2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சூடு கண்ட பூனை

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே. அஷோக்பரன்

 

 

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் அவசரகால நிலை, 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வழங்கலை உறுதிசெய்யும் காரணத்தின் நிமித்தமாக, அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், அவசரகால நிலை பிறப்பிப்பு என்பது, ஜனாதிபதியின் கையில் கிட்டத்தட்ட எல்லாம் வல்ல அதிகாரத்தைக் கையளிப்பது போன்றதாகும். இதன் பாதகங்கள் பற்றி, ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் நிறையவே, பொதுவௌியில் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த இடத்தில், இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது, இந்த அவசர கால நிலைப் பிரகடனம் அவசியம் தானா? 

இரண்டாவது, உணவுத் தட்டுப்பாடு ஒன்று ஏற்படும் என்ற அச்சம், இலங்கை மக்கள் மத்தியில் எவ்வாறு பரவ ஆரம்பித்தது?

கொவிட்-19 பெருந்தொற்று, இலங்கையைப் பீடித்து ஒன்றரை ஆண்டுகளைத் தாண்டியும், ‘கொவிட்-19’ என்ற பெருஞ்சவாலை எதிர்கொள்வதற்காக எந்தவொரு பொழுதிலும், அவசரகாலநிலை பிறப்பிக்கப்படவில்லை. அது, அவசியமில்லை என்று, அரசாங்கம் சுட்டிக்காட்டி இருந்தது.  

இதற்கான காரணத்தை, தனது கட்டுரையொன்றில் விவரிக்கும் கலாநிதி விக்கிரமரட்ண, ‘கொவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்தில், பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் வைப்பதில் அரசாங்கம் குறியாக இருந்தது. ஏனெனில், அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் அதற்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகிறது. அன்றைய பாராளுமன்றத்தில், இந்த அரசாங்கத்துக்குப்  பெரும்பான்மை இருக்கவில்லை. அத்தோடு, தேர்தல் நடத்துவதில் அரசாங்கம் குறியாக இருந்தது’ என்று சுட்டிக்காட்டியிருந்தார். 

ஆகவே, கலாநிதி விக்கிரமரட்ணவின் கருத்தின்படி, ஒருவேளை அன்று, பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்திருக்குமானால், கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள, அவசரகாலநிலை தேவையில்லை என்று சொன்ன இந்த அரசாங்கத்துக்கு உணவு வழங்கலை உறுதிசெய்ய, அவசரகாலநிலை தேவையா என்ற கேள்வி இங்கு எழுவது தவிர்க்க முடியாதது. 

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதில், மேற்சொன்ன இரண்டாவது கேள்வி முக்கியம் பெறுகிறது. உணவுத்தட்டுப்பாடு ஒன்று ஏற்படும் என்ற அச்ச நிலை, இலங்கைக்கு ஏன் வந்தது?

கொவிட்-19 பெருந்தொற்று உலகளாவிய பொருட்கள், சேவைகள் வழங்கல் விநியோகத்தைக் கணிசமாகப் பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இதைத் தாண்டியும் சிங்கப்பூர் போன்ற உணவுக்காக இறக்குமதியை மட்டுமே நம்பிய நாடுகள், சுமூகமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன என்பதும், இங்கு கவனிக்கப்பட வேண்டியது. 

அப்படியானால், உள்ளூரில் உணவு உற்பத்தி நடக்கும் இலங்கை போன்ற நாட்டில், உணவுத் தட்டுப்பாட்டு அச்ச நிலை வரக் காரணமென்ன?

 உணவு உற்பத்தியில், இலங்கை தன்னிறைவு பெற்ற நாடல்ல. ஆகவே, உணவுக்காக இறக்குமதியிலும் கணிசமாக இலங்கை தங்கியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறோம் என்ற பெயரிலும், டொலர் கையிருப்பை தக்கவைக்கவும் அரசாங்கம் இறக்குமதித் தடைகளை அறிமுகப்படுத்தியது. இதில், பொதுமக்களின் கடும் விசனத்துக்கு உள்ளான தடையென்றால், மஞ்சள் இறக்குமதிக்கான தடையைக் குறிப்பிடலாம். 

தண்ணீரில் கரைத்து வீட்டுக்குத் தௌிக்குமளவிற்கு மலிவாக இருந்த மஞ்சள், சில நாட்களில் ஒரு கிலோ 7000-வைத் தாண்டிய ஒரு விலைமதிப்பு மிக்க பொருளாக இந்த இறக்குமதித் தடையின் பின்னர் மாறிவிட்டது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததும், விலை குறையும் என்று அன்று சொன்ன அரசியல்வாதிகளின் கருத்து, அவர்களது வாக்குறுதியைப் போலவே இன்று பல மாதங்கள் கடந்தும் பொய்யாகவே இருக்கிறது. 

இறக்குமதியைத் தடைசெய்தால், உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கும் என்ற பத்தாம் ஆண்டு மாணவனின் பொருளியல் அறிவளவு ஞானத்தில் சிந்தித்து இறக்குமதியைத் தடைசெய்துவிட்டு, அதன் பிறகு உள்நாட்டு உணவு உற்பத்தியின் ஆணிவேரான இரசாயன உர இறக்குமதியையும் இந்த அரசாங்கம் தடை செய்தது. 

டொலர் கையிருப்பைப் பாதுகாத்தல் அதற்கான ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இப்போது, எப்படி உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது? பத்தாம் ஆண்டு மாணவனின் பொருளியல் அறிவளவான ஞானம், திக்கி விக்கி நிற்கிறது.

இறக்குமதியை அனுமதித்தால், டொலர் கையிருப்பு குறையும். டொலர் கையிருப்பைப் பாதுகாக்க, இறக்குமதியைத் தடைசெய்தால், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். அப்படியானால் என்னதான் செய்வது?

 உலக நாடுகளில் இத்தகைய பொருளாதார, நிதி நெருக்கடிகள் எழும்போது, அவற்றுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும்தான் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பல மாதங்களுக்கு முன்பே நாடியிருக்க வேண்டும். 

அதனூடாகத் திட்டமிட்ட முறையில், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து, இலங்கையின் பொருளாதாரத்தை பெரும் வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பது முடியாத காரியமல்ல. 

ஆனால், வறட்டுப் பிடிவாதமும் ‘நான்’ என்ற அகங்காரமும் கொண்ட தலைமைகள், பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களைத் தவிர்த்து, தற்காலிக கடன்களை அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என்று வாங்கி, வெறுமனே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இப்படி, அடிப்படை பொருளியல் அறிவு இல்லாத, ஆனால் அதிகாரத் திமிரும் வறட்டுப் பிடிவாதமும் ஆணவமும் கொண்ட தலைமைகளின் அடுத்தடுத்த பிழையான பல முடிவுகள்தான், இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைக்குக் காரணம். 

இங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையும், உணவு வழங்கல் எனும் பொருளியல் பிரச்சினையைத் தீர்க்காது. ‘மடிவற்றிய மாட்டை, எவ்வளவு அடித்தாலும் சூடு போட்டாலும், அது பால் கறக்காது’ என்று, அதன் முட்டாள் உரிமையாளனுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது?

1970களிலும் இலங்கை இதே போன்றதொரு பொருளாதார நிலையை எதிர்கொண்டது. அப்போதும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவென ஆட்சியிலிருந்த கூட்டம் இறக்குமதியைத் தடை செய்து, மூடிய பொருளாதாரத்தை உருவாக்கியது. 

அன்றைய காலத்தில் வாழ்ந்த முன்னைய தலைமுறையிடம், ஐந்து மணிக்கு பாண் வாங்க வரிசையில் காத்துக்கிடந்த கதைகளையும் உடுப்புத் தைக்க துணிவாங்க மாதக்கணக்காக காத்திருந்த கதைகளையும் அந்த நரக அனுபவங்களையும் கேட்டுப்பாருங்கள்! 

ஏழு வருடங்கள் இலங்கையை இருண்ட காலத்துக்குள் தள்ளிய சிறிமாவினதும் ‘தோழர்’களினதும் கொடுமையான ஆட்சி அது. அன்றும் ‘கலாநிதிகள்’ பல பேர் அந்த ஆட்சியில் இருந்தார்கள். அரிசிச் சோறும் கறியும் உண்டு வாழ்ந்த இலங்கையர்களை, மரவள்ளிக்கிழங்கு தின்று உயிர்பிழைக்க வைத்த ‘அறிவுஜீீவிகள்’ அவர்கள். 

உலகநாடுகள் ஒன்றிலொன்று தங்கிய, பொருளாதார சூழல் உருவாகிவிட்ட பின்னர், நாம் இறக்குமதியை தடை செய்வோம்; அதனூடாக உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்போம் என்பதெல்லாம் காலாவதியாகிப்போன பொருளியல் சிந்தனைகள்.
 ஏற்றுமதி, இறக்குமதி சமநிலையைத் தக்கவைக்க, ஏற்றுமதிக்கான கேள்வியை அதிகரிப்பதும், ஏற்றுமதிக்கான வழங்கலை அதிகரிப்பதும் தான் மிகச் சிறந்த, நன்மை பயக்கின்ற உபாயமாகும். அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். 

உணவு உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா உற்பத்திகளுக்கும் வௌிநாடுகளை நம்பிய சிங்கப்பூர், மாலைதீவு போன்ற நாடுகளால், தமது இறக்குமதியைச் சமாளிக்கக் கூடியளவுக்கு டொலர் வரவைத் தக்கவைக்க முடியுமென்றால், இயற்கை வளங்களும் மனித வளமும் மிக்க இலங்கையால், அது முடியாது போனால், இலங்கையில் நிர்வாகத்தில் மிகப் பெரிய பிழை இருக்கிறது என்று தான் அர்த்தம்.

இலங்கையின் அரசியல் தலைவர்களும் இலங்கையின் மக்களும் காலாவதியாகிப்போன பொருளியல் சிந்தனைகளிலிருந்து வௌிவர வேண்டும். 1970களில், ஒரு முறை கண்ட சூடு, இலங்கை என்ற பூனைக்குப் போதுமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், வட-கொரியாவைப் போன்றதொரு நாடாகத் தான் நாம் ஆவோம். ஆனால், வடகொரியாவிடம் அணு ஆயுதமாவது இருக்கிறது. நாம் எதுவுமற்ற ‘கோமாளி’ நாடாகத்தான் ஆகிவிடுவோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .