Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவாஸ் சௌபி
அண்மையில் வழங்கப்பட்ட அதிபர் சேவை ஆட்சேர்ப்பானது, தமிழ் மொழியில் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய பெரும்பாலானவர்களுக்கு, அநீதி இழைக்கும் வகையில், முறைகேடாக வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி, நாடு முழுவதுமாக சுமார் 340 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
மேற்படி நியமனத்தில், அதிபர்களுக்கு ஏற்பட்ட அநீதி என்பது, தமிழ் மொழியிலுள்ள அதிபர் சேவை தரம் மூன்றுக்கான வெற்றிடங்கள் தனித்தனியே கணிக்கப்பட்டு, தமிழ் மொழியில் உள்ளவர்களுக்கான ஆட்சேர்ப்பு, தனியே நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான். இதை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பு தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இந்த நடைமுறை பின்பற்றப்படாமல், ஒருதலைப்பட்சமாகச் சிங்கள மொழியை மய்யப்படுத்தி, தமிழ் மொழி மூலமானவர்களைப் பாரபட்சமாகப் புறக்கணித்து, மேற்படி ஆட்சேர்ப்பு நடைபெற்றிருப்பது மிகத் தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதன்படி, அதிபர் சேவை தரம் மூன்று நியமனத்தில், காணும் முறைகேடுகளைப் பின்வருமாறு தலைப்பிட்டு கூறலாம்.
1885/31 ஆம் இலக்க 22.10.2014 ஆம் திகதிய இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பை முழுமையாக பின்பற்றாமை
மேற்படி பிரமாணக் குறிப்பைப் பின்பற்றி, ஆட்சேர்ப்பு நடைமுறையைச் செய்யும் விதமுறைகளையும் ஒழுங்குகளையும் கல்வி அமைச்சு பேணவில்லை என்பதை, அவர்களது ஆட்சேர்ப்பு முறை நிரூபிக்கின்றது.
என்றாலும், அதிபர் சேவை நியமனத்தைச் செய்வதில், அதற்கென உள்ள பிரமாணக் குறிப்பைப் பின்பற்றுவதைக் கல்வி அமைச்சு மறந்துவிட்டது. இப்படி ஒரு பிரமாணக் குறிப்பு இருப்பதை, கல்வி அமைச்சு கண்டுகொள்ளவில்லை என்றும் எம்மால் கூற முடியாதுள்ளது.
ஏனெனில், குறிப்பிட்ட அதிபர் சேவை ஆட்சேர்ப்புக்காக 1918.10.19 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில், இதற்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை அறிவிக்கின்றபோது, வர்த்தமானியின் முதல் வரியில், முதல் சொல் இப்படித்தான் ஆரம்பம் ஆகின்றது.
‘இலக்கம் 1885/31 மற்றும் 2014.10.22 ஆம் திகதிய இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு அமைய, இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்துக்குச் சேர்த்துக்கொள்ளும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை, 2019 ஜனவரி மாதம் நடைபெறும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது’.
ஆக, வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த ஆட்சேர்ப்பு நடைமுறை இலக்கம் 1885/31 மற்றும் 2014.10.22 ஆம் திகதிய இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு அமைய நடைபெறும் என்று அவர்களே அறிவித்துவிட்டு, இறுதியில் அதிபர் சேவை பிரமாணக் குறிப்பைப் பின்பற்றாமல் அதை மறந்த நிலையில் ஆட்சேர்ப்பை செய்திருக்கிறார்கள் என்றால், இதனை என்னவென்று கருதிக்கொள்வது? திட்டமிட்ட சதி என்றுதானே கூறவேண்டும்.
இதற்கு மேலாக, போட்டிப் பரீட்சையில் சித்தியடைகின்றவர்களில் ஆட்சேர்ப்புச் செய்யும் தொகையைவிட, ஒரு மடங்கு அதிகமானவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள் என அதிபர் சேவை பிரமாணக் குறிப்பு வலியுறுத்தியதற்கு அமைய, 1,918 பேருக்கான நியமனம் செய்வதற்கு 3,881 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இதற்குப் பிரமாணக் குறிப்பைப் பின்பற்றியவர்கள், ஏன் தமிழ் மொழிக்குத் தனியாக ஆட்சேர்ப்புச் செய்வதை மட்டும் கைவிட்டார்கள்.
அடுத்து, நேர்முகப் பரீட்சை விதிமுறைகளையும் அதற்காக வழங்கப்பட்ட 25 புள்ளித் திட்டத்தையும் அதிபர் சேவை பிரமாணக் குறிப்பிலிருந்து பின்பற்றியவர்கள், அதே பிரமாணக் குறிப்பில் ஆட்சேர்ப்புச் செய்கின்றபோது தமிழ் மொழிக்குத் தனியாக ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்ற இடத்தை மட்டும் ஏன் பார்க்காமல் விட்டார்கள்?
இப்படி, மேலுள்ள மூன்று சந்தர்ப்பங்களிலும் அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பைப் பின்பற்றியவர்கள் தமிழ் மொழிக்கான வெற்றிடங்கள் தனியாகக் கணிக்கப்பட்டு, அதற்கான ஆட்சேர்ப்பு, தனியாகச் செய்யப்பட வேண்டும் என்பதை மட்டும் தவறவிட்டிருக்கிறார்கள் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.
இதன்படி, இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பு, சட்டப்படியான ஓர் ஆவணம் என்றால், அந்தச் சட்ட நடைமுறையின் படிதான், இந்த ஆட்சேர்ப்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் சொல்லுமாக இருந்தால், எங்களுக்கு ஏற்பட்டிருப்பதும் ஒரு சட்டரீதியான அநீதிதான் என்ற வகையில், இந்த அநீதிக்கு, நீதி மன்றில்தான் நீதி தேட முடியும்.
அதிபர் சேவை தரம் III ற்கான தமிழ் மொழி மூல வெற்றிடங்களை கணிப்பிடாமல் ஆட்சேர்ப்பு செய்தமை
இதில் கவலை கொள்ளும் அடுத்த விடயம், கல்வி அமைச்சில் தமிழ் மொழி மூலம் நிலவுகின்ற வெற்றிடக் கணிப்பீடு எதுவும் இதுவரை முறையாக இல்லை என்பதுதான். இதற்கு மாகாணங்களில் நிலவுகின்ற அதிபர் சேவை தரம் மூன்றுக்கான வெற்றிடங்கள் முழுமையாகக் கல்வி அமைச்சுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அப்படியானால், இதில் எழுகின்ற முதலாவது கேள்வி, அதிபர் சேவை தரம் மூன்றுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வர்த்தமானி 1918.10.19 ஆம் திகதி வெளியிடப்பட்டபோது, 1,918 வெற்றிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்ட வெற்றிட எண்ணிக்கை என்பது, கணிப்பிடப்பட்ட ஒரு தொகையாகத்தானே இருக்க வேண்டும். அந்தக் கணிப்பீட்டில் தமிழ், சிங்கள மொழி மூல வெற்றிடங்கள் உள்வாங்கப்பட்டிருக்கத்தானே வேண்டும்; அந்த தொகை எப்படியும் வெளியில் வரத்தானே வேண்டும்.
ஆனால், இன்றுவரை தமிழ் மொழியிலுள்ள வெற்றிடக் கணிப்பீடு ‘இல்லை’ என்ற நிலையில்தால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருப்பதை, கல்வி அமைச்சைத் தொடர்பு கொண்ட நேரம் அறிய முடிந்தது. அதாவது, இந்த நியமன வெற்றிடங்கள் பற்றிய முறையான ஒரு கணிப்பீட்டைச் செய்யாமல், மிக மோசமான ஓர் அலட்சியப் போக்கில் நடைபெற்றிருப்பதாகவே இதுவரை அறியமுடிகிறது. இதனை அநீதி இழைக்கப்பட்ட ஒரு முறைகேடாகவே பார்க்க முடிகிறது.
நேர்முகப் பரீட்சையில் நடைபெற்ற முறைகேடு
பரீட்சைக்கு அறிவிக்கப்பட்ட வர்த்தமானி போன்று, நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட கடிதமும் 1885/31 ஆம் இலக்க 22.10.2014 ஆம் திகதிய இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு அமைய, அதன் விதிகளை உள்ளடக்கியே இருந்தது.
பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர்ப் பட்டியல், கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் 2019 ஜூலை 10 ஆம் திகதி வெளியிடப்பட்டதற்கமைய, இப்பட்டியலில் சித்தி பெற்றவர்களாக 3,881 பேர் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மொத்தமாக பெயரிடப்பட்டிருந்தார்கள். இதற்குள் 155 முஸ்லிம்களும் 355 தமிழ் சகோதரர்களும் 3,371 சிங்களச் சகோதரர்களும் உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.
இதிலும் ஒரு முறைகேடு நடந்திருக்கிறது. அதாவது, மேற்படி நேர்முகப் பரீட்சைப் பட்டியலை, எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று, பிரமாணக் குறிப்பு 7.2.4.3.1 இல் பின்வருமாறு கூறுகிறது.
‘எழுத்து மூலப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட மொத்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ஒழுங்கு முறைக்கேற்ப வெற்றிடங்களைப் போன்று, இருமடங்கு சாதாரண நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்’.
பிரமாணக் குறிப்பு இவ்வாறு கூறுவதைப் புறக்கணித்து, வெளியான நேர்முகப் பரீட்சைப் பட்டியலானது புள்ளிகளின் ஒழுங்கில் இல்லாமல், பெயர்கள், மாவட்ட ரீதியாகப் பட்டியல்படுத்தப்பட்டு இருந்தமையும் தவறான ஓர் ஒழுங்கீனமாகத் தெரிகிறது.
ஆயினும், இவ்வாறு தெரிவானவர்களுக்கான நேர்முகப் பரீட்சையானது, ஜூலை 29 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் எட்டாம் திகதிவரை கல்வி அமைச்சில் நடைபெற்றது.
12 பிரிவுகளாக நிலையங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த நேர்முகப் பரீட்சையில், 11, 12 ஆம் பிரிவு நிலையங்களில் தமிழ் மொழி மூலமானவர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்றது.
இந்த நேர்முகப் பரீட்சையின் புள்ளித்திட்டமானது, ஒரு வாய்மொழிமூலமான ஐந்து நிமிட முன்வைப்பை (Presentation) மட்டும் அவதானித்து, 25 புள்ளிகள் வழங்கப்படுவதாக இருந்தது. இதில் நான்கு, மூன்று நேர்முகப்பரீட்சை அதிகாரிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர், இருவர் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இங்கு, தமிழில் நாங்கள் முன்வைக்கும் Presentation க்கு மாத்திரம்தான் புள்ளி என்றால், சிங்கள மொழியிலுள்ளவர்கள் எப்படி தமிழை விளங்கி, புள்ளி இடுவார். அவரால் எங்கள் சத்தத்துக்கும் குரலுக்கும்தான் புள்ளியிட முடியுமே தவிர, உள்ள விடயத்துக்குப் புள்ளியிட முடியாது.
எனவே, இந்த நேர்முகப் பரீட்சை என்பது வெறும் கண்துடைப்பான விடயம். எனவே, இது சிங்கள மொழியில் உள்ளவர்களுக்குப் பெரும் தொகையான நியமனங்களை வழங்குவதற்காக, தமிழ் மொழியிலுள்ளவர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி உள்ளமையை உணரமுடிகிறது.
ஆனால், அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, தமிழ் மொழிக்குத் தனியாக ஆட்சேர்ப்புச் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தால், நேர்முகப் பரீட்சை மதிப்பீட்டு அதிகாரிகள் அனைவரும் தமிழ் மொழியைச் சார்ந்தவர்களாக மட்டுமே இருந்திருக்க முடியும். அந்த நேர்முகப் பரீட்சை உரிய முறையில் மதிப்பிடப்பட்டு, புள்ளிகளும் வழங்கப்பட்டிருக்கக்கூடும் என்ற நியாயங்கள் இதற்குள் தென்படுகின்றன.
பரீட்சைப் புள்ளிகளை வெளியிடாமலே ஆட்சேர்ப்புச் செய்தமை
2018.10.19 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவித்ததற்கு அமைய, கடந்த 2019.02.10 ஆம் திகதி, இதற்கான பரீட்சை நடைபெற்றது. மேற்படி நேர்முகப் பரீட்சைப் புள்ளிகளும் எழுத்துமூலப் பரீட்சை புள்ளிகளும் இணைந்தவாறு மொத்தப் புள்ளிகள் வெளியிடப்பட்ட பின்பு, ஆட்சேர்ப்புப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு பரீட்சைப் புள்ளிகள் எதையும் இதுவரையும் வெளியிடாமல், கடந்த 2019.09.18 ஆம் திகதி ஆட்சேர்ப்புக்கு தெரிவானவர்களின் பெயர்ப் பட்டியல், கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு, உரிய நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த ஆட்சேர்ப்புப் பட்டியல்கூட, ஆட்சேர்ப்புக்கு தெரிவானவர்களுக்கு உரிய நியமனக் கடிதங்களைப் பெறும் நிகழ்வு 21.09.2019 இல் அலரி மாளிகையில் நடைபெறுவதாக 14.09.2019 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவித்துவிட்டு, அதிலிருந்து மூன்று நாள்களின் பின்னர், அதாவது 18.09.2019 ஆம் திகதிதான் கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இப்படி தெரிவானவர்களின் பெயர்களை வெளியிடாமல், அவசரமாக நியமனம் வழங்க முற்பட்டதிலுள்ள சூட்சுமம்தான் என்ன?
முன்பு வெளிவர வேண்டிய பட்டியல் பின்னராகவும் பின்பு வெளிவர வேண்டிய நியமனக் கடித அழைப்பு முன்னராகவும் தலைகீழான முறையில் வௌிப்படுத்தப்பட்டு இந்த நியமனங்கள் மர்மங்களையும் ஏமாற்றுச் சதிகளையும் செய்திருப்பதன் பின்னணிதான் என்ன?
இவற்றுக்கு அப்பால், உரிய பரீட்சைப் புள்ளிகளை இன்னும் வெளியிடாமல் அதை மர்மமான ஒரு புதைகுழியில் மறைத்து வைத்திருக்கும் காரணம்தான் என்ன? என்ற கேள்விகளும் எம்முன் எழுகின்றன.
அநீதியான அதிபர் சேவை நியமனத்துக்கு எதிராக நீதிக்காக முறையிடல்
அதிபர் சேவை தரம் III இற்கான இறுதி நியமனத் தொகையான 1,858 ஆனது தமிழ் மொழியில் 167 பேரையும் (முஸ்லிம்கள் 34; தமிழர்கள் 134) சிங்களச் சகோதரர்கள் சுமார் 1,691 பேரையும் உள்ளடக்கி இருக்கும் நிலையில், இந்த நியமன முறைகேட்டை, கண்டுகொண்ட சந்தர்ப்பமானது, ஆட்சேர்ப்புச் செய்கின்ற இறுதிக் கட்டத்தில்தான் என்பதால், இதற்கான தீர்வை அவசரமாகப் பெற முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இருந்தும், அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு அமைய, இந்த நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற சட்டத் தேவையை முக்கியமாக கருதி, அற்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும் மேலும் இதை மனித உரிமை மீறல் அநீதியாகவும் கருதி, அதற்கான நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் கருதப்படுகின்றது; முயற்சிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago