Thipaan / 2015 டிசெம்பர் 02 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
பயங்கரவாதச் செயல்கள் ஏன் நிகழ்கின்றன என்பது முரண்நகையான வினா. பயங்கரவாதத்தாற் சில செயல்கள் நிகழ்கின்றனவா அல்லது செயல்களின் பயங்கரம் காரணமாக அவை அவ்வாறு அழைக்கப்படுகின்றனவா என்பது வாதத்துக்குரியது.
எல்லாப் பயங்கரவாதச் செயல்களும் ஒரே அளவு கவனம் பெறுவதில்லை. யார், எதை, யாருக்கெதிராகச் செய்தார் என்பனவே எப் பயங்கரத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தீர்மானிக்கும் அளவுகோல்கள்.
அண்மைக் காலமாக, மேற்கு ஆபிரிக்க நாடாகிய நைஜீரியாவில், பொதுமக்கள் மீது அதிகரித்துள்ள தாக்குதல்கள், அங்கு என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறியப்பட்டிருக்கையில், பயங்கரவாத இயக்கங்களைத் தரவரிசைப்படுத்தும் உலகப் பயங்கரவாதக் குறிகாட்டி (Global Terrorism Index) ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ விடப் பயங்கரமானதாக, நைஜீரியாவைத் தளமாகக் கொண்டியங்கும் போகோ ஹராம் அமைப்பை அறிவித்திருக்கிறது. 2014ஆம் ஆண்டில் மட்டும், போகோ ஹராம் பயங்கரவாதத்துக்குப் பலியானோர் தொகை 6,644. அதே ஆண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்துக்கு பலியானோர் தொகை 6,073. பயங்கரத்தின் புதிய முகவரியாக இனங்காணப்பட்டுள்ள போகோ ஹராம் என்பது, என்னவென விசாரிப்போம்.
மேற்கு ஆபிரிக்காவின் கினி வளைகுடாவினை ஒட்டி அமைந்துள்ள நாடு நைஜீரியா. ஆபிரிக்காவில் அதிக மக்கள் தொகையையும் (ஆபிரிக்க மக்கள் தொகையில் 18சதவீதம்) உலக மக்கள் தொகையில் ஏழாவது இடத்தில் உள்ளதுமான நைஜீரியாவின் எல்லையில் பெனின், நைகர், சாட், கமரூன் ஆகிய நாடுகள் உள்ளன. கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் ஏறத்தாழச் சமவளவிற் கொண்ட மதச்சார்பற்ற நாடாகவும் 500க்கு மேற்பட்ட இனக்குழுக்களையும் 500க்கு மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்ற பல்தேசிய அரசாகவும் அறியப்பட்டது.
1960ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நைஜீரியா, இராணுவப் புரட்சிகளாலும் உள்நாட்டு யுத்தத்தாலும் ஒரு தசாப்தகாலம் தடுமாறியது. 1967ஆம் ஆண்டு, மே மாதம் கிழக்கு நைஜீரியாவின் ஒரு பகுதி தன்னை 'பியா‡ப்ராக் குடியரசு' என்ற தனிநாடாக அறிவித்ததைத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் 30 மாதங்கள் நீடித்தது. இதில் ஓரு மில்லியனுக்கும் அதிகமான பியா‡ப்ரா மக்கள், போராலும் பட்டினியாலும் இறந்தனர். 1970இல் பியா‡ப்ரா மீண்டும், நைஜீரியாவுடன் இணைந்தது.
நைஜீரியாவின் முக்கியத்துவம் அதன் பொருளாதாரப் பலம் சார்ந்தது. கடந்தாண்டு, தென்னாபிரிக்காவை முந்தி ஆபிரிக்காவின் அதி பெரிய பொருளாதாரமாகியுள்ளது. உலகின் 20ஆவது பெரிய பொருளாதாரத்தை உடைய நாடாக வளர்ந்த நைஜீரியா, ஆபிரிக்காவின் பிராந்திய வல்லரசுகளில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.
முதலாம் உலக நாடுகளையும் பிரிக்ஸ் நாடுகளையும் அடுத்து, பொருளாதார ஏறுமுகத்தில் உள்ள பதினொரு நாடுகளில் ஒன்றான நைஜீரியா, உலகின் ஆறாவது மிகப்பெரிய விவசாய நாடாகவும் பெற்றோலிய, இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முக்கியமான நாடாகவும் விளங்குகிறது. அமெரிக்காவின் மொத்த எண்ணெய்த் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை வழங்கும் நைஜீரியா, அமெரிக்காவுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் 14ஆவதாக உள்ளது.
அதேவேளை, கடந்த பத்து ஆண்டுகளில், நைஜீரியப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்கு தவிர்க்கவியலாததாகியது. உட்கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் போன்றவற்றின் முன்னேற்றத்துக்கு, சீனாவின் பங்கு மெச்சப்படுகிறது. கடந்தாண்டு பி.பி.சி. செய்திச்சேவை மேற்கொண்ட நைஜீரிய மக்களின் மனநிலையை அறியும் கருத்துக்கணிப்பின் படி, 90சதவீதமான நைஜீரியர்கள், சீனாவை நட்பாகவும் பயனுள்ள தோழமை நாடாகவும் கருதுகிறார்கள். சீன நாணயமான ரென்மின்பியை, வெளிநாட்டு நாணயமாக முதலில் அங்கிகரித்த ஆபிரிக்கா நாடு நைஜீரியா. இப்பூகோள அரசியல்-பொருளாதார நிலைமைகளின் பின்னணியில், போகோ ஹராம் அமைப்பை நோக்கல் பொருந்தும்.
1995ஆம் ஆண்டு முஸ்லிம் இளைஞர்களுக்கான இயக்கமாக ஷபாப் என்ற அமைப்பை, மல்லாம் லாவல் தொடக்கினார். அவர், மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதை அடுத்து, முகம்மது யூசூப் 2002ஆம் ஆண்டு ஷபாப் இயக்கத்தின் தலைவரானார். அவரே, போகோ ஹராம் அமைப்பைத் தோற்றுவித்தார். போகோ ஹராம் என்பதன் பொருள் 'மேற்கத்தியக் கல்வி தடைசெய்யப்பட்டது'. அவ்வமைப்பின் அதிகாரபூர்வமான பெயர், 'ஜாமாத்துல் அஹ்லிஸ் சுன்னா லித்தாவதி வல்-ஜிகாத்' (இறைத் தூதரின் போதனைகளையும் போராட்டத்தையும் முன்னெடுக்கும் கடப்பாடுடையோர்). இவ்வமைப்பு, சுன்னி இஸ்லாத்தின் கடுங்கோட்பாட்டு அடிப்படைகளைக் கொண்ட சலாபி இயக்கத்தோடு (குறிப்பாக வஹாபி பிரிவோடு), தன்னை அடையாளப்படுத்துகிறது. நைஜீரியாவில் நடைமுறையில் உள்ள மதச்சார்பற்ற ஆட்சிமுறையை ஒழித்து, இஸ்லாமிய
ஷரியாச் சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவப் போராடுவதாக அது சொல்லுகிறது. போகோ ஹராமின் அடாவடித்தனத்தால், நைஜீரியாவில் 8 இலட்சம் குழந்தைகள் அளவில், வீடற்றோராகினரென யுனிசெ‡ப் தெரிவித்துள்ளது. போகோ ஹராமின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குழந்தைகள், பலவாறு துஷ்பிரயோகங்கட்கு உட்படுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், கைவிடப்பட்ட அல்லது குடும்பத்தை இழந்த குழந்தைகளின் தொகை இரட்டிப்பாகியது. குழந்தைகள் பாலியற் தொந்தரவுகட்கும் கட்டாயத் திருமணத்துக்கும் கடத்தல்கட்கும் கொலைக்கும் ஆளாகிறார்கள். பல குழந்தைகள், கிளர்ச்சியாளர்களின் ஆயுதங்களாகினர். பயங்கர ஆயுதங்களை உபயோகிக்கப் பயிற்றப்பட்டனர். சில நேரங்களில், மனித வெடிகுண்டுகளாகப் பயன்பட்டனர். இவற்றால், நைஜீரியாவில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் தொகை 11 இலட்சமாக உயர்ந்ததாக யுனிசெப் அறிவிக்கிறது. பெண்களின் உரிமைகளை மறுப்பதில்; இவ்வமைப்பு, பல வழிகளில் தலிபான்களை ஒத்தது.
2009ஆம் ஆண்டு, இதன் தலைவரான முகம்மது யூசூப்பின் கொலையைத் தொடர்ந்து, அபூபக்கர் ஷெகா தலைவரானார். அதைத் தொடர்ந்து, போகோ ஹராமின் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்தன. நைஜீரியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் போரை, அபூபக்கர் அறிவித்த காலத்தில், பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா அல்லாடியது.
இப்பின்னணியில் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க நாடுகளில் இராணுவத் தலையீட்டுக்கு வழிகள் பிறக்கின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியால் தன் முடிவை நெருங்கிய முதலாளித்துவம், தன்னைத்;; தக்கவைக்கவும் சுரண்டலை அதிகரிக்கவும் புதிய நாடுகளைத் தேடத் தள்ளப்பட்டது.
2008ஆம் ஆண்டு ஆபிரிக்காவுக்கெனத் தனிச்சிறப்பான இராணுவப் பிரிவை (AFRICOM) ஏற்படுத்திய பின்னணியில், ஆபிரிக்காவின் பெரிய நாடான நைஜீரியாவைக் கட்டுப்படுத்துவதோ சுரண்டலைக் கட்டற்று மேற்கொள்வதோ கடினம் என்ற உண்மையை அமெரிக்கா அறிந்ததன் பின்னணியிலேயே, போகோ ஹராமுக்கு அமெரிக்க ஆதரவு வலுப்பட்டது. 2009ஆம் ஆண்டிற் சிறிய ஆயுதங்களை மட்டுமே கொண்டிருந்த போகோ ஹராம், 2011ஆம் ஆண்டிற் பாரிய ஆயுதங்களையும் சிறப்புப் படைவீரர்களையும் கொண்ட அமைப்பாக உருவெடுத்தது.
நேட்டோவின் உதவியுடன் லிபியாவில் அமெரிக்கா முன்னெடுத்த யுத்தத்தின் பின்னணியில் லிபியாவிற் பயன்பட்ட ஆயுதங்கள் போகோ ஹராமுக்கு வழங்கப்பட்டன. லிபியாவில் போராடியவர்கள் பின்னர், போகோ ஹராமில் இணைந்தார்கள். இவ்வாறு போகோ ஹராம், பலமான பயங்கரவாத அமைப்பாக்கப்பட்டது. இந்த நிலைமாற்றத்துடன் சேர்த்து அமெரிக்க-சீனப் பொருளாதாரப் போட்டியை நோக்க வேண்டும்.
நைஜீரியா, நீண்ட காலமாக அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாயிருந்தது. இராணுவச் சர்வாதிகாரம் கோலோச்சிய 1970 முதல் 1999 வரை, அமெரிக்காவின் விருப்புக்குரிய ஆபிரிக்க நாடாகவும் குறைந்த விலையில் பெற்றோலியத்தை அமெரிக்காவுக்கு வழங்கும் கொடையாளியாகவும் நைஜீரியா இருந்தது. 1999இன் பின் இராணுவச் சர்வாதிகாரத்தின் வீழ்ச்சியும் அதையடுத்த சீனாவின் வரவும் அமெரிக்க எதிர்பார்ப்புக்களில் மண் வீழ்த்தின. போகோ ஹராம் மீதான மேற்குலக ஊடகங்களின் கவனத்தை இதனடிப்படையில் நோக்க வேண்டும்.
முக்கியமான நைஜீரிய இதழ்களில் ஒன்றான நைஜீரியன் ட்ரிபியூன், சவூதி அரேபியாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் போகோ ஹராமுக்கு எவ்வாறு நிதியுதவி வருகிறது என ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது.
போகோ ஹராமுக்கு எதிரான நைஜீரிய அரசின் நடவடிக்கைகட்கு, அமெரிக்கா தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்துள்ளது. மேற்குலகிலிருந்து நவீன ஆயுதங்களை வாங்கும் நைஜீரிய அரசின் முயற்சிகள் அமெரிக்கத் தலையீட்டாற் தவறின. அதை வாய்ப்பாக்கிய சீனாவும் ரஷ்யாவும் ஆயுதங்களை வழங்க முன்வந்தன.
இப்போது சீனாவுக்கு நைஜீரிய எண்ணெய் விற்பனை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. சீனா மூன்று பெரிய எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. கடந்தாண்டு சீனாவிலிருந்து நைஜீரியா இறக்குமதிகளின் பெறுமதி, நைஜீரியாவின் இரண்டாவது, மூன்றாவது பெரிய இறக்குமதி நாடுகளான அமெரிக்காவினதும் இந்தியாவினதும்; இறக்குமதிகளின் மொத்தத்தை விட அதிகம்.
அண்மைதொட்டு, நைஜீரியாவில் அதிகரித்துள்ள அமைதியின்மையை இவ் விடயங்களின் அடிப்படையில் விளங்கிக் கொள்ளல் பொருந்தும். இப்போது நைஜீரியாவில் போகோ ஹராமின் வெறிச்செயல்கள் இன்னொரு சர்வதேசத் தலையீட்டுக்கான அடிப்படையைத் தரப் போதியன. இப்போது நிகழ்வனவற்றினூடாக அமெரிக்கா மூன்று விடயங்களைச் சாதிக்க விரும்புகிறது.
முதலாவதாக, போகோ ஹராம் கிறிஸ்தவர்களைத் தாக்குவதைக் காரணமாக்கிக் கிறீஸ்தவ-முஸ்லிம் பதற்றத்தை உண்டாக்கி, அதன் மூலம் நைஜீரியாவில் அமைதியின்மையைத் தோற்றுவித்தல்.
இரண்டாவதாக, இவ்வாறான அமைதியின்மையின் மூலமும் போகோ ஹராம் வெளிநாட்டவர்களை இலக்கு வைப்பதன் மூலமும் நைஜீரியப் பிரச்சனையை ஒரு சர்வதேசச் சிக்கலாக நிலைமாற்றுதல்.
மூன்றாவதாக, மனிதாபிமானத் தலையீடு என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் அனுமதியுடன் போகோ ஹராமை அழிக்கும் இராணுவத் தலையீட்டுக்கு அனுமதி பெறல்.
ஒரு தசாப்தத்துக்கு முன்பு போல ஆபிரிக்கா அமெரிக்காவின் கைகளில் இல்லை. தனது பொருளாதார வலிமையால் தனது செல்வாக்கை மீளுருவாக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை. எனவே, சர்வதேசத் தலையீட்டின் உதவியுடன் லிபியப் பாணியிலான தலையீட்டை அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் இன்றைய களநிலவரம் அதற்கு வாய்ப்பாக இல்லை.
ஆ‡ப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இருந்து படைகளை மீளப் பெறமுடியாத நிலை ஒரு பெரிய சிக்கலாகும். மற்றையது சிரிய யுத்தம் முடியாமை இன்னொரு யுத்தத்தைச் சாத்தியமற்றதாக்குகிறது. அதற்காகச் சும்மா இருக்க இயலாதென்பதனாலேயே போகோ ஹராம் நைஜீரியாவின் பொதுமக்களைக் கொல்கிறது. அதைச் சீனாவுக்கெதிராக அமெரிக்கா பயன்படுத்துகிறது. தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப் பிழையாக இருந்தாற் போதாதா.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago