2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தேயிலை தேசத்து ராணி

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிக்க மறந்த தேநீர் குவளை ஒருபுறமிருக்க,

 கூட்டிய வாசல் பாதியில் நின்றிருக்க, 

அணிய மறந்த செருப்பும் கதவோரம் காத்திருக்க,

 பாவம்...!

அணிய  மறந்தாளோ?  அல்லது,

அடுத்த பொங்கல் வரை வேண்டுமே என்று

 அணிய மறுத்தாளோ?

 என் தேயிலை  தேசத்து ராணி.....

பெருந்தோட்ட பகுதி பெண்களின் பிம்பம் நிழலாடுகிறது இவ்வரிகளில்.'பெண்' என்பவள் எப்போதுமே போற்றப்பட வேண்டியவள்தான்.    பிறப்பின் மகத்துவத்தை உணர்த்த அவள் ஏற்க வேண்டிய பாத்திரங்களோ  ஏராளம். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அரசியல் அரங்கில் பெண்களின் அங்கத்துவம் பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் வாழும் மலையக  பெண்களைப்பற்றி பேச வேண்டியது கட்டாயம்.

பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்க்கைக்காக ஆயிரம் போராட்டங்கள். ஆனால் அதற்கும் அப்பாற்பட்டு மலையக பெண்களின் நாளாந்த வாழ்க்கைப் போராட்டம் சவால்கள் நிறைந்தவை. அந்தச் சவால்கள், அவர்களது சிறுவயது முதலே தொடங்கி விடுகின்றன.

பெண் பிள்ளைகளுக்கு இளமையில் ஏற்படும் போசனைக் குறைபாடானது அவர்களின் வாழ்நாள் முழுவதிலும் தாக்கத்தை செலுத்தி விடுகின்றது. பெரும்பாலும் கோதுமை ரொட்டியும் அரிசிச்  சோறுமே  மலையகப் பகுதிகளில் பிரதான உணவாகும். நிறையுணவில் காணப்படும் சத்துகள் இவ் உணவுகளில் மட்டுமே கிடைத்து விடுவதில்லை. 

பூப்பெய்தும் காலத்தில் கிடைக்க வேண்டிய முறையான போஷணையும் பெண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெறுமனே திரிபோசா தவிர்ந்து,  அவர்கள் நாளொன்றுக்கு உட்கொள்ளும் வேளை  உணவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதால்,   கிடைக்கும் போஷணையின் அளவும்  குறைவடைகின்றது . போஷணை மட்டம் தொடர்பான போதிய தெளிவு மலையகத்தில்  இல்லை என்றாலும் வறுமையே அதற்கான பிரதான காரணம் ஆகும்.

கர்ப்பிணித் தாய்மார்களின் மகப்பேற்று காலத்திலும் பிரசவத்தின் பின்னரும், தேவையான மருத்துவ வசதிகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.  தூரப் பிரதேச வைத்தியசாலையை  நாடிச்செல்ல வேண்டிய நிலை உள்ளதாலும்,  அதிக பிரதேசங்களில் ஆம்பியுலன்ஸ்  பெற்றுக் கொள்வது கடினமான உள்ளதாலும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

தோட்டத்திலுள்ள லொறிகளில் பிரசவத்தின் போதும் அவசர தேவைகளின் போதும் நோயாளிகள் கொண்டு செல்லப்படுவது இன்றளவும் மாறாமலேயே இருக்கிறது.   இக்காரணிகள் தாய்-சேய் நலன்களிலும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

மகப்பேற்று தாதியரிடமிருந்தும் குடும்பநல உத்தியோகத்தர்களிடம் இருந்தும் குடும்பத் திட்டமிடல்,  மகளிர் சுகாதார சேவைகள் தொடர்பான ஆலோசனைகளை பெறும் போது, புதிதாக மொழிப் பிரச்சினைக்கும் மக்கள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பான ஐயத்தால், அவர்களாகவே ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் தவிர்த்துவிடுகின்றனர்.

கர்ப்பகால போஷணைக் குறைபாடானது குறைநிறையுடைய குழந்தைகள் பிறக்க காரணமாகின்றது.  போக்குவரத்து மற்றும் வைத்திய சேவை குறைபாடுகள் சிசு, தாய் மரணம் வீதத்திலும்  அதிகரிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. 

தோட்டப் பகுதிகளில் வேலை செய்யும் பெண்களுக்கு, வேலை நேரங்களில்  பயன்படுத்துவதற்கான மலசலகூட வசதிகள் இல்லை. மேலும்,  மாதவிடாய் காலங்களில் பெரிதும் உடல், உள ரீதியான சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.  ஒப்பீட்டளவில், மாதவிடாய் தொடர்பான  விழிப்புணர்வு மலையகப் பெண்களிடம் குறைவாகவே காணப்படுகின்றஙது.

மலையகத்தில் மட்டுமல்லாது, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பெரும்பாலான பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய ‘துவாய்’கள் ஓர் ஆடம்பர பொருளேயாகும். அவர்கள் பெரும்பாலும் பழைய துணிகளையே  இன்றும் பயன்படுத்துகின்றனர். தனிநபர் சுகாதாரம் தொடர்பாகச் சற்றும் சிந்திக்காது, அநாவசியமானதொரு  செலவாகவே அதை அவர்கள் கருதுகிறார்கள்.  ஏனென்றால், மலையகப் பெண்கள் தனது வருமானத்தில் 3.5 சதவீதத்தை  மாதமொன்றுக்கான  துவாய்க்காக செலவிட வேண்டி உள்ளது. அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது ஓர் ஆடம்பரச்  செலவேயாகும்.

பெண்கள்   மாதவிடாய் மற்றும் மகப்பேற்று காலங்களில்   சுகாதார பழக்கவழக்கங்களை முறையாக பின்பற்றாமையால்  இலங்கையில் இரண்டாவதாக பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பைவாய் புற்று நோய்க்கும் ஆளாக வேண்டியுள்ளது. 

வருமானமின்மை காரணமாக, மலையகப் பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. குடும்பத்தைப் பிரிந்து, வெறும் பணத்தேவைக்காக வெளிநாடுகளுக்குச்  செல்லும் அவர்கள் அடையும் வேதனைகளோ  ஏராளம்.  பாலியல் மற்றும்  உடல் ரீதியாக அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் என்றுமே மாறாத வடுக்கள்.

 பெண் பிள்ளைகளும் கல்வியை இடைவிட்டு, நகர்ப் பகுதிகளுக்கு வேலைக்காகச் செல்வதும்  பின்னர் தமது சுய பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய முடியாமல் முடிவெடுப்பதிலும்  பக்குவம்  இல்லாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் போது, எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற வெறுப்பே மிஞ்சுகிறது. சமூகம் தாண்டி, மிகச்சிறிய அமைப்பான குடும்பத்துக்குள்ளாவது  பெண்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா  என்று பார்த்தால், அந்தக் கேள்வியும் கேட்கக்கூடாத கேள்வாகவே நோக்கப்படுகின்றது.

மலையக ஆண்களின் மதுப்பாவனையானது,  இறுதியில் வீட்டு வன்முறையை ஏற்படுத்தி விடுகிறது. அதில் பாதிக்கப்படுவதும் பெண்கள் தான்.  வறுமைக்கு மத்தியில் குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவையோடு வீட்டு வன்முறையையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையாலும்  சமூகம், கலாசாரம், பண்பாடு என்று காரணங்களால், பெண்கள் வீட்டு வன்முறைகளுக்கு எதிராக வாய்திறப்பதே இல்லை.

பாதுகாப்பு,  சுகாதாரம், பொருளாதாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய காரணிகளில் ஏற்படும் குறைவானது, பெண்களின் வாழ்க்கையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. 

உளவியல் ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான மாற்றத்தை குடும்ப வன்முறை ஏற்படுத்தி விடுகின்றது. இவ்விளைவுகள் ஒரு பூரணமான சமூகத்தின் போக்கிலும் தாக்கத்தை செலுத்தும் என்பதில் ஐயமில்லை.

 வெறுமனே உழைக்கும் இயந்திரங்கள் அல்ல பெண்கள்; உணர்வுகளாலும்  உரிமைகளாலும் என்றுமே பூரணத்துவத்தை அடைய வேண்டியவர்கள்.   கல்வியிலும் அரசியலிலும் பெண்கள் பிரகாசிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதுபோன்றே அடிப்படை உடல், உள, சுகாதார தேவைகளை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டியதும் முக்கியமானது.

குடும்பத்தை உருவாக்கி சமூகத்துடன் ஒருங்கிணைந்து நாட்டினது பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு செய்யும் பெருந்தோட்ட பெண்களின் தேவை என்னவோ சொற்பமே!..

 குடும்பம் என்ற ரீதியில் ஆணும், அவளது சமூகமும், பொருளாதார ரீதியில் நிர்வாகமும் தன்னை சுற்றியுள்ள எல்லா பெண்களினதும் தேவைகள் பற்றி அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சமூகமும் பிரதேசமும் அமைவிடமும் மாறுபடலாம்.

ஆனால், எல்லா பெண்களுக்கும்  தேவையென்பது  சமமானதே.. எங்கு அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்படுகின்றதோ அங்குதான் எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மற்றைய சமூகங்களோடு போட்டி போடக்கூடிய  வல்லமையும் பிறக்கிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X