2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தண்டிக்கப்படும் ஏழைகள்

Editorial   / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வந்தர்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்படும் ஏழைகள்

ஏம்.எஸ்.எம். ஐயூப்

தற்போது நட்டில் நிலவும் பொருளாதார நிலைக்கு இந்நாட்டு சாதாரண மக்கள் பொறுப்பாளர்கள் அல்லர். பொருளாதாரத்தை சீரழிப்பதில் அவர்கள் பங்களித்து இருந்தால் அது ஆட்சியாளர்களின் பங்களிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்காகத் தான் இருக்க வேண்டும்.

 சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் செய்ததையடுத்து, அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளும் அதனையே எடுத்துக் காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டமே தற்போதைய  நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க உள்ள ஒரே வழி என பொதுவாக கருதப்படுகிறது. அவ்வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுக்கலாம் என்பதை நன்குணர்ந்தே அரசாங்கமோ ஏனையவர்களோ அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று கூற முடியாது. உண்மையைக் கூறுவதாக இருந்தால், வேறு வழியின்றியே எல்லோரும் நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தில் தொற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் இலங்கை தாம் வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை மறுசீரமைக்க அந்நாடுகளை இணங்கச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாணய நிதியம் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அரசாங்கத்தினதும் நாணய நிதியத்தினதும் அதிகாரிகள் சுமார் ஐந்து மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வருடம் செப்டெம்பர் 1ஆம் திகதி உடன்பாடொன்றை செய்து கொண்டனர். ஆளணி மட்டத்திலான உடன்பாடு என்று அது அழைக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் கடன் மறுசீரமைப்புக்கு கடன் வழங்கிய நாடுகளை இணங்கச் செய்தால் மட்டுமே இந்த ஆளணி மட்டத்திலான உடன்பாட்டை நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகரிக்கும் என்று அந்த உடன்பாடு செய்து கொண்டபோதே அந்நிதியத்தின் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் வங்கிகளிடமிருந்தும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற நிதியங்களிடமிருந்தும் பெற்ற கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்று நாணய நிதியம் ஒருபோதும் கூறவில்லை. ஆயினும் நாம் உங்களுக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் நாட்டில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களையும் மறுசீரமைக்க வேண்டும என்று கடன் வழங்கிய சில நாடுகள் கூறின. கடன் மறுசீரமைப்பு என்றால் வழங்கிய கடனில் ஒரு பகுதியை கழித்துவிடுதல் அல்லது கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல் அல்லது இரண்டுமாகும்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பிலிருந்து வேறுபட்டதாகும். வெளிநாட்டு கடன்களைப் பொறுத்தவரை, கொடுத்த கடனில் அல்லது அதற்கான வட்டியிலிருந்து ஒரு பகுதியை கழித்து விடுவதா அவ்வாறாயின் அது எவ்வளவு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிப்பதா அவ்வாறாயின் எவ்வளவு காலத்துக்கு என்பதெல்லாம் கடன் வழங்குநரே தீர்மானிப்பார். ஆனால், உள்நாட்டு கடன் விடயத்தில் இவை அனைத்தையும் கடனாளியான அரசாங்கமே தீர்மானிக்கிறது.

உதாரணமாக, வங்கிகள் ஏற்கெனவே தமது வருமானத்தில் 50 சத வீதத்தை வரிகளாகவும் வேறு விதமாகவும் அரசாங்கத்துக்கு செலுத்தி வருவதால் இந்த விடயத்தில் வங்கிகளுக்கு மேலும் பழுவை சுமத்த முடியாது என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்குப் பதிலாக சேமலாப நிதியத்திடமிருந்து தாம் பெற்ற கடனுக்கான வட்டியை 9 வீதமாக குறைத்தே வழங்குவோம் என்று அரசாங்கம் முடிவு செய்து அறிவித்துள்ளது. 

தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய ஊழியர்களின் சந்தாப் பணத்தைக் அரசாங்கத்துக்கு கடனாக வழங்கும் சேமலாப நிதியமோ தோட்டத் தொழிலாளர்களோ ஏனைய துறைகளின் ஊழியர்களோ அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாது.

ஆட்சியாளர்களின் ஊழல், மோசடி, வீண் விரயம் மற்றும் நிர்வாக சீர்கேடு ஆகியவற்றின் காரணமாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதிலிருந்து மீள்வதற்காக நாணய நிதியத்திடம் உதவி கோரப்பட்டது. நாணய நிதியம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வேண்டும் என்றது. வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செய்துவிட்டு வாருங்கள் என்றனர். அப்போது அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர்களுக்கான வட்டி வீதத்தை குறைத்தது.

அதாவது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் நாட்டை மீட்டெடுக்கவென அவர்களது நிர்வாக சீர்கேட்டால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட ஏழைகள் மீதே மீண்டும் பழுவை சுமத்துகிறார்கள்.

 நாணய நிதியம் கடன் மறுசீரமைப்புக்குப் புறம்பாக நிதித்துறையில் வேறு பல சிர்த்திருத்தங்களையும் அரசாங்கத்துக்கு பரிந்தரை செய்தது. வரிகளை அதிகரிப்பது மற்றும் செலவுக்கேற்ப மின்சாரத்தினதும் எரிபொருட்களினதும் விலையை அதிகரிப்பது அதில் முக்கிய விடயமாகும். வர்த்தகர்கள் போன்றவர்கள் மீது விதிக்கப்பட்ட அவ்வரியில் பெரும்பகுதியும் இறுதியில் சாதாரண மக்கள் மீதே சுமத்தப்பட்டது.

நாட்டை பொருளாதார ரீதியில் மீட்பதற்கான இந்தத் திட்டத்தின் கீழ் நாணய நிதியம் 4 ஆண்டுகளில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க இருக்கிறது. அதன் முதல் தவணையாக 330 மில்லியன் டொலர் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது தவணைத் தொகையை வழங்கு முன் தாம் விதித்த நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறதா என்பதை அறிய கடந்த மாத இறுதியில் நாணய நிதியம் தூதுக்குழுவொன்றை அனுப்பியது.

போதியளவு வருமானம் திரட்டப்படவில்லை என்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவாரத்தைகள் பூர்த்தியாகவில்லை என்றும் அத்தூதுக் குழுவினர் கூறியதை அடுத்து கடன் தொகையில் இரண்டாவது தவணைத் தொகையை வழங்குவதை நாணய நிதியம் காலவரையறையின்றி ஒத்தி வைத்துள்ளது.

எனவே இப்போது அரசாங்கம் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காகவும் பொது மக்கள் மீதே சுமை ஏற்றப்படுகிறது. கடந்த வாரம் நாணய நிதியத்தின் தூதுக்குழு இரண்டாவது தவணைத் தொகையைப் பற்றிய நிதியத்தின் முடிவை அறிவித்த உடனேயே லங்கா மின்சார கம்பனி (லெக்கோ) சமூக பாதுகாப்பு வரியொன்றை மின்சார பாவனையாளர்களிடம் அறவிடுவதாக அறிவித்தது.

கடந்த இரண்டு வருடங்களில் மின் கட்டணம் ஐந்து மடங்காக அதிகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை ஸ்ரீ லங்கா பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.

மாதாந்தம் அல்ல, நாளாந்தம் பல இலட்சக் கணக்கு ரூபாய் வருமானம் பெறும் உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள், பாரிய நிறுவனங்கள் தாம் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாதிருக்கும் நிலையிலேயே அரசாங்கம் இவ்வாறு சாதாரண மக்கள் மீது மென்மேலும் பொருளாதார சுமையை சுமத்துகிறது. வரி ஏய்ப்பாளர்கள் உரிய முறையில் வரி செலுத்தாத காரணத்தால் நிலுவையிலுள்ள வரித் தொகை 95,000 கோடி ரூபாவாகும். 

இதற்குப் புறம்பாக உள்நாட்டு வருவாய், கலால், சுங்கம் ஆகிய திணைக்களங்களின்  அதிகாரிகளின் ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக திறைசேரி வருடமொன்றுக்கு 50,000 கோடி ரூபாவை இழப்பதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது..

வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் பெற்றும் வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்காகும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களமே கூறுகிறது. வரிச் செலுத்துவதற்கான குறைந்தபட்ச மாதாந்த வருமானம் இரண்டரை இலட்சத்திலிருந்து ஒரு இலட்சமாக  குறைக்கப்பட்டது. ஆனால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை எனவும் அத்திணைக்களம் கடந்த ஜூலை மாதம் தெரிவித்தது.

ஓகஸ்ட் மாதம் அத்திணைக்களம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி திணைக்கள அதிகாரிகள் வரி ஏய்ப்பாளர்களிடம் இலஞ்சம் பெறுவதாக தெரிகிறது. அது தொடர்பாக திணைக்களம் அதிகாரிகளையும் வரி செலுத்த வேண்டியவர்களையும் அவ்வறிக்கை மூலம் எச்சரித்தது.

இலங்கைக்கே அரிசி விநியோகிக்கும் அரிசி ஆலையொன்றின் உரிமையாளர் கடந்த 15 வருடங்களாக பத்து இலட்சம் ரூபாய் மட்டுமே வரியாக செலுத்தியுள்ளார் என்று பாராளுமன்றத்தின் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிக திட்டமிடல் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் மஹிந்தானந்த அலுத்கமகேயை மேற்கோள் காட்டியிருந்தது.

மஹிந்தானந்தவின் அரசியல் நாகரிகம் தொடர்பாக பலர் கேள்வி எழுப்பலாம். அவை நியாயமாகவும் இருக்கலாம் ஆனால் அவர் பாராளுமன்றத்தின் குழுவொன்றினால் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களையே மஹிந்தானந்த கூறுகிறார்.

இந்த நிலைமையை மாற்றி அமைக்காமல் ஏழைகளை பிழிந்து எடுத்து நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என்று அரசாங்கத்தின் தலைவர்கள் நினைப்பதாக  இருந்தால் அது வெறும் மாயையே தவிர வேறொன்றுமல்ல.

2023.10.04

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X