2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

நல்லிணக்கமும் இரட்டைத் தோணிகளும்

Johnsan Bastiampillai   / 2023 ஜூன் 29 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

இலங்கை போன்ற நாடுகளில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது, “கடந்தகால அநீதியின் வரலாற்றை திருத்தி அமைப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதே மீளிணக்கம் அல்லது பகை மறப்பு ஆகும்” என்று நெல்சன் மண்டேலா கூறியுள்ளமை, இங்கு எப்போது சாத்தியம் என்று முன்கணிக்க முடியாதுள்ளது. 

இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், யுத்த வலயத்துக்கு உள்ளும் பின்னர் அகதி முகாம்களிலும் மக்கள் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில், இரண்டு கொம்பன் யானைகளைப் பற்றி, தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த விடயம் நினைவிருக்கலாம். 

அதேபோல், நீண்ட கடல் பயணத்தின் நடுவே தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள், உணவுக்காகத் தவித்துக் கொண்டிருக்கின்ற இலட்சக்கணக்கான வறிய மக்களின் நிமித்தம் குவிகின்ற அக்கறையை விட, ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் பயணித்த ஐந்து செல்வந்தர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பதையும் காண்கின்றோம். 

ஆகவே, எந்த விவகாரத்துக்கு அல்லது யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை இங்கு பணமும் அதிகாரமும் செல்வாக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களின் மனவோட்டமும்தான் தீர்மானிக்கின்றன. வஞ்சிக்கப்பட்ட, அதிகாரங்கள் அற்ற, பலவீனமான மக்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதையே இதுபோன்ற சம்பவங்கள்  வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. 

சமத்துவம் பேசுகின்ற உலக நாடுகளும் நடுநிலைமை பற்றி வகுப்பெடுக்கின்ற  அமைப்புகளும், அதற்கெதிராக உலகில் நடைபெறுகின்ற பல சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட தருணம் வரைக்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றன. 

இலங்கையை எடுத்துக் கொண்டால், நல்லிணக்கம், இனசௌஜன்யம், ஒற்றுமை பற்றி அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றன. இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் பாணியில்தான் ஆட்சியாளர்கள் பொதுவெளியில் கருத்துகளை முன்வைக்கின்றனர். 

இருப்பினும் நடைமுறை யதார்த்தம் என்பது, வேறு மாதிரியாக உள்ளதை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, நல்லிணக்கம் என்று பேசிக் கொண்டே, நல்லிணக்கத்துக்குப் பாதகமான நகர்வுகளை பெருந்தேசியம் முன்னெடுத்து வருகின்றது. ஒரு காலை நல்லிணக்கம் என்ற தோணியிலும் மற்றைய காலை இனங்களை பிரித்தாளுதல் என்ற தோணியிலும் வைத்துள்ளதாக குறிப்பிடலாம். 

அரச இயந்திரமும் அதிகாரிகளும் இந்தச் செயற்பாடுகளுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றனர். ஏன், பகிரங்கமாகவே ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு துணை நின்றதையும் கண்டுள்ளோம். இன்றும் இந்த நிலைமை மாறவில்லை. 

பல்லின, பல்கலாசார நாடொன்றில் இன, மத முரண்பாடுகள் ஏற்படுவது சாதாரண விடயமே. எங்கோ ஒரு மூலையில், இரண்டு முட்டாள்கள் முரண்படத் தொடங்குகின்ற போது, அது இரண்டு இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக விரிவடையும் வாய்ப்புள்ளது. ஒரு சிறிய சம்பவமே, இன நல்லிணக்கத்துக்குக் குந்தமாக அமைந்து விடக்கூடும். 

இலங்கையைப் பொறுத்தமட்டில், யுத்தம் என்பதன் ஆரம்ப புள்ளி கூட, ஒரு விதமான இனநல்லிணக்கத்தின் விரிசலில் இருந்துதான் தொடங்கியது. இதில் தனிச் சிங்களச் சட்டத்தின் வகிபங்கு முக்கியமானது. 

ஆகவே, சிங்கள கடும்போக்காளர்கள், தமிழ் ஆயுதக் குழுக்கள், 83 கலவரத்தை அரங்கேற்றிய சிங்கள குழுக்கள், சஹ்ரான் கும்பல் போன்ற குழுக்கள், ஒட்டுக் குழுக்கள், இனவாதிகள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் எனப் பல தரப்பினரும் இனமுரண்பாடுகளுக்கு சிறியதும் பெரியதுமாக காரணமாகி உள்ளனர். 

ஆனால், இதையெல்லாம் தாண்டி, ஒரு கட்டத்தில் இனநல்லிணக்கம் பற்றிய கருத்தியல் மீண்டும் மேலோங்கியது. அதாவது, ஏற்கெனவே இருந்த இன ஒற்றுமையை வருடக் கணக்காக பாடுபட்டு சீர்குலைத்து விட்டு, பிறகு குறுகிய காலத்துக்குள் அதனை மறுசீரமைக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. பெரும்பாலும் சாண் ஏற முழம் சறுக்கும் முயற்சிகளாகவே இவை அமைந்தன. 

இனநல்லிணக்கத்தின் முதற்படி பகைமறப்பு என்பதை, இப்பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள் உணர்த்துகின்றன. 
அந்த வகையில், இலங்கையில் வாழ்கின்ற மூவின மக்களும், தங்களுக்கு இடையிலான கடந்த காலத் தவறுகளை பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு, நல்லிணக்கத்தை நோக்கி நகர முற்பட்டார்கள். இவ்வாறு மக்கள் ஒற்றுமைப்பட ஆரம்பித்த தருணங்களில் எல்லாம், ஆட்சியாளர்கள் அல்லது அரசியல் தரப்புகள், இனவாத செயற்பாட்டாளர்கள் இதனை மிகச் சூட்சுமமான முறையில் சீர்குலைத்து வந்திருக்கின்றார்கள்.  குறிப்பாக பல விவகாரங்களில் அரச இயந்திரம், இதில் ஒரு வகிபாகத்தை எடுத்திருக்கின்றது என்பதைத்தான் ஜீரணிக்க முடியாதுள்ளது. 

பிரித்தாள்வதன் மூலம் அரசியல் இலாபம் தேட முற்படுகின்ற தரப்பினரும் குறிப்பிட்ட சில வெளிநாடுகளும், இலங்கை மக்கள் இன, மத வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமைப்படுவதை உள்ளுக்குள் விரும்பவில்லை என்பதுதான் நிதர்சனமாகும். 

யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, நாட்டில் மெல்ல மெல்ல ஏற்பட்ட பகைமறப்பு முயற்சிகளும் இனப்புரிந்துணர்வும் குறித்து, அரசாங்கங்கள் சர்வதேச அரங்கில் பெருமையடித்துக் கொண்டாலும், இதனை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இந்த மாற்றம் விருப்பத்துக்கு உரியதாக இருந்ததா என்பதில் கடுமையான சந்தேகமுள்ளது. 

ஆயுதப் போர் முடிவடைந்த பிறகு, முஸ்லிம்களை நோக்கிய ஒரு பாய்ச்சலை இனவாதிகள் நிகழ்த்தினர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இந்த நகர்வுகள் இடம்பெற்றன. இதற்கிடையில்தான் சஹ்ரான் பயங்கரவாத குழுவின் காட்டுமிராண்டித்தனமும் நடந்தேறியது. இப்போது வேறு கோணத்தில் இந்த நகர்வுகள் இடம்பெறுகின்றதோ என்ற எண்ணம் தோன்றுகின்றது. 

பொதுவாக, இலங்கையில் இன, மத முரண்பாடுகளுக்கு பௌத்த மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்குப் பின்னால் உள்ள சூட்சுமத்தை, அறிவார்ந்த சிங்கள மக்கள் நன்கறிவார்கள். ஆனால், மேலோட்டமாக சிந்திக்கின்ற மக்களை நம்பித்தான் இந்த நகர்வுகளை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். 

இலங்கையில், இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், பொறுப்புக்கூறலை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஐ.நா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இந்தப் பின்னணியில், எத்தனையோ இனநல்லிணக்க முயற்சிகள், கலந்துரையாடல், செயலமர்வுகள் இடம்பெற்றன. 

இவையெல்லாம் கருத்தியல் மாற்றங்களையே ஒப்பீட்டளவில் ஏற்படுத்தின. களநிலையில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக அந்த நல்லிணக்கம், ஒற்றுமை திடீரென ஏற்பட்டது. 

‘ராஜபக்‌ஷ அரசாங்கத்தை துரத்தியடித்தல்’ என்ற புள்ளியில் பேதங்களை மறந்து, அனைத்து மக்களும் 2022இல் ஒன்றுகூடினர். இதனால் ஏற்பட்ட மாற்றத்தை விடவும், இந்த நாட்டு மக்களின் ஒற்றுமையின் பலமானது சிங்கள அரசியல் தலைவர்களின் மனங்களில் ஏற்படுத்திய பயம்தான் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். 

இப்போது, நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது, மக்களை மீண்டும் குழப்பி, இன ஒற்றுமையில் கீறல்களை ஏற்படுத்தி, மீண்டும் ஒரு பிரித்தாளும் அரசியலைச் செய்வதற்கு யாரோ முனைகின்றார்கள் என்று ஏன் மக்கள் கருதக் கூடாது? 

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள் என்றால், ஓர் இனக் குழுமத்தின் சனத்தொகை விகிதாசாரம் குறைவாக இருந்தாலும் அவர்கள் தமது மத தலத்தை அமைப்பதையோ இன அடையாளத்தை முன்னிறுத்துவதையோ சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். சகிப்புத்தன்மைதான் இன ஒற்றுமையின் அடிநாதமாகும். 

ஆனால், இலங்கையில் நடப்பது வேறுமாதிரியான நிகழ்வுகளாகும். பௌத்த மத அடையாளங்களின் பெயராலும் தொல்லியல் என்ற பெயராலும் நில ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. அளவுக்கதிகமாக நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் கையகப்படுத்தப்படுவதை ஜனாதிபதியே அறிந்து வியந்து போனதை நாடே கண்கூடாகப் பார்த்தது. இதற்குப் பின்னால் பெரிய திட்டங்கள் இல்லை என்று யாரும் சொல்லி விட முடியாது. 

இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க, அரசாங்கமும் அதற்காக முன்னிற்பதாக காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு காலப் பகுதியில், இன்னுமொரு தரப்பு அதற்கு மாற்றமான காரியங்களில் ஈடுபடுகின்றது என்றால், இது ஒரு சூட்சும நகர்வு என்றுதானே சொல்ல வேண்டியுள்ளது. 

தொல்லியல்களைக் காப்பாற்றுவது முக்கியமானது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அது எல்லா இலங்கை மக்களினதும் தொன்மையை காப்பதாக இருக்க வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட இனம், மதம் மட்டும் இதில் முழுமுதல் இடத்தில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இது நல்லிணக்கத்தை கொண்டு வரவிடாது. 

அதுபோல, இலங்கையில் ஒரு பக்கத்தில் இன நல்லிணக்கம் பற்றி பேசிக் கொண்டு, மறுக்கத்தில் இன நல்லிணக்கம் சீர்குலைந்தாலும் பரவாயில்லை என்ற தோரணையில் எடுக்கப்படும் எல்லா வகையான நகர்வுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். 

இது, ஜெனீவாவை சமாளிப்பதற்காக செய்யப்பட வேண்டியதில்லை. நாட்டிலுள்ள மக்களுக்காக உளத் தூய்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டியதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .