கு முக்கியம் பெறுகிறது என்பதை, லெவண்டொவ்ஸ்கி கோடிட்டுக் காட்டுகிறார். அதற்கு, ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஓர் உதாரணத்தை அவர் எடுத்துக் காட்டுகிறார். 1978ஆம் ஆண்டில், இங்கிலாந்துக்கு நிகர இடம்பெயர்வு பூச்சியமாக இருந்தபோது, 70% பிரிட்டிஷ் பொதுமக்கள், பிற கலாசாரங்களால் தமது கலாசாரம் சீரழிக்கப்படுகிறது என்று உணர்ந்தனர். மாறாக, 2010களின் முற்பகுதியில், பல்லினங்களும் நெருக்கமாக வாழும் இலண்டன் மாநகரில் வாழும் வௌ்ளையின பிரிட்டிஷர்கள், குடியேற்றம் குறித்துக் குறைந்தளவு அக்கறைப்பட்டவர்களாகவே இருந்தனர். இதனைச் சுட்டிக்காட்டும் லெவண்டொவ்ஸ்கி, “இது குடியேற்றம் பற்றியதல்ல; மாறாகத் தமது அயலார்கள் பற்றி மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது பற்றியதே” என்கிறார்.
“கொவிட்-19” இலங்கையில் பரவத் தொடங்கிய காலத்தில்கூட, முஸ்லிம் மக்கள் மீதான இனவெறி அதிகரித்தமையை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. நான் முன்னர் எழுதிய பத்திகளில் குறிப்பிட்டது போலவே, தமது மக்களுக்கு எதிராக, இன்னொரு கூட்டம் (அதனைத் தொழில்நுட்ப ரீதியில் ‘உயர்குழாம்’ என்று சுட்டுவார்கள்) செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, அவர்களின் சதியைத் தோற்கடித்து, உண்மையான தமது ‘மக்களின்’ ‘மக்களாட்சி’ ஏற்படுத்தப்பட்டு, தமது ‘மக்களின்’ இறைமையும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சூளுரையுடன்தான் இந்தப் பெருந்திரள்வாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் பெருந்திரள்வாதத்துடன், இனத்தேசியம் ஒன்றிணையும்போது அல்லது இந்தப் பெருந்திரள்வாத வாகனத்திலேறி, இனத்தேசியம் பயணிக்கும்போது, ஓரினம் மற்றைய இனத்தை ‘அந்நியர்களாகவும்’ தமது இறைமையை உரிமைகளைச் சவாலுக்கு உட்படுத்துபவர்களாகவும் பார்க்கச்செய்யப்படுவதுடன், மற்றைய இனத்தின் இந்தச் சதியைத் தோற்கடிப்பதே, தமது இனத்தின் அரசியல் நோக்கமாகக் கட்டமைக்கப்படுகிறது. இந்தச் சிந்தனையை மக்களிடம் விதைப்பதன் மூலம், தமது வாக்கு வங்கியை அரசியல்வாதிகள் இலகுவாகப் பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்று ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையும், இதனைத் தொடர்ந்து இலங்கை முகங்கொடுக்கவுள்ள நிதி மற்றும் பொருளாதார நிலையும், இந்த பேரினவாதப் பெருந்திரள்வாதப் போக்கை அதிகரிக்கும் என்பதே கசப்பான யதார்த்தம். இலங்கையின் அரசியல் அடிப்படைகளை வைத்துப் பார்க்கும் போது, இது பெரும்பான்மையினர் எதிர் சிறுபான்மையினர் என்றே கட்டமையவுள்ளது.
இந்த ஆபத்தான போக்கைச் சமன் செய்யத்தக்க தாராளவாத அரசியல் சக்திகள் இங்கு இல்லை. இது, இலங்கையின் நீண்டகால துர்பாக்கியங்களில் ஒன்று. இனவாதம் கக்கும் பெருந்திரள்வாத அரசியல் கட்டியெழுப்பிய பகட்டாரவாரப் பேரினவாதப் புனைவானது, ஒரு போலி அல்லது வெற்று மாயை என்பதை எடுத்துக்காட்டும் பலமான பெரும்பான்மை அரசியல் சக்திகள் இலங்கையில் இல்லை என்பதும் அதைத் தகர்த்துக் கொண்டு வௌியில் வரத்தக்க தலைமைத்துவப் பலம், எந்தத் தலைமையிடமும் இதுவரை இருக்கவில்லை என்பதும் தொடரும் துர்பாக்கியமாகும். இந்தச் சூழ்நிலையில் ஏற்படவிருக்கும் பெரும்பான்மையினப் பெருந்திரள்வாத எழுச்சியை, சிறுபான்மையினரும் அவர்களது தலைமைகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே இங்கு முக்கியமாகத் தொக்கு நிற்கும் கேள்வியாகும்.
சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் இந்தப் பெருஞ்சவாலை முறையாக எதிர்கொள்ளத்தக்கதொரு வலுவான அடிப்படை உருவாக்கப்பட, சிறுபான்மையினரிடையேயான ஒற்றுமையும் இந்தப் பேரினவாதப் பெருந்திரள்வாதத்தை எதிர்க்கும் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மையினரிடையேயான ஒற்றுமையும் அவசியமாகிறது.
இதில்தான் இரண்டு பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவது, தமிழ் மக்களிடையேயான ஒற்றுமை. மற்றையது, தமிழ்-முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமை. தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், தமிழ் பேசும் அனைவரும் தம்மைத் “தமிழர்களாக” அடையாளப்படுத்திக் கொள்வதுதான் ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்துக்குப் பலம் சேர்க்கும்.
ஆனால், யதார்த்தம் என்பது எப்போதும் பயன்மய்ய அணுகுமுறை சார்ந்து அமைவதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. சமூக ரீதியான கட்டுமானங்கள் எவ்வாறு இருந்தாலும், அரசியல் ரீதியாகவேனும் இலங்கைவாழ் ‘தமிழர்கள்’ மற்றும் “தமிழ் பேசும் மக்கள்” அனைவரும், ஓர் அரசியல் அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டுமானால், அவர்களின் அரசியல் அபிலாஷைகள் ஒன்றாக அமையவேண்டும்; அதுதான் அடிப்படை. தேர்தல் ஜனநாயக அரசியலைப் பொறுத்தவரையில், எண்ணிக்கை என்பது பலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்று.
ஆனால், ஓர் அரசியல் ஒற்றுமை, அந்த அடிப்படையில் மட்டும் உருவாவதல்ல. குறிப்பாக, இனத் தேசியவாத அரசியல் வேர்விட்டுள்ள ஒரு நாட்டில், அரசியல் அபிலாஷைகளும் இனத் தேசிய ரீதியிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இங்கு ‘இலங்கைத் தமிழர்கள்’, ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’, “தமிழ்பேசும் முஸ்லிம்கள்” என்ற பிரிவைத் தாண்டி, ‘தமிழர்கள்’ என்ற ஒற்றை அடையாளத்தை ஸ்தாபிக்க விரும்புபவர்கள், அதற்கான அரசியல் அடிப்படைகளை முதலில் ஸ்தாபிக்க வேண்டும்.
அந்த அரசியல் அடிப்படைகளை ஸ்தாபிப்பதற்கு, இந்தப் பேரினவாதப் பெருந்திரள்வாத எழுச்சி உத்வேகத்தை தரும் காரணியாக அமையலாம். இந்தப் பேரினவாதப் பெருந்திரள்வாத எழுச்சியைத் தாம் தனித்து, பலமற்ற ரீதியில் எதிர்கொள்ளப் போகிறார்களா, அல்லது ஒன்றிணைந்த பலத்தோடு எதிர்கொள்ளப் போகிறார்களா என்று முடிவெடுக்க வேண்டிய தருவாயில் இலங்கை வாழ் சிறுபான்மையினர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்பது, காலத்தின் தேவையாக இன்று மாறியிருக்கிறது என்பதை, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் உணர்ந்துள்ளார்கள். இதில், நடைமுறைச் சவால்கள் நிறைய இருக்கலாம். ஆனால், ஒன்றுபடக் கூடிய விடயங்களிலேனும் அரசியல் ரீதியாக ஒன்றித்துக் குரல் கொடுக்க வேண்டிய, ஒன்றுபட்டு நிற்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தை மறுத்துவிடுவதென்பது, இரு தரப்புக்குமே பாதிப்பானதாக அமையும்.
ஆகவே, குறைந்தபட்ச ஒற்றுமையை ஸ்தாபித்து, பின்னர் கட்டங்கட்டமாக அந்த ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஓர் அடிப்படைத் தளத்தின் உருவாக்கம் பற்றி, தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைமைகளும் உடனடியாகச் சிந்திக்க வேண்டும்.
இது, தேர்தல் கூட்டாக அமைய வேண்டிய அவசியமில்லை. ஆனால், சிறுபான்மையினரைப் பாதிக்கும் விடயங்களை ஒன்றாக எதிர்கொள்ளும் அரசியல் கூட்டாக அமைவது அவசியம்.
மறுபுறத்தில், தமிழ்க் கட்சிகளிடையேயான ஒற்றுமையானது, தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையைச் சாதிப்பதிலும் கடினமானதொன்றாகத் தென்படுகிறது.
இதற்குக் காரணம் பிரிந்து நிற்கும் தரப்புகள் அனைத்தும் ஒரே மக்கள் கூட்டத்தின் வாக்குகளைக் குறிவைத்துள்ளன. ஆகவே, ஒன்றிலும் மற்றொன்று சிறந்தது என்று காட்டிக்கொள்ள வேண்டிய தேவைக்குள் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஒற்றுமை அல்லது விடயம் சார்ந்த ஒற்றுமை என்பது அடையத்தக்கதொன்றே!
சில வருடங்கள் முன்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்ற ஒரு தளம் இயங்கியது. இது, பல்வேறு தமிழ்க் கட்சிகளும் தமக்கிடையே கலந்துரையாடவும் தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் பொது நிலைப்பாடுகள் பற்றிய உரையாடலுக்குமானதொரு பயன்மிகு தளமாக இருந்தது. இத்தகைய தளமொன்று மீண்டும் கட்டியெழுப்பபடுதல் அவசியமாகும்.
தேர்தல் கூட்டாக அன்றி, குறைந்தபட்சம் தாம் ஒன்றுபடக்கூடிய விடயங்களிலேனும் ஒன்றித்து கருத்துரைக்கத்தக்கதொரு தளமாக இது அமையும். இதற்கான காலத்தின் தேவையும் அரசியல் தேவையும், தற்போது உருவாகியுள்ளது. தமிழ் மக்களுக்காகவேனும் அவர்களின் அரசியல், சமூக நலன்களுக்காகவேனும் தமிழ்க்கட்சிகள் ஒரு தளத்தில் பேசும்; இணங்கக்கூடிய விடயங்களில் இணங்கிச் செயற்படவும், தயங்காது முன்வரவேண்டும். இது, தமிழர்களின் தலைமைகளாக தம்மை உருவகப்படுத்திக்கொள்ளும் அனைவரினதும் கடமையாகும்.
கண்கெட்டபின் சூரிய நம்ஸ்காரம் செய்வதால் எந்தப்பயனுமில்லை. தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட இந்நாட்டின் சிறுபான்மையினர் மிகப்பெரும் அரசியல் சவாலைச் சந்திக்கவிருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதிகள் அந்தச் சவாலை வலுவாக எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டிய நேரம் இது. முடிவு அவர்கள் கையிலேயே!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago