2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கொவிட் தொற்றும் மனநலப் பாதிப்பும்

Editorial   / 2020 மே 09 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கௌரி நித்தியானந்தம், உளவள ஆலோசகர்

தற்போது உலகளாவிய ரீதியில் மிகவும் வேகமாகப் பரவிவரும் கொவிட்-19  தொற்றுநோயானது, பல்வேறு நாடுகளின் சுகாதார, சமூக, பொருளாதரக் கட்டமைப்புகளை மிகவும் மோசமாகப் பாதிப்புக்குள்ளாக்கி, ஒரு மோசமான அனர்த்த நிலையை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவானது, தனிமனித ரீதியில் பார்க்கும்போது வெறுமனே சமூக, பொருளாதார, பாதிப்பு என்பதையும் தாண்டி உளவியல் ரீதியாகவும் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இக்காலப்பகுதியில் முன்னணியில் இருந்து சேவைகளை வழங்கிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நோயால் தமது அன்புக்குரியவர்களை அல்லது வேலையை இழந்தவர்களுக்கும் நீண்டகால மனநல பாதிப்புகள் உருவாகுவதற்கு வழிவகுக்கிறது. இது பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் அல்லது அதிர்ச்சிக்குப் பின்னரான மன அழுத்தப் பாதிப்பு (Post-traumatic stress disorder - PTSD) என்று அழைக்கப்படுகிறது. இது விபத்து, பயங்கரவாத தாக்குதல் அல்லது உடல்ரீதியான தாக்குதல் போன்ற ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்தை அனுபவித்த அல்லது நேரில் கண்ட நபர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு நீண்டகால மனநலக் கோளாறு ஆகும். 

கொவிட் -19 தொற்றுநோய் போன்ற ஒரு பேரிடர் தருணத்தின் பின்னரான மன உளைச்சல் மற்றும் சீர்கேடுகளை ஒரு யுத்தத்தின் பின்னரான மனவடுக்களுடன் ஒப்பிட முடியும். 2003ஆம் ஆண்டில் SARS தொற்றின் பின்னர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுய-தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் இத்தகைய பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு (PTSD) அறிகுறிகளை வெளிப்படுத்தினர். கொவிட் -19 தொற்றுநோயும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தும் என்று உளவள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தான் எமது முழுக் கவனமும் வெறுமனே தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் மட்டும் நின்றுவிடாது, இதன் காரணமாக உளவியல் ரீதியாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்படப்போகும் ஒரு சமுதாயத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம். 

தற்போதைய சூழ்நிலையில், பல மாதங்களாக உலகத்தை மூழ்கடித்துள்ள மன அழுத்தம், பதற்றம், பயம் மற்றும் சமூக, பொருளாதத் தாக்கங்களானது நோயால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிராத ஒரு தனி நபர் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது குடும்ப வன்முறை போன்ற வலுவான உணர்ச்சிபூர்வமான எதிர்வினையாக உருவாகும்பட்சத்தில், அதன் பாதிப்பானது குறித்த சம்பவத்துக்குப் பிறகும் நீண்ட கால விளைவை ஏற்படுத்தும். 

கவலை அல்லது மனச்சோர்வு போன்ற பிற உளக் குறைபாடுகளுடன் ஏற்கெனவே போராடுபவர்கள் அல்லது பேரிடருக்கு முந்தைய மனநலப் பாதிப்புகளைக் கொண்டவர்கள், இத்தகைய இடர் காலப்பகுதியில் மேலும் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மிக மோசமான கனவுகள், எரிச்சல், கோபம் மற்றும் பயம் போன்றவற்றை அதிகமானோர் அனுபவிக்கின்றனர். எனினும், இத்தகைய அறிகுறிகளைப் பற்றி அனைவருமே எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது. அவை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அறுதியாகச் சொல்ல முடியாவிடினும் பொதுவாக ஒரு தாக்கம் நிகழ்ந்து சுமார் நான்கு மாதங்களின் பின்னர் அறிகுறிகளில் பெரும் முன்னேற்றம் காணப்படும். பின்னர் அவை தானாகவே விலகிவிடும். இருப்பினும், சில நேரங்களில் அறிகுறிகளில் முன்னேற்றம் காணப்படாது. 

பயங்கர கனவுகள், ஆக்கிரமிப்பு எண்ணங்கள் அல்லது வருத்தமளிக்கும் நினைவுகள் என்பன மீண்டும் மீண்டும், அடிக்கடி வருவது மன அழுத்தத்துக்கு வழிவகுக்கின்றன. இதனால் எரிச்சல், தேவையற்ற கோபம் மற்றும் தூங்குவதில் சிரமம் என்பவை ஏற்படுகின்றன. ஒருவிடயத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே, தமது அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் குறுக்கிடும் இத்தகைய அறிகுறிகளை ஒருவர் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலிருந்து ஒரு மாதத்தின் பின்னரும் உணர்வாராக இருந்தால், உளவள ஆலோசகர் அல்லது மனநல நிபுணரின் உதவியைப் பெறுவது மிகவும் அவசியமானது. 

கொவிட்-19 தொற்று இலங்கையில் சமீப நாள்களாக மிக வேகமாகப் பரவிவரினும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இவ்வேளையில், சமூக இடைவெளியை அதிகரிக்கும் பொருட்டு கடந்த இரண்டு மாத காலமாக நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கானது திங்கட்கிழமை (11 மே 2020) தொடக்கம்  தளர்த்தப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தலை குறித்த தினத்தில் (ஜூன் 20)  நடத்துவதற்கான முன்னேற்பாடாகக் கருதினாலும், அரசாங்கத்தால் மக்கள் மீது திணிக்கப்படும் வெளிப்புறக் கட்டுப்பாட்டிலும் பார்க்க தனிமனித உள்ளார்ந்த விழிப்புணர்வோடு கடைப்பிடிக்கப்படும் சுய கட்டுப்பாடு என்பதே சிறந்ததும் நிரந்தரமானதுமாகும்.
 
எனவே, ஊரடங்கு தளர்த்தப்படப்போகும் இக் காலப்பகுதியில் எமது அத்தியாவசிய தேவைகளை அடையாளம் கண்டுகொள்வதும் தக்க சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதும் மிக முக்கியம். இச்சமயத்தில் வேலை நிமித்தமாக அல்லது உணவுப் பொருள்களைப் பெறுதல் தவிர்த்து அநாவசிய பயணங்கள் மற்றும் ஒன்றுகூடல்களைத் தவிர்த்தல் அவசியம். அதற்குப் பதிலாக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கறை கொண்டவர்களுடன் தொலைபேசி மற்றும் இணையவழி மூலமாகத் தொடர்பைப் பேணலாம். 

தற்போதைய நெருக்கடி நிலையில் எமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் மற்றவர்களின் குறைகளைக் கேட்டு ஆறுதலளிப்பதற்கும் நேரம் ஒதுக்குவது மிகவும் முக்கியமானதே. நம்மீது அக்கறை கொண்டவர்களுடன் பேசுவது நம்மைப் பாதுகாப்பாக உணர வைக்கிறது. செல்லப்பிராணிகளை நேசிப்பதும் பராமரிப்பதும் கூட  மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும்.

அடுத்ததாக, மனவழுத்த நிலையில் நம் மூளையானது ஊகிக்கக்கூடிய செயற்பாட்டை விரும்புகிறது. எனவே, வழமையான செயற்பாடுகள் மற்றும் சடங்குகள் மூலம் நம் விழிப்பு நிலையிலுள்ள நரம்பு மண்டலத்தின் இறுக்க நிலையைத் தளர்த்தி இலகுவாக்க முடியும். ஒவ்வொரு நாளும் இரவில் சீக்கிரமே படுக்கைக்குச் சென்று, அதிகாலை சுறுசுறுப்பாக எழுந்து, உடற்பயிற்சி செய்வதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளலாம். எங்கள் செயல்பாடுகள், எண்ணங்கள் மற்றும் மனநிலை ஆகியவை மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே, எமது மனநிலையை மாற்ற விரும்பினால், முதலில் எமது செயற்பாடுகள் மற்றும் எண்ணங்களை மாற்றுதல் வேண்டும்.

மனித மனமானது நெகிழ்ச்சியடையக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. எனவேதான், எமது சிந்தனைகள் மூலமாக நல்லதை நோக்கியோ அல்லது கெட்டதை நோக்கியோ அதனை இலகுவாகத் திருப்பக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் நோய்வாய்ப்படப் போகிறீர்கள் அல்லது உங்கள் வேலையை இழக்கப் போகிறீர்கள் என்ற சிந்தனையில் ஒருநாள் முழுவதையும் செலவழித்தால், அடுத்த நாள் மிகவும் மோசமாக உணர்வீர்கள். அதே நேரத்தில், மன உளைச்சலைத் தவிர்க்கும் அல்லது சமாளிக்கும் உத்தியாகக் குறித்த சம்பவத்தை அல்லது அதனுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திப்பதைத் தவிர்க்க முடியும். எதிர்காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கணிக்க இயலாது என்றாலும், தற்போது நாம் செய்யக்கூடிய சில விடயங்கள் உள்ளன. 

வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கவேண்டிய இந்த நெருக்கடியான காலப்பகுதியில், எமது அடையாளம் காணப்படாத திறன்களை இனம் கண்டுகொள்ளவும் அவற்றை அபிவிருத்தி செய்துகொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டு வேலைகளில் அதிகமாக ஈடுபடலாம், ஆரோக்கியமான உணவுவகைகளைச் சமைத்து உண்ணலாம், உடற்பயிற்சி செய்யலாம். போதுமானளவு தூங்கலாம். இது சுயநலமான செயல் அல்ல, மாறாக அருகிலிருப்பவருக்கு உதவுவதற்கு முன்னர் உங்கள் சொந்த ஒக்ஸிசன் முகமூடியைப் போடுவது போன்றது. 

நல்ல ஊட்டச்சத்து நம் மனநிலைக்கு உதவுகிறது. மன அழுத்தம் நம்மைச் சுவையான உணவுகளைத் தேட வைக்கிறது. இதன்போது உள்ளெடுக்கப்படும் அதிக கார்போ மற்றும் இனிப்பு என்பன மன நிலையை மேலும் பாதிப்படையச் செய்கின்றன. தானியங்கள், பழவகைகள், காய்கறிகள் அதிகம் சேர்க்கப்படும் அதிக ஊட்டம் நிறைந்த எமது பாரம்பரிய உணவு வகைகள் சிறந்த மன ஆரோக்கியத்தைப் பேண உதவுகின்றன. அதேசமயம், அதிக மாப்பொருள் மற்றும் கொழுப்பு நிறைந்த பெரும்பாலான மேற்கத்திய உணவு வகைகள், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, முடிந்தவரை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆரோக்கியமான உணவுவகைகளை வீட்டில் தயாரித்து உண்பது உடல் நலத்துக்கு மட்டுமல்லாது உளவளத்துக்கும் அவசியமாகிறது. 

ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்தின் செய்திகளைப் பார்ப்பது கூட கடுமையான மன அழுத்த அறிகுறிகளைத் தூண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்கள் பெரும்பாலும் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுப் பீதியின் மிகைப்படுத்தப்பட்ட தோற்றத்தையே காட்டிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் பெரும்பாலான நாடுகளும் மக்களும் இப்பேரிடரை நன்றாகவே கையாளுகின்றார்கள், மற்றவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். எனவே, தேவையற்ற கவலைகளைக் குறைக்கவேண்டுமெனில் அடிக்கடி ஊடக செய்திகளைப் பார்ப்பதை தவிர்க்கலாம். ஒரு செய்தியானது உங்களிடம் மோசமானதாகவோ அல்லது எதிர்மறையாகவோ உணர்வுகளை ஏற்படுத்தினால், அதனை நிறுத்தி ‘இந்தச் செய்தி எனக்கு உதவுகிறதா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 

நாம் நேர்மறையான சிந்தனையைப் பயிற்சி செய்வது அவசியம். எனவே, கடந்த காலங்களில் எமது கஷ்டங்களை எவ்வாறு சமாளித்தோம் என்பதை நினைவுபடுத்தி, ‘இதுவும் கடந்து போகும்’ என்று எமக்கு நாமே தைரியமூட்டலாம். இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தின் இருண்ட தருணங்களில் பிரிட்டிஷ் மக்களிடம் வின்ஸ்டன் சேர்ச்சில் கூறியது போல், "ஒருபோதும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்". அதுவே தற்போதைய இடர்காலத்தை வெற்றிகரமாகக் கடப்பதற்கு உதவும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X