Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அரசியல் அக மற்றும் புறக்காரணிகளினால் தொடர்ந்தும் தாக்குதலுக்குள்ளாகி வந்திருக்கின்றது. அதனை, எதிர்கொள்வதற்கான தைரியத்தையும், போராட்ட உணர்வையும் தமிழ்த் தேசியம் எனும் வடிவில் ஒருவகையில் கட்டமைக்கப்பட்ட இராணுவ மனநிலை கொடுத்து வந்திருக்கின்றது. அதுதான், அஹிம்சை மற்றும் ஆயுத ரீதியிலான அரசியலுரிமைப் போராட்டங்களின் வெற்றிகளில் பிரதிபலித்தும் படுபயங்கரமான தோல்விகளிலிருந்தும் வெளிவரவும் வைத்திருக்கின்றது.
ஒரு கட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் என்பதே புறக்காரணிகளை அல்லது எதிரிகளை எதிர்கொள்வதற்கான நிலை என்கிற அளவிலேயே மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அது, தன் சார்பில் அக அரசியல் வெளியை சீராக்குவது அல்லது மேம்பட்ட நிலையில் வைத்துக் கொள்வது தொடர்பில் சிந்திப்பதையோ, செயற்படுவதையோ நிறுத்திக் கொண்டுவிட்டது. இவ்வாறான நிலை, தமிழ் அரசியல் இராணுவ மனநிலை சார்ந்து கட்டமைக்கப்பட்டதன் விளைவுகளின் நீட்சியின் போக்கில் நிகழ்ந்திருக்கின்றது.
பௌத்த சிங்கள பேரினவாதம் மற்றும் பிராந்திய அரசியல் சதிராட்டங்களின் போக்கில் எதிர்ப்பு மனநிலை அல்லது போராட்ட உணர்வினை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கு இராணுவ மனநிலை சார்ந்த அரசியல் போக்கு தமிழ் மக்களுக்கு அவசியமானதொன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. இப்போதும், அதன் தேவை இருக்கவே செய்கின்றது. ஆனால், அது, அடிப்படையாகக் கொள்ள வேண்டிய ஜனநாயக முறைமையை அல்லது அதற்கான தேவையை புறக்கணித்து வந்தமை என்பது சமூக குறைபாட்டின் தொடர்ச்சியை எமக்குள் விதைத்து விட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அக ஜனநாயக வெளியின் ஆரோக்கியத்தன்மை அல்லது அரசியல் சீராக்கம் தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டிய தேவை மிகப்பெரியளவில் காணப்படுகின்றது.
தமிழ் அரசியல் என்பது எதிர்ப்பு அரசியலுக்குப் பின்னர், இப்போது தேர்தல் ரீதியிலான அரசியல் கால கட்டத்தை மாத்திரம் கவனத்தில் கொள்கின்றது. அது, அந்தக் கால பரபரப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கின்றது. இதனால், முறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்ச்சியாக ஒதுக்கி வைக்கப்படுகின்றன. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீண்ட தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்டங்கள் முதன் மூன்று தசாப்தங்கள் அஹிம்சை ரீதியிலான போக்கிலும், அடுத்து மூன்று தசாப்தங்கள் ஆயுத ரீதியிலான போராட்டங்களின் போக்கிலும் கூர்மைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த இரு சந்தர்ப்பங்களிலும் அக ஜனநாயக வெளியின் தேவை தொடர்பில் அவ்வளவு அக்கறை செலுத்தப்படவில்லை. அல்லது அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஆறு ஆண்டுகளில் எவ்வாறான அரசியலை தேர்தெடுப்பது என்ற பெரும் குழப்பத்துக்குப் பின்னர் தடுமாற்றமான ஆரம்பமொன்றை தமிழ் அரசியல் வெளிப்படுத்துகின்றது. இது, முதல் மூன்று தசாப்த காலத்தையோ அல்லது இரண்டாவது மூன்று தசாப்த காலத்தையோ அப்படியே தனக்குள் உள்வாங்கி பிரதிபலிக்கவில்லை. பிரதிபலிக்கவும் முடியாது. 'இழக்கப்படாத' இராணுவ மனநிலையோடு, அக ஜனநாயக வெளியின் சீராக்கத்தினை மேம்படுத்தி முன்னோக்கி பயணிக்க வேண்டிய அவசியத்தை தற்போதைய சூழல் உணர்த்துகின்றது. அதுதான், அடுத்து வரும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்துக்கு தமிழ் மக்களை நிலைபெறச் செய்வதற்கு உதவும்.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழா தொடர்பில் புலம்பெயர் தேசமொன்றிலிருக்கும் தமிழ் செயற்பாட்டாளரினால் பேஸ்புக்கில் ஆற்றப்பட்ட எதிர்வினையொன்றை, அரசியல் ரீதியிலான உரையாடலொன்றின் போது நண்பரொருவர் வாசித்துக் காட்டினார்.
'இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை புறந்தள்ளும் முயற்சிகளின் பின்னால் ஈழத்து கலைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள். அதுதான், யாழ். சர்வதேச திரைப்பட விழா எனும் போக்கிலும் நிகழ்த்தப்படுகின்றது. இப்படியான விழாக்களை இனங்கட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.' பருமட்டாக இப்படித்தான் இருந்தது அந்த பேஸ்புக் எதிர்வினை.
தமிழ் அரசியலில் ஜனநாயக வெளி மட்டுறுத்தப்பட்டதன் விளைவினால் ஒரு வகையான குறைப்பிரசவ ஜனநாயக மனநிலையும் ஆதிக்கவாதமும் கலவையாக கோலொச்ச தொடங்கி விட்டது. இந்த ஆதிக்க வாதம் இராணுவ மனநிலையின் விளைவுகளின் விளைவு.
பூகோள அரசியலுக்குள் தமிழர் அரசியல் நகர்த்தப்பட்டு விட்ட சூழ்நிலையில் அல்லது நாம் கையாளப்படும் இன்றைய சூழ்நிலையில், தவிர்க்க முடியாமல் எமக்குள்ளான ஜனநாயக வெளியின் அளவை நாம் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது.
இல்லையென்றால், ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையற்றவர்கள் என்கிற ரீதியில் நாம் தொடர்ந்தும் தோல்விகளை நோக்கி நகர்த்தப்படுவோம். அப்படியான நிலையில், நாம் குறிப்பிட்ட அளவில் ஜனநாயக வெளியொன்றின் பக்கம் நகர வேண்டும். அதற்கு அக ஜனநாயக வெளியும் ஆரோக்கியப்படுத்தப்பட வேண்டியிருக்கின்றது.
தமிழ் அரசியல் சூழல் அல்லது செயற்பாட்டுத்தளம் அதிக தருணங்களில், எதிர்த்தரப்பு எம்மை நோக்கி நகர்த்தும் 'பிரச்சினைகளை அல்லது விடயங்களை' எதிர்கொண்டு வெற்றி கொள்வதற்குப் பதில் புறந்தள்ளுகின்றது. எதிர்கொண்டு விடயத்தை வெற்றி கொள்ளுதலுக்கும், புறந்தள்ளுதலுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு.
புறந்தள்ளுதல் என்பது தோல்வி மனநிலையின் வெளிப்பாடாவும், அரசியல் ரீதியான சதிராட்டத்துள் புத்திசாதுரியமான ஆட்டத்தை ஆடத்தெரியாதவர்கள் எனும் நிலையின் பக்கமும் வைத்துக் கொண்டிருக்கும். அப்படியான நிலையில், பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்ள வேண்டியதே எம்மை நிலை நிறுத்தும். அதுதான், அடிப்படையில் அவசியமாகும்.
சர்வதேச திரைப்பட விழா யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவது தொடர்பிலான எதிர்வினை அங்கு காட்சிப் படுத்தப்படும் திரைப்படங்களின் போக்கிலும், அவை நிகழ்த்தும் விவத்திலும் செய்யப்பட வேண்டியது. மாறாக, சர்வதேச ரீதியிலான நிகழ்வொன்று நடத்தப்படக் கூடாது எனும் தொனியில் அவசரமாக புறந்தள்ள முடியாது. ஏனெனில், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றுக்குப் பின்னர் சிறிய ஜனநாயக இடைவெளியொன்று காணப்படுகின்றது என்று சர்வதேசம் கண்ணை மூடிக்கொண்டு நம்புகின்றது.
ஏனெனில், சர்வதேசத்தின் (மேற்கு நாடுகள் என்று கொள்க) நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஏற்படுத்தப்பட்ட இன்றைய (மைத்திரிபால சிறிசேன-) ரணில் விக்ரமசிங்க ஆட்சியை அவர்கள் பெரிதாக கைவிட மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில், நாம் ஒரு விடயத்தை புறந்தள்ளுவதற்குப் பதில், அதனை எதிர்கொண்டு வெற்றி கொள்ள வேண்டும்.
அப்படித்தான், யாழ். சர்வதேச திரைப்பட விழாவையும் கையாள வேண்டும். அந்த நிகழ்வின் பின்னாலுள்ள உண்மையான அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ன?, அதற்கான தேவைப்பாடு எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது தொடர்பில் உணர்வதற்கான வாய்புக்களை நாமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதனைவிடுத்து, எடுத்த எடுப்பில் ஈழத்து கலைஞர்கள் மீது குற்றச்சாட்டுக்களை வைத்து விட்டு நகர்வது ஆரோக்கியமானது அல்ல. இது, சின்ன உதாரணம் மட்டுமே.
1. பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்ளுதல்
2. நான் பெரிது நீ பெரிது எனும் ஈகோ மனநிலையை புறந்தள்ளுதல்
3. தனி நபர் சார்பிலான அரசியலை புறந்தள்ளி, சமூக ரீதியிலாக ஒருங்கிணைதல்
4. கட்சி அரசியலை (மாத்திரம்) பிரதானமாக கொள்ளுதலைத் தவிர்த்தல்
5. கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்தல்
6. செயற்பாட்டு தளத்தின் எல்லையை விரிவாக்குதல்
7. பருவகால பறவைகள் போலில்லாமல் எப்போதுமே அரசியல் ஆர்வம் கொள்ளுதல்
8. மக்களிடம் தொடர்ச்சியான ஜனநாயக வெளி மீதான நம்பிக்கையை அதிகரித்தல்
9. பிரதேச வேறுபாடுகளை புறந்தள்ளுதல் (இது, அந்தப் பிரதேசத்தின் தேவைகளை புறந்தள்ளுதல் எனும் அர்த்தம் அல்ல)
தமிழ் அரசியலின் அக ஜனநாயக வெளியை ஆரோக்கியப்படுத்துவது தொடர்பிலான உரையாடல்களின் போது மேற்கொண்ட காரணிகளின் தேவை அதிகமாக இருக்கின்றது. இதில், 'நான் பெரிது நீ பெரிது' எனும் ஆதிக்க வெளிப்பாட்டுடன் கூடிய ஈகோ மனநிலை என்பது தமிழ் அரசியலை முன்னோக்கி நகர்த்தாமல் பின்னோக்கி இழுக்கும் மிக முக்கிய காரணியாகும்.
இது, பல நேரங்களில் தீர்க்கமான அரசியல் போக்கு சம்பந்தமாக சிந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, தன்னுடைய வாதம் அல்லது தரப்பினை எப்படியாவது நியாயப்படுத்திவிட வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் போக்கில் அதிகம் நிகழ்கின்றது. இது, தமிழ் அரசியல் ஸ்திரத்தன்மையை ஆட்டம் காணச் செய்கின்றது. அத்தோடு, இவ்வாறான நிலையை, புறக்காரணிகள் அல்லது எதிர்த்தரப்பு பயன்படுத்திக் கொண்டு எம்மை பலவீனப்படுத்துவதற்காக பயன்படுத்தி வந்திருக்கின்றன. இதற்கான கடந்த கால உதாரணங்கள் எம்மத்தியில் நிறைய உண்டு.
தமிழ் அரசியலின் நீட்சியின் அடிப்படை மக்களின் பலமான ஒருங்கிணைவினாலேயே தக்க வைக்கப்பட்டிருக்கின்றது. பலமான ஒருங்கிணைவு என்பது ஒரு கொள்கையின் போக்கில் நிகழலாம். அதற்காக, அது, விவாதங்களையோ, கருத்துச் சுதந்திரத்தையோ புறந்தள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல.
கொள்கையின் போக்கில் ஒருங்கிணைக்கப்படுகின்ற மக்களின் மத்தியில் விவாதங்களின் அளவு அதிகமாக காணப்படுவதுதான், எதிரிகளை சரியாக எதிர்கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்தும்.
மாறாக, ஆதிக்க மனநிலையுடனான அரசியல் போக்கு என்பது தோல்வியடைவதற்கான வாய்ப்புக்களை அதிகமாக ஏற்படுத்தும். ஆக, தமிழ் அரசியல் அக வெளியை ஜனநாயக ரீதியில் ஸ்திரப்படுத்த வேண்டிய கால கட்டத்தில் வந்து நிற்கின்றது. அதற்கான அர்ப்பணிப்பை தமிழ் மக்கள் வெளிப்படுத்த வேண்டும்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago