2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தீமையிலும் விளைந்த நன்மை

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 21 , மு.ப. 10:47 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

இளங்கோ பாரதி

 

 

 

“எப்போதடா இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகும்?” என்ற அங்கலாய்ப்பை  இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது. கொரோனா  ஏற்படுத்திய நெருக்கடியால், நாட்டின் கல்விச் செயற்பாடுகள் முடக்கப்பட்டு  பல  மாதங்கள் கடந்து விட்டன. 

பெற்றோரும்  பிள்ளைகளும் கல்விச் சமூகமும், கல்வி குறித்த ஏக்க நிலையை, உணர்வு பூர்வமாக அனுபவித்து வரும் நிலையில் , ‘யானைப் பசிக்குச் சோளப்பொரி ’ என்பது போல,  இலத்திரனியல் ஊடாகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் ‘நிகழ்நிலை’  கல்விச் செயற்பாடுகள், பல்வேறு தரப்பினரதும் பேசுபொருளாக மாறியுள்ளன.

ஒருபுறம், இக்கற்றல் நடவடிக்கைகளால் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள பெற்றோர்,  மறுபுறம்,  இதனால்  பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ள மாணவர்கள், இன்னொருபுறம், இக்கற்றல் நடவடிக்கைகளின் பங்குதாரரான ஆசிரியர்கள், கல்விச் சமூகத்தினர் என, இவர்கள் அனைவரினதும் ஏகோபித்த எதிர்பார்ப்பானது பாடசாலைகள் ஆரம்பமாகும் நாளுக்கான காத்திருப்பே அன்றி வேறொன்றும் இல்லை.

‘நேரம் என்பது அருமையான ஒரு வளம்’. பெறுமதிமிக்க இவ்வளம், நாட்டில் ஏற்பட்டுள்ள முடக்க நிலைமைகளால் பெருமளவில் வீணாகிக்கொண்டிருக்கிறது. இந்நேரத்தைச் சரியான விதத்தில் முகாமை செய்ய,  எம்மவர் பலர் இன்னும் பழக்கப்படவில்லை. அவ்வாறு முகாமை செய்வதற்கான உத்திகளைப் புத்திஜீவிகள் மேற்கொண்டாலும் கூட, அதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள பலர் முயற்சிப்பதில்லை. 

இவ்வாறானதொரு நிலையில், மாணவரது கற்றல் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்று  நடவடிக்கைகளும் கூட, எதிர்பார்த்த பலனைத் தரமுடியாத ஒரு தேக்க நிலையை உருவாக்கியுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ‘நிகழ் நிலைக் கல்வி’ நடவடிக்கைகள்  பற்றி, ஆசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் “மாணவர்கள் அனைவரையும் இக்கல்வி நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்வதில், பல தடைகள் காணப்படுகின்றன” என வருத்தம் தெரிவித்தார்.

“எமது நாட்டில் இலவசக் கல்வி ஆரம்பித்து, பல வருடங்கள் கடந்து விட்ட நிலையில்,  கல்வியில் சமவாய்ப்பு  வழங்குவதில் அரசு முனைப்புடன் செயற்பட்ட போதிலும் தற்போது வழங்கப்படும் இலத்திரனியல் ஊடான கல்வி, வறிய மாணவர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. நிகழ் நிலை வகுப்புகளில் பங்கேற்க, வீடுகளில் மின்சாரம் அவசியமாகின்றது. மாணவர்களிடம் திறன்பேசி இருத்தல் வேண்டும். அதற்கான இணைய வசதிகளும் வேண்டும். அன்றாடம் உணவுத்தேவையையே பூர்த்திசெய்ய முடியாத வறியோருக்கு, இணையவழிக்கல்வி எட்டாக்கனியே. இதனால் மாணவர்களின் பங்களிப்பை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. பாடவிதானத்தை உரிய காலத்தில் பூர்த்திசெய்ய முடியாத நிலை உள்ளது” என்று தெரிவித்தார். 

மேலும், இக்கற்றல் நடவடிக்கைகளில் சிக்கல் தன்மை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டார். ஒரு வீட்டில், பல பிள்ளைகள் கல்வி பயிலும் நிலையில்,  திறன்பேசியை யார் பயன்படுத்துவது என்ற சிக்கல்நிலை தோன்றுவதாகவும் அவ்வேளைகளில் பொதுப் பரீட்சகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கல்வியில் சமவாய்ப்பு என்பது குடும்பத்திற்குள்ளேயே மறுக்கப்படுகிறது என்பதோடு அம்மாணவர் கல்வியிலிருந்து விலகிச் செல்லவும் அவை வழிவகுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மாணவர் சார்ந்து எழும் மற்றொரு பிரச்சினை, ஆசிரியர் - மாணவர் இடையிலான கண்வழித் தொடர்பு இல்லாததாகும். இதனால், கற்றல் செயற்பாட்டை மாணவர்கள் விளங்கிக் கொண்டனரா என்பதை ஆசிரியரால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை என்றார்.

தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவ முடிந்த பெற்றோர்க்கு, உளரீதியான நிறைவு ஏற்பட்டுள்ள போதிலும் முடக்க நிலையால் குடும்பத்தவரது உணவுத்தேவையையே பூர்த்திசெய்ய முடியாமல் அல்லலுறுவோருக்கு திறன்பேசிகளையோ,  மடிக்கணினிகளையோ, ‘ ரப்’ வகைகளையோ கொள்வனவு செய்வதென்பது பெரும் சுமையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வளர்முக நாடுகளில் மாத்திரமின்றி வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாகவும், அதற்கு மாற்று நடவடிக்கைகளாக  பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில், வீடுகளில் பயன்படுத்தாதிருக்கும் மடிக்கணினிகள், ‘ ரப்’ வகைகள் கோரப்படுவதாகவும், இதற்குச்  சமூகத்திலுள்ள நலன்விரும்பிகளின் உதவி பெறப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

“இலவசக்கல்வி வழங்கப்பட்டதனாலேயே எமது நாட்டில் சகலரும் கல்வி பெறும் நிலை உருவாகியது. இருந்தும் பாடசாலை புகுந்த அனைத்து மாணவர்களதும் பரீட்சைப் பெறுபேறுகள் ஒரேமாதிரியானதாக இருந்ததில்லை. மாணவர்களது தனியாள் வேறுபாடுகளால்  பொதுப் பரீட்சைப் பெறுபேறுகள் திருப்தி தரும் விதத்தில் அமைந்திருப்பதில்லை” எனவும் எடுத்துரைத்த அவர், “பாடசாலை செல்லாமல் வீட்டில் நிகழ்நிலை வகுப்புகளில் கற்கும் மாணவரது பொதுப் பரீட்சைப் பெறுபேறுகள் இனிவரும் காலங்களில் சரிவுநிலைக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம்.  இதற்குத் தீர்வாக பெற்றோரின் பங்களிப்புகள் முழுமையாகப்  பெறப்பட வேண்டும். தத்தம் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பெற்றோர் மேற்பார்வை செய்ய வேண்டும். இனங்கண்ட பிரச்சினைகள் தொடர்பாக, ஆசிரியர்களோடு கலந்துரையாடக்கூடிய பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படவேண்டும்” என்றும் விதந்துரைத்தார்.

இணைய வழிக் கல்வியைப் பெரும்பாலான மாணவர்கள் தம் வீடுகளிலிருந்தே பெற்றுக் கொள்வதால் கவனச் சிதைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளமை, இதில் காணப்படும் மற்றொரு குறைபாடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது மாணவர்களின் உடல்நிலையில் தலைவலி, கண் பாதிப்புகள், முதுகுவலி உள்ளிட்ட உபவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அத்துடன்  எவ்விதமான உடல் இயக்கங்களும் இல்லாத சூழலும், சக மாணவர்களுடன் பேசுவது போன்ற சமூக உறவுகள் இல்லாத சூழலும் மாணவர்களின் மனநிலையை அதிகமாக பாதிக்கிறது.

மலையகத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மிகவும் பரிதாபத்துக்குரியவையாக காணப்படுகின்றன. அவர்களில் சிலர்  கணினி, திறன்பேசி ஆகியவற்றுக்கு வலையமைப்பு வசதிகள் இன்மையால், இணையவழிமூலம் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இம்மாணவர்கள் உடல், உள உபாதைகளுக்கு உள்ளாவது கண்கூடாகக் காணப்படும் ஓர் உண்மையாகும். 

நிகழ்நிலை வகுப்புகள் தொடர்பாக, உயர்வகுப்பு  மாணவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் “இன்றைய நிலையில்,  கல்வியைத் தொடர இவ்வகுப்புகளைத் தவிர, வேறு உபாயங்கள் இல்லை. இதனால் மாணவர் சமுதாயம் மாத்திரமன்றி, ஆசிரியர்கள்,  பெற்றோர்களும் கூட, உலகமயப்படுத்தப்பட்ட  கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்கும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும், இவ் அபிவிருத்தியானது காலத்தின் கட்டாய தேவையே” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஆர்வலர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “மேலைநாடுகளில் நிகழ்நிலை வகுப்புகளில் கற்க மாணவர்கள் மடிக்கணினிகள், ‘ ரப்’ வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். நமது நாட்டில் திறன்பேசிகளைப் பயன்படுத்தியே பெரும்பாலான மாணவர்கள் கற்று வருகிறார்கள். இது ஒரு விதத்தில் மாணவர்களுக்குச் சிரமமானதே”  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பதின்மவயதினரான மாணவர்களது கரங்களில் உள்ள திறன் பேசிகள், அவர்களைத் தவறுதலான வழியில் இட்டுச் செல்லவும் வாய்ப்புகள் அதிகம் என்றும்  பெற்றோர்  தம் பிள்ளைகளின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் இதற்குப் பெரிதாக கல்வியறிவு தேவையில்லை என்றும் பிள்ளைகளின் மீதான அக்கறை ஒன்றே போதும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ பிரிந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், ‘குரு கெதர’  நிகழ்ச்சித் திட்டம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தின் ஊடகப் பங்களிப்புடன் தமிழ், சிங்கள மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் இதனால் பயன் பெற முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பெரும்பாலான மாணவர்களது வீடுகளில், இணையம் மூலம் கற்றலுக்கான வசதிகள் இல்லாது விடினும் தொலைக்காட்சி வசதிகள் காணப்படுவதால் மாணவர்களுக்கு இது நன்மை பயக்கும் என்பது உறுதியாகும். 

எது எப்படியோ இன்று பெற்றோர்கள் கல்விச் செயற்பாடுகளில் பங்குதாரராக இணையும் நிலை உருவாகி விட்டது. இது அவர்களுக்குச் சுமையாக அமைந்தாலுங்கூட, ஆரோக்கியமானதொன்றே என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. தீமையிலும் கூட ஒரு நன்மை விளைந்து தான் இருக்கிறது; வரவேற்போம்!


You May Also Like

  Comments - 1

  • மகாதேவா Monday, 21 June 2021 07:17 PM

    “ஒன்லைன்” என்று குறிப்பிடாமல் “நிகழ்நிலை“ என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியமைக்கு கட்டுரையாளருக்குப் பாராட்டுக்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X