2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தீர்க்கப்படாத பிரச்சினைகளின் மிக நீளமான பட்டியல்

Editorial   / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா
 
நாட்டில் உருவாகின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணாமல் வெறுமனே பேசியே காலத்தைக் கடத்தவே அரசாங்கமும் பொறுப்புவாய்ந்த ஏனைய தரப்பினரும் பெரிதும் விரும்புவதை நாம் கண்டு வருகின்றோம்.

காயங்களுக்கு உரிய சந்தர்ப்பத்தில் முதலுதவி செய்யாமல், தழும்பாக மாற அவசியமான புறச் சூழல்கள் கட்டமைக்கப்படுகின்றன.

நாட்டின் பிரச்சினைகளை தொடர்ந்தும் பிரச்சினைகளாகவே வைத்துக் கொண்டு, அதனைப் பயன்படுத்தி அரசியல், அதிகார, ஆதிக்க நோக்கங்களை அடைந்து கொள்ள பல தரப்புக்கள் முயற்சிக்கின்றன. 

இலங்கையில் கடந்த அரை நூற்றாண்டில் இவ்வாறு ஆற்றப்படாத காயங்களின் பட்டியல் நீளமானது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் சர்ச்சைகளும் இதில் கடைசியிலேயே இணைந்துள்ளது.

இனப் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் முன்வைக்கப்படவில்லை. ஆயுதம் தரித்திருந்த தரப்பினர் என்ன செய்திருந்தாலும், இருதரப்பிலும் மீறல்கள், தவறுகள் இடம்பெற்றிருக்கலாம்; என்றாலும், இந்த விவகாரத்திற்குள் சாதாரண மக்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள், பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை மறுக்கவியலாது.

இனப் பிரச்சினை என்பது தமிழர்களுக்கு மட்டுமானது என கூறிவிட முடியாது. அதன் சிறியதும் பெரியதுமான தாக்கங்கள் எல்லா சமூகங்கள் மீதும் உள்ளன. ஆகவே பிரதானமாக தமிழர்களும் அதற்கடுத்ததாக முஸ்லிம்களும் இனப் பிரச்சினையுடன் நேரடித் தொடர்பை கொண்டுள்ளார்கள்.

இதுவொரு தேசிய விவகாரம் என்ற அடிப்படையிலும் தாக்குதல்கள் தென்னிலங்கையிலும் இடம்பெற்றன என்ற அடிப்படையிலும் சிங்கள மக்களின் உணர்வுகளும் புறக்கணிக்கப்பட முடியாதவை. இங்கே ‘சிங்கள மக்கள்’ எனப்படுவோர் இனவாதிகள் அல்லர். இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு இனப் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை என்றும் அதிகாரப் பகிர்வு என்றும், 13 பிளஸ் என்றும், வெளிநாட்டு தலையீடு என்றும் ‘வாயால் வடை சுட்டுக் கொண்டிருப்பதாகவே’ கருத முடிகின்றது.

இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாதது ஒருபுறமிருக்க மறுபுறத்தில், யுத்த காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கு நீதி நிலை நாட்டப்படவில்லை. இங்கு மீறல்கள் எனும் போது, மோதலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரது நடவடிக்கைகளும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சரணடைந்த நிலையில் காணாமல் போனோர் விவகாரங்கள் இன்னும் இழுபறியாக இருப்பதைக் காண்கின்றோம். பிள்ளையானும் கருணாவும் கே.பி.யும் பெருந்தேசியத்தின் கூட்டாளிகளாகி விட்ட நிலையில், சாதாரண தமிழ் மக்கள் இன்னும் தெருக்களில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தமிழர்களின் சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை முஸ்லிம்களின் 2 இலட்சத்திற்கு குறையாத ஹெக்டேயர் காணிகள் பற்றிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.

சனத் தொகை விகிதாசாரத்திற்கு அமைய காணி இல்லாமல், ஏற்கனவே காணப்படுகின்ற பிரச்சினைகளையும் தீர்க்க முடியாமல் முஸ்லிம் சமூகம் தவிக்கின்றது. இந்தப் பின்னணியில் வடக்கு, கிழக்கில் தொல்பொருளியல், பௌத்த வணக்கஸ்தலம் என்ற பெயரில் நவீன வடிவிலான நில ஆக்கிரமிப்புக்களும் அரங்கேற்றப்படுகின்றன. ‘கிறீஸ் மனிதர்கள்’ என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மக்களை பயமுறுத்தியது யாரின் திட்டம் என்று இதுவரை தெரியாது.வெள்ளை வேன் கடத்தல்கள் பற்றி அரசியல் அரங்கில் பேசப்பட்டாலும், சட்ட ரீதியாக அது உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

லசந்த விக்கிரமதுங்க, வசிம் தாஜுதீன் உள்ளடங்கலாக பலதுறைகளையும் சேர்ந்தவர்களின் கடத்தல், தாக்குதல், கொலை பற்றிய உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு நீதி நிலைநாட்டப்படுவதற்கான காலம் இன்னும் கைகூடி வரவில்லை.

மத்திய வங்கி கொள்ளை மட்டுமன்றி, இலங்கையில் இனவாதத்தை தீனிபோட்டு வளர்த்து அதன்மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டை சூறையாடி படுபாதாளத்திற்கு தள்ளிய கூட்டத்திற்கு சட்டப்படி எந்தப் பாடமும் புகட்டப்படவில்லை என்ற அங்கலாய்ப்பு மக்களுக்கு இருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்த பிறகு, அதனை வைத்து இனியும் அரசியல் செய்வது சிரமம் என்ற நிலைமை உருவாகியது. அதாவது புதிய ‘புண்’ ஒன்று தேவைப்பட்டது எனலாம். இந்த தருணத்தில்தான் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமும் கருத்தியலும் கனகச்சிதமாக உருவேற்றப்பட்டது.

முஸ்லிம்களின் வர்த்தகமும் இஸ்லாமிய மதமும் வெளிப்படையாகவே இலக்கு வைக்கப்பட்டன. முஸ்லிம் கடைகளில் விற்கப்படும் உள்ளாடைகளில் கருத்தடை திரவங்கள் தடவப்படுவதாக ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இதனையெல்லாம் கொஞ்சம் கூட புத்திசாலித்தனமாக சிந்திக்காது பெருந்தேசிய சக்திகளும் ஊடக அரசியல் செய்கின்ற சில ஊடகங்களும் சிங்கள மக்களை சூடேற்றி விட்டன. இதனை ‘பொய்’ என்று ஒரு சில சிங்கள முற்போக்காளர்களை தவிர, அரச இயந்திரமோ பொறுப்புவாய்ந்த சிங்கள கட்டமைப்போ தெளிவுபடுத்த தவறிவிட்டது. 

மாறாக, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்திற்கும் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான ஒரு பிரிகோட்டை, நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி அவர்கள் அதில் குளிர்காய்ந்தார்கள். அரசியல் இலாபம் தேடினார்கள்.

இதன் உச்சக்கட்டமாக வைத்தியர் ஷாபி விவகாரத்தைச் சொல்லலாம். இந்த வைத்தியர் பல நூற்றுக்கணக்கான சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்ததாக இனவாதிகள் கூறினர். ஒரு குறிப்பிட்ட வைத்தியர், அங்கிருக்கின்ற ஏனைய வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு தெரியாமல், கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு கருத்தடை செய்தார் என்று சொன்னால் புத்தியுள்ள யாரும் நம்பலாமா?

ஆனால் இனவாதிகளும் அரசியல்வாதிகளும் சிங்கள மக்களிடையே அதனை நம்ப வைக்க செயற்பட்டனர். மறுபுறத்தில், சின்னச் சின்ன விடயங்களுக்கு எல்லாம் வீதிக்கு இறங்கி நியாயம் கேட்கின்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூட, சில பல காரணங்களுக்காக இது விடயத்தில் நீதமாகச் செயற்படவில்லை.

வைத்தியர் ஷாபி சிறையில் இருந்த போது, அவரால் கருத்தடை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண்கள் கர்ப்பமடைந்த ‘வினோதங்கள்’ பற்றி யாரும் பேசவில்லை. அதுமட்டுமன்றி, இப்படி ஒரு பெரிய பொய்யை பரப்பி, மக்களை குழப்பிய அரசியல்வாதிகள், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவில்லை.

அதேவேளை, அளுத்கம, பேருவளை மற்றும் திகண கலவரங்களுக்கு பின்னால் இருந்த சக்திகளுக்கு பகிரங்க தண்டனை வழங்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. அம்பாறை வன்முறை மற்றும் 2019 மே மாதம் வடமேல் மாகாணம் தொடங்கி மினுவாங்கொடை வரை இடம்பெற்ற வன்முறைகளின் நிலையம் இதுதான். 

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இவற்றை எல்லாம் விட பாரதூரமானதும் மிலேச்சத்தனமானதும் ஆகும். தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றியவர்கள் சஹ்ரான் கும்பல் என்றாலும், இதற்கும் சாதாரண முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதற்கான தேவையும் இல்லை என்றும் முஸ்லிம் சமூகம் அப்போது மன்றாட்டமாகச் சொன்னது.

ஆனால் அதனை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதிகாரத்தை கைப்பற்றும் வெறியில் இருந்த தரப்பிற்கும், அவர்களுக்கு துணைபோகின்ற அரச அதிகாரிகளுக்கும் இதில் ஒரு தேவையிருந்தது. முஸ்லிம்களை நசுக்கி, ஒரு ‘படம்’ காட்டி விட்டு அவர்களது இலக்கை அடைய முற்பட்டனர். 

அந்த இலக்கு ஒரு தேர்தல் வெற்றி என்றால் அது அடையப்பட்டு விட்டது. ஆனால் கொல்லப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கும், நசுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

இப்போது, அசாத் மௌலானா வடிவில், சனல் 4 தொலைக்காட்சியின் ஊடாக, திரைமறைவுக் கதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மக்கள் ஏற்கனவே ஊகித்த விடயங்களை, இந்த தாக்குதலுடன் ஏதோ ஒருவகையில் தொடர்புபட்ட ஒருவரின் வாயினாலேயே காலம் வெளிக் கொணர்ந்திருக்கின்றது எனலாம்.

இதனை விசாரிப்பதற்கு இரு விசாரணைக் குழுக்களை நியமிப்பதாக ஜனாதிபதி சார்பாக அவரது செயலகம் அறிவித்துள்ள நிலையில், அவர் அமைச்சராக உள்ள பாதுகாப்பு அமைச்சு இதில் உள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. இந்த முரண் நிலையில், இந்த விசாரணை எவ்வளவு தூரம் போகும்? என்ற ஐயப்பாடு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்படி, கடந்த காலங்களில் எந்தவொரு முக்கிய பிரச்சினைக்கும் தீர்வு காணாமல் விட்ட காரணத்தினாலேயே, நாடு இப்படி ஒரு மோசமான நிலைக்கு வந்திருக்கின்றது. எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை விடயத்திலும் அரச இயந்திரம் பொறுப்பற்ற தனமாக செயற்படுவதன் மூலம் தமது தவறுகளை புதுப்பித்துக் கொள்ளக் கூடாது.

2023.09.26


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .