Johnsan Bastiampillai / 2021 ஜூலை 28 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்
முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள வீட்டில், பணிபுரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி எனும் சிறுமி, தீக்காயங்களுக்கு உள்ளாகி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்தச் சிறுமி, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாகவும் மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
ஒருபுறம், சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி, எரித்துக் கொல்லப்பட்டதாகவும் ரிஷாட் வீட்டிலும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், சிறுமிக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
மறுபுறம், ரிஷாட்டின் வீட்டுக்கு, சிறுமி வருவதற்கு முன்னரே, பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இப்போது, இந்தச் சம்பவம் அரசியலாக்கப்பட்டு உள்ளதாலும் இன ரீதியாகப் பலர் அதற்கு விளக்கம் கொடுக்க முனைவதாலும் உண்மையை ஊகிக்க முடியாமல் இருக்கிறது.
தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறுவதைப் போல், இது இனப்பிரச்சினையோ அரசியல் பிரச்சினையோ அன்றி, சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாகும். எனவே, பொலிஸ் விசாரணை எவ்வித நெருக்குவாரமும் இல்லாமல் நடைபெற்றால் மட்டுமே உண்மையை அறியலாம்.
ஆளும் கூட்டணியின் அரசியல்வாதிகளும் அக்கூட்டணியை ஆதரிக்கும் ஊடகங்களும் நிலைமையைப் பாவித்து, அரசியல் இலாபம் தேட முயல்வது தெளிவாகத் தெரிகிறது. ஒரு புறம் அவர்கள், இந்தச் சம்பவத்தைப் பாவித்து, தமக்கு எதிராக இணைந்திருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரிக்க முற்படுகிறார்கள்.
மறுபுறம், 2018ஆம் ஆண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்தபோது, அந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு கேட்டும், அதற்கு ரிஷாட் உடன்படாததால் அதற்காக அவரைப் பழிவாங்க, இந்தச் சம்பவத்தையும் பாவிக்கிறார்கள். அதுமட்டும் அல்லாமல், உயிரிழந்த சிறுமிக்கு நியாயம் தேடி, ஆளும் கட்சியினர் போராடவில்லை என்றே ஊகிக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் ரிஷாட்டின் வீட்டில் இடம்பெற்றதை எவரும் மறுக்கவில்லை. எனவே, உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கும் பொறுப்பை, அவரது குடும்பத்தினர் ஏற்றே ஆக வேண்டும்.
முக்கியமான பிரச்சினை என்னவென்றால், இதைஒரு தனிச் சம்பவமாகப் பார்க்க முடியாது. இது, இந்நாட்டு ஏழைகள், குறிப்பாக மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கி இருக்கும் பாரியதொரு பிரச்சினையின் வெளிப்பாடாகும்.
அந்தப் பாரிய பிரச்சினையை ஆராய முற்பட்டால், ஹிஷாலினியின் பிரச்சினை அதற்குள் மூடி மறைந்து, அதன் பாரதூரத்தன்மையைக் குறைத்து விடும் அபாயம் இருக்கிறது. எனினும், இந்தத் தனிச் சம்பவத்தின் ஊடாக, ஒரு சமூகமே எதிர்நோக்கியிருக்கும் பாரியதொரு சமூகப் பிரச்சினையையும் புறக்கணிக்க முடியாது.
2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியும், இதுபோன்ற கவலைக்குரிய சம்பவம் இடம்பெற்றது. பௌத்தாலோக்க மாவத்தையில், பெரும் தனவந்தர்களின் இரண்டு வீடுகளில் வேலை செய்து வந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த இரண்டு தமிழ்ச் சிறுமிகள், அருகில் ஓடும் டொரிங்டன் ஓடையில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள், மதுவீரன் ஜீவராணி (வயது 13), லக்ஷமகன் சுமதி (வயது 16) ஆவர்.
அவர்கள், தற்கொலை செய்து கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்திருந்ததாகப் பொலிஸார் கூறினர். ஆனால், அந்தக் கடிதத்தில் காணப்பட்ட கையெழுத்து, தமது மகளின் கையெழுத்தல்ல என, இரண்டு சிறுமிகளினது பெற்றோரும் தெரிவித்து இருந்தனர். அதேவேளை, அவர்கள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட ஓடையில், அவர்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் இருக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். ஆனால், பொலிஸார் அந்த மரணங்களைத் தற்கொலையாகவே நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
அது, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலம். இன்றைய ஆளும் கட்சியினரே, அன்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரில் ஆட்சி செய்தனர். அப்போது, அந்த இரு சிறுமிகளுக்காக அவர்கள் பரிந்து பேசவில்லை. அச்சிறுமிகளின் வயதைக் கவனித்தாவது, அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை. பிரச்சினை, இனரீதியாகவே அப்போது பார்க்கப்பட்டது. எனவேதான், இப்போது ஆளும் கூட்டணியின் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடுகிறார்கள் என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.
சிங்ளவர், தமிழர், முஸ்லிம், மலையகத்தவர் என்றிருக்கும் சகல தனவந்தர்களினது வீடுகளிலும் வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தவொரு தொழில் சட்டத்துக்கும் உட்படாதவர்கள். எனவே, அவர்கள் மிகக்குறைந்த சம்பளத்திலும் எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற வரையறை இல்லாமலும் வேலை செய்கிறார்கள். சில வீடுகளில், 12, 13 வயது சிறுவர்கள் - பெரும்பாலும் சிறுமிகள், 20 மணித்தியாலங்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுமுறை இல்லை; வெளியே செல்லும் உரிமை இல்லை; தொழில் உத்தரவாமும் இல்லை; எந்நேரமும் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படலாம்.
பெரும்பாலும் பெண்களே, வீட்டு வேலைக்குச் சேர்க்கப்படுகிறார்கள். அதிலும், சிறுவர்களை வேலை வழங்குநர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவது இலகுவாக இருப்பதே அதற்குக் காரணமாகும். அவர்கள் தப்பிச் செல்ல முயல்வதும் குறைவு. இதே பலவீனங்கள் காரணமாக, அவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.
குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாகவும் முறையிட்டால் மேலும் தண்டிக்கப்படுவோமோ என்ற அச்சத்தாலும் பெரும்பாலான வேலையாட்கள், இம்சைகளைப் பொறுத்துக் கொண்டு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
பல தலைமுறையாக, இந்தப் பிரச்சினை இருந்து வந்த போதிலும் இது சகலரும் அறிந்த பகிரங்க இரகசியமாக இருந்த போதிலும், எந்தவோர் அரசாங்கமும் இதற்குத் தீர்வு காண முற்படவில்லை. அரசியல்வாதிகளும் இந்தச் சுரண்டலில் ஈடுபடுவதால், அவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று நம்பவும் முடியாது.
உலகம் முழுவதிலும் சுமார் 67 மில்லியன் வீட்டு வேலையாட்கள் இருப்பதாக, உலக தொழிலாளர் அமைப்பு (ILO) கூறுகிறது. உலகில் பணி புரியும் பெண்களில், நான்கு சதவீதமானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவே இருக்கினறனர்.
இலங்கையில், வீட்டுப் பணியாளர்கள் குறித்து, நூற்றுக்கணக்கான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் எந்தவோர் அமைப்பும் வீட்டுப் பணிப்பெண்களினதும் சிறுவர் பணியாளர்களினதும் எண்ணிக்கையைக் கண்டறியவில்லை. எனவே, வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்களைப் பற்றிய சரியான தரவுகளும் இல்லை. இந்த விடயத்தில், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்கள் தொடர்பாக, அவர்களது தலைவர்களாவது முறையாக ஆராய்ந்து, அறிக்கை தயாரித்துள்ளார்களா என்பது தெரியவில்லை.
மேற்படி, மஸ்கெலியா சிறுமிகள் கொல்லப்பட்ட நாள்களில், அவர்களது தோட்டத்தில் ஆய்வொன்றை நடத்திய, கண்டியைத் தளமாகக் கொண்ட மனித அபிவிருத்தி அமைப்பு (HDO), அந்தத் தோட்டத்திலிருந்து மட்டும் சுமார் 30 சிறுவர்கள் வேலைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இந்த விடயத்தில், சர்வதேச நிறுவனங்களோ அல்லது, இலங்கையில் அரச நிறுவனங்களோ நேர்மையாக நடந்து கொள்கிறார்களா என்பது சந்தேகத்துக்குரியது.
பல நூற்றாண்டுகளாக, வீட்டுப் பணியாளர்களின் பிரச்சினை இருந்து வந்துள்ள போதிலும், கடந்த பல தசாப்தங்களாக அது சர்வதேச அரங்குகளில் பேசுபெருளாக இருந்து வந்துள்ள போதிலும், 2019 ஆம் ஆண்டுதான் அதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சிறுவர் உழைப்பை ஒழிப்பதற்கான சர்வதேச வருடம் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த சிறுவர் உழைப்பை ஒழிப்பதற்கான சர்வதேச வருடத்தில் (2021) தான் ஹிஷாலினிக்கு இந்தக் கதி நடந்துள்ளது.
2010ஆம் ஆண்டு, நெதர்லாந்தில் ஹேக் நகரில் சிறுவர் உழைப்பு தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதன் விளைவாக இலங்கையிலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கும் நோக்கத்துடன் சிறுவர் உழைப்பை ஒழிப்பதற்கான செலாற்றுக் குழு நியமிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர், 2020ஆம் ஆண்டுதான் அந்தக் குழு, தமது நோக்கத்தை அடைவதற்கான திட்டத்தை வகுப்பதற்காக தொழில்நுட்பக் குழுவை நியமித்தது. அந்தக் குழு, 2020 டிசெம்பர் மாதம், அதாவது, ஹேக் மாநாடு நடைபெற்று 10 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையில் சிறுவர் வேலையாட்களைப் பற்றிய நிலைமையை மதிப்பிடுவதென முடிவு செய்தது.
2025ஆம் ஆண்டு, இலங்கையில் சிறுவர் உழைப்பை ஒழிப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளது. எனினும், இவர்களது இந்த வேகத்தைப் பார்த்தால், இலங்கையில் சிறுவர் உழைப்பைச் சுரண்டுவதை நிறுத்த, இலங்கை ஆட்சியாளர்கள் நேர்மையாக நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.
10 minute ago
17 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
40 minute ago
2 hours ago