2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜீவகாருண்யம்

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 15 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
shagthivel@gmail.com

கிழக்கின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலை, கோவில்களும் துறைமுகங்களும் மலைச் சாரல்களும் இயற்கை வனப்பு மிக்க சோலைகளும், ஒருங்கே அமையப்பெற்ற பிராந்தியமாகக் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். 

திருகோணமலையின் இயற்கை வனப்புக்கு முத்தாரமாய் அமைவது, திருக்கோணேஸ்வரம் கோவில் வளாகத்தில் துள்ளித்திரியும் மான்கள் கூட்டங்களும் ஆகும். இவை, மாவட்டத்துக்கும்  கிழக்கிற்கும் தமிழ் மக்களுக்கும்  இலங்கைத் தீவுக்கும் அழகு சேர்க்கும் அரும் பொக்கிஷங்களாகும். 

 திருகோணமலை நகரை மெருகூட்டும் மான்கூட்டங்கள்  உலா வருவதானது, திருமலை வாழ் மக்களை மாத்திரமின்றி,  உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்தவையாகவும் செல்லப்பிள்ளைகளாகவும் காணப்படுகின்றன.   

 ஆனால், இப்போது  பயனத்தடை காரணமாக, திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மான்கள் சரணாலயத்தில் வாழும் மான்கள், உணவு தேடி, திருகோணமலை வீதிகளில் அலைந்து திரிவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  

 கடந்த சில வருடங்களாக, இந்த மான்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வந்தது. பயணத்தடையின் காரணமாக, உணவு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தற்சமயம் அரசிடம் விசேட அனுமதி பெற்று, உணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன. இதனை ரோட்டரி கழகத்தின் சார்பில் மருது என்பவர் முன்னெடுத்து வருகின்றார்.  

 வழங்கமாக காட்டில் வாழும் மிருகங்கள் காடுகளை நம்பியே, தத்தமது உணவு, உறைவிடத்தைக் கொண்டிருக்கும். ஆனாலும் பார்ப்பதற்கு வசீகரமான விலங்காகக் காணப்படுவது ‘மான்’ என்றுதான் சொல்வார்கள். ஏனெனில், சீதையைக் கவர்ந்த விலங்கல்லவா!

காட்டில் வாழும் மிருக இனங்களில் ஒன்றான மான்கள், நகரில் வாழத் தொடங்கினாலும் அதற்குரிய உணவு, தங்குமிடம், நீர் உள்ளிட்டவற்றை நகர்ப் பகுதியில் எவ்வாறு பெற்றுக் கொள்ளும் என்பதுவும் கேள்வியாகவே அமைந்துள்ளது. இக்கேள்விகளுக்கு பதில் தருகின்றார், இந்த மான்களுக்கு கடந்த மூன்றரை வருடங்களாக உணவு வழங்கிவரும் திருகோணமலை, பாலையூற்று பூம்புகார் கிழக்கைச் சேர்ந்த மருது என அழைக்கப்படும் குப்பையாண்டி மருதையா.  

 கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்னர், ஒரு சில மான்கள்தான் திருகோணமலை நகருக்கு வந்து வாழ்ந்தன. அவை நகரில் உணவின்றி அலைந்து திரிந்தபோது, ரோட்டரி கழகத்தால் அந்த மான்களுக்கு உணவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்டேன். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தொடர்ந்து உணவளித்து வருகின்றேன். தற்போது 100 இற்கு மேற்பட்ட மான்கள் உள்ளன.  

 என்னிடம், முச்சக்கர வண்டி ஒன்று உள்ளது. கடைகளிலும் வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் பழக்கடைகளிலும் கழிவுகளாக ஒதுக்கப்படும் மரக்கறி வகைகள், பழங்கள், உள்ளிட்டவற்றை எடுத்துவந்து, இந்த மான்களுக்கு உணவாக வழங்கி வருகின்றேன்.  

 தற்போதைய கொரோனா அச்சத்தின் காரணத்தால் நாடே முடக்கப்பட்டுள்ள இந்நிலையில், கடைகள், மரக்கறி சந்தைகள்  முற்றாகப் பூட்டப்பட்டுள்ளதால் இந்த மான்களுக்கு உணவு பெற்றுக் கொள்ள, மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டேன். எனினும், மரக்கறி விற்பனையாளர்களிடம் கிடைக்கப்பெறும் மரக்கறி கழிவுகளைப் பெற்றுக் கொண்டு, உணவளித்து வருகின்றேன்.  

  மான்களுக்கு குடி நீர் வழங்குவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள நீர் தொட்டிகளில், உள்ளூராட்சி மன்றத்தினர் தினமும் நீர் வழங்கிவிட்டுச் செல்வார்கள்,  

 குறிப்பாக, மரக்கறிகள், அன்னாசி, பப்பாசி, கொய்யா, உள்ளிட்டவற்றை இந்த மான்கள் விரும்பி உண்கின்றன. இந்த மான்களுடன், மூன்றரை வருடங்களாகப் பழகி வருகின்றேன். ஆரம்பதில் இரண்டு, மூன்று மான்கள் தான் இருந்தன. தற்போது அவை 100 இற்கு மேற்பட்டனவாக உள்ளன. ஆரம்பத்தில் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் எவ்வாறாயினும் உணவளித்து வந்தேன். நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் காலையும் பிற்பகலும் என இரண்டு வேளைகளில் மாத்திரம்தான் உணவளித்து வருகின்றேன். 

எத்தனை மணி நேரம் என்றாலும் சரி, எனது ஓட்டோவின் சமிக்ஞை அல்லது ‘கோண்’ சத்தம் கேட்டாலே அனைத்து மான்களும் ஓடி வந்து, என்னைச் சூழ்ந்து விடுகின்றன. அப்போது எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்படும்,    

 இவ்வாறு மான்களுக்கு உணவளித்து வரும் ஜீவ காருண்ய செயற்பாடுகளுக்கு எனது குடும்பத்திலும் பூரண ஆதரவு கிடைக்கிறது. இவ்வாறு மான்களுக்கு உணவுகளைப் பெற்றுக் கொண்டு, வழங்குவதற்காக ரோட்டரி கழகத்தினர் மாதாந்த வேதனம் வழங்குகின்றார்கள்.  

 என்னையும் மான்களையும் வைத்து அதிகளவு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்களை எடுத்துச் செல்வார்கள். இந்த மான்கூட்டம், திருமலை நகரின் அழகுக்கு அழகு சேர்க்கிறது” என்றார்.   

 மிருகங்களும் உயிர்கள்தானே! காட்டில் வாழும் உயிரினம் ஒன்று, நகரில் மனிதர்களுடன் ஒட்டி உறவாடி, வாழப் பழகியுள்ள இந்நிலையில், அதற்குத் தொந்தரவு ஏற்படாதவாறு மனிதர்கள் நடந்து கொள்ளவும்  தம்மாலான உணவுகளை வழங்கி ஆதரவு கொடுக்கவும், குறிப்பாக நாடே முடக்கப்பட்டுள்ள இந்நிலையில் இவ்வாறான ஜீவ காருணயம் மிக்க சேவைகளில் இணைந்து கொள்வது சாலச் சிறந்தது எனலாம். ஜீவகாருண்யம் என்றும் உயர்வைத் தரும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .