2024 ஜூன் 17, திங்கட்கிழமை

தோல்விப் பயத்தில் எம்.பிக்கள் மாற்றுத் திட்டமில்லாத மக்கள்

Mayu   / 2024 மே 22 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

இதயத்துடிப்பு கண்காணிப்புக் கருவியின் வாசிப்பைப் போல தேர்தல் பற்றிய பேச்சுக்கள் ஏற்ற. இறக்கங்களாக சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் எந்தத்  தேர்தலையும் எப்படி எதிர்கொள்வது என்ற எந்த திட்டமிடலும் முன்னேற்பாடும் இல்லாமல் இருப்பதை தௌ;ளத்தெளிவாக காண முடிகின்றது. 

கணிசமான முஸ்லிம் அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் மட்டுமன்றி அவர்களது நேரடி அரசியல் வாழ்வும் காலாவதியாகும் நிலைக்கு வந்திருக்கின்றது. அவர்கள் நீண்டகாலமாக பதவியில் இருந்தார்கள் என்பதால் மட்டும் இந்நிலைமை ஏற்படவில்லை. மாறாக, பதவியில் இருந்த காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதாலும் ஆகும். 

தோல்விப் பயம் ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது. எதனைச் சொல்லி, எவ்வாறு மக்களை ஏமாற்றி மீண்டும் பதவிக்கு வரலாம் என்று பல முஸ்லிம் எம்.பி.க்கள் மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வழி அவர்களுக்கும் தெரியாது, அவர்களுடன் இருக்கின்ற அல்லக் கைகளுக்கும் புரியாது. 

ஆகவே, தேசிய அரசியல் நகர்வுகளின் காரணமாக தேர்தல் இன்னும் தாமதமடைந்து கொண்டிருப்பது அவர்களுக்கு ஒரு ஆறுதலை தந்திருக்கின்றது என்று கூறலாம். 

முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சட்டத்தின் நியதி என்றாலும் கூட, முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஒருதரப்பில் முன்வைக்கப்படுகின்றன. இரண்டு தேர்தல்களையும் ஒருசேர நடத்துதல் பற்றியும் பேசப்படுகின்றது. 

அதிகாரத்தில் அதாவது, ஆளும் தரப்பில் இருக்கின்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் தேவைப்படுகின்றது. எதிரணியில் உள்ளவர்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளியில் காத்துக் கொண்டு நிற்பவர்களுக்கு பொதுத் தேர்தல் அவசியப்படுகின்றது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த விரும்புவதாக வெளியில் காட்டிக் கொண்டாலும், பாராளுமன்ற தேர்தல் முதலில் நடந்தால் அதனை எதிர்கொள்வதற்கான ‘பிளான் பீ’ யும் அவரிடம் இருப்பதாகவே தெரிகின்றது. இந்த வியூகத்தை ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளும் கொண்டுள்ளன. 

ஆனால், முஸ்லிம் கட்சிகளிடமோ முஸ்லிம் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களிடமோ எந்த உருப்படியான யோசனையும் இருப்பதற்கான அத்தாட்சிகள் வெளிப்படவில்லை. எந்த பெரும்பான்மைக் கட்சியை ஆதரிப்பது, என்ன அணுகுமுறையைக் கையாள்வது, அதனால் சமூகத்திற்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற திட்டமிடல் அவர்களிடம் இல்லை.

முஸ்லிம் பொது மக்களின் நிலையும் இதுதான். நமது ஊரின், நமது மாவட்டத்தின் தற்போதைய எம்.பி.க்கே தொடர்ந்தும் வாக்களிக்க வேண்டுமா? அவ்வாறு அவர்கள் இந்த சமூகத்திற்கு என்ன செய்திருக்கின்றார்கள்? என்ற மீள்வாசிப்பொன்றை சமூகம் செய்யவில்லை. அடுத்த தேர்தலில் நமது தெரிவு யார் என்று ஆழமாக சிந்திக்கவும் இல்லை. 

புரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள். எம்.ப்p.க்கள் உள்ளடங்கலாக அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் இச் சமூகத்திற்கான அரசியலை, தவணை முறையில் கெடுத்துக் கெடுத்துக் கடைசியில் குட்டிச்சுவராக்கி இருக்கின்றார்கள் என்பதுதான் கசப்பான உண்மையாகும். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் உதிரி முஸ்லிம் கட்சிகளும் ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதியும்; எந்தளவுக்கு இதில் பங்கெடுத்திருக்கின்றனர் என்பதை தனித்தனியாக விபரிக்க முடியும். ஆனால் அது அவசியமற்றது. 

முஸ்லிம் எம்.பி.க்கள், தலைவர்கள், கட்சிகள், தமது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க சேவைகளைச் செய்யவில்லை. முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளை எந்தவொரு எம்.பி.யும் காத்திரமாக கையாண்டு தீர்வு காணவில்லை. 

தொழில் வழங்கியது, வீதியை செப்பனிட்டது, கட்டிடம் கட்டியது என்று சிற்சில அபிவிருத்திகளைச் செய்தார்களே தவிர உரிமை அரசியலில் ஓர் அங்குலம் கூட முன்னோக்கி நகரவில்லை என்பதற்கு நாடே சாட்சியாக இருக்கின்றது. 

அபிவிருத்தி அரசியலிலும் கூட ஓரிருவரை தவிர மற்றெல்லா அரசியல்வாதிகளும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டியவர்கள் என்றே கூறலாம். ஆதனைவிட இருபது வருடங்களாக வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். 

ஆகவே. பலமுறை மக்களால் தெரிவு  செய்யப்பட்டு அல்லது தேசியப்பட்டியலில் எம்.பியாக பதவி வகித்தும் குறிப்பிட்டுச் சொல்லும்படி சமூகத்திற்கு ஒன்றுமே செய்யாமல் வெறுமனே கதிரையைச் சூடாக்கிக் கொண்டிருந்த முஸ்லிம் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு இப்போது உள்ளுக்குள் ஒரு உதறல் எடுத்துள்ளது. 

நாம் எதனைச் சொல்லி இந்த மக்களிடம் வாக்குக்கேட்பது? இந்த முறை எந்த மாதிரியான பரப்புரையை முன்னெடுக்கலாம்? எப்படி வாக்குறுதிகளை அள்ளிவீசினால் மக்கள் நம்புவார்கள் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது தோல்விப் பயம் வெளியில் தெரியாமல் இருக்க கடுமையான பிரயத்தனங்களையும் எடுக்கின்றார்கள். 

சிலருக்கு ‘இந்த முறையோடு நாம் வீட்டுக்குப் போவோம்’ என்பது தெரிந்து விட்டது. சிலர் ‘கடைசியாக ஒரு தடவை முயற்சி செய்து பார்ப்போம் என்று நினைக்கின்றார்கள். ஆனால் இன்னும் அவர்கள் மக்கள் மன்றத்திற்கு வந்து. இருக்கின்ற காலத்தையாவது சரிவரப் பயன்படுத்த முனைவதாக தோன்றவில்லை. 

மாறாக, யாருடன் கூட்டணி சேரலாம், யாருடன் டீல் பேசலாம் என்றே அநேகர் சிந்திக்கின்றனர். மறுபுறத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமைப்படுவது பற்றியும் கூட்டணியாக இயங்குவது பற்றியும் புதுக் கதைகளையும் பேசத் தொடங்கியுள்ளதை கவனிக்க முடிகின்றது. இது அவர்களது உள்பயம் அல்லது தேர்தலை கடந்து செல்வதில் உள்ள வழிப்பயத்தை வெளிப்படுத்துகின்றது. 
உதாரணமாக, முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல் தரப்புக்கள் ஒன்றுபட வேண்டுமென்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஆனால், இதனையெல்லாம் அக்காலத்தில் பெரிதாக கண்டுகொள்ளாத மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம், தனது கட்சிக்குள் எம்பிக்கள் சிதறுண்டு பலமிழந்து போயுள்ள தேர்தலுக்கு முன்னரான இக்காலத்தில் ‘கிழக்கில் முஸ்லிம் அணிகளின் ஒற்றுமை அவசியம்’ என பேசியுள்ளமை இதற்கு ஒரு பதச்சோறாகும். 

இவ்வாறு, முறையாக திட்டமிட்டு மக்களுக்கான சேவையை செய்யாத முஸ்லிம் தலைவர்கள், எம்.பி.க்கள் எவ்வாறு இந்த தேர்தலை எதிர்கொள்வது என்று தெரியாத பெரும் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளார்கள். சிலரது அரசியல் காலாவதியாகப் போய்க் கொண்டிருக்கின்றமை அவர்களுக்கே புலப்படுகின்றது. 
அரசியல்வாதிகள்தான் இப்படி இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டால், முஸ்லிம் மக்களோ இதைவிட மோசமான நிலையில், எந்தவித எதிர்கால திட்டமும் இல்லாமல் இருக்கின்றார்கள். 

இப்போதிருக்கின்ற எம்.பி.க்கள் அரசியல்வாதிகள் யாருமே சரியில்லை என்ற கருத்துக்களும் இனி இவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்ற வாய்ச்சவாடல்களும் அடிக்கடி முஸ்லிம் மக்களிடம் இருந்து வெனிப்படுவதுண்டு. அந்த அளவுக்கு இந்த அரசியலில் வெறுப்படைந்துள்ளார்கள். 

ஆனால், இப்போது இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் சரியில்லை என்றால், மாற்றுத் திட்டமென்ன? அடுத்த தெரிவு என்ன? ஒவ்வொரு பிரதேசத்திலும் அடுத்த தலைவர், மக்கள் பிரதிநிதி யார்? என்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சிகளில் முஸ்லிம்கள், ஒரு சமூகமாக இன்னும் ஈடுபடவில்லை என்பது கவலைக்குரியது. 

ஏற்கனவே பதவியில் உள்ள தலைவர்கள், எம்.பி.க்கள தமக்கான சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றாமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்க அதை தட்டிக் கேட்கவும், அவர்களுக்கு மாற்றீடாக நல்ல மக்கள் பிரநிதிநிதிகளை அடையாளம் காணவும் முஸ்லிம் மக்கள் இனியும் முன்வரவில்லை என்றால், இப்போதிருக்கின்ற தலைவர்கள், எம்.பி.க்களை விட மோசமானவர்களால் இந்த சமூகம் எதிர்காலத்தில் ஆளப்படும். 

22.05.2024

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X