2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பெண்களுக்கான அரசியலில் ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம்

Administrator   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா   

இந்தியாவின் தமிழ்நாடு அல்லது இலங்கையின் வடக்கில், திருமணம் முடிக்காத, குழந்தை இல்லாத ஒரு பெண், அந்தப் பகுதிக்கான ஆட்சியை, 2017ஆம் ஆண்டில் கைப்பற்றுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தக் கற்பனையில் கூட, “அது நடப்பதற்குச் சாத்தியமுள்ளதா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?” என்ற கேள்விகள் எழுகின்றன, இல்லையா? ஆனால், 1980களில், அதே நிலைமையில் காணப்பட்ட ஒரு பெண், ஆட்சியைப் பிடித்தார் என்றால், அவரது திறமைகளையும் துணிச்சலையும் பாராட்டத் தோன்றுகின்றது தானே?   

ஜெயலலிதா ஜெயராம் என்ற, அரசியல்வாதிகளுக்குரிய குறைபாடுகளைக் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அவரது மரபையும் கொண்டாட வேண்டிய தேவையிருப்பதற்கு, மேலே குறிப்பிட்ட காரணம் தான் முக்கியமானது. ஜெயலலிதா செய்தது, ஒரு வகையான புரட்சியே.   

தமிழ்நாட்டு மக்களால் 6 தடவைகள் முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்ட ஜெயலலிதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு மறைந்தார். மரினா கடற்கரையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில், தனது குரு எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு அருகில் அவர் புதைக்கப்பட்டார். ஜெயலலிதா இறந்த அதிர்ச்சியிலிருந்து அவரது ஆதரவாளர்கள் மீண்டு கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதா விட்டுச் சென்ற சுவடுகள் குறித்து ஆராய வேண்டிய தேவையிருக்கிறது. குறிப்பாக, பெண் அரசியல்வாதியாக அவர் ஏற்படுத்திய உதாரணம், எதிர்காலத்தில் பெண் அரசியல் தலைமைத்துவத்துக்கான வாய்ப்புகள் போன்ற கோணத்தில் ஆராய்வது அவசியமானது.  

தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும், ஆண்கள் தான் குடும்பத் தலைவர்களாகப் பெரும்பாலும் கணிக்கப்படுகிறார்கள். பெண்கள் என்ன தான் உயர் பதவியில் இருந்தாலும், சில வீடுகளைப் பொறுத்தவரை, வீட்டில் சுடப்படும் ரொட்டியின் வடிவம், வட்டத்தை விடச் சிறிது மாறினால், அதற்கான விமர்சனம், நிச்சயமாக முன்வைக்கப்படும்.   

இந்த நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்ற போதிலும், உண்மையான சமத்துவத்தை நோக்கிச் செல்வதற்கு, இன்னும் பல தசாப்தங்கள் செல்ல வேண்டியிருக்கும் என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது. ஆகவே தான், தமிழ்ப் பெண் ஒருவர், அதிகாரத்தின் உச்ச நிலையை அடைவதென்பது, இப்போதைக்குச் சாத்தியமானதா என்றால், சந்தேகமானது தான்.   
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றின் போது, யாழ்ப்பாணத்தில் பின்தங்கிய சாதிகளாகக் கணிக்கப்படுவோர் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தாலும், அம்மாவட்டத்தில் காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே, அந்தச் சாதியப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களல்லர் என்று தெரிவிக்கப்பட்டது. அது உண்மையானால், பெண்களின் நிலைமை என்ன? உயர் பதவிகளில் பெண்களின் நிலைமை?   

ஜெயலலிதா, தான் நடிக்கும் காலத்தில், அதிக ஊதியம் வாங்கும் “சுப்பர் ஸ்டார்” நடிகையாகத் தான் இருந்தார். அவரது நடனத்துக்கும் நடிப்புக்குமாக, அவருக்கென இரசிகர்கள் பட்டாளமே இருந்தது என்பது உண்மை தான். எம்.ஜி.ஆருடன் அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததால், அவரது ஆதரவாளர்களுக்கு ஜெயலலிதா பரிச்சயமாக இருந்தார் என்பதும் உண்மையானது. ஆனால், அதுவே அவரைத் தலைவியாக ஏற்றுக் கொள்வதற்கு மக்களையும் அரசியல் கட்டமைப்பையும் நிர்ப்பந்திக்குமா என்றால், கேள்விக்குரியது தான்.   

இன்றைய நடிகைகள் பலருக்கும், பல மில்லியன் கணக்கான இரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தலைவிகளாக ஏற்றுக் கொள்வதற்கு, தமிழ்நாடு தயாராக இருக்குமா என்றால், சந்தேகமே என்ற பதில் தான் கிடைக்கிறது. நடிகைகளை அழகுப் பதுமைகளாகக் கொண்டாடவும் அவர்களுக்குக் கோவில் கட்டவும் அவர்கள் கலந்துகொள்ளும் கடைத் திறப்பு விழாக்களில் நெரிசலுக்கு மத்தியில் அவர்களைத் “தரிசிக்கவும்” தயாராக இருக்கும் அனேகர், அவர்களால் ஆளப்படுவதை விரும்புவதில்லை. அதற்கான காரணம், அரசியலையும் தலைமைத்துவத்தையும் பொறுத்தவரை, பெண்கள் இன்னமும் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே கருதப்படுகின்றனர்.   

இந்த நிலைமையை விளங்குவதற்கு, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய “புகழுரை”யையே உதாரணமாகக் கொள்ள முடியும். தனியார் தொலைக்காட்சியொன்றுக்குக் கதைத்த அவர், “ஒரு பெண்ணாக இருந்த போதிலும், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக அவர் கொண்டிருந்த துணிச்சல் மிகச்சிறந்த பண்பாகும்” என்றார். சில மாதங்களுக்கு முன்னர், பங்களாதேஷ் சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “பங்களாதேஷின் பிரதமர், பெண்ணாக இருந்த போதிலும், பயங்கரவாதத்தைத் தான் முழுமையாக நிராகரிப்பதாகப் பகிரங்கமாகச் சொல்வது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டு செல்ல முடியும்.   

“பெண்ணாக இருந்த போதிலும்” என்ற வாசகம் சொல்வதெல்லாம், பெண்ணென்றால் தலைமைத்துவம் குறைந்தவர் அல்லது துணிச்சல் அற்றவர் அல்லது கடுமையான முடிவுகளை எடுக்கும் திறனற்றவர் என்ற எண்ணம், சமுதாயத்திடம் - குறிப்பாக அதன் ஆண் பிரிவினரிடம் காணப்படுகிறது.   

ஆகவே தான், இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, ஜெயலலிதா மேற்கொண்ட ஆட்சி தான், அவரைப் புகழ வைக்கிறது.   
ஜெயலலிதா ஒன்றும் அப்பழுக்கற்றவர் கிடையாது. அவரைச் சர்வாதிகாரி என அழைக்க முடியாது என்ற போதிலும், அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. தனக்கெதிரான விமர்சகர்களை அவர் ஒடுக்கினார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. தன்னை வழிபடும் கூட்டமொன்றை உருவாக்கிய அவர், கிட்டத்தட்ட மன்னராட்சி போன்ற ஒரு நிலைமையையே ஏற்படுத்தினார். ஆகவே, முழுமையான, ஆரோக்கியமான ஜனநாயக ஆட்சியை அவர் நடத்தினார் எனக் கூற முடியாது. (அவர் மீதான விமர்சனமான பண்புகள் இவ்வாறிருக்க, சாதாரண மக்களை இலக்குவைத்த ஏராளமான நலத்திட்டங்களை அவர் முன்னெடுத்திருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.)   

சாதாரண நிலைமையில், ஜனநாயகத்துக்கு விரோதமானது எனக் கருதப்படக்கூடிய இந்த நடவடிக்கைகள், ஒருவரது மரணத்துக்குப் பின்னர் நிச்சயமாக மறக்கப்படக்கூடாது. ஜெயலலிதா விடயத்திலும் அதே நிலைமை தான். ஆனால், ஜெயலலிதா விடயத்தில், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னாலுள்ள நிலைமைகளையும் ஆராய்வது முக்கியமானது.   
எம்.ஜி.ஆருடன் முறைகேடான உறவுகளைக் கொண்டிருந்தார் எனவும் வெறும் நடிகை தானே எனவும் வெறும் பெண் தானே எனவும், சமுதாயத்தின் ஒரு பிரிவினரால் தூற்றப்பட்ட பெண் தான் ஜெயலலிதா. தனது குருநாதர் 
எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்குகளின் போது, அவரது உடலுக்கு அருகே செல்ல முயன்ற ஜெயலலிதா, தள்ளிக் கீழே வீழ்த்தப்படும் காட்சிகளை, யூடியூப் தளத்தில் இன்னமும் பார்க்க முடியும். சமுதாயத்திலும், பெண்களின் நிலைமை, இன்னமும் முழுமையாகத் திருப்திதராத நிலையிலேயே உள்ளது.   

இந்த நிலைமை, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்குரியது மாத்திரமன்று. ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதியாகும் வாய்ப்புகளைக் கொண்டவராகக் கருதப்பட்ட ஹிலாரி கிளின்டன், அதிர்ச்சிகரமாகத் தோல்வியடைந்திருந்தார். டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு, பல்வேறான காரணங்கள் உள்ளன. ஆனால், அவரது எதிராளி பெண் என்பது, சிறிய அளவிலாவது தாக்கத்தைச் செலுத்தியது என்பது உண்மையானது.

பெண்களின் அந்தரங்க உறுப்புகளை, அவர்களின் அனுமதியின்றி ட்ரம்ப் தொடுவதாக, அவரே தெரிவிக்கும் காணொளி வெளியான பின்னர், இங்கிலாந்தின் ஊடகமொன்றில், “பெண்ணின் அந்தரங்க உறுப்பைக் கொண்டவரை விட, அதைத் தொடுபவரே ஜனாதிபதியாக வர நான் விரும்புகிறேன்” என்ற அர்த்தத்தில் உள்ள தலைப்பில், கட்டுரையொன்று வெளியாகியிருந்தது. இது தான் யதார்த்தமான நிலைமையாக இருக்கிறது.   

ஆகவே தான், ஒடுக்கப்படுகின்ற ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவர், ஆட்சியைக் கைப்பற்றி, தன்னை ஒடுக்கியவர்களையும் தன்னைக் கேலி செய்தவர்களையும் இரும்புப் பிடி கொண்டு ஆள்வதென்பது, ஒரு வகையில் திருப்திகரமானது தான். சிங்கங்கள் கொண்ட கூட்டமொன்றில், ஆட்டுக் குட்டியொன்று புகுந்து, அத்தனை சிங்கங்களையும் ஆட்டிப் படைக்குமென்றால், அதில் ஒரு வகையான திருப்தியை நாம் காண்பதில்லையா?   

ஆனால், இப்போது ஜெயலலிதா காலமாகிவிட்ட நிலையில், அவருக்குப் பின்னர், இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ, பெண்ணொருவர் எப்போது ஆட்சிக்கு வருவார், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்விகள் எழுகின்றன.   
உலகின் முதலாவது பெண் தலைவரைக் கொண்ட நாடு என இருந்தாலும், இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தின் 6 சதவீதமான உறுப்பினர்கள் மாத்திரமே பெண்களாவர். இந்திரா காந்தி போன்ற ஆளுமையைப் பிரதமராகக் கொண்டிருந்த இந்தியாவிலும் கூட, வெறுமனே 12 சதவீதமானோர் மாத்திரமே தேசிய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களாக உள்ளனர்.   

இப்போது, இந்தியாவின் பிரதமராகுவார் என்ற எண்ணம் அல்லது எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா போன்ற ஆளுமை, அரசியலிலிருந்து இல்லாமற் போயுள்ளமை, அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கு, ஆரோக்கியமான ஒன்று அல்ல என்பதையும் இவ்விடயத்தில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது என்பதையும் தான் காட்டி நிற்கிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .