2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தோர்’ மீண்டது; ‘ஷீனா’ சிக்கியது

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 27 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மகேஸ்வரி விஜயனந்தன்

mayurisaai@gmail.com

 

கொரோனா பயம் உலகை ஆட்கொண்டு, சரியாக ஒன்றரை வருடங்கள் கடந்து, இந்தத் தொற்று இயற்கையாக உருவாகியதா அல்லது உருவாக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், கொரோனாவானது, நாளுக்கு நாளுக்கு திரிபடைந்து ‘எல்பா’, ‘டெல்டா’, ‘டெல்டா பிளஸ்’ எனப் பல்வேறு உருமாற்றங்களுடன், உலகை அச்சுறுத்துவது மட்டுமல்ல. இதுவிலங்குகளால் பரவுமா, காற்றில்பரவுமா? என்று எண்ணி எண்ணியே, உயிர்பயத்துடன் நாள்களைக்கடத்தும் துர்ப்பாக்கியத்துக்கு முழுஉலகமே ஆளாகியுள்ளது.

இந்த ஆட்கொல்லி தொற்றுக்கு, விலங்குகளும் விதிவிலக்கல்ல என்பதை அண்மைக்கால சம்பவங்கள் உறுதிபடுத்தி  வருவதால், ‘ஐயோ! நமது செல்லப் பிராணிகளுக்கும் இத்தொற்று ஏற்பட்டுவிடுமா’ என்ற அச்சம், செல்லப்பிராணி பிரியர்களையும் ஆட்கொண்டுவிட்டது.

இந்த நிலையில்தான், தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள நீர்யானையும் வரிக்குதிரையும்  உயிரிழந்துள்ளதுடன்,‘தோர்’ என்ற ஆண் சிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது இலங்கையர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக அமைந்தது.

ஒருநாளைக்கு 20 மணி நேரம் தூங்கும் குணமுடைய சிங்கத்தை, சோம்பேறி மிருகம் என அழைத்தாலும், சூரியன் மறையும் நேரத்தில் தூக்கத்தைவிட்டு வேட்டைக்குச் செல்வதில் சிங்கத்துக்கு நிகர் சிங்கம் தான். அதிலும் ஆண்சிங்கத்தை வி,டவேட்டையாடுவதில் பெண் சிங்கங்களே வல்லமை கொண்டன. 

இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட விலங்குகளுக்கே இராஜாவான சிங்கத்தையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அதுவும் மாதக்கணக்கில் மிருகக்காட்சி சாலைகள் மூடப்பட்டுள்ள இச்சமயத்தில், சிங்கத்துக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை வியப்புக்குரிய விடயம்தான். இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய மிருகக்காட்சிசாலையான வண்டலூரில் இதுவரை மூன்று சிங்கங்கள் தொற்றுக்குப் பலியாகியுள்ளன.

ஆனால், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் தொற்றுக்குக்குள்ளான ‘தோர்’ பூரணகுணமடைந்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இப்போது அதே மிருகக்காட்சிசாலையில் தோருடன் ஒரே குகையிலிருக்கும் ‘ஷீனா’ என்ற பெண் சிங்கத்துக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2013ஆம ஆண்டு தென்கொரியாவின் சோல் மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட, 11 வயதே நிரம்பிய ‘தோர்’ என்ற சிங்கத்துக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது மர்மமாகவே உள்ளநிலையில், எவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற பரிசோதனைகளும் விசாரணைகளும் ஒருபுறம் நடக்கும்போது, மிருகக்காட்சிசாலையில் சிங்கங்களைப் பராமரிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அல்லது சிங்கங்களுக்கு கொண்டு வரப்படும் உணவு மூலம், கொரோனா தொற்றுப் பரவியிருக்கலாம் என்ற சந்தேகமும் மறுபுறம் எழுந்துள்ளது. 

வழமையாக, அதிகமாக உண்ணும் குணமுடைய ‘தோர்’ இந்தமாதம் 15ஆம் திகதியிலிருந்து உணவு உண்பதைத் தவிர்த்து வந்துள்ளதுடன், மூச்சுவிடுவதிலும் சிரமத்தை எதிர்கொண்டதை அடுத்து, 18ஆம் திகதி அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட உடனேயே அதைத் தனிமைப்படுத்தி,  அதற்கான சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் உடனடியாக, இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டதை அடுத்து, ‘தோர்’ தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதுடன், தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தோருடன் ஒரே குகையில் மேலும் மூன்று சிங்கங்கள் தங்கியுள்ளதுடன், இதில் ‘ஷீனா’ என்ற பெண் சிங்கத்துக்கு நேற்றுமுன்தினம் (24) தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. பேராதனை கால் நடைபீடம் மற்றும் ராகம வைத்திய பீடங்களில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இந்தவிடயம் தெரியவந்துள்ளதுடன் இதற்கான சிகிச்சைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

னவே, ‘தோர்’, ‘ஷீனா’வுடன் இத்தொற்று நின்றுவிடுமா அல்லது அதே குகையிலிருக்கும் மற்றைய இரண்டு சிங்கங்கள் உள்ளிட்ட அனைத்து விலங்களுக்கும் தொற்றிவிடுமா என்ற அச்சம் நிலவினாலும் முறையான முகாமைத்துவம், கட்டுப்பாடுகள் மூலம், இது ஏனைய விலங்குகளுக்குப் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம் என இலங்கை கால் நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது. 

ஆனால், குறித்த மிருகக்காட்சிசாலையில் கொரோனா கட்டுபடுத்தல் செயற்பாடுகளில் கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு செவிசாய்க்கவில்லை என, அரசாங்க கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. எனவே, அங்குள்ள மிருகங்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளதென்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இத்தொற்று அங்குள்ள ஏனைய மிருகங்களுக்கும் தொற்றுமாயின் பெறுமதிமிக்க மிருகங்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே கால்நடை வைத்தியர்களின் பரிந்துரைகளைச் செயற்படுத்துமாறு அச்சங்கம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையர்களுக்கான கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட ஏனைய மருத்துவ விடயங்களுக்கும் ஏனைய நாடுகளை எதிர்பார்க்கும் இலங்கை, தொற்றுக்குள்ளான ஒரு சிங்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்திய மருந்தின் உதவியுடன் காப்பாற்றியுள்ள நிலையில், அத்தனை மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளையும் கொண்ட இந்தியாவில் கொரோனாவுக்கு இரண்டு சிங்கங்கள் பலியாகியுள்ளமை கவலைக்குரிய விடயமே.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 1,500 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டுதோறும் 25 இலட்சம் பேர் வரையில் இவற்றைப் பார்வையிட வருகின்றனர்.

மே மாதம் 26ஆம் திகதி, சில சிங்கங்களுக்கு இருமல் இருந்துள்ள நிலையில், இந்த மாதம் நான்காம் திகதி முன்னெக்கப்பட்ட பரிசோதனையில் ஒன்பது சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ‘நீலா’ என்ற பெண்சிங்கம்  உயிரிழந்து விட்டதுடன்,  16ஆம் திகதி மற்றுமொரு ஆண் சிங்கமும் உயிரிழந்து, மேலும் பல சிங்கங்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே,  மிருகக்காட்சிசாலை என்பது, வெறுமனே காட்சிகாண் கூடமாக மட்டுமல்லாது,  மிகவும் பலமானதும் அதிகம் பெறுமதியுடையதும், விசித்திரமானதுமான  மிருகங்கள் இருக்கும் இடமென்பதால், அதைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்டவர்களின் தலையாய கடமையாகும். 

இதனை உணர்ந்து செயற்பட்டால், ​‘தோர்’, ‘ஷீனா’ மாத்திரமல்ல, எந்த நோய் தொற்றியது என்று அறியாமலே அண்மையில் உயிரிழந்த நீர்யானை, வரிக்குதிரை போன்ற ஏனைய தனித்துவமான மிருகங்கள், உயிரினங்களின் உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .