Thipaan / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி மீது, 'அவை உரிமை மீறல் பிரச்சினைக்காக' தீர்மானம் கொண்டுவரப்பட்டு, சபாநாயகர் கண்டனம் செய்துள்ளார். 'இனிமேல், இது போன்று அவையில் பேசாததை உறுப்பினர்கள், அறிக்கையாக வெளிவிடக் கூடாது' என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். இந்த கண்டனத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., புதிய தமிழகம் கட்சி, மார்க்ஸிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளனர்;. தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால், அவை உரிமை மீறல் பிரச்சினைக்கான இந்த நடவடிக்கை, தமிழகத்தில் 'கருணாநிதி எதிர் ஜெயலலிதா' என்ற அரசியலை முன்னிறுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளை, வருகின்ற மே மாத இறுதியில் புதிய அரசு அமைந்தாக வேண்டும். இந்தச் சூழ்நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பல முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நலக்கூட்டணி, பாரதிய ஜனதாக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அ.தி.மு.கவுக்;கும், தி.மு.க.வுக்கும் மாற்றாக களம் காணுகின்றன. ஆட்சியில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இருந்தாலும் சரி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருந்தாலும் சரி, மற்றய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு நான்கு ஐந்து மாதங்கள் வரை தங்கள் அரசியலைச் செய்யலாம். ஆனால், தேர்தல் களம் நெருங்கும் போது அரசியல் அ.தி.மு.க அல்லது தி.மு.க.வை சுற்றி வந்து விடும்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தால், தமிழக அரசியல் அ.தி.மு.கவை சுற்றி வருவது போல், அதிரடி நடவடிக்கைகள் இருக்கும். அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றால் அரசியல் தி.மு.க.வை சுற்றி வரும் வகையில் திடீர் நடவடிக்கைகள் அமையும். அந்த வரிசையில்தான் அ.தி.மு.கவுக்கு எதிராக இருந்த பல கட்சி அரசியல், இப்போது திசை மாறுகிறது. உரிமை மீறல் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் செய்யப்பட்டதன் மூலம், அ.தி.மு.கவுக்கு மாற்று தி.மு.க. என்ற நிலையை அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டுள்ளார்.
அதற்கான அரசியலுக்கு இந்த உரிமை மீறல் பிரச்சினையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை முழு வடிவம் கொடுக்கும். 1970 களில் இருந்து, 'தமிழக அரசியல் களத்தை' தங்களுக்குள் வைத்துக் கொள்ளும் முயற்சியை, இரு திராவிடக் கட்சிகளும் வெற்றிகரமாகச் செய்து வருகின்றன. இரு கட்சிகளில் இருந்தும் எத்தனையே பேர் விலகி புதுக் கட்சி ஆரம்பித்து விட்டனர்;. ஆனால், யாரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவுக்கு மாற்றாக வந்து விடவில்லை.
இந்த இரு கட்சிகளுக்கும் எதிராக எத்தனையோ புதிய தலைவர்கள் தோன்றி விட்டார்கள். ஆனால், கடந்த 49 வருடத்தில் தமிழக அரசியல் தங்களுக்குள்ளே சுற்றி வருவதற்கு ஏற்ற வகையில், முதல் சுற்றில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் அரசியல் செய்தனர். இந்த சுற்றில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.
தி.மு.க.வின் சார்பில், மு.க. ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை இருந்த வரை, முதல்வர் ஜெயலலிதா அமைதி காத்தார். எப்போதாவது குறை கூறினால் அதில் ஸ்டாலினையும் சேர்த்து விமர்சித்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டத்தில் கூட 'நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு, ஸ்டாலின் பாவமன்னிப்பு கோரி வருகிறார்' என்று தாக்கிப் பேசினார்.
ஆனால், திடீரென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தன்னை முன்னிறுத்தி வருகிறார். முதல்வர் வேட்பாளராக தானே முன் நிற்பேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அதற்காக முதலில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டது தொடர்பான கண்டன ஆர்பாட்டத்துக்கு சென்னையில் கருணாநிதியே தலைமை தாங்கினார். பின்னர், தன் மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் தானே நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரானார்.
'மனு போட்டு ஆஜராவதிலிருந்து விதிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம்' என்று கூறிய தன் வழக்கறிஞர்களின் ஆலோசனையை புறக்கணித்து விட்டு, நீதிமன்றத்துக்குச் சென்று ஆஜரானார். இந்நிலையில்தான் இப்போது அவை உரிமை மீறல் பிரச்சினையில் கருணாநிதி பக்கமாக அரசியல் திரும்பியிருக்கிறது. ஆக மொத்தம், தமிழகத் தேர்தல் களம் தயாரானதும் தமிழக அரசியலும் 'ஜெயலலிதா, கருணாநிதி' என்ற 'திராவிடக் கட்சிகள் அரசியல்' சுற்றுக்குள் வந்து விட்டது.
மக்கள் மனதில் எத்தனை அணிகள் நின்றாலும் 'தங்கள் வாக்கை ஒன்று அ.தி.மு.கவுக்குப் போட வேண்டும். இல்லையென்றால் தி.மு.க.வுக்குப் போட வேண்டும்' என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வருத்தப்பட வேண்டியது 'மாற்றம் காணப் புறப்பட்டு இருக்கும் கட்சிகள்' தான்.
இந்தக் களம் இப்படி தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தீவிர ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை அழைத்து, தமிழக தேர்தல் நிலவரங்கள் குறித்த ஆலோசனையை டெல்லியில் நடத்தி விட்டது. 'மழை வெள்ள பாதிப்பால் தேர்தல் தள்ளிப் போகும்' என்று பரவிக்கிடந்த வதந்திக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
'அது மாதிரி கோரிக்கை எதுவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை' என்று கூறியுள்ள இந்திய தேர்தல் ஆணையம், 'தமிழகத்தில் நேர்மையாக தேர்தல் நடத்துவது பற்றி மட்டும் ஆலோசித்தோம்' என்று அறிவித்துள்ளது. 'நேர்மையான தேர்தல் நடத்துவோம்' என்றால் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும் என்பது, தேர்தல் ஆணைய அகராதியின் அர்த்தம்.
இது போன்ற சூழலில், தமிழகத்தின் பா.ஜ.க. தேர்தல் விவகாரங்களைக் கவனிக்க மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவி செய்ய இன்னொரு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நியமமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனித்து வரும் முரளிதரராவின் அதிகாரத்தைக் குறைக்கும் செயல் இது என்றாலும், தேர்தல் களத்தில் பா.ஜ.க. காலடி எடுத்து வைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதே போல் மக்கள் நலக்கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சீதாராம் எச்சூரி ஆகியோர் எல்லாம் மதுரையில் அக்கூட்டணி சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
இப்படியொரு சூழ்நிலையில் தி.மு.க. தலைவர் மீதான உரிமை மீறல் பிரச்சினை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க.வுடன் சேர்ந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கூட்டணிக் கட்சியினரின் தேர்தல் பிரசாரத்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பெப்ரவரி மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
வேட்பு மனு வாபஸ் வாங்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வரை கூட்டணியில் எந்த மாற்றமும் வரலாம். எப்படிப்பட்ட கூட்டணியும் உருவாகலாம் என்பதுதான் இதுவரை தேர்தல் வரலாறு காட்டி வந்த பாடம். அது தமிழகத்தில் மட்டுமல்ல- அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. ஆகவே 'மாற்றத்தைக் கொண்டு வர களத்தில் நிற்கும் கட்சிகள்' தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் கூட்டணி நடவடிக்கைகளுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்கள் என்பது தமிழக தேர்தல் வரலாற்றிலும் ஒரு திருப்புமுனையாகவே இருக்கும்.
எப்படியிருந்தாலும் தமிழக அரசியல் 'அ.தி.மு.க, தி.மு.க.வை'ச் சுற்றி திடீரென்று திரும்பி விட்டது 'மாற்றத்தைக் காணத் துடிக்கும்' கட்சிகளுக்கு ஒரு பின்னடைவுதான். ஏனென்றால் இந்த இரு பெரும் கட்சிகளை விடுத்து விட்டு, மற்ற சிறிய கட்சிகள் பக்கம் மக்கள் திரும்புவதற்கு தமிழக அரசியல் களம் இன்னும் தயாரானதாகத் தெரியவில்லை. அப்படி தயார் செய்வதற்கு உறுதியான தலைவரும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே கசக்கும் உண்மை!
தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரஸும் தமிழகத்தில் பலம் பெற முடியாத நிலையில், மாநிலத்திற்குள்ளேயே உள்ள சிறு சிறு கட்சிகள் தி.மு.க. அல்லது அ.தி.மு.கவுக்கு மாற்றாக உருவெடுப்பது கடினம் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. டெல்லியில் ஓர் 'அரவிந்த் கெஜ்ரிவால்' போலவோ, பீஹாரில் உருவான 'லாலு- நிதிஷ்குமார் கூட்டணி போலவோ', தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு எதிராக உருவாக வாய்ப்பு இல்லை என்ற நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஆகவே, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலும் 'அ.தி.மு.க, தி.மு.க.'வைச் சுற்றிய அரசியலாகவே இருக்கும்.
23 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
1 hours ago