Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2020 பெப்ரவரி 03 , மு.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தனது 72ஆவது சுதந்திர தினத்தை நாளை (04) அனுஷ்டிக்கிறது.
பிரித்தானிய கொலனித்துவத்தின் பிடிகள் தளர்ந்த 1948லிருந்து, இலங்கை பல்வேறுபட்ட சவால்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பெருந்துரதிர்ஷ்டம் மிகுந்த சவால், இலங்கையை இன்றுவரை தொற்றிக்கொண்டு நிற்கும், இனப்பிரச்சினை என்றால் அது மிகையல்ல.
எழுபத்தி இரண்டாவது சுதந்திரதினத்தின் கொண்டாட்டங்கள் தொடர்பில், இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்விகளில் ஒன்று, இம்முறை தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுமா என்பதாகும்.
2015 ஜனவரி, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இடம்பெற்ற சுதந்திரதின விழாக்களில், தேசிய கீதம் தமிழ்மொழியிலும் பாடப்பட்டிருந்தமை, வரவேற்கத்தக்க மாற்றமாகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், ‘சிங்கள பௌத்த’ தேசியவாதிகள், அதைத் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் வந்திருக்கிறார்கள்.
‘சிங்கள பௌத்த’ தேசியவாதத்தின் பலத்தால், இன்று மீண்டும் ஆட்சிப்பீடமேறி இருக்கும் ராஜபக்ஷக்கள் தலைமையிலான ஆட்சி, சுதந்திரதினத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாது என்று தெரிவித்திருப்பதாகச் சில செய்திக்குறிப்புகள், சில வாரங்களுக்கு முன்பு வௌிவந்திருந்தன.
ராஜபக்ஷக்களின் ஆட்சியில், தமிழ் மொழி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல.
2010இல், ராஜபக்ஷ ஆட்சியின் உச்சப்பொழுதில், இலங்கையின் தேசிய கீதத்தின் தமிழ்ப் பதிப்பை, முற்றாக நீக்க மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை முயற்சித்தமை, பெரும் சர்ச்சையையும் தமிழ் மக்களினதும் தமிழ்த் தலைமைகளினதும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
அந்தக் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அம்முயற்சி கைவிடப்பட்டது. எனினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணங்களிலும் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் சிலவற்றில் மட்டுமே, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது.
இந்தநிலை, 2015 ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ வருகையோடு மாற்றமடைந்து, சுதந்திர தின விழாவில், மிக நீண்டகாலத்துக்குப் பின்னர், தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
இலங்கையின் தேசிய கீதத்தின் கதை சுவாரசியமானது. இலங்கையின் தேசிய கீதத்தின், சிங்கள மொழி மூலப் பதிப்பை எழுதிய ஆனந்த சமரக்கோன் பற்றிய, கலாநிதி உபுல் விஜேவர்தனவின் கட்டுரையொன்றில், இலங்கை தேசிய கீதத்தின் வரலாற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்.
ஆனந்த சமரக்கோன் ஒரு பல்திறமைக் கலைஞன். கவிஞராக, பாடலாசிரியராக, இசை வல்லுநராக, ஓவியராகத் தன்னுடைய திறமைகளை வௌிப்படுத்திய ஒருவர் ஆனந்த சமரக்கோன்.
வங்காளத்தின் புகழ்பூத்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் மாணவர் இவராவார். ரவீந்திரநாத் தாகூர் இந்தியாவினதும் பங்களாதேஷினதும் தேசிய கீதங்களை எழுதியவர் என்பது கூடுதல் தகவலாகும்.
1940களின் இறுதியில், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய ஆனந்த சமரக்கோன், காலி, மஹிந்த கல்லூரியில் இசை ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில், மாணவர்கள் பாடுவதற்காக ஒரு தேசபக்திப் பாடலை இயற்றி, அதற்கு இசையும் அமைத்திருந்தார்.
அந்தப் பாடல்தான், ‘நமோ நமோ மாதா’ என்ற பாடலாகும். இந்தப் பாடல் உட்பட, தான் எழுதிய பாடல்கள் பல அடங்கிய ‘கீத குமுதினி’ என்ற தலைப்பிட்ட நூலொன்றைத் தொகுத்த சமரக்கோன், அதைத்தானே அச்சிட்டு வௌியிடுவதற்குப் போதிய பணவசதி இல்லாததால், அந்தப் புத்தகத்துக்கான உரிமையை ஓர் அச்சகத்துக்கு விற்றிருந்தார்.
இந்த முடிவை எண்ணி, அவர் பிற்காலத்தில் பெரிதும் வருந்தியிருப்பார் என்று, தனது கட்டுரையில் உபுல் விஜேவர்தன சுட்டிக்காட்டுகிறார்.
1948இல் இலங்கை சுதந்திரமடைய இருந்த வேளையில், (இங்கு, ‘சுதந்திரம்’ என்பது தொழில்நுட்ப ரீதியில் ‘டொமினியன் அந்தஸ்து’ ஆகும்) ‘லங்கா காந்தர்வ சபா’ இலங்கையின் தேசிய கீதத்தைத் தெரிவு செய்வதற்கான போட்டியையும் அதைத் தெரிவுசெய்வதற்கான ஒரு குழுவையும் நியமித்திருந்தது.
இது பற்றி எழுதும் பேராசிரியர் சுனில் ஆரியரட்ன, இந்தக் காலப்பகுதியில் ஆனந்த சமரக்கோனின் ‘நமோ நமோ மாதா’ என்ற பாடல் பிரபல்யமாக இருந்தாலும், குறித்த குழுவானது பி.பி. இலங்கசிங்ஹ, லயனல் எதிரிசிங்ஹ ஆகியோர் எழுதிய ‘ஸ்ரீ லங்கா மாதா பல யச மஹிமா’ என்ற பாடலை, வெற்றி பெற்ற பாடலாகத் தெரிவு செய்திருந்தது என்றும் அதுவே, 1948ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.
ஆயினும், குறித்த பாடல் தெரிவுசெய்யப்பட்டமையில் ஒரு சர்ச்சை உருவானது. இதற்குக் காரணம், குறித்த பாடலை எழுதியவர்கள், அதைத் தெரிவுசெய்யும் குழுவிலும் அங்கத்தவர்களாக இருந்தார்கள்.
இந்த நிலையில், மக்களிடம் ஆனந்த சமரக்கோனின் பாடலே தொடர்ந்தும் பிரபலமாக இருந்தது. இதன் காரணமாக, இலங்கையின் தேசிய கீதமாக ஆனந்த சமரக்கோனின் ‘நமோ நமோ மாதா’ பாடல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று 1950இல் அன்று அமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தனவால் முன்மொழியப்பட்டிருந்தது.
இதன்படி, ஆனந்த சமரக்கோனின் ‘நமோ நமோ மாதா’ என்ற பாடல், 1951 நவம்பரில், இலங்கையின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், புலவர் மு. நல்லதம்பியால் தமிழில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது.
அன்றிலிருந்து, சிங்களவர்களால் சிங்கள மொழியிலும், தமிழர்களால் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது. இதற்கு முன்பும், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கான ஆதாரங்கள் 1949லிருந்து இருக்கின்றன.
1961ஆம் ஆண்டு வரை, இலங்கையின் தேசிய கீதம் ‘நமோ நமோ மாதா’ என்றும் ‘நமோ நமோ தாயே’ என்றும்தான் ஆரம்பித்தது. ஆனால், 1961இல் அன்று ஆட்சிப்படியேறி இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தால், இலங்கையின் தேசிய கீதத்தின் முதல்வரி ‘ஸ்ரீ லங்கா மாதா’ என்றும் ‘ஸ்ரீ லங்கா தாயே’ என்றும் மாற்றப்பட்டது.
இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன? இது பற்றித் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடும் உபுல் விஜேவர்தன, இலங்கையின் ஆரம்பகாலப் பிரதமர்களான டி.எஸ். சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோர் பிரதமர்களாக ஆட்சியில் இருந்தபோது, அகால மரணமடைந்தமையும் அதுவரை எந்தப் பிரதமரும் முழுமையான ஆட்சிக்காலமான ஐந்து வருடத்தைப் பூர்த்தி செய்யாமையும் ஏதோ ஓர் அபசகுனத்தின் விளைவு என்று பலரும் கருதியதாகவும் இதற்கு ஆனந்த சமரக்கோன் எழுதிய ‘நமோ நமோ மாதா’ பலிக்கடா ஆக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய கீதத்தின் முதல் வரிகள், ‘நமோ நமோ’ என்று ஆரம்பிப்பது, அபசகுனமான ஒலிப்பு என்று பலரும் வாதிட்டார்கள். இது பெரும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியிருந்தது.
ஆயினும், தன்னுடைய கவிதையை மாற்றுவதற்கு ஆனந்த சமரக்கோன் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டிருந்தார். ஆனால், எதிர்ப்பை வௌியிடுவதைத் தவிர, அவருக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. அவர், தன்னுடைய இந்தக் கவிதைக்கான உரிமையை, ஏற்கெனவே ஓர் அச்சகத்துக்கு விற்றிருந்தார். இலங்கை அரசாங்கம் குறித்த உரிமையை, குறித்த அச்சகத்திடமிருந்து அன்றைய காலகட்டத்தில் பெருந்தொகையாகக் கருதக்கூடிய ரூபாய் 2,500 இற்கு வாங்கியிருந்தது.
ஆகவே, தன்னுடைய கவிதை, ஓர் அடிப்படையற்ற மூடநம்பிக்கையால் சிதைக்கப்படுவதை ஆனந்த சமரக்கோனால் தடுக்க முடியவில்லை. இதுதான் ‘நமோ நமோ மாதா’ அல்லது ‘நமோ நமோ தாயே’ ‘ஸ்ரீ லங்கா மாதா’ அல்லது ‘ஸ்ரீ லங்கா தாயே’ ஆன கதை.
தனது ஐந்தே வயதான மகனைப் பறிகொடுத்த சோகமோ, தனது கவிதை அரசாங்கத்தால் சிதைக்கப்பட்ட துரோகமோ, ஆனந்த சமரக்கோன் என்ற கலைஞன், உறக்க மருந்தை அதிகளவு உட்கொண்டு, நித்திய உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.
இன்று, இலங்கை தேசிய கீதத்தை எழுதியவர் ஆனந்த சமரக்கோன் என்று சொல்வது கூட, அந்தக் கலைஞனுக்குச் செய்யும் துரோகம்தான். ஏனெனில், ‘ஸ்ரீ லங்கா மாதா’ என்று ஆரம்பிப்பது அவரது வரிகளே அல்ல. நிற்க!
‘யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த எழில்கொள் சேய்கள்; எனவே இயலுறு பிளவுகள் தமை அறவே இழிவென நீக்கிடுவோம்’ என்று பாடும், தமிழ்ப் பதிப்பை நீக்குவதற்கு உள்ள நியாயங்கள் என்ன?
மறுபுறத்தில், ‘எக்க மவககே தரு கல பவினா யமு யமு வீ நொபமா, ப்ரேம வடா சம பேத துரெர தா நமோ நமோ மாதா’ என்று சிங்களத்தில் நாம் ஒருதாய் மக்கள், அன்பால் சகல பேதங்களையும் இல்லாதொழிப்போம் என்று பாடிக்கொண்டு, தமிழ் மக்களைத் தம்மொழியில், தேசிய கீதத்தைக் கூட பாட அனுமதிக்காதது, என்ன வகையான அறம்?
சரி, மறுபுறத்தில் தமிழ் மக்கள் இலங்கை என்ற தாய் நாட்டைப் புகழ்ந்து, தமிழில் பாடவும் கூடாது என்றால், இது என்ன வகையான மனநிலை என்று புரிந்துகொள்வது, கடினமாக இருக்கிறது.
இதில் சில அடிப்படையற்றதும் அபத்தமுமான கருத்துகளை, வேறு சிலர் பகர்ந்துகொள்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க பொய்கள், “உலகில் அனைத்து நாட்டிலும், ஒரு மொழியில் தான் தேசிய கீதம் பாடப்படுகிறது”, “1.3 பில்லியன் மக்கள் கொண்ட இந்தியாவில் கூட, பெரும்பான்மையினரின் மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது” என்பவை மிக அபாண்டமானவையாகும்.
இந்த இரண்டு கருத்துகளும், அப்பட்டமான பொய்களாகும். ஆயினும், கோயபெல்ஸின் ‘பெரும் பொய்’ சித்தாந்தத்தையொட்டி, இந்தப் பொய்கள் மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டு, உண்மைபோல் நம்பவைக்கப்படுகின்றன.
கனடாவின் தேசிய கீதம், மூன்று மொழிகளில் காணப்படுகிறது. ஆங்கிலம், பிரெஞ்ச், இனுக்டிடுட் ஆகிய மொழிகளில், கனேடிய தேசிய கீதம் பாடப்படுகிறது.
சுவிற்சலாந்துத் தேசிய கீதம், சுவிற்சலாந்தின் நான்கு உத்தியோகபூர்வ மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜேர்மன் மொழியில் முதலில் எழுதப்பட்டிருந்தாலும், சுவிஸின் ஏனைய உத்தியோகபூர்வ மொழிகளான பிரெஞ்ச், இத்தாலியன், றொமான்ஷ் ஆகிய மொழிகளில், சுவிஸ் தேசிய கீதம் மொழிபெயர்க்கப்பட்டுப் பாடப்படுகிறது.
தென்னாபிரிக்க தேசிய கீதம், சகல மொழிபேசுவோருக்கும் ஒரே கீதமாக இருப்பினும் அது தென்னாபிரிக்காவில் பேசப்படும் ஐந்து மொழிகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கத் தேசிய கீதம் ஸோசா (முதற் பந்தியின் முதலிரு வரிகள்), செசோதோ (முதற்பந்தியின் கடைசி இரண்டு வரிகள்), சுலு(இரண்டாம் பந்தி), அப்ரிகான்ஸ் (மூன்றாம் பந்தி), ஆங்கிலம் (நான்காம் பந்தி) ஆகிய ஐந்து மொழிகள் சேர்த்து எழுதப்பட்டது. இந்தப் பட்டியல் நீளமானது.
எத்தனையோ நாடுகளில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் தேசிய கீதம் காணப்படுகிறது. இந்திய தேசிய கீதம், இந்தியாவின் பெரும்பான்மையினரின் மொழியில் பாடப்படுகிறது என்பதும் அறியாமையின் விளைவு; அப்பட்டமான பொய். இந்தியத் தேசிய கீதம் பெங்காலியில் (சமஸ்கிருதப்படுத்தப்பட்ட பெங்காலி) நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது. ஆக, பெரும்பான்மை இந்தியர் பேசும் மொழியில் அல்ல; இந்தியாவின் தேசிய கீதம் பாடப்படுகிறது.
இவ்வளவு ஏன், சீனர்கள் பெரும்பான்மையாகவுள்ள சிங்கப்பூர் தேசிய கீதம் மலேயிலேயே எழுதப்பட்டது. அதற்குச் சீன, தமிழ், ஆங்கில உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புகள் உண்டு. எனினும் அது மலேயிலேயே பாடப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மையோரின் மொழியிலேயே தேசிய கீதம் அமையவேண்டும் என்ற அவசியம் இல்லை.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க செய்த சந்தர்ப்பவாதச் சதி, இந்நாட்டு மக்களின் கணிசமானவர்களின் மொழியுரிமையைப் பறித்து, இந்த நாட்டில் இனப்பிரச்சினையை உருவாக்கி, பெரும் யுத்தத்துக்கு வழிவகுத்து, பெரும் அழிவையும் இன்று கூட ஒட்டக் கடினமாகவுள்ள இன ரீதியான பிளவையும் உருவாக்கியுள்ளது.
அதே தவறுகளை, மீண்டும் மீண்டும் இலங்கை அரசாங்கங்கள் செய்யக்கூடாது.
‘தனிச்சிங்களச்’ சட்டத்தை எதிர்த்து லெஸ்லி குணவர்த்தன ஆற்றிய உரையில், அவர் சொன்ன, “உங்களுக்கு இருமொழிகள்; ஒரு நாடு வேண்டுமா, இல்லை, ஒரு மொழி இரு நாடு வேண்டுமா” என்பது இன்றும் மேற்கோள்காட்டப்பட வேண்டிய துரதிர்ஷ்டம்தான்; இது, இலங்கை அரசியலின் சாபக்கேடு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
29 Apr 2025
29 Apr 2025