Thipaan / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.கே.அஷோக்பரன் LLB(Hons)
தமிழ் மக்கள் தனி வழி அரசியலை விரும்பினார்கள் என்ற கூற்று வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் ஏற்புடையதொன்றல்ல. ஏனெனில், தமிழ் மக்கள், தாமாக தமிழ்த் தேசியத்தை நோக்கிய தனி வழிப் பயணத்தைத் தொடங்கவில்லை. மாறாக, சிங்களப் பேரினவாத அரசியலின் விளைவாக, வேறுவழியின்றி - அதன் மறுதாக்கமாக, தமிழ் மக்களைத் தனி வழி அரசியலை நோக்கிப் போக வேண்டிய சூழல் நீண்ட காலத்தில் உருவானது.
இந்த மாற்றத்தை விதைத்ததில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் பங்கு முக்கியமானது, ஆகவேதான் அதன் வரலாற்றை ஆழமாக, அகலமாக ஆராய்தல் அவசியமானதாகிறது. காலனியாதிக்கத்தின் விளைவான ஆங்கில மொழியினைத் தவிர்த்து, இந்நாட்டின் சுதேசிய மொழியை காக்கும் நோக்கம் தான் 'உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தின்' நோக்கம் என்றால், அது 'தனிச்சிங்கள' சட்டமாக அன்றி, 'சிங்கள-தமிழ்' சட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறில்லாமல் 'தனிச் சிங்கள' சட்டமாக அதனை அறிமுகப்படுத்தியதனூடாக இந்நாட்டின் சிறுபான்மையினர் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நிலையை எதிர்கொண்டனர். அடையாளம், மொழி உரிமை, சமத்துவம் என்பவற்றைத் தாண்டி வாழ்வாதாரமும் சிவில் வாழ்வும் பாதிக்கப்படும் நிலையை தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க என்ற அரசியல் ஆளுமை, ஓர் இளைஞனாக இலங்கை அரசியலுள் நுழைந்த போது 'சமஷ்டி முறை' அரசு ஒன்றே இலங்கைக்கு ஏற்ற தீர்வு எனச் சொல்லியிருந்தார். அதே மனிதர், அரசியல் அதிகாரத்தை நோக்கிய தனது பயணத்தில், தன்னுடைய பாதையை சுதேசியம் என்ற முகமூடிக்குள் 'சிங்கள-பௌத்த' இன-மைய அரசியலைக் கொண்டதாக மாற்றிக்கொண்டார். தன்னை 'லிபரல்-சோஷலிசவாதி'யாக காட்டிக்கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, 'சிங்கள-பௌத்த' இன-மைய கொள்கைகளை முன்னிறுத்தியதை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கைங்கரியமென வர்ணிப்பவர்களும் உளர். ஆனால், அவர் அவிழ்த்து விட்ட இனவாத சக்திகளை, அவரால் கட்டுப்படுத்த முடியாது போன இடத்தில் அவர் தோற்றுவிட்டார்.
முதலில் சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கி, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகக் காட்டிவிட்டு, பின்பு தமிழுக்கும் உரிய இடத்தை வழங்குதல் என்பது பண்டாரநாயக்கவின் திட்டமாக இருந்திருந்தால், நிச்சயமாக அதைச் அவர் செய்யவும் இல்லை, அவர் அவிழ்த்துவிட்ட இனவாத சக்திகள் அவரைச் செய்யவும் விடவில்லை. இந்நிலையில் அதே இனவாத சக்தியின் கரத்தால் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை அவரது றொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் வைத்து, 1959 செப்டெம்பர் 25ஆம் திகதி, தல்துவே சோமராம தேரர் என்ற பௌத்த பிக்குவினது துப்பாக்கியினால் சுடப்பட்டு, சிகிச்சைகள் பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். அவரைச் சுட்டவுடன் சோமராம தேரர் - தான் இதனை நாட்டுக்காகவும், இனத்துக்;காகவும், மதத்துக்;காகவும் செய்ததாகக் கத்திச் சொன்னார்.
தனக்கு இதுபோன்ற ஒரு நிலை வரும், அதுவும் பௌத்த பிக்கு ஒருவரினால் கொல்லப்படுவார் என பண்டாரநாயக்க துளி கூட எண்ணியிருக்கமாட்டார். அதனால்தான் அன்று பிரதமருக்கு பெரியளவில் பாதுகாப்பும் இருக்கவில்லை. தேசத்துக்;கான தனது இறுதிச் செய்தியில் கூட இதனை 'பௌத்த பிக்குவின் காவியுடையைத் தரித்திருந்த ஒரு முட்டாள் செய்த காரியம்' எனவும் 'அவன் மீது இரக்கம் காட்டுங்கள், அவனைப் பழிவாங்க வேண்டாம்' எனவும் பண்டாரநாயக்க கேட்டுக்கொண்டார்.
பண்டாரநாயக்கவைச் சுட்டது தல்துவே சோமராம தேரர்வே என்ற சிங்கள-பௌத்த பிக்கு. ஆனால், அன்றிருந்த அரசியல் சூழலில், பண்டாரநாயக்க சுடப்பட்ட செய்தி நாடெங்கிலும் பரவியபோது, அவரைத் தமிழர் ஒருவர் சுட்டுவிட்டதாகவே வதந்திகள் பரவின. அதுவும் அவரை 'சோமராமன்' எனும் தமிழன் சுட்டுவிட்டான் என்றே வதந்தி பரவியது.
ஆனால், அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்க - பண்டாரநாயக்க சுடப்பட்ட செய்தி எட்டியவுடனேயே அவசரகாலப் பிரகடனத்தை மேற்கொண்டதுடன், அவரைச் சுட்டது தமிழரல்ல என்பதை தெளிவாகச் சொல்லுமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். 1958 கலவரத்தின் தாக்கம், குறிப்பாக கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ் மக்களை மீண்டும் கடும் அச்சத்துக்;கு உள்ளாக்கியிருந்தது.
ஒரு பௌத்த பிக்குவான தல்துவே சோமராம தேரரினால் பண்டாரநாயக்க ஏன் சுடப்பட்டார்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. இதைப்பற்றி பல வதந்திகளும் பரவியிருந்த நிலையில். களனி விகாரையின் விகாராதிபதி மாபிட்டிகம புத்தரகித தேரர் இந்தக் கொலைக்கான சூழ்ச்சியைப் புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அன்றைய அரசியலைப் பொறுத்தவரை மாபிட்டிகம புத்தரகித தேரர் ஆதிக்கம் மிக்க ஒருவராகக் காணப்பட்டார்.
வணிகச் செயற்பாடுகளிலும் ஈடுபாடுகாட்டியவராக இருந்த அதேவேளை, 'எக்ஸத் பிக்கு பெரமுணவின்' (ஐக்கிய பிக்கு முன்னணி) முக்கியஸ்தராகவும் இருந்தார். தான் ஆதரிக்கும் அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்குப் பண உதவி செய்பவராகவும் இருந்தார். இந்தக் கொலையை அவர் திட்டமிட்டதற்கு வணிக ரீதியான காரணங்களே முன்னிறுத்தப்பட்டன.
அவர் வேண்டிய சில முக்கிய வணிக ரீதியான உதவிகளை பிரதமர் பண்டாரநாயக்க செய்ய மறுத்தமையே முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டாலும், இதற்காக தல்துவே சோமராம தேரர் எனும் 'சிங்கள-பௌத்த' தேசியவாத உணர்வு பொங்கிய நபரை, பண்டாரநாயக்க அந்தத் தேசியத்துக்கு விரோதமாக மாறுகிறார், துரோகியாகிறார் என்று நாட்டின் மற்றும் 'சிங்கள-பௌத்த' தேசியத்தின் நலனுக்காகவே இந்தக் கொலையைச் செய்யத் தூண்டியிருந்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 1956இல் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 'எக்ஸத் பிக்கு பெரமுண' (ஐக்கிய பிக்கு முன்னணி) சார்பில் தேசியவாத சக்திகளை ஒன்றிணைத்து முக்கிய பங்காற்றியவர்களில் மாபிட்டிகம புத்தரகித தேரரும் ஒருவர். அதேவேளை பண்டாரநாயக்க ஆட்சியில், 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து, அதைப் பண்டாரநாயக்கவினாலேயே கிழித்தெறியப்படச் செய்தவர்களில் முக்கியமானவர் மாபிட்டிகம புத்தரகித தேரர்.
இறுதியில் பண்டாரநாயக்கவின் கொலைக்கும் சூத்திரதாரியானார். பரபரப்பாக நடந்த வழக்கு, மேன்முறையீடுகளின் பின், கொலையாளி தல்துவே சோமராம தேரருக்கு மரண தண்டனையும், கொலைக்கு சூழ்ச்சி புரிந்த மாபிட்டிகம புத்தரகித தேரருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. 1958இல் தனது ஆட்சியில் மரண தண்டனையை சட்டரீதியாக பண்டாரநாயக்க இடைநிறுத்தியிருந்தார்.
ஆனால், அவர் கொலையுண்ட பின், அவரது கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குதற்காக, அவசர அவசரமாக நாடாளுமன்றத்தினால் மீண்டும் மரண தண்டனை 'முற்காலத்துக்கும் வலுவுள்ள வகையில்' (சநவசழளிநஉவiஎந நககநஉவ) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க விடயமொன்றும் நடந்தது. நாட்டுக்காக, 'சிங்கள-பௌத்த' தேசியத்துக்;காக கொலை செய்த தல்துவே சோமராம தேரர் வழக்கு நடந்துகொண்டிருந்த போதே, வழக்குக்கு பிக்குவினுடையில் வருவதை நிறுத்தியிருந்தார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட முன்பு கிறிஸ்தவராக மாறிய பின்னே தூக்கிலிடப்பட்டார்.
பண்டாரநாயக்கவின் கொலை இலங்கை அரசியலில் அன்று ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியிருந்தது. பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த விஜயானந்த தஹநாயக்க, பண்டாரநாயக்கவின் கொலைக்குப் பின் பிரதமரானார். காலியின் மக்களாதரவுமிக்க அரசியல்வாதியாக இருந்த தஹநாயக்க ஒரு சுயேட்சை அரசியல்வாதியாகவே இருந்தார். பண்டாரநாயக்கவின் 'மஹஜன எக்ஸத் பெரமுண' என்று கூட்டணி அமைந்தபோது, அதன் அங்கமாகி, பண்டாரநாயக்கவின் அமைச்சரவையிலும் இடம்பெற்றார்.
அன்று பண்டாரநாயக்கவுக்கு அடுத்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலம்பொருந்திய தலைவராக இருந்தவர் சி.பி.டி சில்வா. பண்டாரநாயக்க கொல்லப்பட்டபோது, சி.பி.டி. சில்வா தனது உடல்நலக்குறைவு சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்தார். அன்று நாடாளுமன்ற அவைத் தலைவராக இருந்த சி.பி.டி சில்வா, தான் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவர் இல்லாத சூழலில் தஹநாயக்கவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள அவரால் முடியவில்லை. பண்டாரநாயக்கவினால் கட்டியெழுப்பப்பட்ட 'மஹஜன எக்ஸத் பெரமுண' என்ற கூட்டணி உள்ளுக்குள் பிளவுபடத் தொடங்கியது.
பிரதமர் தஹநாயக்க தனக்கு எதிராகவும், தனது அரசாங்கத்துக்;கெதிராகவும் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்து. அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டாலும் தொடர்ந்து நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடிவடையும்வரை (1961 வரை) ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாத சூழலில், நாடாளுமன்றைக் கலைக்குமாறு ஆளுநரிடம் பிரதமர் தஹநாயக்க கேட்டுக்கொண்டதன் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 1960ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.
1960ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்லில், 'மஹஜன எக்ஸத் பெரமுண' என்ற பண்டாரநாயக்கவின் கூட்டணி சிதறிப்போனது. தலைவர் இல்லாத நிலையில், உடனடியாக நேரடி அரசியலுக்கு வரும் எண்ணம் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு இல்லாத நிலையில், அவரது ஆதரவுடன் சி.பி. டி சில்வா தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டது.
லங்கா சமசமாஜக் கட்சி 100 வேட்பாளர்களைக் களமிறக்கியது. பிலிப் குணவர்த்தனவின் கட்சி தனியாகவும், எஸ்.டி.பண்டாரநாயக்க தான் புதிதாகத் தொடங்கிய 'போஸத் பண்டாரநாயக்க பக்ஷயவில்' (போஸத் பண்டாரநாயக்க கட்சி) தனியாகவும், பிரதமர் விஜயானந்த தஹநாயக்க தான் புதிதாகத் தொடங்கிய லங்கா பிரஜாதாந்திர பக்ஷயவில் (லங்கா ஜனநாயகக் கட்சி) தனியாகவும், சிங்கள-பௌத்த தேசியவாத தலைவர்களான கே.எம்.பி.ராஜரட்ண 'ஜாதிக விமுக்தி பெரமுணவில்' (தேசிய விடுதலை முன்னணி) தனியாகவும், இன்னொரு தேசியவாதத் தலைவரான எல்.எச்.மெத்தானந்த சிங்கள பௌத்த தர்ம சமாஜ கட்சியில் தனியாகவும் போட்டியிட்டனர். இந்த நிலையின் சாதகத்தன்மையை உணர்ந்து, மீண்டும் அரசியல் களம் புகுந்திருந்த டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 'இனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இல்லை' என்ற கோசத்துடன் தேர்தல் களத்தை எதிர்கொண்டது.
1960ஆம் ஆண்டு தமிழர்களுக்கு சிக்கலுடனேயே பிறந்தது. 1960ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி, 'தனிச் சிங்கள' சட்டம் அமுல்படுத்தப்படும் முதலாவது வேலைநாளாக அமைந்தது. இதனை எதிர்த்து இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) ஹர்த்தால் போராட்டமொன்றை வடக்கிலும் கிழக்கிலும் அறிவித்தது. மார்ச் மாதம் தேர்தலையொட்டிய பிரசாரங்களில் அனைத்து பெரும்பான்மைக் கட்சிகளும், 'தனிச் சிங்கள' சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவோம் என்பதை வேதவாக்காக முன்மொழிந்தன.
தாம் ஆட்சிக்குவந்தால் 'தனிச் சிங்கள' சட்டத்தை எந்த சமரசமுமின்றி அமுல்படுத்துவோம் என்பது சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றானது. தனியாகப் புதிய கட்சியொன்றின் மூலம் தேர்தலைச் சந்தித்த பிரதமர் விஜயானந்த தஹநாயக்க, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் அனைவரையும் மீள இந்தியாவுக்கே அனுப்புவேன் என்று உறுதிமொழி தந்தார்.
பிலிப் குணவர்த்தன பிரதமராவதற்கு ஆதரவு தருவதாக அறிவித்த மெத்தானந்த, பௌத்த மதத்துக்;கு அரசில் அதன் உரிய உயரிய இடம் வழங்கப்படவேண்டும் எனப் பிரசாரம் செய்தார். சிங்கள-பௌத்த தேசியவாதியான மெத்தானந்தவின் ஆதரவுடன் மார்க்ஸிஸப் புரட்சியாளரான பிலிப் குணவர்த்தன, சிங்கள-பௌத்த இனவாதப் புரட்சியாளரானார். மறுபுறத்தில் எஸ்.டி.பண்டாரநாயக்க இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீண்டும் இந்தியாவுக்கே அனுப்பப்படவேண்டுமென்றும், வெளிநாட்டினரின் சொத்துக்களும், பெருந்தோட்டங்களும் தேசிய மயமாக்கப்பட வேண்டும்மெனவும் பிரசாரம் செய்தார்.
'இலங்கைத் தேசியம்' என்ற முகமூடிக்குள் அப்பட்டமான 'சிங்கள-பௌத்த' பேரினவாத அரசியல் முன்னிறுத்தப்பட்டது. இங்கு அனைத்துப் பெரும்பான்மைக் கட்சிகளினுடைய நிலைப்பாடும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது. அளவுகள் மட்டுமே ஒன்றுக்கொன்று கூடிக்குறைந்தன. டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.
1960ஆம் ஆண்டு மார்ச் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை.
(அடுத்த வாரம் தொடரும்...)
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago