Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜனவரி 02 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
இலங்கையின் தேசிய அரசியலையும் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியலையும் தொடர்ச்சியாக கூர்ந்து நோக்குவோர், இந்த நாட்டை அல்லது ஒரு இனக் குழுமத்தை ஆள்வதற்கான தலைமைத்துவச் சங்கிலியில் இடைவெளி ஒன்று காணப்படுகின்றமையை அவதானிப்பார்கள்.
நாட்டில் கடந்த காலங்களில் ஒரு ஆட்சியாளர் பதவியிழந்தால் இன்னுமொரு ஆட்சியாளர் மக்களின் மாற்றுத் தெரிவாகத் தயார் நிலையில் இருந்தார். ஒரு ஜனாதிபதி உயிரிழந்தால் எந்தவித இழுபறிகளும் இல்லாமல் அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நிலை காணப்பட்டது. ஆனால், இந்தப் போக்கில் அண்மைக்காலத்தில் ஒரு மாற்றம் தெரிகின்றது எனலாம்.
ஒரு அரசாங்கமானது மக்கள் சார்பு அரசியலில் தோல்வியுற்றால் மக்கள் விரும்பிய மற்றைய கட்சியை ஆட்சி பீடத்திற்கு அனுப்புகின்றார்கள் என்று சொல்ல முடியாது. மாறாக பெரும்பாலும் வேறு வழி வழியின்றியே ‘அவர் போனால், இவர்’ என தெரிவு செய்வதாகச் சொல்லலாம்.
அதேபோல், நாட்டின் உயர் பதவியில் ஒரு வெற்றிடம் திடீரென ஏற்படும் போது அதற்குப் பொருத்தமான இன்னுமொரு மாற்றுத் தெரிவை மேற்கொள்வதில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. முக்கால்வாசி இலங்கையரின் ஆதரவுடன் இன்னுமொருவரை நியமிக்க முடியாத நிலை நமது யதார்த்தமாகியுள்ளது.
மாறாக பெரும் பிரளங்களுக்குப் பிறகு, ஒரு தரப்பின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே யாரோ ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது எனலாம். ஒரு நாடு என்ற ரீதியில் சிறப்பான அடுத்தடுத்த தலைவர்களை உருவாக்குவதில் காணப்படுகின்ற குறைபாட்டின் பின்விளைவு என்றே இதனைக் கருத முடிகின்றது.
இதே நிலைதான் தமிழர் அரசியலிலும் முஸ்லிம்களின் அரசியலிலும் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியலில் தலைமைத்துவச் சங்கிலி சரியாகச் சேர்க்கப்படவும் இல்லை கோர்க்கப்படவும் இல்லை என்பது நாடறிந்த சங்கதிதான்.
தமிழ்த் தேசிய அரசியல் இதுவரை ஒரு கட்டுக்கோப்பான, மிதமான பாதையில் பயணித்து வந்திருக்கின்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம், மாவை சேனாதிராஜா, ஆர். சம்பந்தன் என வந்து ஒரு தீர்க்கமான புள்ளியில் நிற்கின்றது.
இப்போது சம்பந்தன் பதவி விலக வேண்டுமென்ற குரல்கள் எழுகின்றன. சமகாலத்தில் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைமைப் பதவிக்கு மூன்று அரசியல்வாதிகள் போட்டியிடுகின்றனர். மூவரில் யாருமே முழுமையாகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் என்று சொல்வது கடினம்.
இது ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் மட்டுமே. ஆனால், ஒட்டுமொத்த தமிழ் அரசியலையும் எடுத்துக் கொண்டால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை வழி நடத்தக் கூடிய சிறந்த, ஆளுமையுள்ள, பக்குவமான அடுத்த தலைமை யார் என்ற கேள்விக்கு இப்போதைக்கு விடையில்லை.
இத்தனை கட்டுக்கோப்புகளோடும் கொள்கைகளோடும் வளர்ந்த தமிழ்த் தேசிய அரசியலே இன்று தலைமைத்துவத்திற்காகப் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பலம் சிதைக்கப்பட்டுள்ள பின்னணியில், ஆளுக்கொரு அரசியல் நிகழ்ச்சி நிரல் முன்கையெடுத்திருக்கின்றது. இதற்குள் இந்தியா போன்ற நாடுகள் புகுந்து விளையாடுகின்றன.
இதேவேளை, முஸ்லிம் அரசியலில் இந்தப் பிரச்சினை இதைவிட மோசமாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தலைமைத்துவப் பிரச்சினை ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னரே ஏற்பட்டு விட்டது. சிங்கள, தமிழ்க் கட்சிகளைச் சார்ந்திருந்த முஸ்லிம்களின் அரசியல்
எம்.எச்.எம்.அஷ்ரபின் வருகைக்குப் பிறகு குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துவமான ஒரு பாதையில் பயணிக்கத் தலைப்பட்டது.
வடக்கு, கிழக்கில் உள்ள எல்லா முஸ்லிம்களும் அவரை தமது தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.
அதுமட்டுமன்றி, அதற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களில் கணிசமானோரும் அஷ்ரபின் தலைமைத்துவப் பண்புகளால் கவரப்பட்டு இருந்தனர் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு இந்த ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கண்பட்டுப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருந்த கட்டுக்கோப்பு குலைந்தது மட்டுமன்றி, முஸ்லிம் அரசியலிலும் பல கட்சிகள், அரசியல் அணிகள் எனப் பிளவுகள் உருவெடுத்தன.
மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் வகுப்பறை என்பது பல புதிய, இளம் அரசியல்வாதிகளைப் புடம்போட்டிருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இரண்டாம் நிலை தலைவர்கள் பலரை அவர் புடம்போட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே, அந்தப் பணி நிறைவடைவதற்கு முன்னதாகவே அவரது மரணம் சம்பவித்தது.
ஆனால், அஷ்ரபுக்குப் பின்னர் யார் தலைவர், அதற்குப் பிறகு யார்? என்ற அந்த தலைமைத்துவச் சங்கிலி சரியாக ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். யாரை அடுத்த இணைத் தலைவர்களாக, தனி தலைவராக நியமிப்பது என்பது தொடக்கம், இன்று வரையான பல முரண்பாடுகளுக்கும் இதுவும் ஒரு வினையூக்கியாக அமைந்தது என்றும் கூறலாம்.
இப்போது அது பழைய கதையாகி விட்டது.
பல முஸ்லிம் கட்சிகள், தலைவர்கள், பிராந்தியத் தளபதிகள் உருவாகி விட்டார்கள். சில ஆயிரம் வாக்குகளை மட்டும் எடுத்துத் தெரிவான ஒரு எம்.பி கூட, இன்று தலைவன் என்ற மகுடத்தை தனக்குத் தானே சூடிக் கொள்கின்ற அபத்தம் எல்லாம் முஸ்லிம் அரசியலில் மட்டும்தான் நடக்கின்றது.
ஆனால், நாம் பேசுவது சுய பிரகடனம் செய்த பத்தாம்பசலித்தனமாக தலைவர்களை அல்ல. மாறாக உருப்படியாக சமூகத்தை வழி நடத்தக் கூடிய எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு தலைவரைரேயாகும்.
துரதிர்ஷ்டவசமாக இன்றைய நிலையில், முஸ்லிம்களின் தேசிய அரசியல் தலைமை என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாத நிலையுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின் ஏகோபித்த அரசியல் தலைவர் யார் எனக் கேட்டால், ஒவ்வொருவரும் தாங்கள் ஆதரிக்கின்ற கட்சியின் தலைவரைச் சொல்வார்களே தவிர, உண்மையில் அந்தக் கேள்விக்கு உறுதியான பதில் இல்லை.
மறுபுறத்தில், நமக்கு அடுத்த இரண்டாம்நிலை தலைவர்களை உருவாக்கினால் நமது கதிரைக்கு ஆப்பாகிவிடும் என்ற பயத்தில் தற்போதைய முஸ்லிம் தலைவர்கள் கருதலாம். அதனால், தலைமைத்துவச் சங்கிலித் தொடர் ஒன்றை உருவாக்காமல் இருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமானதல்ல.
இது இப்போது வேண்டுமென்றால் ஒரு பெரிய பிரச்சினையாகத் தோன்றாமல் இருக்கலாம். கட்சிகளும் அதன் தலைவர்களும் இதனைப் பார்த்துக் கொள்வார்கள் என மக்கள் நம்பலாம். ஆனால் தூரநோக்கு அரசியலில் இது மிகப் பாரதூரமான பின்னடைவாகும்.
தலைவர்கள் சரியில்லை என்றாகிவிட்ட ஒரு சூழலில் அடுத்தடுத்த தலைவர்களை உருவாக்குவது பெரும் சிக்கலாகும். தங்களை விட முட்டாளான, ஆமா சாமிகளை அல்லது குடும்ப உறுப்பினர்களை, தெரிந்தவர்களையே தற்போதைய தலைவர்கள் தமக்கு அடுத்த இடத்தில் வைத்திருப்பதாகத் தெரிகின்றது.
இந்தப் பின்னணியில், முஸ்லிம் சமூகத்தில் அடுத்த தலைவர்களாக முன்னிலைப்படுத்தக் கூடிய பண்புகளைக் கொண்ட பொருத்தமான இரண்டாம்நிலை தலைவர்கள் இல்லாதிருப்பதும் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
ஆகவே, இந்தப் போக்கில் கட்டமைப்பு மாற்றமொன்று இன்று மிக அவசியமாகின்றது. தேசிய அரசியல், தமிழர் அரசியலை விட முஸ்லிம்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
திடீரென ஒரு கட்சியின் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைத்துவ ஆசனம் வெற்றிடமாகும்போது, அதனை நிரப்புவதற்கும், அதன் பின்னர் இந்த சமூகத்தைப் பொறுப்புடன் தலைமை தாங்கி வழி நடத்துவதற்கும் இப்போதே உரிய நபர்கள் இனங்காணப்பட்டு, அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
அவர்கள் படித்தவர்களாக, பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. அறிவாற்றலும் சமூக சிந்தனையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் சமூகத்திற்காக முன்னிற்கக்கூடிய ஆளுமைகளாக இருப்பது அவசியம். முன்னைய தலைவர்களின் அடிவருடிகளாக, கெட்ட பண்புகள் உள்ளவர்களாக, சுயநலவாதிகளாக, பணத்தாசை பதவியாசை பிடித்தவர்களாக இருக்கக் கூடாது.
இப்படியான நற்பண்புகளுள்ள அடுத்த தலைவர்களை தற்போதுள்ள அரசியல்வாதிகள் முன்மொழிவது நடைமுறைச் சாத்தியமற்றது என்றான சூழலில், முஸ்லிம் சமூகம்தான் இதனைச் செய்தாக வேண்டியுள்ளது.
12.26.2023
45 minute ago
49 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
2 hours ago
3 hours ago