2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தலையெடுக்கும் நவம்பர் எதிரொலிகள்

Editorial   / 2023 நவம்பர் 29 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

நவம்பர் மாதம் இலங்கைத் தமிழர்களது அரசியல் விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான மாதமாகவே பார்க்கப்படுகிறது. இந்த மாதம் ஆரம்பித்தாலே பாதுகாப்புத் தரப்பினரது அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும் தலையெடுத்துவிடும். அடக்குமுறைகள் மூலமாக எல்லாவற்றினையும் செய்துவிடலாம் என்ற எண்ணப்பாடே அதற்குக் காரணமாகும். ஆனாலும் நவம்பர் மாதம் முழு நாட்டுக்கும் முக்கியமானது. வரவு - செலவுத் திட்டம் அதன் காரணம்.

ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் கார்த்திகை வீரர்கள் தினமும் இம்மாதத்திலேயே அனுஷ்டிக்கப்படுவது வழமை. ஆனால், இரண்டு மீதான பார்வை மற்றும் எதிர்வினைகளில்தான் வேறுபாடு. முழு நாட்டுக்கும் எதிராகப் போராடியவர்களது நினைவுகூரல் எவ்வித எதிர்ப்புமின்றி நடைபெற, தமது இனத்தினுடைய விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்களுடைய போராட்டத்தின் நினைவுகளை மீட்க முடியாதளவுக்கு எதிர்வினைகளாற்றப்படுவது ஓரவஞ்சனையே.

சட்டமூலங்கள் இயற்றப்படுகின்றன. நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகின்றன. மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏதேனும் பயனைத் தந்துவிடுமா? அத்தகைய சட்டங்கள் மூலமாக வடக்கு கிழக்கிலுள்ள கடல் வளம் உள்ளிட்ட வளங்களை முழுமையாகத் தமிழர்கள் பயன்படுத்துவதற்குக் கூட முடியாத சூழலே உருவாக்கப்படுகிறது. அதே நேரத்தில், தமிழர்களுடைய விடயங்கள் பொறுப்பற்ற வகையில் கையாளப்படுவதாகவும் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படாததாகவும் என இலங்கை அரசியலில் முற்றுமுழுதான வெறுப்புணர்வு சார்ந்ததான அரசியலே நடைபெற்று வருகிறது. அதனை மற்றொரு வகையில் சொன்னால், தமிழர்களது முதுகில் குத்தும் செயற்பாடுகளே வரலாற்றில் நடைபெற்றிருக்கின்றன.

தமிழர்களது சிந்தனை எதிர்மறையாக உள்ளது எனக் குற்றம் சாட்டப்படலாம். நாடு சுதந்திரம் அடையும் போது தமிழர்கள் தேவைப்பட்டார்கள். இந்தியா சுதந்திரமடைந்ததன் பின் இலங்கையின் சுதந்திரத்துக்காக சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் போன்றோர் பிரித்தானியா சென்று நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்கள். இது அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய வரலாறு மட்டுமல்ல, அறிந்ததும் கூட. ஆனால், மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்படுவதாக மாறிப்போனது. இவ்வாறு நன்றி மறந்து, முதுகில் குத்தும் செயற்பாட்டுக்கு நிறையவே உதாரணங்கள் அடுக்கப்படலாம்.

மேலும், நாட்டின் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளதும் வீழ்ச்சிக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் காரணம் இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இனக் கலவரங்கள், இன முறுகல்களே. இருந்தாலும் இப்போதைய நிலையில், கடந்த வாரத்தில் நீதித்துறை வழங்கியிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் பொருளாதாரக் குற்றம் அண்மைய ஒரு உதாரணமே தவிர முழுதானதல்ல.  

நாடு சுந்திரமடைந்ததிலிருந்து தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். 1956இல் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து இந்த நாட்டைக் கலவர பூமியாக மாற்றியது சிங்கள அரச தலைவர்களாவர். 1957இல் பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் ஊடாக இந்த நாட்டில் தமிழர்கள் சம அந்தஸ்த்துடைய பிரஜைகள், அவர்கள் சம உரிமையுடன் வாழலாம் எனும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் புத்த பிக்குகள் கண்டி யாத்திரை செய்து அதனை இல்லாமல் செய்தார்கள். அதே போன்றே, டட்லி  செல்வா ஒப்பந்தம் என்றே வரலாறுள்ளது.

1958, 1978 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் தமிழர்களை இன ரீதியாக அடக்கி, அவர்களது பொருளாதாரத்தை அழித்துப் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டு அவர்களை அகதிகளாக ஆக்கிய பெருமை பெரும்பான்மையினரையே சாரும். அதேபோன்ற திட்டமிடப்பட்ட அழிவுகளே 2009 வரையிலும் நடைபெற்றிருந்தன.

தமிழர்கள் எப்போதும் ஆயுதப் போராட்டத்தையோ, ஆயுதக் கலாசாரத்தையோ விரும்பியிருந்தவர்கள் அல்ல என்பதனை பல தடவைகளில் தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல், ஜனநாயக ரீதியில் இந்த நாட்டில் தாங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று அகிம்சை ரீதியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஒப்பந்தங்கள் ஊடாகத் தீர்வைக் காண முயன்றவர்களை பெரும்பான்மையினத் தலைவர்கள் ஏமாற்றி, அகிம்சை ரீதியாகப் போராடியவர்களின் தலைகள் உடைக்கப்பட்டன. அதனால் தமிழ்  இளைஞர்கள் வலிந்து ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டார்கள். இதுவே வரலாறு.

தமிழர்களின் போராட்ட அரசியல் வரலாறு பல இழப்புகளையும், அழிவுகளையும் இன்னல்களையும் கண்டது. இருந்தாலும் இன்னமும் தீர்வை அடைந்துவிடாமலேயே தொடர்கிறது என்பதுவே துயரமானது.

2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வேறு ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த நாட்டை பௌத்த நாடு என்று சொல்ல முற்படுவதும், அடாவடியான அத்துமீறல்களுமே நடைபெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கில் அத்துமீறிய பௌத்த மயமாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தெற்கிலிருந்து வருபவர்கள் வடக்கு கிழக்கில் புதிது புதிதாக விகாரைகளை அமைக்கிறார்கள்.  தமிழர்களது சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. அல்லது அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பௌத்தம் இருந்தது என்பதனை இல்லாமல் செய்து அவையெல்லாம் சிங்கள பௌத்தத்துக்கானதாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது எவ்வகையான குழப்பகரமான செயற்பாடு என்பதனை நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

தமிழர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் நாட்டில் இருந்துவிடக்கூடாது என்பதற்காக பௌத்தம் இருந்ததற்கான அடையாளங்கள் புனையப்படுகின்றன. அல்லது நீரூபிக்கப்படுகின்றன.

2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்ட கையோடு,  வடக்கு, கிழக்கில் இருந்த தமிழர்களின் இன விடுதலைக்கான போராட்டச் சின்னங்கள், மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டன. அதன் பின்னர் அவை இருந்ததற்கான அடையாளங்கள் மக்களால் மீட்கப்பட்டால், புதுப்பிக்கப்பட்டால், அல்லது மீளமைக்கப்பட்டால் மிக் கடுமையாகத் தடுக்கப்படுகிறது. இது தமிழர்கள் மீதுள்ள வெறுப்பினால் நடைபெறுகின்றதா அல்லது அவர்களை ஏற்காமையின் வெளிப்பாடா? என்பது புரியாப் புதிராகவே இருக்கின்றது. 

ஒரு காலத்தில் கே.எம்.பி.இராஜரெட்ண, சிறில் மத்தியு போன்ற இனவாதிகள் தமிழர்களுக்கு எதிராக தங்களது இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். இந்த நாடு பற்றி எரிந்தது. தற்போதைய நிலையில் முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களான  சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்றவர்கள் அதனை முன்னெடுக்கிறார்கள். இவர்களுக்கு முன்னர் இன்னும் பலரும் முன்கொண்டிருந்ததையே அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பது இதன் உண்மை. அது இந்த நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை உருவாக்கி மீண்டும் மீண்டும் இந்த நாட்டை அதளபாதாளத்திற்குள் தள்ளும் வரலாற்றுத் தவறைச் செய்வதற்கே முயற்சிக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் தமிழ் பௌத்தர்களே இருந்தார்கள் என்று பௌத்த பிக்குகள் சிலரே கூறினால் கூட அதனை ஏற்கும் மனோநிலை தெற்கிலுள்ளவர்களுக்கில்லை. அத்துடன், போராட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் விகாரைகள் எதுவும் தாக்கப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் நாக விகாரை இருந்தது. இன்னும் பல விகாரைகள் இருந்தன. எந்த விகாரைகளும் தாக்கப்படவில்லை. ஆனால் அக்காலத்தில் இராணுவத்தினராலும், பாதுகாப்புப் படையினராலும் இந்து ஆலயங்கள் பல தாக்கப்பட்டன, கிறிஸ்தவ தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த ஆலயங்களிலே கொல்லப்பட்டார்கள் என்று புத்த பிக்குகளே கூறியிருக்கிறார்கள். இருப்பினும் இனவாத மனோநிலை கொண்டவர்களின் வெளிப்பாடு வேறு வகையிலிருப்பது ஒரு விநோதமே.

இதன் தொடர்ச்சியாகத்தான் மீண்டும் இம்மாதத்தில் நடைபெறவுள்ள நினைவுகூரல்களுக்கெதிரான நீதிமன்றத் தடையுத்தரவுகள் கோருகின்ற முயற்சிகள் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட வண்ணமிருக்கின்றன. வழமை போலவே சில நீதிமன்றங்களில் அனுமதி கிடைக்கலாம். சில நீதிமன்றங்களில் பொலிஸாரால் கோரப்படும் கோரிக்கைகள் மறுக்கவும் படலாம். ஆனாலும், மாவீரர் நினைவுகூரல்கள் நடைபெறும் என்றே நம்புவோம்.

பிரச்சினைகளும் ஏற்படலாம். அதன்பின்னர் பலருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்படலாம்.

இவ்வாறிருக்கத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு எவ்வாறு வழங்கப்படும். அதற்காக நடத்தப்படுகின்ற போராட்டங்கள், நாடு முதல் சர்வதேசம் வரை எடுக்கப்படுகின்ற முயற்சிகள் பலன்கொடுக்குமா என்பது பதில் கிடைக்காத சலிப்புத்தட்டிய கேள்வியாகவே இருக்கிறது. இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும் வரை எதிரொலிகள் இருக்கத்தான் செய்யும். தமிழர் தரப்பின் முயற்சிகளும் தொடர்ந்தவண்ணமே தான் இருக்கும்.

2023.11.20

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .