2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தம்பி எந்த ஸ்கூல்?

Editorial   / 2021 ஜூன் 05 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தரங்களில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் பலரும், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் கற்று பல்வேறான தொழில்துறைகளை நாடிச்சென்றுவிடுவர், ஆசிரியர் கலாசாலைகளுக்கு சென்றோர், வெவ்வேறு பாடசாலைகளில் ஆசிரியர்களாக இருப்பர். ஓரிரு வருடங்களில் திருமணம் முடித்து, தங்களுடைய பிள்ளைகளும் பாடசாலைகளுக்கு அனுப்பி அழகு பார்த்துகொண்டிருப்பர்.

அந்த குழாமைச்சேர்ந்த நண்பர்களின் வீடுகளில் இடம்பெறும் விருந்துபசாரங்களில், குடும்பத்தாருடன் பங்கேற்கும்போதுதான், நலன்விசாரிப்புகளுக்கு குறை​வே இருக்காது. அத்துடன், பிள்ளைகளின் கல்விகள், பாடசாலை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வத்துக்கு குறைவே இருக்காது.

“ஆமான்டா, நாங்கள்தான் இந்த ஸ்கூலுல படித்து, இந்த நிலைமையில் இருக்கின்றோம். நமது பிள்ளைகளாவது நல்ல கல்லூரிகளில் கற்கவேண்டும். சுப்பர்டா” என நண்பனை வாழ்த்திவிட்டு, பிள்ளைகளின் கன்னங்களை வருடி, ஹய், எந்த ஸ்கூல், எத்தனையாம் வகுப்பு, ஒ​கே,ஒகே, நல்லா படிங்க எனக் கூறிவிட்டு. அப்பாவின் நண்பர்களாயின் பாடசாலைகளை குறும்புகளையும் கிள்ளிவைத்துவிட்டு சென்றுவிடுவர்.

இப்போ​தெல்லாம் அவ்வாறான ஒன்றுகூடும் சந்தர்ப்பங்களை எதிர்பார்க்கமுடியாது. ஆனாலும், தொலைபேசி வாயிலாக நலன்விசாரிப்புகளுக்கு குறைவே இருக்காது. ஏனெனில், பலரும் வீடுகளி​லேயே இருக்கின்றனர். பழைய ஞாபகங்களை புரட்டி,புரட்டி, நலன்விசாரித்து கொண்டிருப்பர்.

இப்போதெல்லாம், நண்பர்களின் பிள்ளைகளிடம் “தம்பி எந்த ஸ்கூல்” பெண் பிள்ளைகளாயின் “பபா எந்த ஸ்கூல்” எனக் கேட்டால், உடனடியாக “ஒன்லைன் ஸ்கூல்” என்றுதான் பதில்வரும். உண்மையில், கடந்த இரண்டு வருடங்களில் முதலாம் வகுப்புக்குச் சென்றவர்கள், ஒருமாதத்துக்கு குறைவான நாள்களே பாடசாலைகளுக்குச் சென்றனர். அதற்குப்பின்னர் “கொரோனா” சகலதையும் முடக்கிவிட்டது.

சிலருக்கு தான் செல்லவேண்டிய பாடசாலையின் பெயர்கூட ஞாபகத்தில் இருக்காது. கல்வி, விளையாட்டு, இயல்,இசை,நாடகம், ஒழுக்கம், சுற்றாடல் பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பில், எதுவுமே அறிந்துகொள்ளவிடாமல் இந்த கொரோனா செய்துவிட்டது.

என்றாலும், நகர்புறங்களிலிருக்கும் பாடசாலைகளில் ஒருசிலதை தவிர, ஏனைய பாடசாலைகளின் நிர்வாகம், நேரசூசியை தயாரித்து, “ஒன்லைன்”, இணைய வழியின் ஊடாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.

இங்கு சகலருக்கும் இலவசக் கல்வி என்பது கேள்விக்குறியாவிட்டது. பாடசாலை நிர்வாகமும் உணரவில்லை, பெற்றோர்களுக்கும் இணைய வழி கல்விக்காக உந்துதலை கொடுக்கவில்லை. ஆனால், “இயலாதது ஒன்றுமே இல்லை”

பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு பெற்றோர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனால்தான், 'நாட்டிற்காகப் பயிற்சி தேசத்தின் மீது பற்று கொள்ளக்கற்றுத் தருவதே கல்வி' – கௌடில்யரும், 'தன்னை உணர்தல் கல்வி'- ஆதிசங்கரரும் கூறியுள்ளனர்.

கல்வியைப் பற்றி சுவாமி விவேகானந்தர், “இயற்கையாக மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்வீகமான பரிபூரணத்தை வெளிக்கொணர்வது கல்வி. உள்ளத்தின் விருப்பங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பயனுள்ளதாக ஆக்குவதே கல்வி” எனத் தெரிவித்துள்ளார்.

கல்வித்தொடர்பில் சமுகத்துக்குள் விதைக்கப்பட்டுள்ள இவ்வாறான கூற்றுக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு பலவிதமான வகிபங்குகள் காணப்படுகின்ற பொழுதும் பெற்றோரின் வகிபங்கு என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

குடும்பம் கல்வியின் ஊன்றுகோலாக நெடுங்காலமாக இருந்து வருகின்றமை யாவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றாகும். ஆகவே, பெற்றோர் இந்த குடும்பப் பின்னணி மூலம் தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கைக்குத் தேவையான கல்வியறிவைப் பெற்றுக்கொடுக்க முயல்கின்றார்கள்.

அந்தவகையில் பிள்ளைகளின் உளவிருத்தி, உடல்விருத்தி, வாழ்க்கைத் தத்துவ பழக்க வழக்கங்கள், சமூக செயற்பாட்டுக்கான ஆரம்பக்கல்வி, கலை கலாசாரம் பற்றிய கல்வி, சமயம் ஒழுக்க விழுமிய கல்வி மற்றும் மிக முக்கியமாக மொழிவிருத்திக்கான ஆரம்ப கல்வி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சமூகசிந்தனை, சமூகசெயற்பாடு, சமூகமயமாக்கல், சமூக கண்ணோட்டம் மற்றும் சமூக சீர்த்திருத்தம் போன்ற அறிவு மட்டங்களை வழங்குவதில் பெற்றோர் முன்னின்று உழைப்பது கவனிக்கத்தக்கது.

இன்றைய கால பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு போதிய கல்விச் செயற்பாடுகளுக்குரிய வகையில் தம்மால் இயன்ற அளவு ஊக்குவிப்பு வழங்குகின்றமை பாராட்டுக்குரியதாகும். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெற்றோர், தமது வேலைப்பளுவுக்கு மத்தியிலும், பிள்ளைகளின் கல்விக்காக பாடுபடுகின்றார்கள். அதுபோலவே, பெரிதளவில் கல்வியறிவற்ற பெற்றோரும்கூட, தங்களால் முடிந்தவரை பிள்ளைகளுக்கு முறையான கல்வியை பெற்றுக்கொடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
பொதுவாக பெற்றோர் என்போர், குழந்தைகளை பெற்று வளர்த்து பாதுகாக்கும் பாதுகாவலர்கள் எனலாம்.

பிள்ளைகள் பெற்றோரின் வாழ்வின் வசந்தங்கள். அவர்கள் இறைவனால் அருளப்பட்டவர்கள். அவர்கள் விலைமதிப்பற்றவர்கள் என்று பிள்ளைகளின் மகத்துவத்தை இஸ்லாமிய மார்க்கம் பறைசாற்றுவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, பிள்ளைகளின் நலம் பற்றிய கடமையும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு. பெற்றோர் பிரிந்திருந்தாலும் அவர்கள் தம் பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்து விதமான தேவைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது கட்டாயமாகும். அதற்காக அவர்கள் இருவருமே கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டுடியது அவசியமாகும்.

பிள்ளைகளின் கல்வி நிலையானது, ஒவ்வொரு பிள்ளையின் குடும்பம், வீட்டுச்சூழல், குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை, குடும்ப அமைப்பு, பொருளாதாரம் மற்றும் அந்நியோன்யம் போன்ற அடிப்படை கட்டமைப்புகளில் இருந்து, ஒவ்வொரு பிள்ளைகளினதும் கல்வி நிலை வேறுபடுகின்றது என்றே கூற வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும், பாடசாலை மற்றும் பாடசாலை சூழல் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து நடப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோரும் கூட, சமூகத்தின் மீதும், சமூக உறுப்பினர் மீதும் மரியாதை வைத்திருக்கவேண்டியது மிக முக்கியமாகும். அப்போது தான் இரண்டு தரப்பினருக்கு இடையிலும் ஒரு பரஸ்பர உணர்வு ஏற்பட்டு, பாடசாலையின் வளர்ச்சியில் உயர்வு உண்டாகும்.

தற்பொழுது நிலவும் கால சூழ்நிலையின் பிரகாரம், ஒரு ஆசிரியர் பின்வரும் விடயங்களை பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போது, அது மிகச்சிறந்த வெற்றியை ஏற்படுத்தும். அத்தோடு மாணவர்களின் கல்வியின் விருத்தியிலும் பங்காற்றும் என்பது உண்மையாகும்.

அதேபோல சிறப்பான கல்வி திட்டங்களை செயல்படுத்தி மேற்பார்வை செய்து வந்தால் சமுதாயத்தில் பல கூறுகளிலும் அவற்றின் பயன் மற்றும் ஏனைய அனைத்தும் சென்றடையும். குறிப்பாக, இதன் பயன் சென்றடைய குறிப்பிட்ட அதிகாரிகள் காலத்துக்கு காலம் முறையாக தலையிட்டு பிரச்சினைகள் இருப்பின் தீர்வு பெற்றுத்தரவும் முன்வரவேண்டும். அத்துடன், தேசிய தலைமை உடைமை முறை ஆகியவையும் சிறப்பாக அமைதல் வேண்டும்.

பிள்ளைகளின் கல்வியில் தொடர்புடைய ஒவ்வொரு செயற்பாடுகளும், இன்றைய கால சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும். அதேவேளை, அந்த செயற்பாடுகள், தொலைநோக்கு பார்வையில் செயற்படுத்தக்கூடிய வகையில் அமைய வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை மிக உண்ணிப்பாக செய்து வந்தால், கல்வி அபிவிருத்தியில் பாரிய மாற்றத்தை கொண்டுவரலாம் என்பது திண்ணமாகும்

ஜெயகுமார் ஷாண் (மொனராகலை)
jayakumarshan4@gmail.com

(கட்டுரையாளர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .