2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறிதரன் எதிர்நோக்கும் சவால்கள்

Editorial   / 2024 பெப்ரவரி 04 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி  கடந்த 21 ஆம் திகதி எவ்வாறு அறிக்கையிட்டார்கள் என்பதன் மூலம் தெரிகிறது. அவர்கள் தமிழ்த் தேசியகடக கூட்டமைப்பையும் இலங்கை தமிழ் அரசு கட்சியையும் குழப்பிக் கொண்டே செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

1949 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்டு சொற்ப காலம் சென்றதிலிருந்து இலங்கையில் பிரதான தமிழ்க் கட்சியாக இருக்கும் தமிழரசு கட்சி இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருக்கும் நிலையிலேயே சில தென்பகுதி ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார் என்று அறிக்கையிட்டு இருந்தார்கள். 

இதனை ஆச்சரியமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தென் பகுதியில் இடம்பெறும் சில அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளைப் பற்றி தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் போதிய அறிவு இல்லாமல் இருந்ததையும் கடந்த காலத்தில் கண்டோம்.

உதாரணமாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட நிலையில் சிங்கள பௌத்த மக்களில் ஒரு சாரார் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாகர் உலகிலிருந்து களனி விகாரைக்கு ஒரு நாகம் வந்த கதையைப் பற்றி பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

நிலத்துக்கடியில் இருப்பதாகக் கூறப்படும் நாகர் உலகிலிருந்து ஒரு நாகம் புத்தரின் அடையாளச் சின்னங்களைத் தாங்கிய வண்ணம் களனி கங்கை ஊடாக வெளியே வந்து அச்சின்னங்களை மற்றொருவர் மூலம் தம்மிடம் கையளித்தாகவும் அது தேசத்தையும் பௌத்த சமயத்தையும் பாதுகாப்பதற்காக ஒரு புதிய தலைவர் வருகிறார் என்பதற்கான அடையாளமாகவே நிகழ்ந்தது என்றும் களனி மகா விகாரையின் பிரதம மதகுரு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதனை பொதுஜன முன்னணிக்கு ஆதரவான ஒரு தொலைக்காட்சி நிறுவனம் முக்கிய செய்தி என்று கூறி எவ்வித சந்தேகமும் இல்லாத செய்தியைப் போல் ஒளிபரப்பியது. இந்த வீடியோ இன்னமும் யூடியுப்பில் பார்க்கலாம். இச்செய்தி பௌத்தர்களில் ஒரு சாரார் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் யார் என்று கேட்டால் சிலவேளை பலருக்கு தெரியாதிருக்கலாம்.

தமிழரசு கட்சியைப் பற்றி அறியாத தென்பகுதி இளைய தலைமுறை ஊடகவியலாளர்கள் இனப் பிரச்சினை போன்ற சிக்கலான ஒரு விடயத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நம்ப முடியாது. ஆனால் அவர்கள், அக்கட்சியை அறியாதிருக்க அல்லது தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்று தான் என்று நினைக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன.

இலங்கை தமிழரசு கட்சி 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ஆரம்ப காலத்தில் தென் பகுதியில் அது 'பெடரல் பக்ஷய' (சமஷ்டி கட்சி) என்றே அழைக்கப்பட்டது. அதனை அடுத்து 1972 ஆம் ஆண்டு முதல் தமிழரசு கட்சி மூன்று கூட்டணிகளின் பிரதான கட்சியாக இருந்தது. 1972 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை தமிழர் ஐக்கிய முன்னணியினதும் 1976 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் வரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினதும் (கூட்டணியினதும்) 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பிரதான உறுப்புக் கட்சியாக இருந்தமையால் அதன் பெயர் அறிதாகவே ஊடகங்களில் காணப்பட்டது.

2001 ஆம் ஆண்டு முதல் தேர்தல் காலங்களில் அதன் பெயர் ஓரளவுக்கு வெளியே தெரிய இருந்தது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழரசு கடசியின் சார்பாக அதன் சின்னத்தின் கீழேயே போட்டியிட்டனர். 1980களின் ஆரம்பத்திலிருந்து தமிழ் அமைப்புக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் மூண்டதால் தமிழரசு கட்சி போன்ற கட்சிகளுக்கு ஊடகங்களில் இடம் கிடைக்கவே இல்லை. இவ்வனைத்து காரணங்களாலும் தமிழரசு கட்சி என்பது ஏதோ புதிய கட்சியொன்றைப் போல் தெற்கில் சிலர் காணலாம்.

தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக இதற்கு முன்னர் ஒருபோதும் போட்டி நடைபெறவில்லை. பொது உடன்பாட்டிலேயே தலைவர் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார். இம் முறை தேர்தலானது யார் சிறந்த தமிழ் தேசியவாதி என்பதை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவே தெரிந்தது.

தேர்தலுக்கு முன்னர் வெளியான தமிழ் பத்திரிகைகளிலும் இது தெரிய இருந்தது. அந்த வகையில் சிறிதரனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. சில தமிழ் ஊடகங்கள் சிறிதரன் உள்நாட்டுப் போரின் அதிக வடுக்களை சுமந்துக்கொண்டிருப்பவர் என்றும் சமந்திரன் சம்பந்தனின் சிபார்சின் பேரில் அரசியலுக்கு வந்து தமிழ்த் தேசியத்துக்குள் புதியவராக அறிமுகமான புதிய தமிழ் தேசிய பற்றாளர் என்றும் குறிப்பிட்டன.

தென்பகுதி ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எப்போதும் தமிழ் தேசியவாதத்தை தமிழீழ விடுதலை புலிகளின் அரசியலாகவே காண்கின்றனர். கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடன் சிறிதரன் போரில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செயலுத்தியமை எதோ ஓர் ஆபத்தான சகுனமாக சிலர் பார்ப்பதாகவே தெரிந்தது.

மூன்று தசாப்தங்களாக வான் தாக்குதல்களாலும் பீரங்கித் தாக்குதலாலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட ஒரு மண்ணில் அந்த கொலைகள் இடம்பெரும் போது அதற்கு சாட்சியாக இருந்த ஒருவர் புதியதோர் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் போது தாம் கடந்து வந்த அந்த கொடுமையான பாதையை மறக்க மாட்டார் என்பது எவரும் பரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தமாகும். ஆனால் அந்த அனுபவம் இல்லாத காரணத்தால் ஒருவர் அதனை புரிந்துகொள்ளாமலும் இருக்கலாம். அதனையே தென்பகுதியில் காண முடிந்தது.

இது சிறந்த தேசியவாதியை தெரிவு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையியே வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கருத்து தெரிவித்து இருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் கருத்து தெரிவித்த அவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் தேசியம் அழிந்துவிடக்கூடாது என்பதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

கட்சித் தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் போட்டியிட்டு சிறிதரன் வெற்றி பெற்ற நிலையிலேயே அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தல் முடிவின் பின்னர் கருத்து தெரிவித்த சிறிதரன், சுமந்திரனுடனும் தேர்தலுக்கு சற்று முன்னர் போட்டியிலிருந்து விலகிக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுடனும் இணைந்து தமிழ் தேசியத்தின் ஒவ்வோர் அங்குல இருப்புக்காகவும் பொறுப்புடன் செயற்படுவதாக என்று கூறியிருந்தார். அதேபோல் சுமந்திரனும் புதிய தலைவர் சிறிதரனுக்கு முழுமையான ஆதரவை வழங்கி தொடர்ந்தும் ஒற்றுமையாக பயணிப்போம் என்று கூறியிருந்தார்.

இவ்விருவரின் இக்கருத்துக்கள் வெறும் சம்பிரதாயத்துக்கானதாக இருக்கக்கூடாது. ஏனெனில் அக்கருத்துக்களால் அவர்கள் உலகுக்கு எடுத்துரைக்கப் போகும் ஐக்கியமானது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இது தமிழ் சமூகத்துக்கு மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்துக்கும் பொருத்தமானதாகும்.

இன்று இலங்கை தமிழ் அரசியலானது முன் நகர முடியாத ஒரு நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவே தெரிகிறது. தமது இருப்பை பாதிக்கும் பல பிரச்சினைக்ளுக்கு தீர்வு தேடி சாத்வீகமாக பல தசாப்தங்களாக போராடி வந்த தமிழ் தலைவர்கள் அப்போராட்டம் தோல்வியடையவே பிரிவினையை கோரினர்.

பிரிவினைப் போராட்டம் மரபு ரீதியான கட்சிகளை பின் நோக்கித் தள்ளிவிட்டு இளைஞர்களிடம் சென்றடைந்தது. அப்போராட்டமும் பெரும் அழிவோடு தோல்வியடைந்தது. இப்போது மீண்டும் ஜனநாயக ரீதியாக சமஷ்டி ஆட்சி முறையை கோருகிறார்கள். அதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் எவரும் தயாராக இல்லை. மீண்டும் ஆயுதப் போராத்துக்குப் போகவும் முடியாது. ஜனநாயக போராட்டமும் ஓரிடத்திலேயே தேங்கிக் கிடக்கிறது. இது ஒரு நெருக்கடியான நிலைமையாகும்.

இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளிடையிலான போட்டா போட்டியும் நிச்சயமாக சிந்தனைக்கு தடையாகவே கருத வேண்டியுள்ளது. போராட்ட வடிவங்கள் மற்றும் சுலோகங்கள் தொடர்ந்தும் பயனளிக்காவிட்டால் அவற்றை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதாவது ஆயுதப் போராட்டத்துக்கு மீண்டும் போக வேண்டும் என்பதல்ல. ஆனால் தென் பகுதியிலும் சர்வதேசத்திலும் புதிய நண்பர்களை தேடலாம். தென் பகுதி பொருளாதார போராட்டங்களோடு தமிழர்களின் பிரச்சினைகளையும் இணைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராயலாம். கடந்த வருடம் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் போது ஓரளவுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தெற்கே எடுத்துச் செல்லப்பட்டன.

இவற்றைத் தான் செய்ய வேண்டும் என்பதல்ல. தமிழர்களும் முஸ்லிமகளும் புதிதாக (out of the box)சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பதையே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. ஆயினும், கட்சிகளாக பிரிந்து இதனை செய்யப்போகும் போது மற்றைய கட்சிக்காரர்களின் குற்றச்சாட்டுக்கள் மற்றம் முத்திரை குத்தல்கள் பற்றிய அச்சத்துடனேயே அதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே தான் கட்சிகளின் ஒற்றுமை ஊடாக ஒரு கூட்டுப் பயணம் அவசியமாகிறது. 31.12.2023

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .