2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீனாவும் அருணாச்சல பிரதேச ஆக்கிரமிப்பும்

Editorial   / 2023 ஏப்ரல் 07 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வட கிழக்கே உள்ள கடைசி மாநிலம் தான் அருணாச்சல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கிறது. இந்த புவியியல் ரீதியலான சூழலை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா,  அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.  அருணாச்சல பிரதேசத்தை ‘தென் திபெத்’ என்று அழைத்து வருவதோடு, அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை  தனது பகுதி என்றும் உரிமை கொண்டாடி வருகிறது.

அருணாச்சல பிரதேசம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே  அடிக்கடி எல்லை தகராறு இருந்து வருகிறது.  அழகான மலைகளையும், ஆறுகளையும், அடாந்த காடுகளையும் கொண்ட இந்த மாநிலம் அண்மைக் காலமாக முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. அருணாச்சல  எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

திபெத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தின் ஜங்னன் (Zangnan) என்ற பகுதியை சீனா சிஜாங் எனக் குறிப்பிடுகிறது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த  சங்னன் பகுதியிலுள்ள  11 இடங்களின் பெயர்களை அண்மையில் சீன உள்துறை அமைச்சகம் மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகருக்கு மிக அருகில் உள்ள ஒரு நகரின் பெயரும் அடங்கியிருக்கிறது. இந்தப் பெயர் மாற்ற அறிவிப்பை ஏப்ரல் 2 ஆம் திகதி சீன உள்துறை அமைச்சகம் உத்தியோகபூா்வமாக வெளியிட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்திலுள்ள 5 மலைத் தொடா்கள், 2 நிலப் பகுதிகள், 2 ஆறுகள் உட்பட 11 இடங்களின் பெயர்களை சீனா இவ்வாறு பெயர் மாற்றி அறிவித்துள்ளது. சீனாவால் பெயா் மாற்றப்பட்ட இந்த 11 பகுதிகளும் இந்திய நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளாகும். இருந்த போதிலும், அவற்றை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின் பெயர்களை மாற்றுவது போல் சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது.  இத்தகைய பெயா் மாற்றும் நடவடிக்கையை சீனா இதற்கு முன்பும் செய்தள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் ஆறு இடங்களின் பெயர்களை சீனா இவ்வாறு மாற்றியது, அதேபோல  2021 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்திலுள்ள 15 ஊர்களின் பெயர்களையும் சீனா மாற்றியது. தற்போது மூன்றாவது தடவையாக கடந்த இரண்டாம் திகதி 11 இடங்களின் பெயா்களை மாற்றியுள்ளதாக உத்தியோகபூா்வமாக அறிவித்தள்ளது. தொடர்ந்து இதுபோன்ற  இறையாண்மைய மீறும்  செயல்களில் ஈடுபட்டு வரும் சீனாவிற்கு இந்தியா அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைகள்  குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய  வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது இது முதல்முறை அல்ல. சீனாவின் இந்த முயற்சியை முழுமையாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கமாக; பிரிக்க முடியாத பகுதியாகவே இருந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பெயர்களை மாற்றுவதால் அதன் உண்மை நிலை மாறிவிடாது" என தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவின்  தலைமையில் நடைபெற்றுவரும்  ஜி-20 மாநாடு நிகழ்வுகள் கூட அருணாச்சலப் பிரதேசத்தில் தான் நடைபெற்றன. இந்த மாநாட்டை சீனா புறக்கணித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (Shanghai Cooperation Organisation · SCO)  எதிா்வரும் ஜூலை மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் கலந்து கொள்ள உள்ளதாகவும் அறிய வருகிறது. இது குறித்த ஏற்பாடுகளை கவனிப்பதற்காக இன்னும் ஒரிரு வாரங்களில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தான் சீனா இத்தகைய பெயா் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தருணம் பாா்த்து இடம்பெற்றுள்ள  சீனாவின் இந்த  செயற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, தவாங், அஞ்சாவ், மெச்சுகா போன்ற பகுதிகளில் இந்தியா கூடுதல் படைகளையும் கனரக ஆயுதங்களையும் நிலைநிறுத்தி வந்தது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என இந்தியா உறுதியாக கூறி வருகிறது. 

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா- சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.   இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப் பிரதேசம் என்றும், அந்த பிரதேசத்தில் சீனா தொடா்ந்து ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிப்பதாகவும் அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இமயமலை முதல் தென் சீனக்கடல் வரை தனக்கு சொந்தம் இல்லாத இடங்களை சொந்தம் கொண்டாடி வருவதாக இந்தியா  சீனாவை குற்றம் சாட்டி வருகிறது. ஆசியாவில் மிகப்பெரிய ஒரு சக்தியாக மாறி விட வேண்டும் என்ற நப்பாசையில் சீனா தனது அரசியல் செயற்பாட்டை நகா்த்தி வருகிறது.  உலகின் மிகப்பொிய  சக்தியாக எழ வேண்டும் என்ற மோகத்தில்  நிலப்பிரதேசங்களையும், கடற்பிராந்தியங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவும், சீனாவும் மிக நீளமான எல்லைப் பகுதி ஒன்றை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளன. சுமார் 3440 கிமீ தூரத்திற்கு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான அந்த எல்லைப்பகுதிகள் நீண்டு செல்கின்றன.

உலகின் மிகப்பெரும் இரு ராணுவப்படைகள், இந்த எல்லை பிரச்னைகளின் காரணமாக, பலமுறை நேருக்கு நேர் மோதல்களில் ஈடுபட்டுள்ளன.  கடைசியாக கடந்த 2022 டிசம்பர் மாதத்தில், தவாங் நகரத்தில் இந்திய, சீன இராணுவங்கள் மோதிக் கொண்டன.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஓர் அங்கம் எனக் கூறி வருகிறது.

சீனாவின் கூற்றை தொடர்ந்து எதிர்த்து வரும் இந்திய அரசு, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் அருணாச்சல பிரதேசம் என்று திட்டவட்டமாக கூறி வருகிறது. இதற்கிடையே சீன சிவில் விவகாரத்துறை அமைச்சகம், மாற்றப்பட்ட இந்தப் பெயர்கள் அனைத்தும் சீனாவின் மாநில கவுன்சில் மற்றும் அமைச்சரவை வழங்கிய புதிய பெயர்கள் மீதான விதிமுறைகளுக்கு இணங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அடிக்கடி  ஏற்பட்டு வரும் இந்த எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கிடையே கொந்தளிப்பையும், சர்வதேச சமூகத்திற்கிடையே கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதி பல தசாப்தங்களாகவே சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது.  இரு தரப்பினரும் பிராந்தியத்தின் மீது இறையாண்மையைக் கோருகின்றனர். மே 2020 இல் தொடங்கிய மோதலின் முறுகல் நிலை பல மாதங்கள் தொடர்ந்து வந்தது. இதன் விளைவாக இரு தரப்பிலும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.

சீனாவால் தென் திபெத் என்றும் அழைக்கப்படும் இந்த அருணாச்சலப் பிரதேசம்  சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பெரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இது இயற்கை கனிம வளங்கள் நிறந்த பகுதிகளாக கருதப்படுகிறது.  இதன் காரணமாகவே சீனா அருணாச்சல பிரதேசத்தின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்று வருகிறது. மேலும் இப்பிரதேசம் பல பழங்குடி சமூகங்களின் தாயகமாகவும் உள்ளது. 

கடந்த 2020ம் வருடம் ஜுன் மாதம் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் மற்றும் எண்ணிக்கை குறிப்பிடப்படாத  சீன வீரர்களின் மரணங்கள் இடம்பெற்றன. இதன்போது இந்திய, சீன எல்லையின் நெருக்கடி மிகவும் உச்சத்தை அடைந்தது. சுமாா் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு எல்லைப் பிரச்சினையில் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவமாக இது கருதப்படுகிறது.

இந்த சம்பவம் இந்தியாவில் சீனாவுக்கு எதிராக பரவலான சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய எதிா்க் கட்சிகளை சோ்ந்த சிலா்,  சீன பொருட்களை புறக்கணிக்கவும், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவை மறுபரிசீலனை செய்யவும் அழைப்பு விடுத்தனர்.

அருணாச்சல பிரதேசத்தில் புதிதாக சீனா ஏற்படுத்தி வரும் எல்லை தகராறுகள், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் எல்லைப் பிரச்சினையாக மட்டும் பாா்க்காமல், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும்,  உலகளாவிய பாதுகாப்பிற்கும் பரந்த தாக்கங்களைக் கொண்டு வரும் நிகழ்வாக பாா்க்கப்பட வேண்டும்.

அருணாச்சலப் பிரதேச எல்லைப் பிரச்சனையை மற்றும் பிராந்திய மோதல்களைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது.  என்ற போதிலும், பிராந்தியத்தில் சீனாவினால் தூபமிடப்படும் எல்லை நெருக்கடிகள் சமாதானத்தை நோக்கிய நகா்வுக்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .