2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதியின் ஒற்றுமை கோரிக்கையின் நோக்கம்

Mayu   / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற ரனில் விக்ரமசிங்க இது வரை பாராளுமன்றத்தில் மூன்று கொள்கை பிரகடனங்களை சமர்ப்பித்திருக்கிறார். மூன்றாவது கொள்கைப் பிரகடனம் கடந்த 7ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அவர் மூன்று விடயங்களை முக்கியமாக எடுத்துரைத்தார். முதலாவதாக மின்சாரமின்றி, எரிபொருளின்றி, எரிவாயுமின்றி மக்கள் 2022இல் எதிர்நோக்கிய கடும் கஷ்டமான நிலைமையைத் தாம் பெருமளவில் மாற்றியதாக அவர் கூறினார். ஆனால், நாடு பெரும் கடன் சுமையை எதிர்நோக்கியிருப்பதாக அவர் இரண்டாவதாக எடுத்துரைத்தார்.

மூன்றாவதாக நாட்டை மீட்டெடுப்பதற்காகச் சகல அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்பதாகும். தமக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்று சேர்ந்து செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் முடியுமென்றால் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்ட தற்போது ஐக்கிய மக்கள் சக்தியாகச் செயற்படுவோருக்கு இப்போது தம்மோடு ஒன்று சேர்ந்து ஏன் செயற்பட முடியாது என்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கில் 2015இல் தமது தலைமையிலான அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணிக்கு இப்போது ஏன் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட முடியாது என்றும் அவர் அவ்வுரையில் கேள்வி எழுப்பினார்.

கடந்த வியாழக்கிழமை அனுராதபுர வடக்கு நீர் விநியோக திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தின்போதும், நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டெடுப்பதற்காக அரசியல் கட்சிகள் ஒன்று நேர்ந்து செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். எடுத்த எடுப்பில் இது மிகவும் நியாயமான கேள்வியாகவே தெரிகிறது. ஒற்றுமைக்கான எந்தவோர் ஆலோசனையையும் அதனை ஆழமாக ஆராயாமல் மேலோட்டமாக பார்த்து எவராலும் நிராகரிக்க முடியாது. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பார்கள்.

ஆனால், அவை அரசியலில் செல்லுபடியாகாதவையாகும். ஏனெனில், அரசியல் என்பதே அதிகாரத்துக்கான போட்டியாகும். அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை என்று ஜனாதிபதி எதனை எதிர்பார்க்கிறார் என்பது தெளிவில்லை.

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, அபிவிருத்திப் பாதையில் செலுத்துவதற்கான பொறுப்பைப் பகிர்ந்துகொள்வதையா அல்லது எதிரணி அரசியல் கட்சிகள் வெறுமனே அரசாங்கத்தில் சேர்ந்து அமைச்சர் பதவிகளையும் பெற்று எந்த அடக்குமுறை சட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் தமக்கு ஆதரவு வழங்குவதா அல்லது இவ்வெதுவுமே இல்லாது அரசாங்கத்தை விமர்சிக்காது இருப்பதையா அவர் எதிர்பார்க்கின்றார்? நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் பொறுப்பை பகிர்ந்து கொள்வதற்கு அதற்கான திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.

தமது கட்சியின் மேலும் சில மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்த போதிலும், அவர் அதற்குச் செவிசாய்க்கவில்லை. எனவே, எதிர்க்கட்சிகளுடன் அவர் அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்ந்துகொள்ள முற்படுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் தம்மையும் அரசாங்கத்தையும் விமர்சிக்காது மௌனமாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அவர்களது வாயை மூடுவதற்காகவே நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் புதிய பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் போன்றவற்றை அரசாங்கம் கொண்டு வரப்போகிறது. இதற்கு முன்னரும் அரசாங்கம் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் எட்டு உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி புனர்வாழ்வு அதிகாரசபை சட்டம் என்றதொரு சட்டத்தைக் கொண்டு வர முயன்றது. உயர் நீதிமன்றம் அவற்றைத் தடுத்தது.

இப்போது அரசாங்கம் அதே நோக்கத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஒற்றுமையைப்  போதித்து நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறது. அத்தோடு, பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை அதிகரித்துக்கொள்வதும் அதன் நோக்கமாக இருக்கலாம். ஏனெனில், தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காக ஜனாதிபதி ஆட்சி முறையிலும் தேர்தல் சட்டங்களிலும் பல மாற்றங்களைக் கொண்டுவர ரணில் முயல்வதாக பல்வேறு செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன.

அதற்காக அவருக்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வேண்டும். நீண்ட காலமாக எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஒன்று சேர முடியுமானால் தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு ஏன் அரசாங்கத்தோடு இணைய முடியாது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினாலும்.

அன்று ஐ.தே.கவும் பொதுஜன முன்னணியும் சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் ஒன்று சேர்ந்தனவே தவிரக் கொள்கை அடிப்படையில் இணையவில்லை. கோட்டாபயவின் அரசாங்கத்துக்கு எதிராக எழுந்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியின்போது, ரணிலதும் பொதுஜன முன்னணியினதும் இருப்புக்காகவே இரு கட்சிகளும் ஒன்றிணைந்தன. அது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவோ நாட்டின் இனப் பிரச்சினை போன்ற ஏதாவது ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவோ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல.

உண்மையிலேயே நாட்டின் எந்தவித பிரச்சினையைப் பற்றியும் அவர்கள் கலந்துரையாடவும் இல்லை. ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்துடன் இணையுமாறு 2022இல் எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டபோது, இன்று ஒற்றுமையைப் போதிக்கும் ரணில் விக்ரமசிங்க, அதற்கு முதலில் இணங்கவில்லை.

பின்னர் பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியில் ஓர் ஆசனத்தையாவது வென்றெடுக்க முடியாதிருந்த அவருக்குக் குறுக்கு வழியில் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிட்டவே தான் அவர் அரசாங்கத்தில் இணைந்தார். 2022 இல் மார்ச் 3ஆம் திகதி விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சரவையிலிருந்து கோட்டா நீக்கினார். அது பொருளாதார நெருக்கடியால் கோட்டா செய்வதறியாது தவித்துக்கொண்டு இருந்த காலம்.

எனவே, அவ்விருவரும் மீண்டும் கோட்டாவை அணுகி பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி ஆராயக் கலந்துரையாடல் ஒன்றைக் கேட்டனர். அதன்படி, நடத்தப்பட்ட கூட்டத்தின்போது, சர்வகட்சி இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென்று அவர்கள் ஆலோசனைக் கூறினர். மீண்டும் அமைச்சர்களாவதே அவர்களது திட்டமாகியது. அதனை உணர்ந்தாரோ, இல்லையோ கோட்டா அதனை ஏற்றுப் பிரதமரான தமது சகோதரரைத் தவிர்ந்த சகல அமைச்சர்களையும் பதவி விலகுமாறு பணித்தார்.

அதன் பின்னர் அமைச்சரவையில் சேருமாறு கோட்டா, ஏப்ரல் 1ஆம் திகதி எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்ட போதிலும், அதற்கு முன்தினம் கோட்டாவின் வீட்டருகே அரசாங்கத்துக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அது பரவும் நிலையும் காணப்பட்டதால் எவரும் அமைச்சரவையில் சேர முன்வரவில்லை. கோட்டாவுக்கு ஆலோசனை வழங்கிய இருவருமாவது அதற்கு முன்வரவில்லை.

ஏப்ரல் 9 ஆம் திகதி ‘அரகலய’ போராட்டம் ஆரம்பமாகியது. மே 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதால், நாடு முழுவதிலும் பதற்ற நிலை பரவி, மஹிந்த பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்தநிலையில் தான், வாக்குப் பலத்தால் பதவிக்கு வரமுடியாத தமக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றச் சந்தர்ப்பம் உருவாகியிருப்பதை ரணில் உணர்ந்தார்.

அதன்படி, கோட்டாவுடன் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த புரிந்துணர்வின்படி அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். இது கொள்கை ரீதியிலான இணக்கமல்ல. எனவேதான் பிரதமராகப் பதவி ஏற்றதன் பின்னரும் கோட்டாவை விரட்டுவதற்கான ‘கோட்டா கோ கம’ போராட்டத்துக்குப் பகிரங்கமாகவே ரணில் ஆதரவு வழங்கினார்.

அதற்காக அவர் தமது கட்சி முக்கியஸ்தர்களான கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் ருவன் விஜேவர்தன ஆகியோரை பணித்திருந்தார். ஜனாதிபதி பதவி விலகினால் அல்லது விரட்டப்பட்டால் தாமே ஜனாதிபதி என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் எதிர்பார்த்து ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்றது.

கோட்டா அன்று நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். 14 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாகப் பதவியைத் துறந்தார். 20ஆம் திகதி ரணில் ஜனாதிபதியாகப் பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டார். 22ஆம் திகதி தமக்கு அப்பதவிக்கு வர வழிசமைத்த ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினார்.

அது ஐ.தே.கவுக்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தியது. இது சூழ்நிலையின் காரணமாக ஏற்பட்ட ஒற்றுமை என்று அதனால் தான் கூறுகிறோம். நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டெடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தோடு இணைய வேண்டும் என்றே இப்போது ஜனாதிபதி கூறுகிறார்.

ஆனால் அதற்கான முறையாக வகுக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான திட்டம் ஒன்று இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டமானது உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் திட்டமே தவிர் நீண்ட கால திட்டமல்ல.

அத்திட்டத்தின் கீழ், மென்மேலும் கடன் பெற்றாலும் அதனைத் திருப்பிச் செலுத்த வழிமுறைகளைக் காண வேண்டும் என்று ஜனாதிபதியே தமது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால் எதிர்க்கட்சிகளை அடக்கவும் ஏமாற்றவும் முற்படும் ஓர் அரசாங்கத்தால் ஒற்றுமையை நிலைநாட்ட முடியாது என்பதேயாகும். ஒரு புறம் அடக்குமுறை சட்டங்களை நிறைவேற்ற முயலும் அரசாங்கம் தமிழ்க் கட்சிகளை ஏமாற்றியும் வருகிறது. எவ்வாறு ஒற்றுமை ஏற்படும்? 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .