2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சொல்வழி கேளாத குழப்படிக்காரர்கள்

Princiya Dixci   / 2021 ஜூலை 31 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு, நாயாறுப் பகுதி இயற்கை வளங்கள் நிறைந்ததாகும். குறிப்பாக, கடல் வளம், கடல் நீரேரி என்பன ஒருங்கே இணைந்த பகுதியாகக் காணப்படுகின்றது.

குறிப்பாக, பெருங்கடலில் பாரம்பரிய கரைவலை, உள்ளிட்ட மீன்பிடித் தொழில் நடவடிக்கைகளில் நாயாற்றைப் பாரம்பரிய வாழ்விடமாகக் கொண்ட தமிழ் மக்கள் ஈடுபடுவதுடன், கடல் நீரேரியில் தூண்டில் தொழில், நண்டுபிடித்தல், வீச்சுத்தொழில் உள்ளிட்ட தொழில் நடவடிகைகளிலும் அவர்கள் ஈடுபட்டு, தன்னிறைவாகவும் நிம்மதியாகவும் தமது அன்றாட வாழ்வை  நகர்த்திச் சென்றிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் நீரேரிகளை அண்மித்த பகுதிகளை, தென்னிலங்கை மீனவர்கள் ஆக்கிரமிப்பது, அதன் வளங்களைச் சுரண்டிச் செல்வது போர் முடிவுற்ற பின்னர் தொடர்கதையாக உள்ளது.

2012ஆம் ஆண்டளவில் நாயாறுப்பகுதியில் பருவகாலத் தொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக 73 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், அன்றிலிருந்து பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் பருவகாலம் ஆரம்பித்ததும், கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக தென்னிலங்கை மீனவர்கள் வருகைதருவதுடன், ஒக்டோபர் மாத இறுதியில் பருவகாலம் முடிவுற்றதும் மீண்டும் அவர்கள் தென்னிலங்கைக்கே சென்றுவிடுவார்கள்.

இந்நிலையில், 73 தென்னிலங்கைப் படகுகளுக்கு மாத்திரம்தான் நாயாறுப் பகுதியில் பருவகால மீன்பிடிக்கு அனுமதிவழங்கப்பட்ட போதிலும், காலப்போக்கில் அந்த நிலைமாறி அனுமதி வழங்கப்படாத பல தென்னிலங்கை மீனவர்களின் வருகையும் ஆரம்பிக்கத் தொடங்கியது.

இவ்வாறு, தென்னிலங்கையில் இருந்து வருகை தருபவர்கள் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, டைனமெட் அடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழிலில்  ஈடுபடுவதாக, நாயாற்றுப் பகுதிக்குரிய மீனவர்கள், பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்துள்ளனர்.

இதனால், நாயாற்றுப் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல்வளமும் பாதிக்கப்படுகின்றது.

அதேவேளை, தென்னிலங்கை மீனவர்கள் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக, நாயற்றுப் பகுதிக்குரிய தமிழ் மக்களை, பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தென்னிலங்கை மீனவர்கள் அச்சுறுத்துவதும், தாக்குவதுமான சம்பவங்களும் நடதேறி  இருக்கின்றன. குறிப்பாக, 2018ஆம் ஆண்டு தமிழ் மீனவர்களின் வாடிகள் பல தென்னிலங்கை, மீனவர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டன.

இதன் அடுத்தகட்டமாகத் தற்போது, நாயாறுக் கடலையும் கடல் நீரேரியையும் ஆக்கிரமித்து, 1,000க்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் வாடி அமைத்து குறுகிய நிலப்பரப்பில் தொழில்செய்து வருகின்றார்கள். இந்நிலைமை, பாரியதொரு ஆபத்தை எதிர்நோக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த அசாதாரண சூழ்நிலையால் கொக்கிளாயில் இருந்து தமிழ் மக்கள் இடம்பெயர்ந்ததும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான கொக்கிளாய் முகத்துவாரக் காணிகளைத் தென்னிலங்கை மீனவர்கள் அபகரித்து, அங்கு குடியேறி, தற்போது அங்கு 1,500இற்கும் மேற்பட்ட படகுகளில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு உடனடி அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலைமை யாதெனில், நாயாறில் வாடி அமைத்துக் குடியேறிய  1,000க்கும் மேற்பட்டோரில்,  53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முடக்கப்ட்டுள்ள தங்கள் பிரதேசத்தை விடுவிக்க கோரி (24.07.21 ) அன்று போராட்டத்தில் குதித்த மக்களால் அமைதியின்மை ஏற்பட்டது.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தப் பதிவும் இல்லாத தொழிலுக்காக வந்த (அவர்கள் குடும்பம் குடும்பமாக வந்துள்ளார்கள்) இந்த மக்களால், சுகாதார பிரிவினர் பணிசெய்வதில் பாரிய சவால்கள் எதிர்நோக்கி உள்ளார்கள். 

எந்தவித சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதவரகளாக, பொறுப்பற்றவர்களாக, பாமரராக, அரச இயந்திரங்களுக்கு கட்டுப்பாடாதவர்களாக இவர்கள் காணப்படுவதால், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தல் சமூகமாக மாறியுள்ளார்கள். இவர்களால், கொரோனா கொத்தணி உருவாகும் அச்சம் சுகாதார அணியினரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில், காவலரண் அமைத்து வீதிச்சோதனை செய்து, மக்களை விடாப்பிடியாக கட்டுப்படுத்திய பாதுகாப்பு தரப்பினர், புத்தளத்தை சேர்ந்த பெரும்பான்மையினர் வசிக்கும் நாயாற்று பகுதி தொடர்பில், ஏன் அக்கறை காட்டவில்லை என்பது, மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும். அவ்வாறு அக்கறை காட்டியிருந்தால், ஒரு கொரோனா தொற்றாளர், மாகாணம்விட்டு புத்தளத்துக்கு  எவ்வாறு செல்லமுடியும்? இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏன் பாகுபாடு?

புத்தளத்தில் இருந்து, பருவகால மீன்பிடிக்காக, நாயாற்று பகுதிக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த ஆண்டு எவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனக் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னிலையில் ஆயிரம் வரையானவர்கள் சுமார் மூன்றூறு படகுகளுடன் இங்கு வந்து தொழில் செய்வதற்கு யார் அனுமதித்தார்கள் அவர்கள் தொடர்பிலான பதிவுகள் யாரிடம் உள்ளது?

இங்கு வாழ்கின்ற மக்கள் தொடர்பில் எந்த அரச அதிகாரிகளிடமும் பதிவு இல்லாத நிலையில் இவர்கள் செய்யும் தொழில்தான் என்ன கடற்தொழில் என்ற போர்வையில் இவர்கள் முல்லைத்தீவிற்கு வருவதன் நோக்கம் என்ன சட்டவிரோத தொழிலில் ஈடுபடவா (முல்லைத்தீவில் இருந்து இந்தியாவிற்கும் சர்வதேச கடல் எல்லையும் அருகில் இருப்பதன் காரணமா?) என்ற கேள்விகள் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடத்தில் எழுகின்றது.

நாயாற்று பகுதியில் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வாழும் பகுதிக்கு அருகில்தான் நாயாறு கடற்படை தளம் அமைந்துள்ளது. அண்மைய பகுதியில் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன.  இவர்கள் யாவரும் ‘வந்தேறு குடி’களுக்கு இசைவாகவே செயற்பட்டு வருவதை, தமிழ்மக்களுடன் அவர்கள் நடந்துகொள்ளும் செயற்பாட்டினை வைத்து காணக்கூடியதாக இருக்கின்றது.

எத்தனை பேர், இங்கு வாழ்கின்றார்கள் என்று யாருக்கும் தெரியாத நிலையில்  அரசாங்கத்தின பண உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக 198 பேர் பதிவு செய்துள்ளார்கள். நிவாரணம் கொடுக்கவுள்ளதாக பிரதேச செயலகத்தால் பதிவை முன்னெடுத்தபோது 845 பேர் பதிவை மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் பரிந்துரை செய்த போது, 400 பேர்வரையில்தான் இருக்கின்றோம் என்கின்றனர்.

இவ்வாறு, எந்த கணக்கும் பதிவும் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் புத்தள மீன்பிடியாளர்களால் அரச சுகாதார உத்தியோகத்தர்கள், தங்கள் கடமையை முழுமையாகச் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முடக்கப்பட்ட பகுதியான இந்த பகுதியில் இருந்து 379 பேர்வரைக்கும் பி.சி.ஆர் செய்யப்பட்டதில் 24.07.21 வரை 53 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள். இன்னிலையில், அனைவருக்கும் பி.சி.ஆர் செய்வதற்கு சுகாதார பிரிவினர் சென்றபோது, புத்தளவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்தொழில் அமைச்சு, நீரியல் வளத் திணைக்களத்தின் எந்த அனுமதியும் இல்லாத நிலையில், இவர்களின் கடற்தொழில் நடவடிக்கைகளை யார் கண்காணிப்பார்கள்? இவர்களின் செயற்பாடுகளால், முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பாரிய ஆபத்து உள்ளது. அரச இயந்திரங்கள் இதைக் கருத்தில்கொண்டு சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X