Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஒக்டோபர் 14 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைத் தெரிவிக்க இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு முடிவு செய்ததாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி ஊடகங்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டு இருந்தன. இது ஒரு முக்கிய செய்தியாகவே தெரிகிறது.
ஏனெனில், கடந்த சில மாதங்களாக தெற்கில் பல்வேறு கட்சித் தாவல்கள் மற்றும் புதிய கூட்டணிகளை உருவாக்குதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. எனினும், அவற்றின் எந்தவொரு தனிச் சம்பவமும் தேர்தல் முடிவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.
ஆனால், தமிழரசுக் கட்சியின் இந்த முடிவு ஏகமனதாக இருந்தால் அதேபோல், தமிழ் மக்கள் இந்த முடிவை ஏற்கும் நிலையிலிருந்தால் அது எந்தவொரு தேர்தல் முடிவையும் மாற்றக் கூடியதாகும்.
ஏனெனில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 20 இலட்சத்துக்கு மேலாக வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் சுமார் 9 இலட்சம் வாக்காளர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஆயினும், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய கருத்தை ஆராயும் போது, இம்மாகாணத்தில் 6 இலட்சம் வாக்காளர்களின் முடிவைப் பற்றியே தமிழ் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சிலவேளை, அவர்கள் செல்லுபடியாகும் வாக்குகளை அனுமானித்து அவ்வாறு கூறியிருக்கலாம்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 12 இலட்சம் வாக்காளர்கள் இருந்த போதிலும், அம்மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றனர்.
எனவே, தேர்தல்களின் போது, வட மாகாணத்திலேயே தமிழ் தலைவர்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தமிழரசுக் கட்சியே பிரதான தமிழ் அரசியல் கட்சியாகக் கருதப்படுவதால் அவர்கள் எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமானதாகும்.
ஆயினும் தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு ஏகமனதாக இந்த முடிவை எடுத்ததா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் சில செய்திகள் கூறின. அதேவேளை, இது மத்தியக் குழுவின் ஏகமனதான முடிவு அல்ல என்று சேனாதிராஜா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழரசுக் கட்சி இதற்கு முன்னர் செய்ததைப் போலலே இம்முறையும் பெரும்பான்மையின வேட்பாளர் ஒருவருக்கு தமது ஆதரவைத் தெரிவிக்க தமது வழமையான நிபந்தனைகளை விதித்திருந்தது.
அதாவது, இனப் பிரச்சினைக்கு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை ஏற்பவருக்கு தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்து இருந்தது. இம்முறை சுமந்திரன் அதனைக் கடந்த மாதம் 13ஆம் திகதி தெரிவித்ததிருநந்தார்.
போர் முடிவடைந்த உடனேயே 2010இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போரின் போது, இராணுவத்தை வழிநடத்திய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு அதன் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு நியாயமான காரணம் இல்லா விட்டாலும், நியாயமானதாகத் தென்படும் காரணமொன்று இருந்தது.
போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அக்காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2010இல் மஹிந்தவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
அவருக்கான அந்த எதிர்ப்பையே தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்ததன் மூலம் காட்டினர்.
மஹிந்த மனித உரிமை விடயத்தில் வெறுக்கப்பட்டாலும் களத்தில் உண்மையிலேயே மனித உரிமைகளை மீறியவர் இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவே என்ற விடயம் அப்போது புறக்கணிக்கப்பட்டது.
2015இல் மஹிந்தவும் மைத்திரிபாலவுமே பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். மைத்திபாலவுக்கு தமிழ் மக்கள் அளித்த பெரும்பான்மை வாக்குகளால் அவ்வாண்டும் ராஜபக்ஷ எதிர்ப்பு அலையே வடக்கு கிழக்கில் காணப்பட்டது.
2019இல் பிரதான வேட்பாளர்களாக கோட்டாபயவும் சஜித் பிரேமதாசவும் போட்டியிட்டனர். ராஜபக்ஷக்களில் ஒருவரான கோட்டா சிறுபான்மை மக்களால் வெறுக்கப்பட்டவர் என்பதால் தமிழ் மக்கள் அம்முறை சஜித்துக்கு வாக்களித்தனர்.
அத்தேர்தல்களில் போல், இம்முறை தமிழரசுக் கட்சிக்கு முடிவு எடுப்பது இலகுவானதாக இருக்கவில்லை. ஏனெனில், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இருமுனைப் போட்டியாகவில்லை. இது நான்கு முனைப் போட்டியாகவே தென்படுகிறது. அந்த பிரதான நான்கு வேட்பாளர்களில் ராஜபக்ஷக்களில் ஒருவரான மஹிந்தவின் மகன் நாமலை எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கி விடலாம். ராஜபக்ஷக்களுக்கு இன்னமும் சிறுபான்மை மக்கள் மத்தியில் எந்தவித வரவேற்பும் இல்லை.
ஆனால், மற்ற மூவரில் எவரும் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை ஏற்காத போதிலும், அவர்கள் தமிழ் மக்களால் அவ்வாறு வெறுக்கப்பட்டவரல்லர்.
அதேவேளை, இதற்கு முன்னர் எதிர்நோக்காத ஒரு பிரச்சினைக்கும் தமிழரசுக் கட்சி இம்முறை முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. அதாவது, சில தமிழ் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இம்முறை போட்டியில் நிறுத்தியிருக்கின்றன. அதுவும் தமிழரசுக் கட்சியேச் சேர்ந்த ஒருவரையே நிறுத்தியிருக்கின்றன.
இதற்கு முன்னரும் முன்னாள் சிவாஜி லிங்கம் எம்.பி. ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். ஆனால் அவர், தனி நபராகவே அப்போது போட்டியிட்டார். இம்முறை சில தமிழ் கட்சிகளின் கூட்டு முடிவாகவே முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் என்ற பிரச்சினையும் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்ற பிரச்சினையும் கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழ் ஊடகங்களில் ஆராயப்பட்டு வந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. அது தமிழ் மக்கள் மத்தியில் உணர்ச்சிகரமானதாகவும் மாறி வருகிறது.
எனவே, இதனை இம்முறை தமிழரசுக் கட்சியாலும் முற்றாகப் புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது தமிழரசுக் கட்சிக்குள்ளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிகிறது. எனவே, சஜித்துக்கு கடந்த முறை போல, தமிழர்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே.
தென் பகுதி வேட்பாளர்கள் எவரும் தமிழ் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்க மாட்டார்கள் என்பது தமிழரசுக் கட்சிக்குத் தெரியும். அவ்வாறிருக்க, இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீரவை ஏற்கும் பிரதான வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம் என்று சுமந்திரன் ஏன் கடந்த 13ஆம் திகதி அறிவித்தார்? சஜித் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டாரா?
கடந்த ஜூன் மாதம் சஜித் யாழில் சுமந்திரனை சந்தித்திருந்தார்.
அப்போது சஜித்தின் குழப்பமான நிலைப்பாட்டினாலோ என்னவோ அதிகார பரவலாக்கலைப் பற்றித் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள் என்று சுமந்திரன் சஜித்திடம் கூறியிருந்தார்.
இனப் பிரச்சினை விடயத்தில் ரணிலே தமிழ் தலைவர்களுக்கு மிகவும் நெருங்கிய தென் பகுதி அரசியல்வாதியாவார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றில் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ரணில் முயன்றார். அந்த முயற்சி நேர்மையானதா இல்லையா என்பது வேறு விடயம்.
அதேவேளை, 2015 இல் மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் சம அனுசரணை வழங்கியதற்கு ரணிலே காரணமாக இருந்தார். அக்காலத்தில் பல தமிழ் புலம் பெயர் அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டது.
எனினும், மாகாண சபை முறை முடங்கிப் போவதற்கு ரணிலே காரணமாக இருந்தார். இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கடந்த வருடம் பல கூட்டங்களைக் கூட்டி அவர் இறுதியில் தமிழ் தலைவர்களை ஏமாற்றினார். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன் ரணிலிடம் நேரடியாகவே இதனைத் தெரிவித்தார்.
ரணில் ஏமாற்றினார் என்ற இதே கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் கடந்த மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கூறியிருந்தார்.
இனப் பிரச்சினையை ஒருபுறம் வைத்துவிட்டு தென் பகுதி வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதாக இருந்தால் நிச்சயமாகப் பொருளாதார காரணங்களின் அடிப்படையில்தான் தெரிவு செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், அது தமிழ் முஸ்லிம் மக்களையும் பாதிக்கிறது.வெற்றிபெறக்கூடிய மூன்று வேட்பாளர்களும் அந்த விடயத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். ஆயினும், ஊழலை ஒழிப்பதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலை உற்று நோக்கினால் அது ஊழல் மலிந்த பழைமைவாத குழுவுக்கும் சமூக மாற்றம் ஒன்றுக்கான முயற்சிக்கும் இடையிலான போராட்டமாகவே தெரிகிறது. இந்த நிலையிலேயே தமிழரசுக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
04.09.2024
24 minute ago
34 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
34 minute ago
37 minute ago