2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டட்லி-செல்வா ஒப்பந்தம்: தெரிந்தே செய்த வினை

Mayu   / 2024 ஜனவரி 24 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீ நிலங்கோ

1964 டிசெம்பரில் சிறிமா பண்டாரநாயக்க பாராளுமன்றத்தைக் கலைத்தார். 1965இல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அவை ஆட்சியமைக்கப் போதுமானவையல்ல என்பதை டட்லி சேனாநாயக்க நன்கறிந்திருந்தார்.

இதனால் அவர் ஒரு பரந்துபட்ட கூட்டணிக்கான முயற்சிகளை எடுத்தார். இக்காலப்பகுதிக்கு சற்றுமுன் வரை தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. இதனை நன்கறிந்திருந்த சேனாநாயக்க எப்படியாவது தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பதை தடுக்க வேண்டும் என்று நினைத்தார். 

சத்தியாகிரகத்தின் தோல்வியைத் தொடர்ந்து திக்கற்ற ஒன்றாகத் தமிழரசுக் கட்சி இருந்தது. இக்கட்டத்திலேயே தமிழரசுக் கட்சியை சேனாநாயக்க பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். டட்லி சேனநாயக்காவுக்கும் செல்வநாயகத்துக்கும் தொடர் சந்திப்புகள் இடம்பெற்றன. டட்லி அரசாங்கத்தை அமைத்தால் தமிழரசுக் கட்சியின் ஆதரவை விரும்பினார். தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தேடித் தரவில்லை என்ற எண்ணம் தமிழர்களிடையே இருந்தது.

அதேவேளை, பண்டா-செல்வா உடன்படிக்கையை இல்லாமல் செய்வதில் டட்லி தலைமைப் பாத்திரம் வகித்தார் என்பதும் தமிழர்களுக்குத் தீர்வை வழங்குவதை அவர் தொடர்ச்சியாக எதிர்த்தும் வந்தவர் என்பதும் முக்கியமானது. 

இருந்தாலும் செல்வநாயகம் பேச்சுவார்த்தைக்கு இணங்கினார். அதனிலும் மேலாகப் பண்டா-செல்வா உடன்படிக்கையில் உள்ள விடயங்களை விட மிகக் குறைவான விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு டட்லி உடன்படவில்லை. சற்றே மாற்றியமைக்கப்பட்ட ஒரு திட்டத்திற்கு அவர் உடன்பட்டார்.

இது ஒரு இரசிய உடன்படிக்கையாக அமைந்தது. 1965இல் கைச்சாத்திடப்பட்ட சேனநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கையின் (டட்லி-செல்வா ஒப்பந்தம்) மைய அம்சம், பிரதிநிதித்துவ அதிகாரங்களைக் கொண்ட மாவட்ட சபைகளை ஸ்தாபிப்பதாகும்.  அதேவேளை, தமிழ் மொழியின் பயன்பாடு தொடர்பாகவும் சில விடயங்கள் இவ்வுடன்பாட்டில் இருந்தன. தமிழ் மொழியை வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாகவும் பதிவு செய்யும் மொழியாகவும் மாற்றுவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்க சேனநாயக்க ஒப்புக்கொண்டார். 

நாடு முழுவதும் தமிழ் பேசும் மக்கள் அதிகாரபூர்வ மற்றும் பிற வணிகங்களைத் தமிழில் பரிவர்த்தனை செய்ய விதிமுறைகளில் வழிவகை செய்யப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாகச் சிங்கள மொழிக்கான 1961ஆம் ஆண்டு நீதிமன்ற மொழிச் சட்டத்தைத் திருத்துவதற்கும் சேனநாயக்க ஒப்புக்கொண்டார்.

குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் முதற்கட்டமாக இரு மாகாணங்களின் மாவட்டங்களில் உள்ள காணியற்ற குடியிருப்பாளர்களுக்கும், பின்னர் இரு மாகாணங்களிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும், இறுதியாக மற்ற குடிமக்கள், தீவின் மற்ற பகுதிகளில் வசிக்கும் தமிழ் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் விதிகள், தமிழரசுக் கட்சியின் குழப்பகரமான அரசியல் நிலைப்பாட்டைக் காட்டி நின்றது. பண்டா-செல்வா உடன்படிக்கையின் போதும் அதன் பின்னரான தமிழரசுக் கட்சிக் கூட்டங்கள், மாநாடுகளில் தமிழர் உரிமை தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டைப் பின்பற்றுவதாகக் காட்டிக்கொண்ட தமிழரசுக் கட்சியின் இவ்வுடன்படிக்கையில் தனது இயலாமையை வெளிப்படுத்தியது. இதனால் தமிழரசுக் கட்சி இவ்வுடன்பாட்டை இரகசியமாகப் பேண விரும்பியது. மறுபுறம் சிங்கள இனவாதிகளுடன் கூட்டுச்சேர்ந்திருந்த டட்லிக்கும் இது வசதியாகப் போனது. 

இரு தரப்பிலும் இருந்த உயர்வர்க்க நபர்களே இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டனர். இனத்துவத்தை மீறிய வர்க்க உறவுகள் அவர்களிடம் இருந்தது. தமிழரசுக் கட்சியும் தங்கள் வர்க்க சகாக்களான ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வருவதையே விரும்பியது. இந்தப் பின்புலத்தில் இவ்வுடன்படிக்கை சார்ந்து சில விடயங்களை நோக்க வேண்டியுள்ளது. 

சேனநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கையானது பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் இருந்த  பிராந்திய சபைகளுக்குப் பதிலாக மாவட்ட சபைகளை மாற்றியது. ‘பிராந்திய’ என்ற சொல் தெளிவாகச் சுயாட்சியைக் குறிக்கிறது. இதனால் இதை டட்லி சேனாநாயக்கவால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே உள்ளாட்சி நிர்வாகத்தின் நடைமுறையில் உள்ள அலகான ‘மாவட்டம்’ என்று மாற்றப்பட்டன. பிராந்திய சபைகள் வடக்கு மற்றும் கிழக்கின் புவியியல் ரீதியாக இணைந்த தமிழ் பகுதிகளைக் குறிப்பிட்டு, ‘மாகாண எல்லைக்கு அப்பால்’ ஒன்றிணைப்பதற்கான ஏற்பாடுகளைப் பண்டா-செல்வா ஒப்பந்தம் கொண்டிருந்தது. ஆனால், மாவட்ட சபைகள் அரசியல் கலாசார ஒற்றுமை இல்லாமல், துண்டு துண்டாக இருக்க வேண்டும்.

ஆயினும்கூட, இது தமிழரசுக் கட்சிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாறியது. இது இரண்டு விடயங்களைத் தெளிவாகக் காட்டியது. தமிழருக்கு எதை வழங்க இயலாது என்பதில் சிங்கள அரசுத் தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள். மறுபுறம் தமிழரசுக் கட்சி தமிழருக்கு அவசியமான தீர்வு என்பதில் உறுதியின்றியும் அக்கறையின்றியும் இருந்தது.   

இது குறித்துப் பல நாடுகளில் நீதிபதியாக இருந்த சச்சி பொன்னம்பலம் தனது  ‘Sri Lanka : The National Question and the Tamil Liberation Struggle’  என்ற தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
‘பண்டாரநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கையானது, இந்திய அரசியலமைப்பின் கீழ் மாநிலங்களுக்கு, நைஜீரிய கூட்டாட்சி அமைப்பின் கீழ் அல்லது கனேடிய அரசியலமைப்பின் கீழ் உள்ள மாகாணங்களுக்கு வழங்கப்பட்டதை விட பரந்த மற்றும் விரிவான அதிகாரப் பகிர்வு பகுதிகளைக் கொண்டிருந்தது.

ஆனால், சேனாநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கையில், மாவட்ட சபைகளுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டவில்லை. குறைந்தபட்சம் அதுகுறித்த குறிப்பு கூட இல்லை.  மாவட்ட சபைகளின் பெயரால் எதுவுமற்ற வெற்றுக் கோதுக்கு  தமிழரசுக் கட்சி  எப்படி இழிவான முறையில் ஒப்புக்கொண்டிருக்க முடியும்?’

இந்தக் காரணங்களாலேயே தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் பண்டா-செல்வா உடன்படிக்கை பேசப்படும் அளவுக்கு டட்லி-செல்வா உடன்படிக்கை பேசப்படவில்லை. இவ்விடத்தில் பண்டாரநாயக்க உடன்பட்டதைக் கூட கருத்தில் எடுக்க சேனாநாயக்க தயாராக இருக்கவில்லை என்பது சிங்களத் தேசியவாதத்தின் அகங்காரம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரானதாக ஒரு தசாப்தகாலத்தில் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதைக் காட்டும் நல்லதொரு குறி காட்டி. 

தமிழரசுக் கட்சியின் அரசியல் சொல்லாடல்கள் தமிழ் அரசு (அரசாங்கம்) என்ற அடிப்படையிலேயே முதலில் இருந்து இருந்து வந்தது. இதனால் ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி (Federal Party)  என்றும் தமிழில் தமிழரசுக் கட்சி என்று பெயர்சூட்டி கபடத்தனத்தை தமிழரசுக் கட்சித் தலைவர்களும் செல்வநாயகமும் வெளிப்படுத்தினார். இந்த ஏமாற்றின் வழியே தமிழ் காங்கிரஸுக்குப் போட்டியாக வாக்குகளைத் தேடித் தேர்தலில் வெற்றி பெற்று வந்தனர்.

கூட்டாட்சி மற்றும் தமிழ் அரசு பற்றிய கற்பனாவாதக் கருத்துக்களால் தமிழ் மக்களைக் கவர்ந்த தமிழரசுக் கட்சியால் அவர்களது அரசியல் எஜமானர்களுடன் பேரம் பேசி, அதிகாரப் பகிர்வின் எளிமையானவடிவங்களைப் பெற முடியாமல் போனது.

சச்சி பொன்னம்பலம் இந்த உடன்படிக்கை குறித்து இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுகிறார்: ‘புதிய உடன்படிக்கையில் உள்ள குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்ற ஏற்பாடுகள் தற்போதைய நடைமுறையின் தோராயமான விளிம்புகளை மழுங்கடித்தது. இங்கும், தமிழ் மக்களுக்கான பிரத்தியேகமான பிரதேசங்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அடிப்படைத் தேவையிலிருந்து தமிழரசுக் கட்சி பின்வாங்கியது.

டி.எஸ் சேனநாயக்காவின் காணி உரிமைக்கான குடியுரிமைத் தகுதியை அறிமுகப்படுத்துவதற்கும் அது ஒப்புக்கொண்டது, இதன் மூலம் தமிழர் தாயகத்தில் அரசாங்கத்திடம் இருந்து காணியைப் பெறுவதற்கான உரிமை இந்தியத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டது.’

இந்தப் பின்புலத்திலேயே இவ்வுடன்படிக்கையை நோக்க வேண்டும். 1965 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஏழு கட்சிகளைக் கொண்ட கூட்ரசாங்கத்தை நிறுவியது. இதில் பிலிப் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியும், தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியனவும் பச்சை இனவாதிகளான கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க ஆகியோரும் இருந்தனர். இவர்களை விட, யூஎன்.பிக்குள்ளும் தீவிரமான சிங்கள இனவாதிகள் இருந்தனர்.

இப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் எனத் தமிழரசுக் கட்சி தமிழரை நம்பவைத்தது. இன்னும் சரியாகச் சொல்வதானால் தமிழ்த் தேசியத்தின் பெயரால் இன்றுபோல் அன்றும் முட்டாளாக்கப்பட்டார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .