2025 மே 16, வெள்ளிக்கிழமை

சூடான நாட்களும் தேவையான நடவடிக்கைகளும்

Thipaan   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

தமிழ் - சிங்களப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நுவரெலியா சென்றிருந்த ஏராளமானோர், வழக்கத்தை விட அங்கு அதிகமான வெப்பநிலை நிலவுவதாக, சமூக ஊடக இணையத்தளங்கள் மூலமாகக் கவலைப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம் போன்ற பகுதிகளுக்குச் சென்றோரைப் பற்றிச் சொல்லித்தெரியத் தேவையில்லை. நுவரெலியாவைப் பொறுத்தவரை, புத்தாண்டுக்காக அங்குசென்ற அதிக வாகனங்களும் சனநெருக்கடியும், அதிகரித்த வெப்பநிலையை உணருவதற்குக் காரணமாக அமைந்ததை மறுக்கமுடியாது என்றபோதிலும், அதையும்தாண்டி வேறு காரணங்களும் இருந்ததை மறுக்க முடியாது.

இவ்வாறு, அதிகரித்த வெப்பநிலையென்பது, இலங்கைக்கோ அல்லது தெற்காசிய நாடுகளுக்கோ மாத்திரமான ஒரு விடயமென எண்ணினால், அது மிகவும் தவறானது. உலகம் முழுவதுமே, முடிவடைந்த மார்ச் மாதத்தை அதிக வெப்பமாக உணர்ந்துள்ளது.

ஜப்பானிய வானிலை முகவராண்மையால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதமானது, கடந்த 125 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மார்ச் மாதமாகப் பதிவாகியுள்ளது. இந்தத் தகவலை, நாசாவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு, கடந்த 11 மாதங்களுமே, கடந்த 125 ஆண்டுகளில் பெறப்பட்ட அந்தந்த மாதங்களுக்கான அதிக வெப்பமான மாதங்களாகப் பதிவாகியுள்ளன. இவற்றுக்கெல்லாம் இரண்டு சொற்களில் விளக்கமளிப்பதானால், 'காலநிலை மாற்றம்' என்பதே பதிலாக அமையும்.

பூமி என்கின்ற இந்தக் கிரகம், உயிரினங்கள் வாழ்வதற்குரிய கிரகமாக மாறியதே, காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகத் தான். ஆனால், இங்கு குறிப்பிடப்படுகின்ற காலநிலை மாற்றமென்பது, மனிதர்களின் செய்கைகளால் ஏற்படுத்தப்படும் காலநிலை மாற்றமே ஆகும். இந்தக் காலநிலை மாற்றத்தை, புவி வெப்பமடைதல் என்றும் அழைப்பர்,

ஏனெனில், தற்போது ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தால், பூமியின் வெப்பநிலை அதிகரித்தே வருகின்றது. காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில், காபனீரொட்சைட், மெதேன், நைத்திரஸ் ஒக்சைட், குளோரோ புளோரோ காபன்கள் ஆகிய வாயுக்கள், முக்கிய பங்கை வகிக்கின்றன. இவை, பச்சைவீட்டு வாயுக்கள் என அழைக்கப்படும்.

பூமியில் அதிகரித்துவரும் மக்கள் தொகை காரணமாக, அவர்களால் சுவாசத்தின்போது வெளியிடப்படும் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்ததென்பது ஒரு காரணமாக இருந்த போதிலும், காபனீரொட்சைட் அதிகரிப்பில் பிரதானமான பங்கை வகிப்பது, சுவட்டு எரிபொருட்களை எரிப்பதே ஆகும். வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருட்கள், நிலக்கரிப் பயன்பாடு ஆகியன, இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய பயன்பாடுகளாகும். தவிர, சீமெந்துத் தயாரிப்பிலும், அதிகளவு காபனீரொட்சைட் வெளியிடப்படுகிறது.

முக்கியமான காபனீரொட்சைட் வாயுவை வெளியிடுவதில், அபிவிருத்தியடைந்த சில நாடுகளும் அபிவிருத்தியடைந்துவரும் சில நாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வாயுக்களின் வெளியேற்றத்தில், மூன்று காலப்பகுதிகள் முக்கியம் பெறுகின்றன.

1990களில் காணப்பட்ட நிலைமை, 2000ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட அதிகரிப்பு, பின்னர் தற்போது 2010ஆம் ஆண்டுகளில் ஏறு;பட்டுள்ள குறைவான நிலைமை ஆகியன இதில் குறிப்பிடத்தக்கன. ஏனெனில், சனத்தொகை அதிகரிக்கும்போது ஏற்பட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக, சுவட்டு எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்தது. பின்னர், சுவட்டு எரிபொருட்களால் ஏற்படும் ஆபத்து தெளிவுபடுத்தப்பட்ட பின்னர், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனடிப்படையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகள், முன்பை விடக் குறைவான காபனீரொட்சைட்டை வெளியிடுகின்றன. ஆனால், சீனா, இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளின் காபனீரொட்சைட் வெளியேற்றம், தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது. தொடர்ந்தும் அதிகரிக்கும் வாய்ப்புகளை கொண்டுள்ளது.

காபனீரொட்சைட் வெளியேற்றம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வத் தகவல்கள் கிடைப்பது குறைவானது. இறுதியாக உள்ள உத்தியோகபூர்வத் தகவலாக, உலக வங்கி வெளியிட்டுள்ள 2011ஆம் ஆண்டுக்கான தரவுகளே காணப்படுகின்றன. இதன்படி, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷ்யா, ஜப்பான் ஆகியன இணைந்து, காபனீரொட்சைட் வெளியேற்றத்தில் 70 சதவீதமான பங்கை வகிக்க, ஏனைய நாடுகள் அனைத்தும் வெறும் 30 சதவீதமான பங்கை வகிக்கின்றன. அதிக காபனீரொட்சைட்டை வெளியேற்றும் இந்த நாடுகளே, காலநிலை மாற்றம் தொடர்பாக அதிக கவனத்தையும் பணிகளையும் ஆற்ற வேண்டிய தேவையுள்ளது.

அதற்காக, இலங்கை போன்ற சிறிய நாட்டுக்குப் பொறுப்புகளே இல்லையென்று தட்டிக்கழித்துவிட முடியாது. நுரைச்சோலையில் நிலக்கரி மின்நிலையமொன்றை அமைத்திருக்கிறோம். சம்பூரில் அமைப்பதற்கு முயன்றுவருகின்றோம். இன்னொன்றை அமைப்பதற்கு ஜப்பான் முன்வந்திருக்கிறது. இவ்வாறு, நிலக்கரிப் பயன்பாடு, இலங்கையில் அதிகரிக்கும் நிலைமை காணப்படுகிறது.

2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர், இலங்கையில் வாகனப்பயன்பாடும், மிக மிக அதிகளவாக அதிகரித்திருக்கிறது. இவற்றின் பின்னணியில், காபனீரொட்சைட்டை வளிமண்டலத்துக்கு அனுப்பும் பட்டியலில், நிச்சயமான மேல்நோக்கிச் செல்லும் நிலை, இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது. நீண்டகால நோக்கைக் கருத்திற்கொண்டு, இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது, இலங்கைக்கான பொறுப்பாகவுள்ளது.

மின்சாரம், சக்தி ஆகியவை தொடர்பான நிபுணர்களின் கருத்துப்படி, பாரியளவிலான மின்னுற்பத்திக்கு, இலங்கையைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில், நிலக்கரி மின்நிலையமே பொருத்தமாக இருக்கிறது. அணுசக்தி மின்நிலையமொன்றை அமைப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளோ அல்லது அவற்றைப் பராமரிப்பதற்கான திறனோ அல்லது அவ்வாறானதொரு மின்நிலையத்தை ஏற்றுக்கொள்வதற்கான மனநிலையோ, இலங்கையில் காணப்படவில்லை. இயற்கை வாயு மூலமான மின்னுற்பத்தியென்பது, மற்றொரு முறைமையாகும்.

இதுவும் சுவட்டு எரிபொருளைப் பயன்படுத்துகின்ற போதிலும், நிலக்கரியைவிடச் சிறந்ததொரு முறையாகக் கருதப்படுகிறது. ஆனால், இதன்மூலமான உற்பத்திச் செலவும் இதற்கான முதலீடும் மிக அதிகமானது. எனவேதான், இதைப்பற்றி ஆராய்வதைப்பற்றி, இலங்கை இன்னமும் சிந்திக்கவில்லை.

நீர் மூலமான மின்னுற்பத்திக்கான வாய்ப்புகள் குறைவடைந்து வருகின்றது. அதிகரித்த வெப்பம், இதில் முக்கிய தாக்கத்தைச் செலுத்துகிறது. இவற்றைவிட மேலதிகமாக, சூரியக்கலம் மூலமான மின்னுற்பத்தி காணப்படுகிறது. மிகப்பாரிய அளவில், நிலக்கரிக்கு மாற்றீடாக இதைப் பயன்படுத்த முடியாது. ஆனால், வீடுகளிலும் சிறு தொழிற்சாலைகளிலும், இதன் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய கடப்பாடு, அரசாங்கத்துக்கு உள்ளது.

மறுபுறத்தில், அதிகரிக்கும் வாகனப்பயன்பாடு தொடர்பாகக் கவனஞ்செலுத்த வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கு உள்ளது. பெரிய கார்களிலும் ஜீப்களிலும், ஒரேயொருவர் பயணிப்பதை, நாம் அனைவரும் கண்டிருக்கிறோம். இலங்கையின் பொதுப் போக்குவரத்து, மிகவும் மோசமான நிலையில் காணப்படுவது, இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. காலையில் அலுவலகத்துக்கு வரும்போது, பஸ்களில் நெரிசலுக்கு மத்தியில் பயணஞ்செய்து, வியர்வையுடன் அலுவலகத்துக்கு வருவதற்கு, எவருக்கும் விருப்பம் இருப்பதில்லை.

அதனால்தான், தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதை, அனேகமானோர் விரும்புகின்றனர். இந்நிலையில், அதிகமான பஸ்கள், சொகுசு பஸ் சேவை போன்றவற்றை அறிமுகப்படுத்தினால், தற்போது தனியார் வாகனங்களில் பயணஞ்செய்வோரில் குறிப்பிடத்தக்களவானோர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முனையக்கூடும். அவ்வாறான நிலை ஏற்படாவிட்டால், அதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இவையெல்லாமே அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கின்ற போதிலும், பொதுமக்கள் என்ற அடிப்படையில், எங்களுடைய பங்கை ஆற்றவேண்டிய தேவையும் உள்ளது. தேவையற்ற நேரங்களில் தேவையற்றவிதமான வாகனங்களைப் பயன்படுத்துவதை விடுத்து, நடப்பதற்கு முயலமுடியும். அத்தோடு, சைக்கிள் பயன்பாட்டையும் அதிகரிக்கலாம். இதன்மூலம், வாகன நெரிசலும் குறைவடைவதோடு, புவி வெப்பமடைதலுக்கு நாங்கள் வழங்குகின்ற பங்களிப்பையும் நாங்கள் குறைத்துக்கொள்ள முடியும்.

இவற்றைச் செய்வதற்கான காலம், எங்களுக்கு அதிகமாகக் கிடையாது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள், ஏற்கெனவே தென்படத் தொடங்கிவிட்டன. எனவே, 'நன்றே செய்வோம், அதை இன்றே செய்வோம்' என்பதற்கிணங்க, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. 'கடந்த 125 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஏப்ரல், 2016ஆம் ஆண்டின் ஏப்ரலே' என்ற தலைப்பை, அடுத்த மாதத் தொடக்கத்தில் வாசித்துவிட்டு வெறுமனே கவலைப்படுவதால் மாத்திரம், 2018ஆம் ஆண்டின் ஏப்ரலுக்கும் அதேபோன்றதொரு 'பெருமை' கிடைப்பததைத் தடுத்துநிறுத்த முடியாது என்பதை உணரவேண்டிய தேவை எமக்கெல்லோருக்கும் உண்டு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .