Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவப்பு குறிப்புகள்
- அகிலன் கதிர்காமர்
சைட்டத்தை மூடும்படி வலியுறுத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள், அவற்றை வன்முறை மூலம் ஒடுக்கியமையும் பல வினாக்களை தோற்றுவித்துள்ளன.
சைட்டத்தை சட்டவலுவானதாக்க அரசாங்கம் வலியுறுத்துவது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி பற்றிய நடவடிக்கை மட்டுமா?
அல்லது, வரலாற்று ரீதியாக அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த பல அரசாங்க சேவைகளை தனியார் மயப்படுத்தும் ஒரு பெரும் திட்டம் பற்றியதா?
நீண்டகால நிகழ்ச்சி நிரல்
1977 இல் திறந்த பொருளாதாரச் சீர்திருத்தத்தின் ஆரம்பத்துடன் தனியார் மயமாக்கல் மெல்லமெல்ல, இரகசியமாகவும் மற்றும் திடீர்பெரும் பாய்ச்சல்கள் மூலமாகவும் 40 வருடகால நிகழ்ச்சிநிரலில் இருந்து வந்துள்ளது.
மறுபுறத்தில் கடந்த ஆறு அல்லது ஏழு தசாப்தங்களாக நிலவிய இலவசக்கல்வி, வைத்திய மற்றும் அத்தியாவசிய சேவைகள் என்ற பாரம்பரியத்தில் இவ்வாறான தனியார் மயப்படுத்தலுக்கு எதிரான சிந்தனை கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.
தற்போதைய நிலையில், தனியார் மயமாக்கலுக்கான முயற்சியல் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது கேள்வியாக உள்ளது. அவ்வாறாயின் முகம் கொடுக்க வேண்டிய ஆபத்து யாது? இதன் விளைவு மக்களுக்கு எவ்வாறானது ஆக இருக்கும்?
அரசுடமையான முயற்சியாண்மைகளை (SOE) பெரிய அளவில் தனியார் மயப்படுத்தும் அலை 1989 ஆம் ஆண்டு, ஆர். பிரேமதாச அரசாங்கத்தினால் தொடக்கப்பட்டது. பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் பெருந்தோட்டங்கள், தொலைதொடர்புத்துறை, பஸ் மற்றும் போக்குவரத்து போன்ற தெரிந்தெடுத்த அரசதுறைகளில் முக்கிய கவனம் செலுத்தினர். ஆரோக்கிய சேவைகள், கல்விச்சேவைகளில் உள்ள நிறுவனங்கள் இரகசியமாக தனியார் மயப்படுத்தப்பட்டன. இவை மூலம் அரசாங்கத்துக்கு நிதி கிடைத்தது. மேலும், அக்காலப்பகுதியில் நிதிசார் வளங்களை ஊக்குவித்து, கொழும்பு பங்குச் சந்தைக்கு மூலதனத்தை வழங்கவும் இத்தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்பட்டது. முதலீட்டுச் சபையின் கீழ் அமையப்பெற்ற தனியார் வைத்தியசாலைகள், மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் என்பவை மூலம் இது நடந்தது.
அரசாங்க தனியார் பங்குடமை உட்பட அரச முயற்சியாளர்களைத் தனியார் மயப்படுத்தல், சுகாதார சேவைகள் மற்றும் கல்வி என்பவற்றை வணிக மயமாக்கும் திட்டங்கள் ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்தன.
உண்மை என்னவெனில், சைட்டம் கூட, ராஜபக்ஷ அரசாங்கத்தினாலேயே தொடங்கப்பட்டது. அது மருத்துவ நோக்கம் கொண்ட சுற்றுலா, கல்விச் சுற்றுலா என்பவை தொடர்பான தொலைநோக்குப் பார்வைகளையும் கொண்டிருந்தது.
பலதசாப்த காலமாக, தனியார் மயப்படுத்தல் ஊடாகப் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் முயற்சிகளை வர்க்க நலன்கள் முன்னெடுத்த வேளையில், தனியார் மயப்படுத்தலை வைத்து, விவாதங்கள் மற்றும் போராட்டங்களை தோற்றுவிக்கக் கூடிய முனையில் நாம் உள்ளோம் என்பதே எனது வருத்தமாகும்.
இரண்டரை ஆண்டு வருட காலம் ஆட்சி நடாத்திவிட்ட சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சைட்டத்தை எதிர்க்கும் மாணவர் போராட்டங்களை வன்முறையால் ஒடுக்கியமை தனியார் மயப்படுத்தலுக்கான ஓர் உந்துதலைச் சுட்டிநிற்கின்றது.
மேலும், இந்த உந்துதல் நாட்டில் உள்ள அரசுடமையான முயற்சியாண்மைகள் மற்றும் அரச சேவைகளின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய, பொதுமக்களின் ஆதரவைத் தேடும், சித்தார்ந்த யுத்தத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.
கடனும் சித்தாந்தப் போரும்
இந்த அரசாங்கம் அதன் கொள்கைப் பிரகடனங்களிலும் வரவு செலவுத் திட்டங்களிலும் தனியார் மயப்படுத்தல், தனியார் முதலீடுகள் ஆகியவற்றைக் கொண்டுவருமெனவும் செயற்றிறனைக் கூட்டும் எனவும் தரமான சேவைகளைக் கொண்டு வரும் எனவும் அரசுடமை முயற்சியாண்மைகளினால் வரும் நட்டங்களைக் குறைக்கும் எனவும் கூறி வருகின்றது.
ஆயினும் அண்மைய மாதங்களில் தனியார் மயமாக்கலை ஊக்குவிப்பதில் அரசாங்கம் காட்டும் அக்கறை, அவசரம் வேறு காரணங்கள் இருப்பதைக் காட்டிக்கொடுத்து விட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் தனியார் மயப்படுத்தலை முன்கொணர்வதற்கான அடிப்படைக் காரணம், கடந்த 10 வருட காலத்தில் அரசு பெற்றுக்கொண்ட பெரும் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதாகும். இத்தகைய கடன்களை முகாமைப்படுத்த சரியான கொள்கைகள் கடைப்பிடிக்காததால் இது அரச சொத்துகளை விற்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.
அதிகரித்து வரும் கடன் நெருக்கடி, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் என்பவற்றைக் கவருவதில் உள்ள கஷ்டம், அரச இறையை அதிகரிக்கத் தவறியமை என்பவை அரசாங்கத்தை ஒரு மூலைக்குள் தள்ளிவிட்டுள்ளது. இப்போது அரசாங்கம் தனியார் மயமாக்கல் மூலம் அரச நிதியை அதிகரிக்கும் ஒரு முழுநேர முயற்சியைத் தேடுகின்றது.
இவ்வாறு அரச சொத்துகளை விற்பதற்கு, பொதுமக்களிடமிருந்து குறிப்பாக தொழிற்சங்கங்களிடமிருந்து வரும் எதிர்ப்புகளைக் கையாள, அரசாங்கம் இலாபம், செயற்றிறன் எனும் முறையில் சித்தாந்த யுத்தம் ஒன்றை முன்னெடுக்கின்றது.
இந்தச் சித்தாந்த நடவடிக்கையும் முரண்பாடுகளை நிறையவே கொண்டுள்ளது. கழுத்தறுப்பு இலாபம்தேடும், நிறுவனங்கள் மக்களுக்கு கூடுதல் சிறப்பான, அவசியமான தேவைகளை வழங்கும் என்பது பிழையான வாதமாகும்.
அரசுடமை முகவராண்மை நட்டங்களும் அரசாங்க தனியார் பங்குடமையும்
அரசுடமையான நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தலுக்காக முன்வைக்கப்படும் பிரதான தர்க்கம் அவை நட்டம் ஈட்டுபவையாக உள்ளன என்பதாகும். ஆயினும் இந்த மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் அத்தியாவசிய தேவைகளை வழங்குவதும் இதற்கான ஒரு காரணமாகும்.
கல்வியும் சுகாதார சேவையும் ஒரு ஜனநாயக, ஆரோக்கியமான சமூகத்துக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பது போலவே, தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து எனும் சேவைகளில் விலைத் தளம்பல்களை பொதுமக்கள் கையாள முடியுமென எதிர்பார்க்க முடியாது. சமூக பொருளாதார உறுதிப்பாட்டைக் கருதி, செல்வத்தை மீளப் பகர்தல் அரசின் கடமையாகும்.
யதார்த்தத்தில் வற் போன்ற உயர் அளவிலான மறைமுக வரிகள் எனும் பின்னொடுங்கும் வரிக்கொள்கை மற்றும் அத்தியாவசிய சேவைகளில் வெட்டு என்பன உழைக்கும் மக்களுக்கு பெரும் சுமையாகின்றன. வருமானத்தை மீள்பகரும் செயன்முறையாக, பணக்காரர்கள் மீது அதிக வரிவிதித்து, அரசுடமை நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதும் அவற்றைப் பலப்படுத்துதலும் இருக்க வேண்டும்.
அரசாங்க - தனியார் பங்குடமையை அடிப்படையாகக் கொண்ட தனியார் மயமாக்கலை நட்பு ரீதியான இருவருக்கு இடையிலான பங்குடமையாக அரசாங்கம் சித்திரிக்கும்போது, அது சரி போலவே தெரியும்.
ஆனால், யதார்த்தம் என்னவெனில், இந்த முறையில் வரலாற்றை எடுத்தால், தனியார் பங்குடமையாளர் இலாபத்தைக் கொண்டுபோக, அரசாங்கம் நட்ட ஆபத்துக்கு முகம்கொடுப்பதேயாகும்.
அரசாங்க - தனியார் பங்குடமையைக் கொண்டு, அரசாங்கம் உட்கட்டுமானங்களை அமைக்கின்றன. இதன்போது தனியார் பங்குடமையாளர் முக்கியமான முதலீடுகளைச் செய்வார்.
ஆனால், உயர் இலாபம் பெறப்பட்டு முடிந்ததும் நட்டங்கள் வரத் தொடங்கும். அப்போது தனியார் பங்குடமையாளர் வௌியேறிவிடுவர். அப்போது தனது பிரஜைகளுக்கு அத்தியாவசிய தேவைகளை வழங்குவதுபற்றி, அரசாங்கம் கவலைப்படும். அல்லது அரசாங்க - தனியார் பங்குடமை முழுமையாகத் தனியார் மயமாகும். அப்போது, பொது மக்கள் அத்தியாவசிய சேவைக்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
அரசாங்கம் தனது பொறுப்புகளிலிருந்து விலக, அரசாங்க - தனியார் - பங்குடமை ஒரு வழியாக உள்ளது. ஆயினும், ஜப்பான் உட்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாறு அரசாங்கத்தின் நெறிப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி வங்கிகளின் முதலீடு என்பவை நீண்ட கால நிலைபேறான பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுத்ததைக் காட்டுகின்றன.
சைட்டம் இப்போது சித்தாந்த போருக்கான ஒரு களமாக இருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உயர்கல்வி மற்றும் சுகாதாரத்துறை என்பவற்றில் தனியார் மயமாக்கல் பற்றிய விவாதத்தில் நாம் பங்குபற்றுவோமாக இருந்தால், சுகாதாரத்துறை மற்றும் காப்புறுதி உட்பட வலுமிக்க நிதித்துறை பெரும் இலாபமீட்ட சந்தர்ப்பம் பார்த்து உள்ளன. அதேபோல் நீர், மின், ரயில்வே போன்றவற்றில் உள்ள அரச சேவைகளையும் தனியார் மயப்படுத்த பெருமெடுப்பிலான முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் நெருக்கடி நிலை மோசமாகும்போது, முழுஅளவிலான தனியார் மயமாக்கல் தொடங்கும்.
அவ்வாறான சமயத்தில், அரசாங்கம் நவதாராளவாத கோட்பாட்டாளர்கள் சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி நெருக்கடியைப் பயன்படுத்தி, அரச சேவைகளைக் குறைத்தல், அரச சொத்துகளை விற்றல் என்பவை முலமாக வௌிநாட்டுக் கடன்களைச் செலுத்த வேண்டும் என்பர். இதுவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாடுகள் மற்றும் கிறீக் நாட்டு மக்களுக்குக் கூறப்பட்ட செய்தியாகும்.
இவ்வாறான தனியார் மயமாக்கல் கொள்கை பரப்பாளர்கள், சர்வதேச நிறுவனங்களால் அதிகரிக்கப்படும் பூகோளநிதியாளர்களிடமிருந்து உள்நாட்டு மேட்டுக்குடியினர் வரையானோர், சேவைகளின் வினைதிறன் பற்றி அக்கறைப் படுபவர்கள் அல்ல; அவர்கள் இலாபமீட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் அரச சொத்துகளை அடிமாட்டு விலையில் வாங்கி, பெருமளவு இலாபமீட்டக்
காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
மாணவர்களிடமிருந்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரை சைட்டத்தை எதிர்ப்பவர்கள் வேறு காரணங்களுக்காகவே அவ்வாறு செய்கின்றனர்.
தற்போதைய சைட்டம் பற்றிய சர்ச்சை, இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத் துறை பிரச்சினை பற்றியது.
எமது வரலாற்றிலிருந்து சரியான தீர்வை நாம் பெறுவதாயின் அது இலவசக்கல்வியையும் சுகாதார சேவைகளையும் விரிவு படுத்துவதாகும். சைட்டம் பற்றிய போராட்டங்கள், விவாதங்கள் மீது எமது நாட்டு மக்கள் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டும்.
எமது பொருளாதார எதிர்காலம் எதிர்நோக்கும் ஆபத்துகளையும் அரசினதும் அதன் பிரஜைகளுக்கான கடப்பாடுகளையும் நினைவுபடுத்தியமைக்காக நாம் மாணவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 May 2025
12 May 2025