2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

Johnsan Bastiampillai   / 2023 மே 30 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan.com

 

 

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி, மே மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிறிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். போராட்டம் ஆரம்பமான காலப் பகுதியானது, வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்ற காலப்பகுதியாகும். 

எட்டரை ஏக்கர் காணியில் இராணுவத்தினரால் ‘திஸ்ஸ விகாரை’ என்ற இந்தப் புத்த விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிக்கலசம் வைக்கும் நிகழ்வு, ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றதாக அறியக் கிடைக்கிறது. 

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம், மே மாதம் மூன்றாம் திகதிதான் தொடங்கியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான சிறியளவிலான போராட்டக்காரர்கள், 14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம், மே மூன்றாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை நடைபெற்றது. 

விகாரை வழிபாட்டுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்ற மல்லாகம் நீதிமன்றின் கட்டளையைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டதாக ஊடகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. மே ஐந்தாம் திகதி இரவு எட்டு மணியளவில் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அறிவித்தார். மேலும், அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பின்னர், அடுத்தக்கட்ட செயற்பாடு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மே 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிறியளவிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், மீண்டும் தையிட்டி விகாரை அமைந்த பகுதியில் தமது போராட்டங்களை ஆரம்பித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பொலிஸாரால் மல்லாக்காகத் தூக்கிச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார். 

அத்தோடு, தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள 15 குடும்பங்களின் உறுதி பத்திரம் உள்ள காணியே இது என்றும், இங்கு இராணுவத்தினர் அடிக்கல் வைத்த வேளை, அது தொடர்பில் கேட்ட போது, “அவ்வாறு தனியார் காணியில் விகாரை அமைக்க முடியாது”  என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்ததாகவும், ஆனால், அங்கே தற்போது  விகாரை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இவ்வாறான நிலையில்,  கடந்த 23 ஆம் திகதி தாங்கள் அங்கே போராட்டத்தை முன்னெடுத்து இருந்ததாகவும், அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும், பாராளுமன்ற அமர்வு வாரம் என்பதால், அவரைக் கைது செய்வதில் சிக்கல்கள் இருந்தமையால் அதற்குப் பதிலாக அங்கிருந்த, சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்ததாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.

தனியார் காணியெனில், அதில் ‘சட்டவிரோமாக’ விகாரை கட்டப்பட்டிருந்தால் அது தவறு. அமைதியான வழியில் போராடுபவர்கள், நீதிமன்ற கட்டளையை மீறாதவரை, அந்தப் போராட்டத்தை பொலிஸார் தடுப்பதும் தவறு. அநீதியான வகையில் கைதுகள் இடம்பெற்றிருந்தால் அதுவும் தவறு. இவையெல்லாம் சட்ட விரோத காரியங்கள். 

ஆனால், இவை எல்லாவற்றையும் மேவி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியதாக உள்ளது. 

முதலாவதாக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணி எனும் போது, அதில் விகாரை கட்டப்படும் வரை, அதன் உரிமையாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அல்லது அதுவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன செய்து கொண்டிருந்தது? 

சரி, தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவம் விகாரை அமைக்கிறது என்றால், அதனை சட்டரீதியாக காணி உரிமையாளர்கள் ஏன் எதிர்க்கவில்லை. நேரடியாக சட்டத்தின் உதவியை நாட, அவர்களுக்கு வழியில்லை என்றால், ‘லோயர்ஸ்’ என்று மேற்சட்டைக் ‘கொலரை’த் தூக்கிக்காட்டும் சட்டத்தரணிகள் உள்ள, சட்டத்தரணி உடையில் போராட்டத்தில் பங்கேற்கும் சட்டத்தரணிகள் உள்ள, பொலிஸார் காரை மறிக்கும் போது சட்டத்தரணி அடையாள அட்டையை நீட்டிக் காட்டி, அதிகாரம் செய்யும் சட்டத்தரணிகள் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏன் அம்மக்களுக்கு சட்ட உதவியை அளிக்கவில்லை? 

இன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று ஒரு புதுப்பெயரைச் சூடியிருந்தாலும், அவர்கள் தேர்தலைச் சந்திப்பது, இலங்கையின் மிகப்பழைமையும், பாரம்பரியமும் மிக்க ‘அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்’ என்ற கட்சியில் தான். 

ஜீ.ஜீ பொன்னம்பலம் என்ற தன்னிகரில்லா குற்றவியல் வழக்குரைஞர் தொடங்கிய கட்சி. எத்தனை சிறந்த, மிகப்பெரும் ஆற்றல் கொண்ட சட்ட மரபைக் கொண்டதொரு கட்சி; எதையும் சட்டரீதியியாக அணுக முடியாது, பத்துப் பேரைச் சேர்த்து ‘போராட்டம்’ நடத்தும் நிலைக்கும், ஒரு சட்டத்தரணி, பொலிஸாருக்கு தனது மேற்சட்டைக் ‘கொலரை’ தூக்கிக்காட்டி,  “லோயர்ஸ் ஆ... லோயர்ஸ்” என்று சொல்லும் தாழ் நிலையில் இருப்பது, தமிழ்த் தேசிய அரசியலின் வறட்சி நிலையை வௌிக்காட்டி நிற்கிறது என்றால் அது மிகையல்ல. 

இது சட்டரீதியாகவும், முளையிலேயே அணுகப்பட்டிருக்க வேண்டியதொரு பிரச்சினை. தனியார் காணியை, இராணுவம் வலுக்கட்டாயமாக சுவீகரிக்க முடியாது. அரசு சுவீகரிப்பதானால், அதற்கு சட்டரீதியான தகுந்த வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றாது அரசு வலுக்கட்டாயமாக தனியார் காணியைச் சுவீகரிக்க முடியாது. 

இல்லை! இந்நாட்டின் சட்டம் தமிழர்களைக் காப்பாற்றாது என்று அரசியல் வியாக்கியானத்தை தமிழ்த் தேசிய முன்னணியினர் முன்வைக்கலாம். குறித்த பிரச்சினையைத் தீர்க்க சட்டத்தை அணுகாது, சட்டம் தமிழர்களைக் காப்பாற்றாது என்று சொல்வதில் நியாயமில்லை. 

ஒருவேளை முறையாக சட்டத்தை அணுகி, அதில் அநீதி இழைக்கப்பட்டால், அதற்கெதிராக ஜனநாயக ரீதியில் குரல்கொடுப்பதில் நியாயமுண்டு. ஆனால், வெற்று வியாக்கியானங்கள் சொல்லிக்கொண்டு, வங்குரோத்து அரசியல் செய்வதில் அர்த்தமில்லை. 

2018இல், மைத்திரிபால சிரிசேன, அரசியலமைப்புக்கு விரோதமாக மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கி, பாராளுமன்றத்தை அரசியலமைப்புக்கு விரோதமாகக் கலைத்தபோது, அதற்கெதிரான முதல் வழக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் எழுப்பப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் உள்ளிட்ட இந்நாட்டின் மக்கள் பாதிப்படையக்கூடிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களிலும், அதனை அரசியலமைப்பு ரீதியலாக சவாலுக்குட்படுத்தி, அந்த வழக்கை முன்னின்று வாதாடியதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.ஆ சுமந்திரனின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய எந்தவொரு சட்டரீதியிலான முன்னெடுப்பையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்திருக்கிறதா என்று கேட்க வேண்டியதாக இருக்கிறது. 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ற தனிநபரின் நேர்மையும், கொள்கைப்பிடிப்பும் மட்டும் ஒரு கட்சியினதும், அந்தக் கட்சி பிரதிநிதித்துவம் செய்யும் மக்களினதும் உய்வுக்குப் போதாது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பத்தியின் நோக்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுக்கும் இராணுவத்தினரின் காணி அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கேள்வி கேட்பதல்ல; மாறாக, பத்துப் பேர் சேர்ந்து நின்று செய்யும் ஆர்ப்பாட்டங்களைத் தாண்டி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பரந்துபட்ட அரசியல் செயற்பாடுகள் என்ன என்பதை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதுதான்.

கொள்கைப் பற்று என்பது, வெறும் கொள்கையை நூறுமுறை கத்திக் கத்தி சொல்வதும், வீராவேசம் கொள்வதும், பகட்டாரவாரப் பேச்சுகள் செய்வதும், தீ பறக்கும் அறிக்கைகள் விடுவதும், ஐ.நாவில் அறிக்கை வாசிப்பதும், பொலிஸ்காரர்களுக்கு சவால் விடுவதும், கைதுசெய்யப்பட்டு சிறை சென்ற செம்மல்களாக முயல்வதும் எல்லாம் அல்ல; 

இதைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் புரிந்துகொண்டால், அது அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது. இந்த அரசியல் சித்து விளையாட்டுக்களைத்தாண்டி, தாங்கள் மூச்சுக்கு 300 முறை உச்சரிக்கும் தமிழ்த் தேசியம் உய்வதற்கும், தமிழ் மக்கள் உய்வதற்கும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பதும் அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் சிறப்பானதாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X