2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தரப்படுத்தல்: முரண்பாட்டின் புதுவெளி

Mayu   / 2024 மார்ச் 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

1971ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிகளில் அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறையானது தமிழர்கள் அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமைப்பறிப்பு, தனிச்சிங்களச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சிறுபான்மையினரை சட்ட நிர்வாக ரீதியாக கட்டமைப்பு ஒதுக்கலை நிகழ்த்திய மூன்றாவது நிகழ்வு தரப்படுத்தலாகும்.

இலங்கையின் இனமுரண்பாட்டின் தோற்றுவாய்கள் பற்றிப்பேசுவோர் 1,956 தனிச்சிங்களச் சட்டம் மற்றும் 1,983 இனவன் முறைகள் பற்றியே அதிகம் கவனம் செலுத்துகின்றனர். பலரும் ஆழமாக விளங்கத் தவறுகின்ற முக்கிய நிகழ்வு தரப்படுத்தல். சுதந்திரத்துக்கு முன்னரே, 1945இல் இலவசக் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

இது அக்காலப்பகுதியில் அதிகரிக்கத் தொகை மக்கள் தொகையுடன் இணைந்து பாடசாலைகள் பல புதிதாகத் தோற்றம் பெறவும் பலர் பாடசாலைகளில் இணையவும் வழிவகுத்தது. 1945இல் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 867,000 ஆகவிருந்தது.

இது 1960இல் 2,244,000 ஆகவும், 1970இல் 2,700,000 ஆகவும் உயர்ந்தது. இடைநிலைக் கல்வியை வெற்றிகரமாக முடித்தமாணவர்கள், பல்கலைக்கழகத்தில் சேர விரும்பினர். இவ்வாறு விரும்பி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 38.9 வீதமானவர்கள் 1945இல் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தார்கள். அடுத்த 25 ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தில் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், 1973-74 இல் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றோர் 9.7 சதவீதமே.

1945இல் பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர்களின் எண்ணிக்கை 1,065 ஆக இருந்தது,ஆனால் அது 1950 இல் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 1960இல் 3,181ஐ எட்டியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு,இது 10,423 ஆக மூன்று மடங்கு அதிகமாகும். இலவசக் கல்வியானது, அதிகப்படியானோருக்கு ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்விக்கான வாய்ப்புகளைச் சாத்தியமாக்கியது. இது இலங்கையின் கல்வியறிவு வீதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாகியது.

இலவச கல்வி பயன்களை மட்டுமன்றிச் சிக்கல்களையும் உருவாக்கியது. அதிகளவிலானோர் இடைநிலைக் கல்வியை முடித்து பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல விரும்பினர்.

ஆனால் அதற்கு வசதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக அனுமதி இருக்கவில்லை. போதுமான பல்கலைக்கழகங்களோ, இருக்கின்றபல்கலைக்கழகங்களில் மாணவரின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரிப்பதோ நிகழவில்லை. இது சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை ஆட்சியாளர்கள் கவனிக்கத் தவறிய மாபெரும் தவறுகளில் ஒன்று. 1956 தனிச்சிங்களச் சட்டம் தமிழர்களுக்கான அரச வேலைகளுக்கான வாய்ப்புக்களைக் கிட்டத்தட்ட இல்லாமல் செய்தது.

1956இல் அரச சேவையில் 40 வீதமானோர் தமிழர்கள். இராணுவத்தில் 30 வீதமானோர் தமிழர்கள். இது 1970இல் முறையே 5 மூலமாகவும் 1 மூலமாகவும் குறைந்தது. குறிப்பாக கிராமப்புறக் கல்வியின் குறைபாடுகள் அங்குள்ளவர்களின் பல்கலைக்கழக வாய்ப்புகளை மட்டுப்படுத்தின. பல்கலைக்கழகத்துக்குள் நுழையமுடியாத படித்த இளைஞர்கள், நிலையான வேலைவாய்ப்பைப் பெற முடியாதபோது அவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் பின் தங்கியவர்களாக உணர்ந்தனர்.

இந்த சூழலில், அரசாங்க வேலைகள் மிகவும் விரும்பத்தக்கவை, மேலும் நடுத்தர மற்றும் உயர்மட்ட அரசாங்க வேலைவாய்ப்பைப் பெறுவதற்குப்பல்கலைக்கழக பட்டம் சிறந்த வழியாக இருந்தது. அவ்வகையில் எவ்வாறு தமது பல்கலைக்கழக வாய்ப்பை அதிகரிப்பது என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது. இந்நிலையிலேயே, இனத்துவ ரீதியில் தமிழர்கள் குறிவைக்கப்பட்டார்கள். பிரித்தானிய காலனித்துவ காலத்தில், பெரும்பாலான சிங்களவர்கள் விவசாயத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர்வதில் திருப்தியடைந்தனர்.

கற்றலை வலியுறுத்தும் ஒரு கலாசாரம் (குறிப்பாக அதன் உயர் சாதியினர் மத்தியில்) வட மாகாணத்தில் மிஷனரி நடவடிக்கைகளுடன் இணைந்ததாக இருந்தது. விவசாயமோ ஏனைய பயிர்செய்கையையோ வாழ்வாதாரமாகக் கொள்ளவியலாதபடி அமைந்த கடுமையான நிலப்பரப்பும் காலநிலையும் தமிழர்களை அரசாங்க வேலைகளை நோக்கி நகர்த்தியது. இதனால் ஒப்பீட்டு அடிப்படையில் தமிழர்கள் அதிகளவில் அரசாங்கப்பணிகளில் இருந்தார்கள்.

மிஷனரிக் கல்வியானது உயர்குடித் தமிழர்களை “மேம்பட்ட குழுவாக” உருவாக்கியது. அதே காலப்பகுதியில் வடக்கில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்க மிஷனரிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆங்கில வழிக்கல்வியைச் சிறந்த அறிவியல் அடிப்படையிலான கல்வியுடன் இணைத்துச் சிறந்தபள்ளிகளை அமைத்தனர், இது தமிழர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் அதிக அளவில் நுழைய அனுமதித்தது.

உண்மையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனது இரண்டாவது வருடாந்த அறிக்கையை வெளியிட்ட போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 பாடசாலைகள் கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தர விஞ்ஞான அடிப்படையிலான பாடநெறிகளை கற்பிப்பதைக் குறிப்பிட்டுள்ளது, அதேவேளை, அதிக மக்கள்தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தில் 42 பாடசாலைகள் மட்டுமே இருந்தன.

சிங்களம் மட்டுமே கொள்கையானது பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கிலத்திற்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கல்விகற்ற வழிவகுத்தது. இந்த மும்மொழி அறிவுறுத்தல் 1960 களின் முற்பகுதியில் கலைப் பீடங்களில் நடைமுறைக்கு வந்தது, ஆனால் அறிவியல் துறைகள் தமிழ், சிங்கள மொழிகளில் போதனைகளை வழங்குவதற்கு ஒரு தசாப்தத்திற்கு மேல் எடுத்தது.

1960களில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ஒரேயொரு பொறியியற் பீடமே இருந்தது. அதற்கு வருடாந்தம் 150 மாணவர்களே அனுமதிக்கப்படுவர். வழமையாக அனுமதிக்கப்படும் தமிழ் மாணவர்களின் தொகை 30 சதவீதத்திற்கும் 50 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாகவே இருந்து வந்தது. 1970இல் நடந்தபரீட்சைப் பெறுபேறுகளின் படி, அனுமதிக்கப்பட்டோரில் 80 சதவீதமான மாணவர்கள் தமிழ் மொழிமூல மாணவர்களாக இருந்தனர். அதற்கு முக்கிய காரணம், பல்கலைக்கழகப் புகுமுகப்பரீட்சைக்கு டியூசன் வகுப்புக்கள் பெரிய அளவில் நடத்தப்பட்டமையாகும். எனினும் சிங்கள மக்கள் நடுவே ஐயங்கள் எழுந்தன.

பேரினவாதிகள் விஷமத்தனமாக அவற்றைத் திசை திருப்பித் தமிழ்பரீட்சகர்கள் வேண்டுமென்றே தமிழ்மாணவர்களுக்கு அதிகளவு புள்ளிகளை வழங்கியுள்ளதாகப் புரளியைப்பரப்பினர். இதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. குறித்தபரீட்சையில் ஒழுங்கீனங்கள் எதுவும் நடந்தனவா என்ற முறையான விசாரணையின்றி மொழிவழித் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாகத் தமிழ்-சிங்கள விகிதாசாரம் ஏறத்தாழத் தலைகீழாக்கப்பட்டது.

பல்கலைக்கழக அனுமதிகள் தரப்படுத்தலின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, ஒழுங்கீனம் எதுவும் நிகழவில்லை என்று விசாரணைக்குழுவொன்று உறுதிப்படுத்தியது. அரசாங்கம் தரப்படுத்தலை அறிமுகப்படுத்த முன்னர் விசாரணைக் குழுவின் முடிவுகள் வரும்வரைக் காத்திருந்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் முடிவுகள் வந்த பின்னராவது தரப்படுத்தலைக் கைவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது நிகழவில்லை. அதிகளவான தமிழ்மாணவர்கள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றதில், குடாநாட்டில் ட்யூஷன் வகுப்புக்கள் பெருமளவிற் தொடங்கியிருந்தமை என்பது விசாரணைக்குழுவுக்குத் தெரியாது. அதைவிட முக்கியமாகக் குடாநாட்டை விட்டால், நகரங்களில் இருந்தளவு கல்வி வசதிகள் கிராமப்பகுதிகளில் இருக்கவில்லை.

இந்த விதமான ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்வதற்கும் கல்வியில் முதலீட்டைப் பெருக்குதற்கும் பதிலாக,அரசாங்கம் தரப்படுத்தல்,பின்பு மாவட்ட அடிப்படை என்ற விதமான குறுக்கு வழித் தீர்வுகளை நாடியது. இது கோளாறான அரச கொள்கைகள் எவ்வாறு இன முரண்பாடுகளைக் கூர்மையடைய வைத்தன என்பதற்கு சான்றாகும். பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சினை ஒரு இனப் பிரச்சினையாக்கியதிற் பேரினவாதிகள் கட்சி வேறுபாடின்றி செயற்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் தரப்படுத்தலை அங்கீரித்துக்கொள்ள மௌனம் சாதித்தன. எனினும் பின்னர்மாவட்ட அடிப்படை முறையும் சேர்க்கப்பட்டு நகர் சார்ந்த பெரிய பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னர் தரப்படுத்தல் பற்றிய தயக்கங்கள் மேட்டுக்குடிகளிடையேதோன்றின.

1970 தேர்தல் முடிவுகளால் அதிர்ந்து போயிருந்த தமிழரசுக் கட்சி இதைத் தனது குறுந் தேசியவாத நிகழ்ச்சிநிரலுக்கான கருவியாக்க முனைந்தது. அதன் இளைஞர் அமைப்பினர் கல்வி அமைச்சர் ஒரு முஸ்லிம் என்பதைப்பயன்படுத்தி யாழ்ப்பாண முஸ்லிம்களைப் புண்படுத்துமாறான முஸ்லிம் விரோதக் கோஷங்களை எழுப்பினர். இவ்வாறு, தரப்படுத்தல் தேசிய இனப்பிரச்சினையை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளிற் கூர்மைப்படுத்தியது.

தமிழரசுக் கட்சியும் பிற தமிழ் தேசியவாதிகளும் அதற்கு ஒரு தமிழின உணர்வுப்பரிமாணத்தை வழங்கியதோடு நில்லாது, கல்வி அமைச்சராக இருந்தவர் ஒரு முஸ்லிம் என்பதைப்பயன்படுத்தி அதற்கு முஸ்லிம் விரோதப்பரிமாணத்தையும் வழங்க முற்பட்டனர்.

அந்த முயற்சி வெற்றி அளிக்காவிடினும் அது ஏற்படுத்தி கசப்புணர்வு புறக்கணிக்கத்தக்கதல்ல. தரப்படுத்தல் ஏற்படுத்திய சிக்கலிலிருந்து மீளுவதவற்குத், தரப்படுத்தலின் இடத்தில் தரப்படுத்தலோடு இணைந்த மாவட்ட அடிப்படையிலான அனுமதி முறை புகுத்தப்பட்ட போது, யாழ். மாவட்டத்திற்கு வெளியில் வடக்கு - கிழக்கிலிருந்த மாணவர்களுக்கு அது நன்மையளித்ததால், தரப்படுத்தலுக்குகெதிராகத் தமிழ் மாணவர்களது ஏகோபித்த போராட்டம் ஒன்றை முன்னெடுப்பது இயலாது போயிற்று. எனினும் தரப்படுத்தல் பற்றிய கசப்புணர்வு தொடர்ந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .