Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நாம் ஆரம்பத்தில் களிமண்ணால் பொம்மைகளையும் உருவங்களையும் வடிவமைக்க பழகினோம். அதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தற்போது அலங்காரப் பொருட்களையும் சிலைகளையும் களிமண், பைபர் போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கக் கற்றுக் கொண்டோம். இதிலாவது எமது வாழ்வாதாரத்தைப் பெருக்கலாம் என நினைத்துக் கொண்டுதான், நாம் இதில் காலடியெடுத்து வைத்தோம். ஆரம்பத்தில் எமக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது. ஆனால், தற்போது எமது நிலைமை தொடர்பில் யாரிடம் போய் சொல்வது எனத் தெரியாதுள்ளது” என மட்டக்களப்பு மாவட்டம் பெரியபோரதீவு கிராமத்தில் குடிசைக் கைத்தொழிலாக மேற்கொண்டு வரும் அலங்கார பொம்மை உற்பத்தியாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கும்போது, கொவிட் - 19 நிலைமை காரணமாக, நாம் உற்பத்தி செய்யும் சிலைகளுக்கான மூலப் பொருட்களைப் பெறுவதில் பல சவால்கள் உள்ளன. அவற்றுக்கு அதிக விலையாகவும் உள்ளன. இவற்றின் மூலப் பொருளான ஒரு கிலோ பைபர் 500 ரூபாவாகவுள்ளது, இது ஒருபுறமிருக்க, இந்தியா, சீனா போன்ற பல நாடுகளில் எம்மைப்போன்ற கிராமியத் தொழிலாளர்களுக்கு அங்குள்ள அரசும், அரச சார்பற்ற அமைப்புகளும், பல்வறு உதவிகளையும் பயிற்சிகளையும், வழங்குகின்றன. எமக்குத் தற்போதைய நிலையில் மூலதனம், இதனை மேற்கொள்வதற்குரிய இயந்திர வசதிகள், உள்நாட்டு, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகள், தேவையாகவுள்ளன என்றனர்.
பிரதேச மட்டங்களில், குடிசைக் கைத்தொழில்களாக மேற்கொள்ளும், தொழிலாளர்கள் காலத்துக்குக் காலம் அவ்வப்போது வரும் இடர்களாலும் இன்னல்களாலும், அவர்கள் பெறும் வருமானங்களை இழக்கச் செய்கின்றார்கள்.
கொவிட் - 19 பெரும்தொற்றுக் காரணத்தால், அலங்கார சிலைகள், பொம்மைகள், உருவங்கள் செய்து விற்பனை செய்யும் பெரியபோரதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி பிரதேச அலங்கார உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, நாளாந்தம் இச்சிலைகளை செய்து விற்பனை செய்யும் கைப்பணியாளர்கள் தமது நாளாந்த வருமானத்தை ஈட்ட முடியாமலுள்ளார்கள். வெளி மாவட்டங்களுக்கு தமது உற்பத்தி பொருட்களை அனுப்ப முடியாமலுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
களுதாவளை பிரதேசத்தில் உள்ள சிலை செய்வர்கள், சீமெந்தை மூலப் பொருளாக கொண்டு சிலைகளை செய்வதுடன் சகல சிலைகளும் கைகளாலேயே செய்து வருகின்றனர்.அவர்கள் இறை வழிபாட்டிற்குரிய திருவுருவங்கள், அலங்கார பொம்மைகள், அழகுபடுத்தும் பொருட்கள் ஆகியவற்றைச் செய்வதுடன், பரம்பரை பரம்பரையாக இச்சிலைகள் வடிக்கும் கலையைக் கற்றுச் செய்வதாக கூறுகிறார்கள்.
பெரியபோரதீவு பகுதியில் சிலை செய்யும் தொழிலை, ஒர் இடத்தில் தமது வாழ்வாதார மேம்பாட்டு தொழிலாக 20 இற்கு மேற்பட்ட பெண்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக இவர்கள் களிமண், டொலமைற் பவுடர், பைபர் போன்ற மூலப் பொருட்களைப் பயன்படுத்தி நிற வர்ணங்களைக் கொண்டு இறை வழிபாட்டு உருவங்கள், கலாசார உருவங்கள், நினைவுச் சின்னங்கள், சிலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக, தமது உற்பத்திகளை செய்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகவும், தாம் உற்பத்தி செய்யும் சிலைகளை கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற மிகத் தொலைவிலுள்ள மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விற்பனை செய்து வரும் இந்நிலையில், இடை நடுவில் கொவிட் - 19 காரணத்தால் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவோ, விற்பனை செய்யவோ முடியாமல், அவைகள் அனைத்தும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் அடியோடு மூழ்கிவிட்டதாகவும் அக்கைவினைக் கலைஞர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சீமெந்தை மூலப் பொருளாக கொண்டு அச்சுகள் மூலமாக சிலையை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், அலங்கார உருவங்கள், கட்டட அலங்கார பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதுடன் தமது பிரதேசத்தில் கொவிட் - 19 காரணத்தால், அப்பகுதியிலும், அவ்வப்போது பயணத்தடை இடம்பெறுதால் தாம் உற்பத்தி செய்த பொருட்கள் நீண்ட நாள்களாக விற்பனை செய்ய முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு குடிசைக் கைத்தொழிலாக மேற்கொள்ளப்படுகின்ற அலங்காரச் சிலைகள், பொம்மைகள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மாதாந்தம் 12,000 ரூபாய் தொடக்கம், 15,000 ரூபாய் வரைத்தான் வேதனம் பெறுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வரைக்கும் அரசால் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள், இவ்வாறாக கிராமிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் குடிசைக் கைத்தொழில்களையும் விருத்தி செய்து கொடுக்க வேண்டியது துறைசார்ந்த அதிகாரிகளினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் தலையாய கடமையல்லவா?
இது ஒருபுறமிருக்க இவ்வாறு தமது பெரும் சிரமத்திற்கு மத்தியிலும், முயற்சியின் மத்தியிலும் தமக்குத் தெரிந்த இத்தொழிலை மேற்கொள்ளும் தமக்கு தற்கால நவீனத்துவத்திற்கு ஏற்ற வகையில் துறைசார்ந்த பயிற்சிகளையும், அவற்றுக்குரிய நவீனத்துவ இயந்திரங்களையும் அதிகாரிகள் வழங்க வேண்டும். இதுவரையில். தமங்கு அரசாங்கமோ அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களோ எதுவித உந்துசக்தியையும் வழங்காத நிலையில் ஏனைய துறைகளுக்கு உதவுவதுபோல் தமது சிற்பக் கலையுடனான வாழ்வாதாரத்திற்கும் சம்மந்தப்பட்டவர்கள் உதவுவதற்கு முன்வரவேண்டும்.
‘தமிழ் மிரர்’ ஊடகம் வாயிலாகவேனும் எமது நிலைமையை அறிந்து கொண்டு எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், தம்மீது கரிசனை கொள்ள வேண்டும், என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு அதிகளவு தன்னார்வ தொண்டர் அமைப்புகள் பல சமூகசேவைகளையும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதார மேபாட்டிற்கும் உதவிவருவதாகவும் நாம் அறிகின்றோம். கிராமிய மட்டத்தில் எமக்குத் தெரிந்த உற்பத்திகளை மேற்கொண்டு அதனூடாக சிறிதளவேனும் வருமானமீட்டிவரும் எமக்கு புலம்பெயர் அமைப்புகளும் உதவ முன்வரவேண்டும். எமது படைப்புகளை புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் கொள்வனவு செய்யும் பட்சத்தில் எமது வாழ்வாதாரம் மேலும் மேம்படும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த சிற்பக் கலைஞர்கள் அங்கலாய்க்கின்றனர்.
எனவே கிராமிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார உற்பத்திகளுக்கு உந்துசக்தியளிக்கப்படும் பட்சத்தில் துறைசார்ந்த மக்களின் வாழ்வாதரம் மேலோங்கி வருமானமும் அதிகரிக்கும்.
இதனூடாக கிராமிய பொருளாதாரமும் ஆங்காங்கே விருத்தியடைந்து செல்லும் என்றால் அது மிகையாகாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago