2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சுமந்திரனின் சட்டமூலமும் அரசாங்கத்தின் தேர்தல் பீதியும்

Johnsan Bastiampillai   / 2023 ஜூன் 16 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம், தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது அடிப்படையில், அரசியலமைப்புக்கு முரணானதல்ல என உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. 

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அரசாங்கங்கள் எ​தையும் செய்வதில்லை. எனவே, மாகாண சபையையாவது பெற்றுக்கொள்வோம் என்று நினைத்து, சுமந்திரன் இந்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்திருக்கிறார் போலும்! 

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்துடனேயே 1980களில் இந்தியாவும் பாரதூரமான முறையில் தலையிட்டு, அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தின் கீழ், இலங்கையில் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தியது. 

ஆனால், அதிகாரப் பரவலாக்கல் நாட்டில் எந்தப் பகுதிக்குத் தேவையோ, அந்தப் பகுதியான வடக்கு, கிழக்கில் அம் மாகாண சபை முறை ஒருபோதும் முறையாக அமலாகவில்லை. வடக்கு, கிழக்கில் இணைந்த மாகாண சபை, சுமார் இரண்டு வருடங்கள் இயங்கியது. அதன் பின்னர், கிழக்கில் மாகாண சபை 2008ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இயங்கியது. வடமாகாணத்தில் மாகாண சபை 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மட்டுமே இயங்கியது.

அதேவேளை, மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்கு தீர்வாகும் என்று அதன் ஆரம்ப காலத்தில் நம்பிய தமிழ் அரசியல் கட்சிகள், இப்போது அது போதுமான தீர்வல்ல என்றே கருதுகின்றன. அவ்வாறு இருந்தும் அதையாவது இப்போதைக்கு பெற்றுக் கொள்வதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாக இருப்பதாகவே தெரிகிறது. எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம், அதையாவது தமிழ் மக்களுக்கு வழங்குமா என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. 

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத சட்டச் சிக்கல், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையால், 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. புதிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய தேர்தலை நடத்தவும் முடியாத நிலை காணப்படுகிறது. 

2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.க 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் மாகாண சபைகளுக்கு புதிதாக தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இன்று போலவே தேர்தலுக்கு அஞ்சிய ஐ.தே.க தலைமை, மாகாண சபைத் தேர்தலை கால வரையறையின்றி ஒத்திப் போடும் வகையில் நடவடிக்கை எடுத்தது. அந்நடவடிக்கை வெற்றியளித்தது. 

முதலாவதாக, 2017ஆம் ஆண்டு ஐ.தே.க, மாகாண சபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில், அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் என்றதொரு சட்டமூலத்தை சமர்ப்பித்தது. அச்சட்டமூலத்தால் மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்பதால் உயர்நீதிமன்றம் அதில் பல வாசகங்கள் திருத்தப்பட வேண்டும் என்று கூறியது. 

அப்போது, ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் அச்சட்டமூலத்தை முழுவதுமாக கைவிட்டு, மாகாண சபைகளின் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சட்டமூலமொன்றை சமர்ப்பித்தது. அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, அதற்கான திருத்தம் என்ற போர்வையில், அதனோடு எவ்வித சம்பந்தமும் இல்லாத கலப்பு தேர்தல் முறைக்கான சில வாசகங்களை முன்வைத்தது. 

இந்தக் கலப்பு தேர்தல் முறை தொடர்பான வாசகங்களை, தனியானதொரு சட்டமூலமாக சமர்ப்பித்திருக்கலாம். ஆனால், அப்போதும் அதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று நினைத்தே, ஐ.தே.க அரசாங்கம் அவற்றை மற்றொரு சட்டமூலத்தின் திருத்தமாக முன்வைத்தது. அதன் நோக்கம், தேர்தலை ஒத்திவைப்பது என்பது அதன் மூலம் தெரிகிறது. 

கலப்பு தேர்தல் முறையின் கீழ், மாகாண சபைகளுக்குரிய பிரதேசங்களில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும். அதற்காக எல்லை நிரணயம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த எல்லை நிர்ணய அறிக்கையை ஐ.தே.கவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாராளுமன்றம் நிராகரித்தது. அதன்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான குழு, அந்த அறிக்கையை மீளாய்வு செய்து, புதிய அறிக்கையொன்றை இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், ரணில் அதைச் செய்யவில்லை. அதன் மூலம், ஆறு ஆண்டுகள் கழிந்தும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதிருக்கிறது. 

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் கீழ், தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய கிடைத்திருந்த குறைந்த பட்ச பொறிமுறையும் அதன் மூலம் முடக்கப்பட்டது. 

எனவே, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கலப்புத் தேர்தல் முறையை இருத்துச் செய்து, பழைய விகிதாசார தேர்தல் முறையில் நடத்துவதற்காகவே சுமந்திரன், தமது புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்து இருக்கிறார். அவர் இதை 2019ஆம் ஆண்டிலேயே முதலில் சமர்ப்பித்தார். எனினும், இதன் மூலம் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும். 

இந்த விடயத்தில், இரண்டு பெரும் தடைகள் இருக்கின்றன. முதலாவது, எந்தவொரு தேர்தலையும் நடத்த அரசாங்கம் காட்டும் தயக்கமும் அச்சமும் ஆகும். இரண்டாவது, இனப்பிரச்சினை விடயத்தில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடுகளில் உறுதியற்ற தன்மையாகும். 

சுமந்திரனின் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதையும் ஜனாதிபதிக்கோ அல்லது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ  தேவையானால் தடுக்கலாம். அவர்களிடமே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நடந்த கதியைப் பார்க்கும் போது, சுமந்திரனின் சட்டமூலத்தையும் அவர்கள் அது போன்றதொரு பொறியில் சிக்கவைக்கலாம்.

சட்டப்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். அதற்காக தேர்தல் ஆணைக்குழு தயாராகி வரும் நிலையில், உள்ளூராடசி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000 இலிருந்து 4,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கூறினார். அவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திப்போடவே முயல்கிறார் என்று எதிர்க்கட்சிகள் அப்போதே கூறின. 

அதன் பின்னர், தேர்தல் சட்டங்களை திருத்துவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கடந்த டிசெம்பர் மாதம் கூறினார். அது தொடர்பாக, தாம் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். 

ஆனால், 2021ஆம் ஆண்டு இந்த விடயத்துக்காகவே ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு, அதன் அறிக்கையை தினேஷ் குணவர்தனவே கடந்த வருடம் ஜூன் மாதம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்ததை விஜயதாஸ மறந்துவிட்டார் போலும்! விஜயதாஸ என்ன, பிரதமர் தினேஷ் குணவர்தனவே மறந்துவிட்டார் போலும்!

இந்த நிலையில், முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை தடைசெய்யுமாறு கோரி, இவ்வருடம் ஜனவரி மாதம் இரண்டாடம் திகதி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். அதுவும் அரசாங்கத்தின் தூண்டுதலால் தாக்கல் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.

அதன் பின்னர், ஜனாதிபதியின் கீழான நிதி அமைச்சு, தேர்தலுக்கு நிதி வழங்குவதை மறுத்துவிட்டது. இப்போது இந்த விடயம், நீதிமன்றத்தின் முடிவிலேயே தங்கியிருக்கிறது. தேர்தல்களை எதிர்நோக்க, ஜனாதிபதியின் தலைமையிலான ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் அச்சப்படுவதே இத்தனை தடைகளுக்கும் காரணமாகும். அவ்வாறாயின், சுமந்திரனின் சட்டமூலம் நிறைவேறினாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் இடமளிக்குமா? 

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், ஜனாதிபதியின் ஊசலாடும் நிலைப்பாடு மற்றைய விடயமாகும். 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினையை தீர்ப்பதாக அவர் கடந்த நவம்பர் மாதம் வரவு - செலவு திட்ட விவாதத்தின் போது கூறினார். அதன்படி, டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி ‘சர்வகட்சி’ கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 

அதையடுத்து, ஜனவரி 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவின் போது உரையாற்றிய ஜனாதிபதி, “இரண்டு வருடங்களில் அரசியலமைப்பின்  13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார். 

சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினையை தீர்ப்பது போன்ற நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குவதைப் பார்க்கிலும், அது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால், சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினையை தீர்ப்பதாக தாம் அளித்த வாக்குறுதியை, அவர் மறந்துவிட்டார் என்பதும் அதன் மூலம் தெரிகிறது. 

பின்னர், அவர் இரண்டு வருடங்களில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதென்ற வாக்குறுதியையும் மறந்துவிட்டார் போலும்! சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் இவ்வருட மே தினக் கூட்டத்தில் ‘சூம்’ ஊடாக உரையாற்றிய அவர், இவ்வருட இறுதியில் இனப்பிரச்சினையை தீர்க்க உடன்பாடுகளை செய்துகொள்வதாக கூறினார். 

அத்தோடு அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, தமிழ்க் கட்சி தலைவர்களை அழைத்தார். இம்மாதமும் பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றன; இவ்வாறே காலம் கடந்து போகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X