2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

Editorial   / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் 20  சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையின் சுதந்திரம் மக்களுக்கானதாகவன்றி அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்ததாகவே இருந்தது என்பதை சுதந்திரத்திற்கு பின்னதான முதற் தசாப்தகாலம் தெளிவாகக் காட்டி நின்றது. ஆனால் சுதந்திர இலங்கையின் இனவாதப் போக்கை வெளிப்படையாக காட்டுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை.

பிரித்தானியக் கொலனி ஆட்சியின் கீழ் தோட்டத் துறையில் மட்டுமன்றிப் புகையிரதப் பாதை நிர்மாணம், வீதி அபிவிருத்தி, கொழும்புத் துறைமுகம் உட்பட்ட பலவேறு துறைகளில் கடுமையான சரீர உழைப்புத் தேவைப்பட்டது. அதை உள்ளுரிற் பெறுவதில் உள்ள சிரமங் காரணமாகத் தென்னிந்தியாவிலிருந்து அன்றைய சென்னை மாநிலத்தின் தென்பகுதியாய் இருந்த வறுமைப்பட்ட பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்டோரின் வாழ்வு மிகவும் கொடுமையாக இருந்தது. இங்கு கொண்டுவரப்பட்ட கூலி விவசாயிகளும் நிலமற்ற விவசாயிகளும் மிக மோசமான வாழ்நிலையை எதிர்நோக்கினார்கள். இதனால் பலர் தமது ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முனைந்தனர்.

இதனால் தென்னிந்தியாவில் இருந்து ஆட்களைக் கொணர்ந்து தக்கவைப்பது கடினமானதாக இருந்தது. இதனால் கங்காணி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல வகைகளில் ஆபிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட கறுப்பின மக்களின் வாழ்க்கைக்கு ஒத்ததாக இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம் கறுப்பின மக்களை அடிமைச் சந்தையில் விற்க முடிந்தது.

இங்கு அதற்கான தேவை இருக்கவில்லை. ஏனெனில் அதையொத்த அடிமை முறையை நடைமுறையில் இருந்த கங்காணி முறை பார்த்துக் கொண்டது.

பெரும்பாலான தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மலைக் காடுகளிற் புதிதாக  உருவாக்கப்பட்ட தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். சிங்களக் கிராமங்களை அண்டிய தோட்டங்களில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளருக்கு அச்சிங்கள மக்களோடு உறவுகளைப் பேணும் வாய்ப்பு இருக்கவில்லை. தோட்டத் தொழிலாளருக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் இதற்கு அடிப்படைக் காரணியாக இருந்தது. இதனால் தமிழ்த் தோட்டத் தொழிலாளருக்கு சிங்கள மக்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க நிலமற்ற சிங்கள விவசாயிகளிடம் தமது நிலங்கள் இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் இதை அவர்கள் பிரித்தானியக் கொலனியாதிக்கத்தின் துணையுடன் சாத்தியமாக்கி விட்டார்கள் என்ற எண்ணம் மேலோங்கியது. இது தோட்டத் தொழிலாளருக்கு எதிரான இனப்பகையாக காலப்போக்கில் வளர்ந்தது.

தேயிலைத் தோட்டங்களின் நிலைமைகளுக்கு மாறாக, இறப்பர் தோட்டங்களில் சிங்களத் தொழிலாளரும் மலையகத் தமிழ்த் தொழிலாளரும் இணைந்து வேலை செய்கிற வாய்ப்புக்கள் இருந்தன. இதனால் அவர்களிடையே ஆரோக்கியமான உரையாடலும் உறவும் இருந்தது. இதனால் இவ்விரு சமூகங்களும் இனப்பகை இல்லாமல் வெகுகாலம் வாழ்ந்தன.

மலையகத் தமிழர் இலங்கைக்கு வந்து நூறாண்டுகள் கடந்த நிலையில் இரண்டு விதமான போக்குகள் விருத்தி பெற்றன. முதலாவது, மலையகத் தமிழரை இலக்கு வைத்த இனவாதம் வெளிப்படையாக அரசியலிலும் பொதுவெளிகளிலும் இயங்கத் தொடங்கியது. இரண்டாவது, மலையகத் தமிழரது அடிப்படை உரிமைகளே மறுக்கப்பட்டு மனித உரிமைகளே அற்ற ஒரு சமூகமாக நூறாண்டுகளுக்கு மேலாக அவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், இதை நன்கறிந்த சிறுபான்மையின அரசியல் தலைவர்கள் அவர்களுக்காக ஏதும் பேசியதில்லை.

குறிப்பாக அவர்கள் மீதான இனவாத அரசியல் முன்னெடுக்கப்பட்ட போது அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இதில் விலக்கானவராக பொன்னம்பலம் அருணாசலம் இருந்தார். அவரது குரலும் ஆதரவும் மலையகத் தமிழருக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகள் உருவாக முக்கிய காரணியாக இருந்தது என்பது முக்கியமானது. 

மலையகத் தமிழரிடையே தாம் இந்த மண்ணுக்கு உரியோர் என்ற உணர்வும் ஏற்பட்டு அவர்களும் இலங்கையர்களாக உணர நீண்டகாலம் எடுத்தது. இந்த உணர்வே அவர்கள் இலங்கையில் உள்ள ஏனையோருக்கு சமமானவர்கள் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். இந்தத் தாமதத்திற்கு மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட அரசியல் தலைவர்கள் காந்தியும் நேருவுமே தமது தலைவர்கள் என்றும் இந்தியாவே தாய்நாடு என்றும் தொடர்ந்து சொல்லி வந்தனர். இந்த எண்ணம் சாதாரண மலையகத் தமிழரிடம் நம்பும்படி கொண்டு சேர்க்கப்பட்டது. பலருக்கு எப்போதோ தொடர்புவிட்டுப் போன இந்தியாவை தாய்நாடாகக் கொள்வதில் சிக்கல்கள் இருந்தபோதும் தலைவர்களின் சொற்களை நம்பினர். குறித்த மேட்டுக்குடித் தலைமைகளுக்கு இந்த ‘இந்திய’ அடையாளம் தேவையானதாக இருந்தது. ஆனால் அந்த அடையாளமே அவர்களுக்கு  ‘அந்நியர்’ என்ற பெயரைப் பெற்றுக் கொடுக்கவும் அதன்வழி அவர்களுக்கு எதிரான இனவாதம் கட்டவிழ்க்கப்படவும் காரணமானது.

இந்தப் பின்புலத்தில் சுதந்திரமடைந்த இலங்கையில், பிரதமர் டி.எஸ். சேனநாயக்க எடுத்த முக்கியமான ஒரு நடவடிக்கை 1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம். அதன் கீழ், இந்தியத் தமிழர் எனவும் இந்திய முஸ்லிம்கள் எனவும் அன்று அறியப்பட்ட இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையிலேயே மலையகத் தமிழருக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வந்த டி. எஸ். சேனாநாயக்கவின் இச்செயல் ஆச்சரியமானதல்ல. ஆனால் இவ்வாறு ஒன்று நடக்கும் என்று சிறுபான்மையினத் தலைவர்களால் உணர இயலாதபடி அவர்களது மேட்டுக்குடி மனோபாவம் தடுத்தது. 

 

பிரசாவுரிமை பறிக்கப்பட்டதன் நோக்கங்கள் இரண்டு. ஒன்று டி.எஸ். சேனநாயக்காவின் சிங்களப் பேரினவாதம் தொடர்பானது. மலையகத் தமிழருக்கும் சிங்கள தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் வலுவான அரசியல் உறவுகள் இருக்கவில்லை. இதனால் அரசியலில் அவர்களை ஓரங்கட்டுவது மேட்டுக்குடி அரசியல் தலைமைகளின் இணைந்த முடிவாக இருந்தது. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகளின் மனோநிலையில் மலையகத் தமிழர்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு சமூகமாகக் கருதினார்கள். சொந்த சமூகத்தில் சாதிய அடிப்படையில் தம்மக்களை மோசமாக ஒடுக்கும் ஒரு சமூகம், மலையக மக்கள் குறித்து அக்கறையற்று இருந்தது வியப்புக்குரியதல்ல. அதற்கும் மேலாக தங்களது வாக்கு அரசியலைத் தீர்மானிக்க ஒரு சமூகம் பற்றிய கவனமோ அக்கறையோ பாராளுமன்றத்தை அலங்கரித்த ஈழத்தமிழ்ச் சிறுபான்மைப் பிரதிநிதிகளுக்கு இருக்கவில்லை.

இச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது இந்த உரிமைப் பறிப்பு எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தொழிற்படக்கூடும் என்று எச்சரித்தோரும் உண்டு. அவர்கள் சமூக நீதியின் அடிப்படையில் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். 

டி.எஸ். சேனநாயக்கவின் 2ஆவது நோக்கம் இடதுசாரி இயக்கத்தின் எழுச்சி தொடர்பானது. மலையகத் தமிழரிடையே தொழிற்சங்கங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. இதனால் இடதுசாரிகளுக்குக் கணிசமான ஆதரவு இருந்தது. அதேவேளை அரசியல் ரீதியாக இன்னமும் வளர்ச்சி பெறாத பின்தங்கிய ஒரு சமூகமாக இருந்த மலையக தமிழரின் குடியுரிமையைப் பறிப்பதன் மூலம் அவர்கள் ஒரு போராட்டச் சக்தியாக வளராது தடுக்க வேண்டும் என்று சேனாநாயக்க விரும்பினார். குறிப்பாக வலிமையான தொழிலாளர் குழுவாக இருக்கின்ற மலையகத் தமிழரை அரசியல் ரீதியாக அழிப்பதும் அதனூடு இடதுசாரி இயக்கம் செல்வாக்குப் பெறாமல் தடுப்பதுமாகும்.

இந்தச் சட்டம் இலங்கையின் சிங்களப் பேரினவாதத்தின் தன்மையையும் அதனுடன் இணைந்த மேட்டுக்குடி வர்க்க நலன்களினதும் ஒருங்கிணைந்த ஒரு செயற்பாடாக இருந்தது. இது வாக்கெடுப்புக்கு வந்தபோது இடதுசாரிகள் அனைவரும் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் பலர் எதிர்க்கவில்லை. அது குறித்துத் தனியே நோக்கலாம்.

இங்கு நோக்க வேண்டியது மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட பிறகு, அதை மீள வென்றெடுப்பதற்கான வெகுசன மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்க முடியவில்லை. மலையக மக்களை ஒன்றுதிரட்டிப் போராடும் நோக்கம் அவர்களின் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துக் கொண்ட இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற பேரில் உருவாகிப், பின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்று தன்னை அழைத்துக் கொண்ட அமைப்பிடம் இருக்கவில்லை.

மலையக மக்களுக்கு குடியுரிமையைப் பெற்றுக் கொடுக்க சிங்கள இடதுசாரிகள் மத்தியில் ஆதரவு இருந்தது. இலங்கையின் வடக்கில் இது குறித்த விவாதங்களோ அரசியல் கருத்தரங்குகளோ நடைபெறவில்லை. ‘நாங்கள் - அவர்கள்’ என்ற வேறுபாடு யாழ்ப்பாண சமூகத்தில் வேரூன்றி இருந்தது. இது ஈழத்தமிழ் அரசியலின் முக்கியமானதொரு புள்ளி. ஒடுக்குமுறையும் உரிமை மறுப்பும் தமக்கு நிகழும் போது எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் அதேவேளை மற்றவர்களுக்கு நிகழும் போது மௌனம் காப்பதும். இந்த மௌனம் எவ்வளவு ஆபத்தானது என்பதைத் ஈழத் தமிழர்கள் விரைவிலேயே உணர்ந்து கொண்டார்கள்.

2023.09.29


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X