2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சீனாவின் பொறிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கை

Editorial   / 2021 ஜூன் 09 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தான் ஒரு புதிய அணிசேரா நாடு என்று 2019 இல் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டபோது அறிவித்தது. ஆனால் தற்போது தனது இறையாண்மையை சீனாவிடம் கையளித்துவிட்டது என்றே தோன்றுகிறது. விசேடமாக ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்த பிறகு, சீனா இலங்கையை தங்க முட்டையிடும் வாத்தாகக் கருதியது கடன்களையும், அபிவித்தித் திட்டங்கள் என்ற பெயரில் நாட்டின் அனைத்துத் திட்டங்களிலும் தனது கால்களைப் பதிக்கத் தொடங்கியது  மட்டுமன்றி, கடனுதவி என்ற பெயரில் பணத்தை வகை தொகையின்றி வாரி இறைக்கத் தொடங்கியது.   இங்கே பாரிய வருமானத்தை ஈட்டிக்கொண்ட நிறுவனமாக China Harbour Engineering Company (CHEC)  திகழ்ந்தது என்பது வெள்ளிடை மலை.

2018 ஆண்டு, மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு சீனாவால் ‘ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம்’ என்ற போர்வையில் 2014/2015 இல் எண்பது கோடி ரூபா நன்கொடையாக கொடுக்கப்பட்டிருந்தது.   இது இலங்கை அரசியலில் சீனா எவ்வாறு தனது பிடியை இறுக்கியது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான், கொரோன வைரஸ் அல்லது கொவிட்-19 என்ற பெருந்தொற்று இலங்கையில் தாண்டவமாதத் தொடங்கியது. நாட்டின் பொருளாதாரத்துறைக்கு முக்கியத்துவம் ஏற்பட்டாலும் படாவிட்டாலும், இலங்கை தனது சகல விதமான தேவைகளுக்கும் சீனாவை சார்ந்திருக்கும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

சீனாவின் உயர் அதிகாரிகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர் கைது செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சீன தனது செல்வாக்கை மேலும் விரிவடையச் செய்தது. அதில்  கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகம் முன்னிலை வகித்தது. தனது தூதுவராலயம் ஊடாக பல்வேறுபட்ட வெகுமதிகளை பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டத்துக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் கொடுத்தது.

கொழும்பு துறைமுக நகர மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட்ட நாள் அன்று, சீனா தனது நாட்டுத் தயாரிப்பான 500,000 சினோபார்ம் தடுப்பூசிகள், PCR இயந்திரங்கள், வைத்திய உபகரணங்கள் போன்றவற்றையும் கொடுத்தது. அத்தோடு, உள்ளூர் வர்த்தகர் ஒருவரோடு இணைந்து முகக்கவசம் தயாரிக்கும் ஒரு தொழிலகத்தையும் நிறுவியது. 

இங்கே முக்கியமாக ஒன்றைப் பற்றிக் கூறவேண்டும்; இலங்கை அரசாங்கம்   தேசிய மொழி அமுலாக்கல் கொள்கையில் கடைபிடிக்கும் எதேச்சாதிகாரப் போக்குடன் சேர்ந்துகொண்டு, சீனா சம்பந்தப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்கள், கட்டிட நிர்மாணங்கள் போன்றவற்றில் தமிழ் மொழிப் புறக்கணிப்பை மிகவும் நேர்த்தியாக செய்து வருகிறது.

சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட சட்டமா அதிபர் காரியாலயத்தில் புதிய கட்டிடத் தொகுதியில் காணப்பட்ட உலோகத் தகட்டில் சிங்கள, ஆங்கில மற்றும் சீன மொழிகள் காணப்பட்டதும், நாட்டின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டிருந்ததும் சிறந்த உதாரணங்களாகும். இது எமக்கு எடுத்துக்காட்டுவது என்னவெனில், சீனா தன்னை ஒரு நண்பனாகக் காட்டிக்கொண்டாலும், நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு சந்தர்ப்பவாதியாகவே தன்னை உருவகித்துக்கொண்டுள்ளது.

சீனா இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் இலங்கை சீனாவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தபோதிலும், நமது நாட்டு அரசியல்வாதிகளோ அது பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.

சீனா பற்றிய செய்திகளுக்கு இங்கு குறைவே இல்லை என்பதற்கு மற்றுமோர் உதாரணம். சமீபத்தில்,  நாடு முடக்கப்பட்ட சூழ்நிலையில், ஒரு சுவாரசியமான விடயமாக. சிங்கள மன்னரின் வழித்தோன்றல் என்று கூறப்படும் ஒரு சீன ‘இளவரசி’ பற்றிய  செய்தி உலா வந்தது. ‘இளவரசி’ சூ ஷி யின் என்பவர், கோட்டே மன்னர் ஆறாம் பரக்ரமபாஹுவின் 19 வது தலைமுறை வழித்தோன்றலாகக் கருதப்பட்ட சூ ஷி யின், ‘லங்கா இளவரசி’ என்பவர் சமீபத்தில் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற வெசாக் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார்.

இது இவ்வாறிருக்க, சீன-இந்திய உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், இலங்கை மின்சார சபை அதன் கலப்பின காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களை (HYBRID WINDMILL POWER PROJECT) வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் குடியிருக்கும் மூன்று தீவுகளில் நிறுவுவதற்கு சீனாவுக்கு அங்கீகாரம் வழங்கியது. இது இந்தியாவுக்கு கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், கொழும்பு துறைமுக நகர மசோதா ஒரு பரபரப்பான பேசும் பொருளாக மாறியது. அதன் குழு உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே சீனாவிடம் ஊதியம் பெறுபவர்களாக இருப்பது, இந்தத் துறைமுக நகர இயக்கம் குறித்து பெருத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு இராஜாங்க அமைச்சரின் மகனுக்கும் அங்கே ஒரு உயர் பதவியை வழங்கபட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் அங்கம் வகிக்கும் அநேகர் வெளிநாட்டு வங்கி, வியாபாரம் மற்றும் பணப் பரிமாற்றம் பற்றிய சொற்பமான அறிவையே கொண்டுள்ள, சீனாவின் துதிபாடும் கூட்டத்தினராகவே காணப்படுகின்றனர்.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியதொன்றாக இருப்பது யாதெனில், இந்தத் துறைமுக நகர முதலீடுகளில் கறுப்புப்பண பரிமாற்றம், சட்டவிரோத நிதிச்சலவை போன்றவை ஆதிக்கம் செலுத்தக்கூடும். இந்த நிலைமை இலங்கையின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என்று உள்நாட்டு நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் செயற்பாட்டுக்குழு எச்சரித்துள்ளது. அத்துடன் இலங்கை வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுதல், நிதி உதவி பெறுதல் மற்றும் சட்டபூர்வமான முதலீடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள  நேரிடும். நாட்டின் பல்வேறு நெடுஞ்சாலைகள் கட்டமைப்புகளை அமைப்பதற்கு அரசாங்கம் சீனவுக்கே அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இது பற்றிக்கூறும் போது, இலங்கை அரசாங்கம் இப்போது தன் வழியில் இருந்து விலகி, நட்பு நாடுகளான இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை மறந்து, சீனாவின் வழியில் போகிறது என்று கூறியுள்ளார்.

இந்த பின்னணியில், அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை இராணுவத்தால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் சொத்துக்கள் உட்பட, கொழும்பு கோட்டை மற்றும் அதன் அருகிலுள்ள கொம்பனித்தெரு பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை விற்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு உள்ளூர் நிறுவனத்தின் மூலம் சீனா தனது கைங்காரியத்தை செவ்வனே நிறைவேற்றி வருகிறது.

இதேவேளை, இந்தியா மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இலங்கையைக் கோரிவருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கைகள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இலங்கை கருதி உதாசீனம் செய்துகொண்டிருக்கிறது. வர்த்தக ரீதியில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் உறவுகளைப் பேண விழைந்தாலும், நாட்டில் நிலவும் இனவாதப் பிரச்சினையில் மிகவும் ஒரு மெத்தனமான போக்கையே கடைபிடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக, இலங்கையுடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளில் சற்று மென்மையான போக்கை அவதானிக்கக்கூடியதாய் இருக்கிறது. ஆயினும், சீனாவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியத் தலைமைகள் தங்கள் கொள்கைகளை மீள்பரிசீலனை செய்து மீண்டும் வலுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழ் அரசியல் தீர்வு குறித்து ஒரு அசமந்தப் போக்கையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் அவர் அடிக்கடி இனப்பிரச்சினை என்று ‘அப்படி எதுவும் கிடையாது’ என்று கருதுகிறார். தமிழர்கள் பற்றிய பிரச்சினை இந்தியாவின் அரசியல் நோக்கங்களுக்கு  முக்கியத்துவம் வாய்ந்தது என்று  நன்றாக அறிந்துள்ள சீனா, தனது அரசியல் போட்டிக்காக இலங்கையை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துகிறது.

சீனா இலங்கை மீது கொண்டுள்ள ஆதிக்கம் இந்தியாவுக்கு நிச்சயம் வெறுப்பை ஏற்படுத்தும் என்று நன்கு அறிந்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் போன்ற நாடுகளையிட்டு சீனா கவலை கொள்வதாகத் தெரியவில்லை. ஏனெனில் சீனா அந்த நாடுகளை எப்படியோ ஓரு விதத்தில் தனது வலையில் வீழ்த்தியிருப்பது புலனாகிறது.

சீனாவின் அளப்பரிய முதலீடுகள் எதுவும் இன்னும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இலங்கை அரசாங்கமானது சீனாவைப் பாதுகாக்கும் நோக்கில், அந்நாடு தன்னைக் கடன் பொறிக்குள் தள்ளிவிட்டது என்பதை சூட்சுமமாக மறுத்துவரும் அதே வேளை, வங்காளதேசத்திடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்காகக் கையேந்துகிறது. கடந்த அரசாங்கங்களை போலல்லாமல், தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் வேறு எந்த நாட்டுடனும் இல்லாதவாறு சீனாவுடனான தனது இருதரப்பு உறவுகளை மிகவும் நேர்த்தியாகப் பேணிவருகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்று, இஸ்லாமிய நாடுகளும் இலங்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ஆனால் சீனாவோ அந்நாடு பற்றியதான எதிர்ப்பு எவ்வளவு தூரம் வளர்கிறதோ அந்த அளவுக்கு, அதாவது இனிவரும் 100 ஆண்டுகளுக்கு இலங்கையில் தனது இருப்பைப் பலப்படுத்திக்கொள்ள எல்லாவித ஆயத்தங்களையும் செய்து வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. (மொழிப்பெயர்ப்பு கட்டுரை)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X