2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தவிக்கும் கடல் மாதா

Princiya Dixci   / 2021 ஜூன் 13 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் பொத்திப் பொத்திப் பாதுகாத்திருந்த சிறு உயிர்களை பறிகொடுத்து அங்கலாய்க்கிறாள் கடல் தாய். ஒன்று, இரண்டு என அதிகரித்து கடந்த 13 நாட்களில் 21 கடலாமைகளை கடல் தாய் பறிகொடுத்துள்ளார். நாட்டின் தென் பகுதிக் கடற்கரைகளில் இவ்வாறு இறந்த ஆமைகளின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன.

அத்துடன், வாத்துவ – தல்பிட்டிய மற்றும் இந்துருவ கடற்கரைகளில் இரு டொல்பீன்களின் உடல்களும் கரையொதுங்கியுள்ளன. இது போதாது என்று, கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு அரணாக இருக்கும் பவளப் பாறைகளின் சிதைவுகளும் சுதுவெல்ல கடற்கரைப் பகுதியில் அண்மையில் கரையொதுங்கியுள்ளன.

 “சமுத்திர வாழ்வியலும் வாழ்வாதாரமும்” என்ற தலைப்பில் ஜுன்.08 உலக சமுத்திர தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கைக் கடலின் வாழ்வியலும் வாழ்வாதாரமும் இன்று கேள்விக்குறியாகவே எம் கண் முன் உள்ளன.

தெற்குக் கடற்கரையில், நாளாந்தம் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிக்கொண்டே தான் இருக்கின்றன.

இந்த அனர்த்தத்துக்கு, கொழும்புத் துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த நச்சு இரசாயனப் பதார்த்தம் காரணமா என ஆராயப்படுவதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக கடலாமைகளின் உடற்பாகங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடிக்க ஆரம்பித்த 8 நாட்களின் பின்னர் தான் இறந்த ஆமை ஒன்றின் உடல் முதன்முறையாக கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் பாணந்துறை, நீர்கொழும்பு, தொடுவாய், உனவட்டுன, கொஸ்கொட, வடக்கு பயாகல, தெஹிவளை, வாதுவ, தல்பிட்டிய, அங்குலானை, முந்தல் – சின்னப்பாடு மற்றும் ரெக்கவ ஆகிய கடற்கரைகளில் இருந்து தொடர்ச்சியாக ஆமைகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

உலக சமுத்திர தினத்தன்று, 19ஆவது ஆமையின் உடல், வெள்ளவத்தைக் கடற்கரையில் கரையாதுங்கியிருந்தது. தொடர்ந்து, முசலி - சிலாபத்துறை  கடற்கரை, கொழும்பு – காலிமுகத்திடல் கடற்கரை என தொடர்ந்தும் இறந்த ஆமைகளின் உடல்கள் கரையொதுங்கிய வண்ணம் இருக்கின்றன.

இந்தக் கடலாமைகளின் இறப்புக்கள் தொடர்பில் கடல்வாழ் உயிரின நிபுணர் துஷான் கபுருசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

“நச்சு இரசாயனம் கடலில் கலந்தவுடன் அதன் அடர்த்தி குறைவடையும்; அதன் தாக்கம் குறையும் என சிலர் வாதிடுகின்றனர். எனினும், கடல்வாழ் உயிரின நிபுணர் என்ற வகையில் நான் அதனை நிராகரிக்கின்றேன். நச்சு இரசாயனம் மூலம் கடலாமைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். நச்சுப் பதார்த்தங்கள் உடலுக்குள் அடங்கியுள்ள உயிரினங்களை இவை உணவாகக் கொண்டால், அவற்றையும் அந்த விஷம் சென்றடையும்”என்றார்.  

தாய் கடலாமைகள் இடும் நூற்றுக்கணக்கான முட்டைகளிலிருந்து வெளிவந்து, நூற்றாண்டு ஆயுள் உயிர் வாழும் சிறப்புக் கொண்டவை கடலாமைகள். எனினும், அவற்றின் வாழ்விடமான கடல் பகுதியில் மனிதனர்களால் நிகழ்த்தப்படும் பொறுப்பற்ற செயற்பாடுகளால் ஆமைகளின் ஆயுள் காலம் சுருங்கிக்கொண்டிருக்கின்றது.

ஆமைகள் மாத்திரமல்ல, கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஆயுள் கால ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என்றுதான் கூற வேண்டும்.

மனித வாழ்வுக்குப் பாரிய பங்களிப்பைச் செய்யும் கடல், மனிதர்களால் எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்களும் ஏராளம். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகள் கடலில் கொட்டப்படுவது அதில் முக்கியத்துவம் வாய்ந்தது.

உலகளாவிய ரீதியில் 8.8 மில்லியன் தொன் பொலித்தீனும் பிளாஸ்டிக்கும் வருடாந்தம் கடலில் கலப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உக்காத கழிவுகளைக் கடலில் சேர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் முன்னிலை வகிக்கின்றது.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் கடலில் பல பொருட்கள் கலந்தமை சுற்றாடல் பேரழிவு என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கடல்சார் நிபுணரான சரித்த பட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

“கப்பலில் 7 .8 மில்லியன் அளவு பிளாஸ்டிக் துணிக்கைகள் இருந்துள்ளன. சிலவற்றை அப்புறப்படுத்த முடியும். எனினும், அவை நீண்டகாலம் நீடித்திருக்கக்கூடியவை. இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேஷியா மற்றும் சோமாலியா போன்ற நாடுகளுக்கும் இவை மிதந்து செல்லலாம். அதேபோன்று,  நாட்டின் தெற்கு கடல் பரப்பில் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு” எனவும் சரித்த பட்டியாரச்சி எச்சரித்துள்ளார்.

இந்தக் கப்பலில் இருந்து வெளியாகியிருந்த கழிவுகளால் கடந்த வாரங்களில் தெற்குக் கடற்கரை குப்பை கூழங்களால் நிறைந்து, அலங்கோலமாகியிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கடல் பாதுகாப்பு ஊழியர்கள், களத்தில் இறங்கி துப்புரவுப் பணிகளை முன்னெடுத்திருந்தமை பாராட்டத்தக்கது.

கப்பலில் ஏற்பட்ட இந்தத் தீ நாட்டின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் அமைப்பு, மீன்வளம் மற்றும் சுற்றுலாத்துறை உட்பட நாட்டின் பல்வேறு துறைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன. அதன் தாக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

இதேவேளை, தீப்பற்றிய கப்பலின் இரசாயனப் பொருட்கள் காரணமாகவே கடல்வாழ் உயிரினங்கள் இறந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உயிரிழந்த கடலாமைகள் மற்றும் மீன்களின் பாகங்களை, நாரா நிறுவனம் தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இரசாயனப் பொருட்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

கரையொதுங்கிய கடலாமைகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, நீதி அமைச்சில் கடந்த திங்கட்கிழமை (07) கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதி சட்டத்தரணியும், நீதி அமைச்சருமான அலி சப்ரி மற்றும் அலங்கார மீன், உள் நாட்டு  மீன் மற்றும் இறால் வேளாண்மை, மீன்வள துறைமுக  மேம்பாடு, பல நாள் மீன்பிடி  நடவடிக்கைகள்  மற்றும் மீன் ஏற்றுமதிக்கான  இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்தது, நாட்டின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் அமைப்பு, மீன் வளம் மற்றும் பல துறைகளுக்கு  ஏற்பட்ட  சேதத்தை சரி செய்ய, சட்ட நடவடிக்கை எடுப்பதில் சட்டமா அதிபர் துறைக்கு  உதவுவதாகும்.

இதற்கமைய, சுற்றுச்சூழல், மீன்வளத் துறை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் தீயினால் ஏற்பட்ட  எதிர்காலத்துக்குமான  செலவினங்களுக்கும்  இழப்பீட்டைப் பெறுவதற்கு  சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியில் முழுமையாக ஒத்துழைக்க சட்டமா அதிபர் அழைக்க வேண்டும்.

இதற்காக புத்திஜீவிகளின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நாட்டிற்கான அதிகபட்ச இழப்பீட்டை பெறுவதற்கு  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கப்பலொன்று தீப்பிடித்தமையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இலங்கை நட்டஈட்டைப் கோரும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரமே, இந்த நட்டஈடு கோரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பை இழப்பீட்டின் மூலம் மதிப்பிட முடியாது என்பது தனது நம்பிக்கை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

அதனால் நாட்டின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள், கடல் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடி சமூகத்தின் மீதான தாக்கத்தை அளவிட முடியாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், இறந்த கடல்வாழ் உயிரனங்கள் நட்டஈட்டைப் பெறுவதால் உயிர்தெழப் போவதில்லை. இழப்புக்குப் பின்னர் நட்டஈட்டை பெற்றுக்கொள்வதிலும் பார்க்க, இழப்பு ஏறப்படாமல் தடுத்திருப்பதே சாலச் சிறந்ததாகும்.

தெற்கு கடல் பகுதி இவ்வாறு பேரழிவுக்கு முகங்கொடுத்திருப்பதை தடுத்திருக்க வேண்டும். இவ்வாறான ஓர் அனர்த்தம் நிகழ்ந்தமைக்கு, அதிகாரத்தில் இருந்தோரே பொறுப்பு என நாம் சுட்டிக்காட்டலாம்.

ஆனால், கடல் மாசு காரணமாக ஏற்படும் பேரழிவுக்கு நாம் ஒவ்வொரும் கடல் தாய்க்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களாக உள்ளோம்.

எனவே, “இந்து சமுத்திரத்தின் முத்து” என போற்றப்படும் இலங்கை வாழ் பிரஜைகள் ஒவ்வொருவரும் கடல் பாதுகாப்புத் தொடர்பில் கரிசனை கொள்வோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X