2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சோற்றுக்கே வழியில்லையாம்; இயற்கை உரம்?

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 27 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

லஷ்மன்

பெரும் முதலாளிகளின் கைகளில் இருக்கின்ற அனேக இறக்குமதிகளை தற்போதைய அரசாங்கம் தடை செய்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் விவசாயத்துக்கான இரசாயன உரம், பூச்சி கொல்லி போன்றவற்றின் இறக்குமதியாகும்.

  கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கையில், கொரோனா வைரஸூக்கு மஞ்சள் முக்கியமான தொற்று நீக்கி என்று எல்லோரும் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், மஞ்சளின் இறக்குமதி தடை செய்யப்பட்டது. அப்போது அதிகரித்த மஞ்சளின் விலை, இன்னும் குறையவில்லை. உளுந்தும் அப்படித்தான்! இவ்வாறே, இன்னும் பல பொருள்களுக்கு இறக்குமதித்தடை வந்திருக்கிறது. 

கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும்  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. சந்திரகாந்தன்,  “இரசாயன உரத்தின் இறக்குமதியாளர்களும் விற்பனையாளர்களும் இயற்கை உரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்” என்கிறார்.

அதேநேரத்தில், கிழக்கின் ஆளுநர் அநுராதா யஹம்பத், “விவசாயிகளின் விடயத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது. அதனால்தான், விவசாயிகள் சேதனப் பசளையை எதிர்க்கிறார்கள்; போராட்டங்களை நடத்துகிறார்கள்” என்று தெரிவிக்கிறார்.  

நாட்டின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றான விவசாயத்துறைக்கு, முக்கிய தேவையாக இருக்கிற இரசாயனப் பசளையின் இறக்குமதியைத் தடை செய்துவிட்டு, அரிசியை இறக்குமதி செய்கின்ற தீர்மானம் அரசாங்கத்தின் திறமைக்கு நல்ல உதாரணம். 

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல், கடலில் மூழ்கியதையடுத்து கடலில் இரசாயனம் கலந்துவிட்டது என்று கூச்சலிட்டவர்களை இப்போது காணவில்லை. அதுபோலவே, இந்த இயற்கை உரம் தொடர்பான பிரச்சினைகளும் காணாமல் போய்விட்டன. எல்லாவற்றிலும் எந்தக்காலத்திலும் சலசலப்பும் சிலுசிலுப்பும் சில நாள்களுக்குத்தான் என்பது எவ்வளவு உண்மை என்பது இவற்றில் இருந்து தெரிகின்றது. பெரிய கோடு ஒன்றைக் கீறி விட்டால், சிறிய கோடு மறைந்துவிடப்போகிறது; பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் இவ்வாறுதான் அணுகப்படுகின்றது.

இரசாயன உரத்துக்கான தடை அமலில் இருக்கும் எமது நாட்டுக்குள், ஒருதொகை இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாக, செய்திகள் அண்மையில் வௌிவந்தன.  இந்த உரம் யாருக்கு, என்ன விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது என்பது யாருக்கும் தெரியாது.

இறக்குமதித் தடை எல்லோருக்கும்  என்றால்,  உரத்தை எதற்காக இறக்குமதி செய்ய வேண்டும். இதையடுத்து,, இரசாயன உரத்துக்கான இறக்குமததி அனுமதி எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படத்  தொடங்கியிருக்கிறது.

அந்தவகையில், இரசாயன உரம் துறைமுகத்துக்கு எவ்வாறு வந்தது. இதற்கு அனுமதியளித்தது யார். இதனை இறக்குமதி செய்தது யார் என்பது. இன்றைய நிலைமையில் நாட்டுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது. 

இரசாயன உரத்துக்கான இறக்குமதி தடை விதிக்கப்பட்டதும் நாட்டில் பல போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் விவசாயிகளாலும் சில அமைப்புகளாலும் நடத்தப்பட்டன. ஆனால், அவை இப்போது ஓய்ந்து விட்டன.  முழு நாட்டுக்கும் பொதுவான பிரச்சினையாக இருக்கும் கொவிட் - 19 பெருந்​தொற்றுக் காலத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமையால், தனிமைப்படுத்தல் சட்டமும் இதில் பாய்ந்து அடக்கியிருக்கிறது.

எதுஎப்படியோ, நமது நாட்டில் மக்களுக்கு எதிரான பல விடயங்கள் நடந்து முடிவதற்கு, இந்தக் கொவிட் - 19 பெருந்தொற்று முத்தான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மக்களின் எதிர்ப்புகளும் கோரிக்கைகளும்  மட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறதே தவிர, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளும் தீர்மானங்களும் மிகச் சூட்சுமமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன என்பது மட்டுமே உண்மை. 

இயற்கை உரப்பாவனையை அதிகரிப்பதன் மூலமாக, செயற்கை உரப்பாவனையைக் குறைப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயாமல், திட்டமிடாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என, தவறான தீர்மானங்களை  நடைமுறைப்படுத்த முனையும் செயற்பாடுகள், எவ்வளவுக்கு வெற்றியளிக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டாலும் ‘மேன்மை தங்கியவர்’களின் மற்றும் ‘கௌரவ உறுப்பினர்’களின் எத்தகைய தீர்மானங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டே தீரும். 

இங்கு முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது, யாரும் இயற்கை உரப்பாவனைக்கு எதிரானவர்களல்ல; அதை, நடைமுறைப்படுத்தும்  விதம்தான் தவறாக இருக்கிறது.  

நாட்டில், புற்றுநோய், சிறுநீரக நோய் போன்ற நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலைமை, செயற்கை உரத்தை விவசாயத்தில் அதிகளவு பயன்படுத்துவதால் ஏற்படுகின்றது என ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. இந்நிலைமை புறொயிலர் போன்ற மாமிச உணவுகளாலும் ஏற்படுகிறது.

மக்கள் யார் சொல்வதையும் முழுமையாகக் கேட்டு ஒழுகுவதில்லை. அதற்குக் காரணம், இன்றைய இயந்திர வாழ்க்கையாகும். எங்கு, எது இலகுவில்,  குறைந்த விலையில் கிடைக்கும் என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்!.

இந்த யதார்த்த சூழலில், விவசாயிகளைப் பொறுத்தவரையில், குறைந்த செலவில் அதிக விளைச்சலைப் பெற்றுவிடவேண்டும் என்றுதான் சிந்திக்கின்றனர்.  
படிப்படியாக, இயற்கை உரப் பாவனைக்குச் செல்லல் சாத்தியமில்லை என்பதாக நிலைமை இருக்கிறது.

இயற்கை வளங்கள் சுருங்கிக்கொண்டே செல்லுகின்ற இன்றைய காலத்தில்,  விதைப்பு, நீர் பாய்ச்சுதல், அறுவடை போன்றவற்றிலேயே நவீனத்துவமான செயற்பாடுகளை கைக்கொள்ள வேண்டும். இதற்குரிய தொழில்நுட்ப பொறிமுறைகளையும் விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும்  என்பது அரசாங்கத்தின்  எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு நாட்டு மக்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றுவதுடன், ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தையும் உருவாக்கும். 

 ஆனால், விளைச்சலை அதிகரிப்பதற்குத் தேவையானவைகளாக விவசாயிகள் எண்ணும் இரசாயனப் பசளை, எண்ணை வகைகள் இல்லாமல் இது சாத்தியப்படுமா என்பதே கேள்வி. 

மானிய அடிப்படையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உரம் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இரசாயன உரம் வருடத்தின் பெரும்போகம், சிறுபோகம் ஆகிய  இரண்டு பருவங்களிலும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை அரசாங்கமே கமநல சேவை நிலையங்கள் ஊடாக வழங்கிவந்தது.

ஆனால், இன்றைய அரசாங்கம் இதனை நிறுத்துகிறது. ஜனாதிபதி எடுத்திருக்கும் இறுக்கமான  இந்த முடிவை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கட்டாயமாக அமல்படுத்துபவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில், ஏனையவர்கள் ஆதரித்தாலும், அதனால் ஏற்படப்போகும் விளைவுகள், விவசாயிகளுக்கு மாத்திரமல்ல, நாட்டு மக்கள் எல்லோருக்குமானது என்பதைச் சிந்தித்துக் கவலைப்படுகினக்றார்கள்.  

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், விவசாயத்துறையை நவீன மயப்படுத்த வேண்டும்; முன்னேற்ற வேண்டும். அழியும்  இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்; மீள்உருவாக்கம் செய்யப்பட வேண்டும். இவை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இவற்றை விடுத்து, மக்களை நெருக்கடிகளுக்குள் தள்ளும் முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது என்பது, நியாயமாகச் சிந்திப்பவர்களின் நிலைப்பாடாகும். 

இரண்டாம் உலக மகா யுத்ததின் பின்னர், பாவனைக்கு வந்த இந்த செயற்கை உரம்,  உலகத்தையே ஆக்கிரமித்திருக்கிறது.  அதற்கு முன்னர் எமது மூதாதையர்கள் எவ்வாறு விவசாயம் செய்தார்கள் என்ற கேள்வி நியாயமானதுதான்.  

உரிய முறையில் விவசாயம் செய்தால், மண்ணை மலட்டுத்தன்மையில் இருந்து பாதுகாக்கலாம் என மண்ணை நேசிக்கின்ற விவசாயிகள் தெரிவித்தாலும்  விதைத்து, நீர்பாய்ச்சி, வரப்புகட்டி, குருவி, மிருகங்களுக்கு காவல் இருந்து, அறுவடை செய்யும்போது, தலையில் கையை மட்டும் வைக்கின்ற நிலையே ஏற்படுகிறது. 

பெரிய பெரிய முதலாளிமாரும், உரம் இறக்குமதி செய்யும் கம்பனிகளும்  பலமாக எதிர்க்கின்ற இயற்கை முறை விவசாயத்துக்கு, இன்னும் எத்தனை காலம் மக்கள் சிரமப்படப்போகிறார்கள் என்பது கேள்விதான்.

ஆனாலும், இந்த இயற்கை முறை உரப் பாவனையின் சாதகங்கள் ஆராயப்பட வேண்டியவைகள்தான். அத்துடன், இம்முறை விவசாயம் செய்து கொண்டிருக்கின்ற விவசாயிகளுக்கு, உரம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிவர்த்திக்க, உரம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. 

இந்த நிலையில்தான், நெல், அரிசி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது, சேதனப் பசளை பாவனைகளை அமல்படுத்துவது என்பன அரசாங்கத்திற்குப் பெரும் சவாலாக  இருக்கப்போகிறது.

இது மறைக்கப்பட்ட உண்மையல்ல; வெளிப்படையானது.  எனவே,  பொறுத்திருப்போம். விவசாயத்துறை மேம்படட்டும்; உணவுப்பஞ்சம் தீரட்டும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X