2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தொழிலாளர்களுக்கு நாள் சம்பளத்தை விடுத்து ‘மாதச் சம்பளத்தை வழங்கவும்’

Kogilavani   / 2020 ஜூலை 31 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். நாட்சம்பளம் என்ற நிலைமை மாறி, மாதச் சம்பளம் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்ட ங்களில் மட்டுமே, நாள் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நாட்டின் முதுகெலும்பான தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்தை வழங்கி, இன்னும் அவர்களைக் கூலிகளாகவே வைத்துள்ளனர். உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவருடன்  போராட வேண்டிய நிலையே காணப்படுகிறது. எனவே, நாட்சம்பளம் எமக்குத் தேவையில்லை. முறையே எம்மைக் கௌரவப்படுத்தி, மாதச் சம்பளத்தை வழங்க வேண்டும்.  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக முழுமூச்சாக நின்று போராடுவேன் என்று, பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யானைச் சின்னத்தில் இலக்கம் 10இல் போட்டியிடும் வேட்பாளர் வேலாயுதம் பிரபா தெரிவித்தார்.  

தமிழ்மிரருக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவரது செவ்வி பின்வருமாறு:  

கே: அரசியல், தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்?

அரசியல், தொழிற்சங்க வாழ்க்கையில், 22 வருட அனுபவங்கள் உள்ளன. எனது தந்தை அமரர் வேலாயுதத்தின் செயற்பாடுகளுக்குப் பின்புலத்தில் இருந்து செயற்பட்டு வந்தேன். அவரது செயலாளராகவும் பணியாற்றியுள்ளேன். அரசியல் பணிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வம் இருந்தது. எனது சகோதரர் அரசியலில் இருந்ததால் அரசியலுக்கு வருவதற்கான ஆர்வம் இருக்கவில்லை.   

எனது தந்தை அமைச்சராக இருந்தபோது, அவரது செயலாளராகப் பணியாற்றியுள்ளேன். 200 வருட வரலாற்றைக் கொண்ட மலையக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விடயமாகக் காணி உரிமை வழங்கப்பட்டமை அமைகிறது. எனது தந்தை, அமைச்சராக இருந்தபோது, அந்தக் காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். எனவே, அந்த வேலைத்திட்டங்களைப் பெற்றுக்கொடுப்பதில், பாரிய பங்களிப்பு எனக்கும் உள்ளது. மலையக மக்களுக்குக் காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாங்கள் எவ்வாறான கஷ்டங்களை எதிர்கொண்டோம் என்ற விடயம், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்துக்கும் அந்நேரத்தில் எம்முடன் இருந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்.  

கே: அமரர் வேலாயுதம் அமைச்சராக இருந்தபோது, மலையக மக்களுக்குக் காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக, எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொண்டார் என்பது பற்றி கூற முடியுமா?

பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உரிமையைப் பெற்றுக்கொடுத்து, முகவரி ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது, எனது தந்தையின் நீண்ட நாள் கனவு. 200 வருட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் முகவரியற்ற சமூகமாகவே மலையகச் சமூகம் வாழ்ந்து வருகிறது. அவர்களுக்கு என்று அடையாளம் இல்லை. லயன் குடிசைகள் மட்டுமே அடையாளமாக இருந்தன. எமது சமூகத்தை அடையாளப்படுத்துவதென்றால் ‘தோட்ட மக்கள்’ என்றே விளிக்கின்றனர். இல்லையென்றால், இவ்விடத்தில் குறிப்பிட முடியாத இன்னொரு பதத்தை வைத்து அழைக்கின்றனர். ஆனால், எமது மலையகச் சமூகம், இந்நாட்டின் முதுகெலும்பு. முதுகெலும்பு எப்போதும் பின்புறமாக இருப்பதால், அது தொடர்பில் யாரும் கருத்திற்கொள்வதில்லை.   

எனவே, எனது தந்தை பெருந்தோட்ட மக்களுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் போராடினார். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் பெ.சந்திரசேகரன் ஆகியோர் மலையக மக்களுக்கான காணி உரிமைக்காகக் குரல் எழுப்பியுள்ளனர். ஆனால், அவர்களால் அதனைச் செயற்படுத்த முடியாமல் போனது. இவ்வாறான நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில், ரணில் விக்கிரமசிங்க, எனது தந்தையை அழைத்து, புதிய அமைச்சொன்றை உருவாக்கிக் கொடுத்தார். இதுவரை மலையகத்தில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சைவிட, எனது தந்தைக்குக் கிடைத்த பெருந்தோட்ட இராஜாங்க கைத்தொழில் அமைச்சர் என்ற பதவியானது, எனது தந்தைக்காகவே உருவாக்கப்பட்ட ஓர் அமைச்சு. அதில் மிக முக்கியமான வேலைத்திட்டமாக அமைந்தது காணி உரிமை ஆகும். எனது தந்தை, பதவிப்பிரமாணம் செய்வதற்காகச் சென்றபோது, ரணில்,  எனது தந்தையிடம் “நீங்கள் கேட்டதை நான் கொடுத்துவிட்டேன். மக்களது கனவை நிறைவேற்றுங்கள்” என்று கூறியே பதவியை வழங்கினார்.  

அந்நேரத்தில், நாங்கள் மலையக மக்களுக்கான காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயன்றபோது, பெரும்பான்மைச் சமூகம், கம்பனிகள், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் அதற்குப் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர். இன்று அந்த அரசியல் தலைவர்கள், ஐக்கிய தேசிய கட்சியைவிட்டு வெளியேறிவிட்டனர். அந்தநேரத்தில், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே, எமக்கு ஆதரவாக இருந்தார். அவர் பிரதமராக இருந்ததால், அந்த ஆதரவை எமக்கு வழங்கினார். பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சோ, வேறு எவரும் உதவிகளைச் செய்யவில்லை. இந்நிலையில், பெருந்தோட்ட மக்களின் காணி உரிமைக்காக, பாரிய போராட்டங்களின் பின்னரே, அதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெற்றோம். அதன் பின்னர், காணி உரித்துகளை வழங்குவதற்கான நடவடிக்கையை எனது தந்தை ஆரம்பித்தார். 

காணி உரித்துகளை வழங்கும்போது, பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. காணி உறுதி என்ற பெயரில், வெறும் பத்திரங்கள் மட்டுமே வழங்கப்படுவதாகப் பலர் பலவாறு கூறினர்.   
புதிதாக ஒரு தொழிலில் சேரும் நபருக்கு, நியமனக் கடிதம் வழங்கப்படும். ஒரு வேலையில், நியமனக் கடிதம் வழங்கப்பட்டால் மாத்திரமே, அந்தத் தொழிலுக்கு நாம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளோம் என்பது உறுதியாகும். எனவே, காணி உரித்து என்பது, ஒருவருக்கு இந்தக் காணி எதிர்காலத்தில் சொந்தமாகும் என்பதற்கான ஒரு பத்திரத்தையே நாம் வழங்கினோம்.   

ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தால், அதனை அவ்வளவு இலகுவாக முடித்துவிட முடியாது. படிப்படியாகவே நிறைவேற்ற முடியும். காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதும் அதுபோன்றதே. முதலில் காணிக்கான உரித்தையே வழங்குவார்கள். அதன் பின்னரே, அதற்கான ஒப்பனையை வழங்குவார்கள். இதுவே நடைமுறை. ஆனால், காணிக்கான ஒப்பனையை வழங்கவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.   

அதைவிட, இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதியை ஒதுக்கவில்லை. தேவையான ஆள்பலத்தையும் வழங்கவில்லை.   

எனது தந்தையின் மீதிருந்த மரியாதை காரணமாக, கம்பனிகாரர்கள், காணியை வழங்கினர். இதனால் பெரும்பான்மையினவாதிகளுக்கு எதையும் செய்துகொள்ள முடியாமல் போனது. ஒரு வழியாக, காணி உரிமையை வழங்குவதிலிருந்த சிக்கல்கள் நீங்கின. அதன் பின்னர் காணி உரித்துகளை வழங்கினோம்.  

இதுவரை 7,600 காணி உரித்துகளையே வழங்கியுள்ளோம். பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, காலி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்குக் காணி உரிமையை வழங்கியுள்ளோம்.  

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில், 150 நாள்களுக்குள் நாங்கள் செய்துமுடித்த வேலைத்திட்டமே இது. இதுவரை யாருமே மேற்கொள்ளாத வேலைத்திட்டத்தை, நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால், மலையகத்தில் இருந்த பெருந்தலைமைகளால் இதுவரை மலையக மக்களுக்காக எத்தனையோ வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்க முடியும்.   

நூறு நாள் வேலைத்திட்டத்துக்குப் பின்னரும், நல்லாட்சி அரசாங்கமே தொடர்ந்தது. எனினும் பெருந்தோட்டப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் காணி உரித்து வழங்குவதற்கான வேலைத்திட்டங்களைத் தொடர்வதற்குத் தவறிவிட்டனர். ஏனெனில், மலையக மக்களுக்கான காணி உரித்தை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தில் இறங்கியவர், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த தமிழன். நூறு நாள் வேலைத்திட்டத்துக்குப் பின்னர் வந்த தலைமைகள், ஐ.தே.கவை சார்ந்தவர்கள் அல்லர். ஐ.தே.கவுடன் கூட்டணி வைத்தவர்களே இருந்தனர். இதைவிட, இந்த வேலைத்திட்டத்தை, எனது தந்தை ஆரம்பித்துவைத்ததால் அவரது பெயர் மக்கள் மத்தியில் பிரசித்திப்பெற்றுவிடும் என்பதற்காகவும் இதனை செய்யத் தவறியிருக்கலாம். மலையகத்தில் வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், வீட்டுத்திட்டங்களுக்கு முன்பாக, காணி ஒப்பனையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அந்தக் காணி ஒப்பனையை வைத்தே, மக்கள் தங்களுக்கான வீடுகளை நிர்மாணித்திருப்பர்.  

கே: நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானால், இந்த வேலைத்திட்டத்தைத் தொடருவீர்களா?

நிச்சியமாக! நான் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான முக்கிய காரணமே, எனது தந்தையின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காகத்தான். என்னுடைய முதல் வேலைத்திட்டமே, இந்த ஏழு பேர்ச் காணியைப் பெற்றுக்கொடுப்பதுதான்.   

பெருந்தோட்ட மக்களுக்கு, சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதே, இரண்டாவது வேலைத்திட்டம். பசறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காகப் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வரட்சியான காலங்களில், குடிநீருக்காக மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொள்கின்றனர்.   

படித்த இளைஞர், யுவதிகளுக்கு முறையான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன். மலையக இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர வேண்டும். விளையாட்டுக்கழகங்களை உருவாக்கி, அதற்கூடாக விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.   
கல்வி பொதுதர சாதாரண தரத்தில் தோற்றிய மாணவர்களுக்கு, தொழிற்கல்விக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, பல்கலைக்கழக விரிவுரையாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்களைப் பரவலாக முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இவ்வாறான கருத்தரங்ககுளை வைப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். ஆசிரியர்கள், இளைஞர், யுவதிகளின் உதவியுடனே இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.   

அடுத்ததாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சம்பளப் பிரச்சினை. தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில், 1,000 ரூபாய்க்கு மேலதிகமாகக் கொடுத்தாலும் அது போதாத நிலைமையே உள்ளது. 1,000 ரூபாயைத் தருவதாகக் கூறி வேலை நாள்களைக் குறைத்துவிடுவர். எப்படிப் பார்த்தாலும் மாதாந்தம் ஒரு தொழிலாளி ஆகக் குறைந்தது 10,000 ரூபாய்க்கும் குறைவான தொகையைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்களைக் கம்பனிகள் முன்னெடுத்துவிடும்.  

700 ரூபாய் அடிப்படைச் சம்பளமும் 50 ரூபாய் மேலதிகக் கொடுப்பனவும் வழங்கும் வகையில், கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும், தற்போது தொழிலாளர்களுக்கு 350 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 18 கிலோகிராம் கொழுந்தைப் பறித்தால்  மட்டுமே 750 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதைவிட, ஒரு கிலோ கிராம் குறைவாக எடுத்தாலும் அரைநாள் சம்பளமே வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், குறைவான சம்பளத்தையே பெறுகின்றனர். ஒரு நாள் முழுவதும் துன்பப்பட்டு உழைத்தாலும் 18 கிலோ கிராம் கொழுந்து அளவிடப்படுவதில்லை. 18 கிலோ கிராம் கொழுந்தை, தொழிலாளர்கள் பறித்திருந்தாலும்கூட, ‘முத்தின இழை’ எனப் பல காரணங்களைக் கூறி, 17 கிலோ கிராமுக்கான தேயிலையே அளவிடப்படுகிறது.   

எனவே, மாதம் முழுவதும் உழைத்தாலும் தொழிலாளர்களால் அதிகூடிய தொகையைச் சம்பளமாகப் பெற முடியாது. தோட்டங்களுக்குச் சென்று, மக்களைச் சந்திக்கும்போது, இவ்விடயத்தைக் கூறி, மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இவற்றைப் பார்க்கும் எம்மால், ஒன்றுமே செய்யமுடியவில்லை என்ற வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. தற்போதுள்ள அரசியல்வாதிகள் தெரிந்தே செய்த பிழைகளே, இவற்றுக்குக் காரணம். இதைத் தட்டிக்கேட்ட என்னுடைய சகோதர் ருத்திரதீபன், கூட்டொப்பந்தத்தில் கையொப்பமிடாது வெளிநடப்புச் செய்தார்.   

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். நாட்சம்பளம் என்ற நிலைமை மாறி, மாதச் சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களில் மட்டுமே, நாள் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நாட்டின் முதுகெலும்பான தொழிலாளர்களுக்கு, நாட்சம்பளத்தை வழங்கி, இன்னும் அவர்களைக் கூலிகளாகவே வைத்துள்ளனர். உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவரிடம் போராட வேண்டிய நிலையே காணப்படுகிறது. எனவே, நாட்சம்பளம் எமக்குத் தேவையில்லை. முறையே எம்மைக் கௌரவப்படுத்தி, மாதச் சம்பளத்தை வழங்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக முழுமூச்சாக நின்று போராடுவேன்.   

கே: இதுவரை நீங்கள் ஆற்றிய சமூகப்பணிகளைப் பற்றிக் கூற முடியுமா?

எனது சகோதரர் ருத்ரதீபன், ஊவா மாகாண சபையிலிருந்தபோது, மாகாண சபைக்கூடாக எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமோ, அவற்றை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். எனது தந்தை அரசியலில் இருந்தபோது, எதிர்க்கட்சிகளிலேயே அங்கம் வகித்தார். ஆளுங்கட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. அவருக்கு ஆளும்கட்சிகளிலிருந்து அழைப்புகள் வந்தபோதும் அவர் செல்லவில்லை. ஏனெனில், கட்சிதாவாத ஒரு கொள்கைவாதி அவர். 40 வருடங்களாக, ஒரே கட்சியிலேயே அங்கம் வகித்துவந்தார். அவர், எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தாலும்கூட, அதற்கூடாகக் கிடைத்த நிதியை வைத்து, பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். அதைவிட, அவர் தனது தொண்டு நிறுவனத்தினூடாகவும் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X