Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
மூலோபாயமும் தந்திரோபாயமும் வௌ;வேறு. உலக அலுவல்களில் தந்திரோபாயத்தை விட மூலோபாயம் முக்கியமானது. தந்திரோபாயத் தோல்விகளதும் பின்வாங்கல்களதும் பின்னடைவுகளை விட மூலோபாயத் தோல்விகள் கேடானவை. எனினும் மூலோபாயத் தோல்விகள் பற்றி அதிகம் சொல்லப்படுவதில்லை.
தற்போதைய சிரிய நிலவரம் இதற்குப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டு. அமெரிக்கா தலைமையில் மேற்குலகு தொடுத்த ஆட்சி மாற்றத்திற்கான போர், இன்று வேறு திசையிற் பயணிக்கிறது. சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்காக உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்., இன்று எல்லை தாண்டி ஐரோப்பிய நகரங்களில் தாக்குதல் தொடுத்துள்ளது. மறுபுறம், சிரியப் போர்க்களத்தில் பாரிய தோல்விகளைச் சந்தித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தன் கட்டுப்பாட்டுள் இருந்த பல நகரங்களையும் தளப் பிரதேசங்களையும் சிரிய இராணுவத்திடம் இழந்துள்ளது. ரஷ்ய விமானத் தாக்குதல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எண்ணிலடங்காச் சேதங்களை ஏற்படுத்தின. தொடர்ந்தும் சரிவை நோக்கும் எண்ணெய் விலைகள் மத்திய கிழக்கின் அமெரிக்கச் சார்பு நாடுகள் பலவற்றிற் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளன. அதனால் அவை பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியைத் தொடரவியலா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் நிதி மூலங்களை முடக்கியுள்ளது.
இப் பின்னணியில், யுனெஸ்கோ மரபுரிமைத் தலமாக அடையாளங் கண்ட சிரியாவின் புராதன நகரமான பல்மைராவை சிரிய இராணுவம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கடந்த வாரம் மீட்டிருக்கிறது. இது சிரிய இராணுவம் எட்டிய மிக முக்கிய வெற்றியாகும். பல்மைராவை மீட்டமை குறியீடாகவும் மூலோபாயமாகவும் முக்கியமானது.
பல்மைராவின் மீட்பு சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹொம்ஸ் நகரையும் ரக்கா நகரையும் சிரிய இராணுவம் முழுமையாகக் கைப்பற்றும் வழியைத் திறந்துள்ளது. இவை சிரிய யுத்தத்தில் மிகவும் முக்கிய களங்கள். பல்மைராவின் மீட்பு, சிரிய போர்க்களத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அடைந்த அதி முக்கிய தோல்வியாகும். கடந்தாண்டு மே மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், சிரியாவின் புராதன நகரான பல்மைராவைத் தமது கட்டுப்பாட்டுட் கொண்டுவந்தபின் அங்கிருந்த பல நூற்றாண்டு காலப் பழமை வாய்ந்த மரபுரிமங்களைக் குண்டுவைத்துத் தகர்த்தனர். பல்மைரா நகரம் ரோமர்களுக்கு எதிராகத் தீரத்துடன் போரிட்ட அரபு மக்களின் வீரத்தையும் தன்மானத்தையும் தக்கவைத்துப் புகழ்பெற்ற அரபுப் பேரரசி செனோபியாவின் தலைநகராகத் திகழ்ந்த வரலாற்றுப் பெருமைக்குரியது. அத்துடன் பட்டுப் பாதையின் பிரதான வர்த்தக நகராகவும் இருந்தது. உலகில் எஞ்சியுள்ள தொன்மையான நகரங்களில் பல்மைராவும் ஒன்றாகும்.
இந் நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றிய வேளை, இப்புராதன நகரின் எச்சசொச்சங்கள் முழுமையாக அழிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவியது. அந்நிலையிலும், பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடாத்துவதாகச் சொன்ன அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பல்மைரா பற்றி மௌனங் காத்தன. உலகெங்கும் மனித உரிமைகள் பற்றிப் பேசும் அவர்கள், மனித நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றுகளைப் பயங்கரவாதிகள் அழித்த போது, அமைதி காத்தலே தமது நலன்கட்கு உவந்தது என நன்குணர்ந்திருந்தனர்.
இன்று, ஏறத்தாழ 10 மாதங்களில் சிரியக் கள நிலவரம் முற்றாக மாறியுள்ளது. ரஷ்யாவின் நுழைவு மூலோபாயமாகவும் தந்திரோபாயமாகவும் சிரிய இராணுவத்துக்கு மிகுந்த வலுவைக் கொடுத்தது. ரஷ்ய விமானங்களின் நன்கு திட்டமிட்ட குண்டுத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பாரிய சேதங்கட்காளானது. அதே வேளை, களமுனைகளில் சிரிய இராணுவத்துக்குத் துணையாகப் போராடிய ஹிஸ்புல்லாவின் சிறப்புப் படையணியினர், அல்- கொய்தாவின் சிரியப் பிரிவான மேற்குலக ஆதரவு பெற்ற அல் நுஸ்ராவுக்கு எண்ணிறைந்த சேதங்களை ஏற்படுத்தினர். இன்னொரு புறம், குர்தியப் போராளிகள் துருக்கியிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு இராணுவ உதவிகள் போகும் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, வட சிரியாவின் பல பகுதிகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை விரட்டியுள்ளனர்.
இக் கள நிலவரத்திலேயே பல்மைரா கடந்த வாரம் முழுமையாக மீட்கப்பட்டது. மீட்பின் முக்கியத்துவத்தை விட மேற்குலகின் பிரதான ஊடகங்கள் அம்மீட்பை மறைத்தமை முக்கியமானது. ஏனெனில், அமெரிக்காவும் மேற்குலகும் எதிர்பாராத ஒரு நிகழ்வாக அது நடந்தேறியது. 'ஐ.எஸ்.ஐ.எஸ், சிரியத் தலைநகரை நோக்கி விரைவாக முன்னேறுகிறது' 'ரஷ்யாவின் விமானத்தாக்குதல்கள் பயனற்றவை' 'அவை அப்பாவி மக்களைக் கொல்கின்றன' என்ற தொடரான பிரசாரங்கட்கு நடுவே பல்மைராவின் மீட்பை அவற்றாற் சீரணிக்க முடியவில்லை.
பல்மைராவின் மீட்பானது இலகுவில் நிகழவில்லை. ஒரு புறம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், இன்னொருபுறம் அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடைய அல்-நுஸ்ரா பயங்கரவாதிகள், மற்றொருபுறம் அமெரிக்காவின் நேரடி ஆதரவு பெற்ற சிரிய விடுதலை இராணுவம். இவ்வாறு மும்முனைத் தாக்குதலுக்கு நடுவே சிரிய அரச இராணுவம் பல்மைராவை மீட்டுள்ளது. இது ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தலைநகராக அறிவிக்கப்பட்ட, 100 மைல் தொலைவில் உள்ள ரக்கா நகரை நோக்கி சிரியப் படைகள் முன்னேற ஏதுவாக அமையும்.
'உலக நாகரிகங்களின் முத்து' எனப்படும் பல்மைரா நகரை சிரிய இராணுவம் மீளக் கைப்பற்றியமை, சிரிய நிலவரத்தில் ஒரு புதிய பரிமாணத்தைப் புகுத்தியுள்ளது. இவ்வளவு காலமும் சிரிய நெருக்கடிக்கு ஒரே தீர்வு சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவி விலகுவதே என மேற்குலக நாடுகள் சொல்லி வந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரிய அரசால் பெற்ற இவ்வெற்றி, அசாத்தின் கைகளைப் பலப்படுத்தியுள்ளதோடு, உண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவோர் யார் என்பதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
அதுபோக, சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள ரஷ்யப் படையினரை விலக்கிக் கொள்வதாகக் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளமை உலக அரசியலில் எதிர்பாராத நிகழ்வாகும். சிரியாவில் போரிடும் சிரிய இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், இவ்வறிவிப்பு சிறந்த மூலோபாய முடிவாகவே கொள்ளத்தகும். சிரியாவின் எதிர்காலம் குறித்த பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெறுகையில், அப்பேச்சுக்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-நுஸ்ரா போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் ஈடுபடா வண்ணம் பார்த்துக்கொண்ட ரஷ்யா, போர்முறை வெற்றிகளின் மூலமும் உரிய வேளையிற் படைகளின் விலக்கல் மூலமும், பேச்சு மேசைகளில் சிரிய ஜனாதிபதி அசாத்தின் கைகளை வலுப்படுத்தியுள்ளது.
தந்திரோபாய முறையில் ரஷ்யா இதன் மூலம் மூன்று விடயங்களைச் சாதித்துள்ளது. முதலாவதாக, சிரியப் போர்க்களத்தில் தேவையான மூலோபாய நோக்கங்களை நிறைவேற்றிய நிலையில் அதிலிருந்து வெளியேறற்கான முதலாவதும் சிறந்ததுமான வழியை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிந்துள்ளார். இரண்டாவதாக, தனது கூட்டாளியான சிரிய அரசாங்கத்தையும் அசாத்தின் ஆட்சியையும் தொடர்ந்து தக்கவைக்கவும் இராணுவ முறையில் எளிதில் வெற்றிகொள்ளவியலாத நிலைக்கு அசாத்தின் ஆட்சியைக் கொண்டு வந்துள்ளார். மூன்றாவதாக, உலக அலுவல்களில் தவிர்க்கவியலாத சக்தியாகவும் தேவையேற்படுமிடத்து, இராணுவ வலிமையைப் பயன்படுத்தும் ஆற்றலைத் தான் கொண்டிருப்பதாக ரஷ்யா உலகுக்கு அறிவித்துள்ள அதே வேளை, தனது பலம்-பலவீனங்களையும் அது சோதித்துப் பார்த்துள்ளது.
உலகளாவிய முறையிற் கடந்த 15 ஆண்டுகளில் பிற நாடுகளில் எவரும் மேற்கொண்ட தலையீடுகளுடன் சிரியாவில் ரஷ்யத் தலையீட்டை ஒப்புநோக்கத் தகும். 9ஃ11 இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அடுத்து ஈராக்கை ஆக்கிரமித்தது. பின்னர் லிபியாவில் போரிட்டது. இம் மூன்றும் இன்றுவரை தொடரும் போர்கள். மூன்று நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் இன்னமும் பெரியளவில் உள்ளன. புதை மணலில் காலை வைத்த கதையாய் இம் மூன்று ஆக்கிரமிப்புப் போர்களாலும் அமெரிக்கா திண்டாடுகிறது. ஆனால், ரஷ்யத் தலையீடு வித்தியாசமானது. சிரியாவில் போர் வீரர்களைப் போருக்குள் அனுப்பாது, அரசாங்கத்துக்கு எதிராகப் போரிடும் தரப்புக்கட்கு எதிராக விமானக்குண்டு வீச்சுக்களை மட்டுமே நடத்தியது. அதன் மூலம் தனது நேரடிப் பிரசன்னத்தைத் தவிர்த்ததுடன் தன் நடவடிக்கைகளை சிரிய அரசாங்கத்துக்கு உதவும் வகையில் மட்டுமே நிகழ்த்தியது. எனவே அதனால் இலகுவாக வெளியேற முடிந்தது.
ரஷ்யா சிரியாவில் தலையிட்ட காலப்பகுதியும் இப்போது வெளியேறியுள்ள காலப்பகுதியும் சிரியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தீர்மானமான காலப்பகுதிகளாகும். சிரியத் தலைநகர் டமஸ்கஸ் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுள் வந்து சதாம் உசைன், முஹம்மர் கடாபி ஆகியோரின் நிலையே பஷார் அல்-அசாத்துக்கும் ஏற்படும் என்று மேற்குலகு கட்டியங்கூறிய நிலையில் ரஷ்யாவின் தலையீடு நடந்தது. இன்று வலுவான அரசாக அசாத்தின் ஆட்சி மாறியுள்ள நிலையில் பேச்சுவார்த்தைகளின் திசைவழியைத் தீர்மானிக்கும் சக்தியாக ரஷ்யா தன்னை நிலைநிறுத்திய பின் சிரியாவிலிருந்து படைகளை விலக்கிக் கொண்டுள்ளது.
குரங்கு அப்பம் பிரித்த கதையாய் சிரியாவைத் துண்டாடித் தங்களுள் பங்குபோடத் துடிக்கும் சவூதி அரேபியத் தலைமையிலான வளைகுடா முடியாட்சிகட்கும் துருக்கிக்கும் இப்போதைய நிலவரம் உவப்பாயில்லை. சிரியாவிலிருந்து படைகளை விலக்குவதை அறிவித்த வேளை ரஷ்ய அதிபர் புட்டின் மேலதிகமாக இரண்டு விடயங்களையும் சொன்னார். முதலாவதாக, ரஷ்யா சிரிய நிலவரங்களை மிகக் கவனமாக அவதானித்து வருகிறது. சிரியாவில் ஏலவேயுள்ள ரஷ்ய இராணுவத் தளங்கள் வழமை போற் தொடர்ந்து செயற்படும். இரண்டாவதாகத், தேவையேற்படுமிடத்துச் சில மணித்தியாலங்களில் சிரியாவில் இராணுவ ரீதியில் தலையிட ரஷ்யா தயார் நிலையில் உள்ளது. இவை வெறுஞ் செய்திகளல்ல. மாறாக, சிரியாவில் தலையிட ஆசைப்படும் அண்டைநாடுகட்கு விடுத்த எச்சரிக்கையுமாகும்.
ரஷ்யா சிரியாவிலிருந்து படைகளை விலக்கியமை, தனது மூலோபாய நோக்கங்களை அடைந்த நிலையில் மேற்கொண்ட தந்திரோபாய நடவடிக்கையாகும். அது உலக அரங்கில் ரஷ்யாவின் நிலையை உயர்த்தியுள்ளது. அதனால், ரஷ்யா வெளியுறவுக் கொள்கையில் ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவ்வாறு, மத்திய கிழக்கில் தன்னிகரில்லாச் சக்தியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் இடத்தில் சிரியப் போர்க்களம் மூலம் ரஷ்யா தனது பங்குரிமையை நிலைநாட்டியுள்ளது.
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை வெறுமனே வலிமையால் நிறுவப்படுவதல்ல. அது, பலம்-பலவீனங்களை நன்கறிந்து மூலோபாயத்தில் தெளிவும் தந்திரோபாயத்தில் நெகிழ்வும் கொண்ட தூரநோக்கால் உருவாவது. அவ்வாறு உருவாகிய ஒரு வெளியுறவுக் கொள்கையின் நல்ல பலன்களை ரஷ்யா அனுபவிக்கிறது.
அமெரிக்காவும் மேற்குலகும் அரபு வளைகுடா முடியாட்சிகளும் வலிந்து உருவாக்கிய சிரிய நிலவரம் அதற்கு வழி கோலியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago