2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

போரின் பெயரில் ஆயுத வியாபாரம் நடைபெற்றதா?

Thipaan   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் இருப்பையே சந்தேகத்துக்கிடமாக்கும் வகையில், சில சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. ஊழல், மோசடிக்கு எதிரான அரசாங்கத்தின் அசமந்தப் போக்கும் அரசாங்கத்துக்குள்ளேயே பாரிய அளவில் ஊழல் இடம்பெற்று இருக்கிறதா என்று சிந்திக்கக்கூடிய வகையில் அவன்ட் காட் விவகாரம் காணப்படுவதும் அதற்கு உதாரணங்களாகும்.

எந்தவொரு அரசாங்கமும் நிலையானதும் சதாகாலமானதும் அல்ல தான். ஆனால், இந்த அரசாங்கம் விரைவில் கவிழ்ந்தால் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினால் கட்டுப்படுத்தக் கூடிய ஓர் அரசாங்கம் விரைவில் உருவாகுமானால் அது

பாரதூரமான விடயமாகும்.

இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள், ஏதும் தெய்வீகப் பண்புள்ளவர்கள் அல்ல. அரசாங்கத்தின் தலைவர்களில் பலர், கடந்த பொதுத் தேர்தலின் போது பத்துக் கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் செலவழித்து இருக்கிறார்கள். அவர்கள், தமது ஐந்தாண்டு காலத்தில் உத்தியோகபூர்வமாக பெறும் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஒன்று திரட்டினாலும் அது ஒரு கோடி ரூபாயாகவாவது இருக்காது. எனவே, இந்த அரசாங்கத்தின் தலைவர்களும் ஆதரவாளர்களும் மஹிந்தவின் ஆட்களைப் போலவே நாளடைவில் பொதுச் சொத்தைத் திருடுவார்கள் என்பது திண்ணம்.

ஆனால், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், சிறுபான்மை மக்கள், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட சற்று நிம்மதியாக இருக்கிறார்கள். தமிழ் தலைவர்கள் கோரிய படி வட மாகாணத்துக்கு ஒரு சிவிலியன் ஆளுநரை நியமிக்கவாவது மஹிந்த முன்வரவில்லை. எவரும் பாதிக்கப்படாமல் அதனை இலகுவாகவே செய்திருக்கலாம். அதனை இந்த அரசாங்கம் செய்தது. வட மாகாண முதலமைச்சருக்குக் கட்டுப்படாத மாகாண பிரதம செயலாளரை இந்த அரசாங்கமே மாற்றியது. இவற்றால் தமிழ் மக்கள் பெரிதாக ஏதும் சாதித்து விடவில்லை என்றாலும் தமிழ் மக்கள் மீதான இரண்டு அரசாங்கங்களின் கண்ணோட்டங்கள் அதன் மூலம் தெரிகின்றன.

காணிப் பிரச்சினை மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றவையும் இன்னும் தீரவில்லையாயினும் அவை தொடர்பாகவும் இரண்டு அரசாங்கங்களின் கண்ணோட்டங்கள் வித்தியாசமானவை என்பது தெளிவானதாகும். போரின் போது அரச படைகளினதும் புலிகளினதும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்ய புதிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இருந்த மரண பயம் கடந்த ஜனவரி மாதம் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து நீங்கிவிட்டதைப் போன்றதோர் தோற்றப்பாடு இருக்கிறது. ஊடகங்கள் மூலம் பௌத்த தீவிரவாதிகள், முஸ்லிம்களை நிந்தித்தலும் அச்சுறுத்தலும் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, இந்த அரசாங்கத்தின் இருப்புக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற நிலை ஏற்படும் போது அது கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாக இருக்கிறது.

அவன்ட் காட் விவகாரம் கடந்த வாரம் அரசாங்கத்தையே குலுக்கியது. சட்டம் ஒழுங்கு போன்ற முக்கிய பொறுப்பை ஏற்றிருந்த அமைச்சர் திலக் மாரப்பன தமது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துக்குள் பாரிய பிளவு இருப்பதாகத் தெரிகிறது. ஊழல் மோசடிகளை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களே பாரிய ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பது.

அரச தலைவர்களுக்கு ஓர் ஆறுதல் என்வென்றால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவான மத்திய வங்கி முறிகள் தொடர்பான சர்ச்சையைப் போலன்றி, எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ குழுவினர், அவன்ட் காட் விவகாரம் தொடர்பாக பெரிதாகக் கோஷம் எழுப்ப முற்படாமையே. சிலவேளை அவர்களும் அவன்ட் காட் நிறுவனத்தில் பாரிய ஊழல் இடம்பெற்று இருப்பதாக நினைத்து அதற்காக வாதாட முடியாமல் இருக்கிறார்களோ தெரியாது.

முதன் முதலாக, அவன்ட் காட் நிறுவனத்தின் ஆயுதக் கப்பலொன்று கைப்பற்றப்பட்டு 10 மாதங்களாகியும் அந் நிறுவனத்துக்காக அமைச்சர் மாரப்பன பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்ததை அடுத்தே, மஹிந்த குழுவினர் முதன் முதலாக அதனைப் பற்றி கருத்துத் தெரிவிக்க முன்வந்துள்ளனர். அதிலும் அவர்கள், அவன்ட் காட் நிறுவனத்தின் சார்பில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்குப் பதிலாக, மாரப்பனவை பாராட்டுவதையே செய்கிறார்கள்.

அவர்களில் முதலாமவராக மஹிந்த ராஜபக்ஷ, மாரப்பனைவைப் பாராட்டினார். அதனை அடுத்து, அவரது வலது கையான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கருத்துத் தெரிவித்தார். அவன்ட் காட் நிறுவனத்தின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எனக் கூற முடியுமானவர்கள், தம்மோடு அது தொடர்பான விவாதத்துக்கு வருமாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ விட்ட சவாலை ஏற்றுக் கொள்ளுமாறு, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு வீரவன்ச கூறினார்.

தாம் விரும்பாத சகல விடயங்களும் புலிகளுக்கு ஆதரவாக நடைபெறுபவை என்று கூறும் வீரவன்ச, இதிலும் புலியின் வாலைக் காணாமல் இருக்கவில்லை. புலிகளை விடுதலை செய்யவும் இலங்கையில் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கான 'ஹைபிரிட்' (கலப்பு) நீதிமன்றத்தை நிறுவவும் அரசாங்கம் எடுக்கும் முயிற்சியிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த அவன்ட் காட் விவகாரம் உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அவன்ட் காட் என்பது, ஆபிரிக்க கண்டத்துக்கருகே கடற் கொள்ளையர்களிடமிருந்து வெளிநாட்டு கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே இந்த முயற்சியின் பின்னால் இருந்தவராவார்.

இந் நிறுவனத்தின் ஆயுதக் கப்பலொன்று கடந்த ஜனவரி மாதம் காலித் துறைமுகத்துக்கு அருகே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒக்டோபர் மாதம் மற்றொரு கப்பல் கைப்பற்றப்பட்டது. அந்தக் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள் தொடர்பாக தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அரச தலைவர்களும் அதிகாரிகளும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதால் என்ன நடக்கிறது என்று சாதாரண மக்களுக்கு விளங்குவதில்லை.

அரச படைகள் போரின் போது பாவித்து ஒதுக்கி அழித்துவிட பரிந்துரை செய்யப்பட்ட ஆயுதங்களும் இந்தக் கப்பல்களில் இருப்பதாக அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் கூறினார். குருநாகல் மாவட்டத்தின் சில பொலிஸ் நிலையங்களில் இருந்த ஆயுதங்களும் அவற்றில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கிறார். புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைத் திருட்டுத்தனமாக இந்த நிறுவனத்திடம் கையளித்துள்ளதாக மற்றொரு கருத்து நிலவுகிறது. அவை உண்மையாக இருந்தால், புலிகளுக்கு எதிரான போரின் பெயரால் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிகிறது.

மறுபுறத்தில், அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்து கொண்டே விஜயதாஸ ராஜபக்ஷவும் மாரப்பனவும் அவன்ட் காட் நிறுவனம் எவ்வித சட்ட விரோத செயலிலும் ஈடுபடவில்லை என்று கூறினர். இந்த விடயத்தில், கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதை தாம் தடுத்ததாகவும், இனிமேலும் தாம் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் விஜயதாஸ கூறுகிறார். கோட்டாபயவை கைதுசெய்ய பொலிஸாருக்கு தகுந்த காரணம் இருந்தால் அமைச்சர் ஒருவர் எந்த அடிப்படையில் அதனைத் தடுக்க முடியும்? நல்லாட்சியை உருவாக்க வந்தவர்கள், பொலிஸ் கடமைகளில் தலையிடுவதையே இது காட்டுகிறது.

கப்பலில்

இருப்பவை இலங்கை அரசாங்கத்தின் ஆயுதங்கள் என்றும் அவை வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும் சம்பந்தப்பட்ட ஒருவர் கூறுகிறார். ஆனால், கப்பலில் உள்ள ஆயுதங்களுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை என பிரதமர் கூறியதாக, அநுரகுமார கூறுகிறார். இவை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆயுதங்கள் என மாரப்பன கூறுகிறார்.

அவன்ட் காட் நிறுவனம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என மாரப்பன கூறுகிறார். ஆனால், இலஞ்ச ஆணைக்குழு கப்பலைப் பற்றி விசாரணை நடத்துகிறது. மாரப்பனவின் அமைச்சின் கீழுள்ள பொலிஸார் மற்றொரு விசாரணையை நடத்தி வருகின்றனர். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர், கப்பலுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார். மற்றொருவர், சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்யத் தான் முடியும் என்கிறார். எந்த வழக்காக இருந்தாலும் சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெற்று இருந்தால் மட்டுமே வழக்குத் தாக்கல் செய்யலாம். ஆனால், சட்டத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர், அவன்ட் காட் நிறுவனம் எவ்வித சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்கிறார்.

என்ன நடக்கிறது என்று ஜனாதிபதிக்கும் தெரியாது போல் தான் தெரிகிறது. ஒவ்வொரு அமைச்சர் ஒவ்வொன்றையும் கூறிய போது, அமைச்சரவையில் பெரும்பான்மையானவர்களது கருத்தை தாம் ஏற்பதாக ஜனாதிபதி கடந்த வாரம் கூறியிருந்தார். பொலிஸாரிடம் இருக்கும் தகவல்களை வரவழைத்து, அதன்படி சட்டம் மீறப்பட்டுள்ளதா இல்லையா என்று தமக்குள் ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொண்டு, பொலிஸாருக்கு மேல் விசாரணையைத் தொடர உத்தரவிடுவதற்கு பதிலாக ஜனாதிபதி - அமைச்சரவையில் பெரும்பான்மை கருத்துப்படி நடக்க முற்பட்டமை விசித்திரமானது.

ஆனால், ஜனாதிபதி பின்னர் பிரச்சினையை தமது கையில் எடுத்தார். சட்டவிரோதமாக எதுவும் நடைபெறவில்லை என்று மாரப்பன கூறி ஒரு வாரம் நிறைவடைந்த கடந்த வியாழக்கிழமை, அவன்ட் காட் நிறுவனத்துடனான சகல ஒப்பந்தங்களையும் இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி, அதிகாரிகளைப் பணித்தார்.

அவன்ட் காட் நிறுவனத்தின் முதலாவது ஆயுதக் கப்பல் கைப்பற்றப்பட்டு பத்து மாதங்களுக்கு மேலாகியும் அந்த நிறுவனம் சட்டவிரோத செயல்களில் ஈடபட்டுள்ளதா இல்லையா என்று இன்னமும் அமைச்சர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், இந்த அரசாங்கம் நல்லாட்சியை உருவாக்குமா என்பது சந்தேகமே.

சட்டவிரோதமாக எதுவுமே நடைபெறாவிட்டால், அவன்ட் காட் நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய ஜனாதிபதி பணிப்புரை விடுத்தமையானது எதேச்சாதிகார நடவடிக்கையாகும். அவர் செய்தது சரியென்றால் நிறுவனம் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை என்று இன்னமும் கூறும் நிதி அமைச்சருக்கும் மாரப்பனவுக்கும் எதிராக அவர் நடவடிக்கை எடுப்பாரா?

ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் இதுபோல் தான் இருக்கிறது. மஹிந்தவின் குடும்பமும் ஆதரவாளர்களும் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் அரச பணத்தை கொள்ளையடித்ததாவே இந்த அரசாங்கத்தின் தலைவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பொதுத் தேர்தலுக்கு முன்னரும் கூறினர். ஆனால் மஹிந்தவையும் அவரது ஆதரவாளர்களையும் நாளாந்தம் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவுக்கும் இரகசியப்

பொலிஸுக்கும் அழைத்து விசாரிப்பதே தவிர உறுப்படியான எதுவும் நடப்பதில்லை. போதைப் பொருள் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட வெலே சுதா, மஹிந்தவின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி ஒருவர் தம்மிடம் பணம் பெற்றதாகக் கூறியும் அந்த எம்.பி விசாரிக்கப்படவில்லை.

இதனால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டு இறுதியில் விரைவில் மஹிந்த அல்லது அவரது கையாட்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஒரு புறம் அரசாங்கத்தின் இந்த அசமந்தப் போhக்கை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டு மஹிந்தவும் அவரது ஆட்களும் குற்றமிழைக்காதவர்கள் என்றும் அரசாங்கம் இதுவரை காலமும் பொய்க் குற்றச்சாட்டுகளையே சுமத்தி வந்துள்ளது என்றும் முடிவுக்கு வரலாம்.

அத்தோடு எவ்வித பயனும் இன்றி தொடர்ந்து மஹிந்தவும் அவரது ஆட்களும் விசாரிக்கப்படுவதால் அவர்கள் மீது சிங்கள மக்கள் மனதில் அனுதாப அலையொன்று உருவாகலாம்.

அத்தோடு ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு அளித்த வாக்குறுதியின் படி அரசாங்கம், போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்தால் மஹிந்தவின் ஆட்கள் இனவாதத்தையும் தூண்டலாம். அதன் மூலமும் அவர்கள் பக்கம் சிங்கள மக்கள் திரும்பலாம். இந்த நிலையில் அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் மீண்டும் மஹிந்தவிடம் செல்லலாம். அமைச்சுப் பதவிகளால் அவர்களைக் கட்டி வைக்க முடியாமல் போய்விடும்.

ஆனால், அவர்களுக்கும் ஆட்சி அமைக்க முடியாது. அவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் மொத்தம் 95 ஆசனங்கள் மட்டுமே உள்ளன. மறுபுறத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது

அரசியலமைப்புத் திருத்தத்தின் படி, பொதுத் தேர்தல் நடைபெற்ற நான்கரை ஆண்டுகள் செல்லும் வரை ஜனாதிபதிக்கு அரசாங்கத்தைக் கலைக்கவும் முடியாது. அதுவரை அராஜகம் தலைவிரித்தாடும்.

ஆனால், அரசாங்கம் ஊழல் விடயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்தால் அரசாங்கத்தின் மீது மக்கள் மனதில் நம்பிக்கை வளரும். மஹிந்தவின் பக்கம் செல்ல அரசியல்வாதிகள் பயப்படுவார்கள். நாடு ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டு இருக்கும். போரைப் பாவித்து பணம் சம்பாதித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தமிழ் மக்களையும் கவரலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X