2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியும் கலாசார பொலிஸ் பணியும்

Thipaan   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலத்தீன் பொப் பாடல்களின் அரசரென அழைக்கப்படும் என்றிக் இக்லேசியஸின் இலங்கைப் பயணம், அதிகமான சர்ச்சைகளையும், இலங்கை மீதான உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துச் சென்றுள்ளது. 5,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையிலான பெறுமதிகளில் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிபிரபலமான நட்சத்திரமொன்றின் இசை நிகழ்ச்சியாக அமைந்த போதிலும், ஏற்பாடு தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் தான், திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த இசை நிகழ்ச்சியில், பெண்ணொருவர் எனச் சந்தேகிக்கப்படுபவர், என்றிக் இக்லேசியஸ் மீது மார்புக் கச்சையை வீசியமை தொடர்பாகவும், இன்னொரு பெண், மேடையில் ஏறி அவரைக் கட்டியணைத்தமை தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்பெண்களை நாகரிகமடையாதவர்கள் என விளித்த ஜனாதிபதி, அவர்களை நஞ்சுடைய திருக்கை வாலால் அடிக்காதுவிட்டாலும், இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை அவ்வாறு அடிக்க வேண்டுமெனவும், இலங்கையின் கலாசாரத்துக்கு எதிரான இவ்வாறான நிகழ்ச்சிகளை, எதிர்காலத்தில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கோபம், சற்று விசித்திரமானது என்ற போதிலும், அவருக்கான ஆதரவு இருப்பதையும் மறுக்க முடியாது. உள்ளாடை வீசப்பட்டமையைக் கலாசாரச் சீரழிவு என்று கருதுவோர், நாட்டின் ஜனாதிபதியாக, அதற்கெதிராகக் கருத்துத் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கவும், அவருக்கு உரிமையும் கடமையும் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

மறுபுறத்தில், அவரது கருத்துக்கெதிராகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, சமூக ஊடக வலையமைப்புகளில், அவரது கருத்தைச் சாடிய இளம் சமுதாயத்தினர், அவரைக் கேலியும் செய்திருந்தனர். ஆனால், அதற்கும் பதிலளித்துள்ள ஜனாதிபதி, தேசிய விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமெனவும், வெளிநாட்டுக் கலாசாரங்களுக்கு அடிமையாகியுள்ளவர்களை, வீதிகளில் நிர்வாணமாகச் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது இக்கருத்தும், அவரை ஆதரிக்கும் தரப்பினரது கருத்தும், நாட்டின் கலாசாரங்களை மதிக்க வேண்டும், கலாசாரம், சமுதாய ஒத்திசைவு, பழைமையை மதித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகிறது.

இந்த வாதத்திலும் சிந்தனையிலும், பல்வேறான தவறுகள் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றிய சிந்தனையென்பது, மிக அவசியமானது.

முதலாவதாக, கலாசாரமென்பது, சட்டம் கிடையாது. தமிழ் மக்களின் கலாசாரப்படி, அவர்கள் வேட்டி அணிவார்கள் என்பதற்காக, வேட்டி அணியாத தமிழர்களை, ஜனநாயகம் நிலவுகின்ற நாடொன்றில், சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்க முடியாது. கலாசாரமென்பது, குறிப்பிட்ட சமூகம் அல்லது பிரிவொன்று, தாமாகப் பின்பற்றும் நடவடிக்கைகளே ஆகும்.

அத்தோடு, இலங்கைக்கென்று தனியான கலாசாரம் கிடையாது. இலங்கையென்பது, பல்லின மக்களும் வாழுமொரு நாடு. சிங்கள மக்களின் கலாசாரமென்பது தமிழ் மக்களின் கலாசாரங்களுக்கு முற்றிலும் மாறானதாக இருக்கக்கூடும். முஸ்லிம் மக்களின் கலாசாரமென்பது, ஏனைய இரு தரப்பை விட வித்தியாசமானதாக இருக்கக்கூடும். அதற்காக, சிங்களவர்களின் கலாசாரத்தின்படி, சேலை அணியுமாறு, முஸ்லிம் பெண்களைப் பணிக்க முடியாது. அது, மனித உரிமைகளுக்கு எதிரானதும் கூட.

இது இவ்வாறிருக்கையில், கலாசாரமென்றால் என்னவென்ற கேள்வியும் எழுகின்றது. எதைக் கலாசாரமென்பது, எதை கலாசாரத்தை விட மீறியது என்று முடிவுசெய்வது குழப்பகரமானது. ஏனென்றால், வேட்டி/சாரம் அணிவதென்பது, இலங்கையிலுள்ள ஆண்களின் (சிங்கள, தமிழ், முஸ்லிம்கள்) கலாசாரமாக இருக்கும். ஆனால், இலங்கை என்றொரு நாடு உருவாகிய போது, வேட்டி/சாரம் என்பதை அணிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. மனித குலத்தின் ஆரம்பம், நிர்வாணத்திலேயே தொடங்கியது. இப்போது, மேலைத்தேய கலாசாரத்தின்படி நீளக்காற்சட்டைகளைச் சாதாரணமாக அணிவது போன்று, வேட்டிஃசாரம் என்பது கூட, இன்னுமொரு குழுவிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆடையாகவே இருக்கப் போகிறது. அதேபோல் தான் பழக்க வழக்கங்களும்.

முன்னைய காலத்தில், இந்து சமயத்தவர்களுக்கு, உடன்கட்டை ஏறுதலென்ற பழக்கம் இருந்தது. தனது கணவன் இறந்த பின்னர், அவரைத் தகனம் செய்யும் தணலில், மனைவியும் உயிரை விடுதலென்பது, சாதாரணமாக இருந்ததொன்று. அவ்வாறு செய்தலே, உயர்ந்த நாகரிகமாகக் கருதப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், உடன்கட்டை ஏறுதலை ஆதரிக்கும் ஒருவரை, நாகரிகமடைந்தவர் என்று அழைக்க முடியுமா? ஆக, அப்போது உச்சக்கட்ட நாகரிகமாக இருந்தது, இப்போது எவ்வாறு நாகரிகமற்றதாக இருக்க முடியும்?

ஆகவே, கலாசாரமென்பது, தொடர்ச்சியாக மாறுபட்டே வந்திருக்கிறது. கலாசாரத்தின் அடிப்படையிலான தண்டனைகளை வழங்க முயலுதலென்பது, தவறாகவே முடியும். அவ்வாறு, கலாசாரத்தை மதிக்க வேண்டுமெனவும், உள்ளாடையை வீசுதல், கலாசாரத்துக்கு எதிரானதென்றும், ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அதனால் என்னவெனக் கேட்கத் தோன்றுகிறதல்லவா? இலங்கையின் சிகிரியா ஓவியங்களில் காணப்படும் பெண்கள், மார்புக் கச்சை அணிந்தா இருக்கிறார்கள்? அவ்வாறாயின், அந்த ஓவியங்களால் கலாசார சீரழிவு ஏற்படவில்லையா? சிகிரியாவை இலங்கையின் தேசிய சொத்து எனவும் அதிசயமெனவும் கொண்டாட முடியுமெனில், அந்த இசை நிகழ்ச்சியில் நடந்தது மாத்திரம் எவ்வாறு, கலாசாரச் சீரழிவாக முடியும்?

இந்த விடயத்தில், ஜனாதிபதியின் கருத்துக்கு ஆதரவாக அல்லது அக்கருத்துக்கு எதிரான எதிர்ப்புக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்ட மற்றொரு கருத்து என்னவெனில், இலங்கையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன, எதற்காக, உள்ளாடைகள் சம்பந்தப்பட்ட இவ்விடயத்தை ஊடகங்களும் இளைஞர்களும் பெரிதுபடுத்துகிறார்கள் என்பது தான். அதே வாதத்தை, ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகவும் முன்வைக்க முடியும். இலங்கையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், கவனஞ்செலுத்த வேண்டிய பிரச்சினைகளென்று, ஏராளம் உள்ளன. ஒழுங்கான வரவு - செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்தல், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவான நிலை, தொடரும் ஊழல், தொடரும் குடும்ப ஆட்சி அல்லது குடும்ப அதிகாரப் பகிர்வு, கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்று, ஜனாதிபதி கவனஞ்செலுத்த வேண்டிய ஏராளமான பிரச்சினைகள்/சவால்கள் காணப்படுகின்றன.

இவையெல்லாவற்றையும் விடுத்து, இசை நிகழ்ச்சியொன்றுக்காக 35,000 ரூபாயைச் செலவுசெய்யத் தயாராக இருக்கின்ற இளைஞர்களின் இசை நிகழ்ச்சியொன்றில், தனிப்பட்டு நடந்த நிகழ்ச்சியொன்று தொடர்பாகத் தான் ஜனாதிபதியால் கவனஞ்செலுத்த முடிகிறதா, மற்றைய விடயங்கள் குறித்து அவரால் கவனஞ்செலுத்தி, அது தொடர்பாகக் கோபமடைய முடியவில்லையா? இரவுக் களியாட்ட விடுதிகளும், இலங்கையின் 'கலாசாரம்' என்பதில் அடங்காத ஒன்று என்ற நிலையில், அங்கு சென்று அவரது மகன், குழப்பங்களை ஏற்படுத்தியபோது, அதைக் கலாசாரச் சீரழிவு என ஜனாதிபதி எண்ணவில்லையா? அவரது மருமகன், இக்லேசியஸின் சர்ச்சைக்குரிய அந்த 'Love and Sex' என்று பெயரிடப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, இலங்கைக் கலாசாரத்துக்கு அது எதிரானது என ஜனாதிபதி எண்ணியிருக்கவில்லையா? இக்கேள்விகளுக்கான விடைகளைத் தருவதற்கு, ஜனாதிபதியோ அல்லது அவருக்கு ஆதரவு தெரிவிப்போரோ தயாராக இருக்கிறார்களா?

அத்தோடு, மேலோட்டமாகச் சொல்லப்படுவது போல, இதுவொன்றும் உள்ளாடைகள் சம்பந்தமான, சிறிய விடயம் கிடையாது. அது, வெறுமனே வெளியில் தெரியும் நோய்க்குணங்குறி மாத்திரமே. உண்மையான நோயென்பது, சற்று ஆழமாகச் சிந்தித்தாலேயே புரிந்து கொள்ளப்படக்கூடியது.

தனியார் நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றைக் கட்டுப்படுத்துவதற்கு முயல்வதனூடாக, எங்களுடைய நாளாந்த வாழ்க்கையின் சிறிய அம்சங்களையும் கூடக் கட்டுப்படுத்துவதற்கு, ஆட்சியாளர்கள் தயாராக இருக்கின்றனர் என்பதே உண்மை. எதைப் பார்க்க வேண்டும், எதை உண்ண வேண்டும், எதை அருந்த வேண்டும், எந்த இசையை இரசிக்க வேண்டும், எந்த உடையை அணிய வேண்டும், எதை வாசிக்க வேண்டும், எவரை விரும்ப வேண்டும், எவரை வெறுக்க வேண்டும் என, ஒவ்வொரு விடயத்தையும் கட்டுப்படுத்தவே, அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும், காலாகாலமாக முயன்று வந்திருக்கிறார்கள். ஏனெனில், சொந்தமாகச் சிந்தித்து, சொந்தமாக முடிவெடுக்கும் பிரஜைகள், அரசியல்வாதிகள் நிலைத்திருப்பதற்கு, ஆபத்தானவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.

சிகரெட், மதுபானம் போன்ற உடல்நலத்துக்கு ஆபத்தான பொருட்களையெல்லாம் சட்டரீதியாக அனுமதித்துவிட்டு, உள்ளாடையைக் கழற்றி வீசுவதால் தான் நாட்டின் கலாசாரம் பாதிக்கப்படுமென்பது, அபத்தமான வாதமாகும். அதைவிட, உள்ளாடையொன்றைக் கழற்றி வீசுவதாலேயோ, அல்லது பாடகரொருவரைக் கட்டியணைப்பதாலேயே, கலாசாரமென்பது பாழ்பட்டுவிடும் என்றால், கலாசாரம், அவ்வளவு பலவீனமானதாகவா இருக்கிறது என்ற கேள்வி எழுகின்றதல்லவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் கிடைக்கப் போவதில்லை, ஏனென்றால், உணர்ச்சித் ததும்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கருத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும், பகுத்தறிவுத் திறன் பயன்படுத்தப்படுவதில்லை என்பது தான் உண்மை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .